Namvazhvu
காலநிலை மாற்றங்களும், தவிக்கும் இளைய தலைமுறையும்!
Thursday, 02 May 2024 09:35 am
Namvazhvu

Namvazhvu

எங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துத் தாருங்கள்!’ உலகமெங்கும் எதிரொலிக்கும் இளையோரின் அபயக் குரல் இது. கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் உலகம் தழுவிய பேசுபொருளாக இருப்பதுகாலநிலை மாற்றம்’ (Climate Change) மற்றும்புவி வெப்பமாதல்’ (Global Warming). இந்தக் கால நிலை மாற்றத்தால் பூமிப்பந்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் நெருக்கடிக்கு நாமும் விதிவிலக்கல்ல.

நாம் எல்லாருமே நம் பிள்ளைகளுக்கு நம்மால் முடிந்ததைச் சேர்த்து வைத்துச் சொத்தாகவோ, பொருளாகவோ, பணமாகவோ விட்டுச் செல்லவே ஆசைப்படுகிறோம். இவையெல்லாம் வாரிக் கொடுத்துவிட்டு, வாழத் தகுதியான இடமாகப் பூமியை விட்டுச் செல்லாமல் போனால், அதனால் என்ன பயன்? ‘உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டு ஆன்மாவை இழப்பதுபோலத்தான் (மாற் 8:37). எது முக்கியம்? எது வேண்டும்? என்பதே இங்கு கேள்வி.

நாம் வாழும் இந்தப் பூமி, நமது முன்னோர்களால் அழகுறப் பராமரிக்கப்பட்டு, நேர்த்தியாகப் பாதுகாக்கப்பட்டு, நமக்குச் சீதனமாக வழங்கப்பட்டது. இதை நாம் நம் முன்னோர்களிடமிருந்து சொத்தாகப் பெற்றோம் என்பதைவிட, நம் பிள்ளைகளிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளோம் என்பதே உண்மை. நம் பிள்ளைகளுக்குச் சொத்துகளை விட்டுச் செல்கிறோமோ இல்லையோ, அவர்களிடமிருந்து கடனாகப் பெற்ற இந்தப் பூமியைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்.

மனிதனின் சுயநலம், இயற்கை வளங்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்தவும், அவற்றை அபகரிக்கவும் தூண்டி விட்டது. அதன் அறுவடைதான் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது, காடுகளை அழித்தது, நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறியது போன்ற பொறுப்பற்ற செயல்பாடுகள். அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகள் அல்ல இவை. இவை யாவும் நன்கு திட்டமிடப்பட்ட இயற்கைச் சுரண்டல்கள். கனிம வளங்கள், இயற்கை வளங்கள், காடுகள், மலைகள், ஆறுகள், மணல், மேடு, திட்டு என யாவும் இங்குக் களவாடப்படுகின்றன. இதன் விளைவு, இன்று பூமி வெப்பமடை கிறது, பனிமலை உருகுகிறது, கடல் மட்டம் உயர்கிறது, மழையின்றி நிலம் வறண்டு போகிறது, பருவம் மாறி மழை பொழிவதால் வெள்ளச் சீற்றமாகிறது, அமில மழை கொட்டுகிறது, பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுத்தியிருக்கிறது. கணிக்க முடியாத அளவிற்குப் பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்திற்கும் காரணம் இயற்கை வளங்களை அளவு கடந்து அபகரிப்பதன் விளைவே! ‘கொடுப்பதை மிகுந்து எடுப்பதுஎன்ற மனிதனின் தீய குணமே இதற்குக் காரணம்.

மண்ணும் மலையும் காடும் கடலும்

ஓடும் ஆறும் நம் சொந்தம்;

கண்டும் காணா வாழ்ந்து மடிந்தால்

நாளைய தலைமுறை என்னாகும்?

மண்ணும் வறண்டு மரமும் மடிந்து

ஊரும் உறவும் சுடுகாடு;

பயிரும் உயிரும் தாகம் தணிக்கத்

தண்ணீருக்கே பெரும் பாடு!

பூமியின் கதறல் கேளடா;

குமுறும் மலையைப் பாரடா!

பொங்கும் கடலும் ஏனடா?

மரண ஓலம் கேளடா!’

என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

இருக்கும் இடமே போதும்என்ற மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் இந்த மண்ணில் வாழ்பவர்கள் மிகக் குறைவு. ‘உலகம் தனக்கு மட்டுமேஎன்று மனிதன் கொண்டிருக்கும் மனநிலையும், ‘தனக்கே முன்னுரிமைஎன்ற ஆணவமும் பேரழிவை நோக்கி இப்பூமியை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இயற்கையைப் பல காலமாக வெல்லத் துடித்த மனிதன், இன்று அதை மெல்ல மெல்லக் கொல்லத் துணிந்து விட்டான். தலை முறைச் சீதனம் கைநழுவிப் போவதை வரப்போகும் எந்தத் தலைமுறையும் மன்னிக்காது, மறக்காது.

