Namvazhvu
சமூகக் குரல்கள்
Thursday, 02 May 2024 11:17 am
Namvazhvu

Namvazhvu

“வரும் (2024-25) கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஏழை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இலவசக் கல்வி திட்டம் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் விவரம் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. +2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாள்களுக்குள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பம், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.”

- திரு. ஏழுமலை, சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர்

“1854-ஆம் ஆண்டு ஒரு பழங்குடியின தலைவர் அப்போதைய அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தில், ‘பூமி மனிதனுக்குச் சொந்தமானது அல்ல; மனிதன் பூமிக்குச் சொந்தமானவன்’ என்று கூறப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் ‘48ஏ’ பிரிவின்படி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதுபோல 51ஏ(ஜி)-யின்படி வனம், ஏரி, ஆறுகள் உள்ளிட்ட இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது குடிமக்களின் கடமை ஆகும். பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளிலிருந்து நாட்டையும், உலகையும் காப்பாற்ற வனப்பகுதியைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.”

- உச்ச நீதிமன்றம்

“தூர்தர்ஷன் போன்ற சுதந்திர நிறுவனங்களுக்கு மோடி அரசு காவி நிறம் பூசுகிறது. அந்த நிறத்தைக் கையகப்படுத்தி பல ஆண்டுகளாக நாட்டுக்கு ஆன்மிகத் தலைவர்களும், துறவிகளும் செய்த தியாகங்களைப் பா.ச.க. இழிவுபடுத்துகிறது. மத்தியில் மீண்டும் பா.ச.க. ஆட்சிக்கு வந்தால், வருங்காலத்தில் நாட்டில் தேர்தல் என்பதே இருக்காது. ஒரு மனிதன், ஒரு கட்சியின் ஆட்சி மட்டுமே இருக்கும். வெவ்வேறு சமூகங்களின் மத உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படும்.”

- செல்வி மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்