இவ்வேளையில், 2023-ஆம் ஆண்டு (நவ. 30-டிச. 12) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றCOP28என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பில், காலநிலை மாற்றம் தொடர்பான 28-வது மாநாட்டிற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய செய்தியே நினைவுக்கு வருகிறது:

நமது எதிர்காலம் என்பது இன்றைய நிகழ் காலத்தில் நாம் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து அமைகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது கடவுளுக்கு எதிரான பெருங்குற்றம்; பெரும் பாவம். தனியொரு மனிதனின் தனிப்பட்ட பாவச் செயல் மட்டுமல்ல, அதையும் கடந்த ஒரு சமூகப் பாவம் இது. ஒட்டுமொத்த மனித குலத்தையும் பெரிதும் பாதிக்கும் செயல் இது. குறிப்பாக, இது சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களைப் பாதிக்கக்கூடியதாகவும், தலைமுறைகளுக்கிடையே மோதல் முரண்பாடுகளைக் கட்டவிழ்த்து விடப்படுகின்ற அபாயத்தையும் கொடுக்கக்கூடியதாகவும் உள்ளது. எனவே இது, மனித மாண்போடு நெருங்கியத் தொடர்பு கொண்டதோர் உலகளாவிய சமூகப் பிரச்சினை. ஆகவே, எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம்? ‘வாழ்வின் கலாச்சாரத்தையா? அல்லது இறப்பைத் தழுவும் கலாச்சாரத்தையா?’ என்ற கேள்வியை இது முன் வைக்கிறது. இச்சூழலில் நாமனைவரும் வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்; நாம் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்போம் (Let us choose Life! Let us choose the Future!)” என்கிறார்.

தாயாய், தெய்வமாய் நாம் வணங்கும் பூமியின் அழுகுரல் நம் செவிகளைத் துளைத்தாலும் கேட்கச் செவியற்றவர்களாய் இருக்கின்றோம். ஏழைகள், வறியோர், சமூகத்தில் பலவீனமானவர்களின்  குமுறலுக்குச் செவிகொடுப்போம். இளையோரின் நம்பிக்கை மீதும், குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளின் மீதும் கவனம் கொண்டிருப்போம். வளமான எதிர்காலம் அவர்களுக்கு மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவோம். இதுவே நம்மீது சுமத்தப்பட்டுள்ள பெருங்கடமை; சமூகப் பொறுப்பும் கூட. ஏனெனில், இந்தப் பூமி நமக்கு மட்டும் சொந்தமில்லை. உண்மையில் நாம் இதன் பராமரிப்பாளர்கள் மட்டுமே. அடுத்தத் தலைமுறைக்குப் பத்திரமாக இதை விட்டுச் செல்லும் கடப்பாடு உள்ளவர்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

இந்தக் காலநிலை மாற்றம் பூர்வகுடி மக்களைப் பாதிப்பது, காடுகள் அழிப்பது, பசி பட்டினியை உருவாக்குவது, உணவு, நீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது, புலம்பெயர்தலை மறைவாக உருவாக்குவது என மானுட வாழ்வியல் பிரச்சினைகளை மறைமுகமாக ஏற்படுத்தி வருகிறது. ஆகவே, எதிர்காலம் என்பது யாவருக்கும் உரித்தானது. இதை மீட்டெடுப்பதும், மீட்டுருவாக்கம் செய்வதும் ஒரு கூட்டுச் சமூகப் பொறுப்பு அல்லவா! திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவது போன்று, ‘போர்க் கருவிகளுக்காகவும், இராணுவத் தளவாடங்களுக்காகவும் செலவிடப்படும் தொகைகளைப் பொதுவாக வைத்து வறுமையை ஒழிக்கவும், பட்டினியைப் போக்கவும், மனித வளத்தையும், இயற்கையையும் பேணவும் உதவக்கூடியஉலகளாவிய நிதி ஆதாரம்’ (Global Fund) ஒன்றை உருவாக்குவோம்.’

மேலும், உலகளாவிய வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தாக்கங்களுக்கு ஏற்ப வாழ்வியல் முறையை மாற்றியமைத்துக் கொள்வோம். அதற்குக் காலநிலை கல்வியில் கவனம் செலுத்துவோம்; காலநிலை மாற்றம் குறித்த பாடத்திட்டம் பள்ளிக் கல்வியில் கட்டாயப்படுத்துவோம்; இயற்கையுடன் இயைந்து வாழப் பழகிக்கொள்வோம்; சூரிய சக்தி, இயற்கை எரிபொருள் போன்ற பயன்பாட்டை உருவாக்குவோம். அவ்வாறே, நீர், நிலம், காற்று மாசுபடுவதை உடனடியாகக் கட்டுப்படுத்துவோம்; சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, காலநிலை நெருக்கடிக்குத் தீர்வு காண்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம்.

அன்பர்களே! நாம் விழித்தெழ வேண்டிய நேரமிது. கல்விப் பணிகளில் இயற்கை நேயத்தை, சமூகப் பாதுகாப்பை, சுகாதார வாழ்வைப் பற்றிய போதனைகளுடன், செயல்முறை வழிகாட்டுதலை மேற்கொள்வோம். இயற்கையோடு இணைந்த வாழ்வு, தோட்டக் கலை, மரம் நடுதல்சிக்கனமான பயன்பாட்டில் எரிபொருள் மற்றும் மின்சாரம் பயன்படுத்துதல், நெகிழி போன்ற மாசு விளைவிக்கும் பொருள்களைத் தவிர்ப்பது, இயற்கைக்கு முரணான எந்தவொரு செயலையும் மேற்கொள்ளாமல் இருப்பது என்ற வாழ்க்கை முறையை ஊக்குவிப்போம். இறுதியாக, ஆட்சியாளர்களும், அரசுகளும், சமூக ஆர்வலர்களும் மட்டுமன்றி, நாம் ஒவ்வொருவரும் முனைப்புடன் செயல்பட்டால்தான் எதிர்காலத் தலைமுறைக்குப் பாதுகாப்பான வாழ்விடத்தை நம்மால் வழங்கிட முடியும்.

கண்ணாகப் பூமியைக் காத்திடுவோம்! தலைமுறைக்குப் பொன்னாக

வளம் கொண்டு பரிசளிப்போம்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்