உட்புகுமுன்...
அன்பு வாசகர்களே,
நீங்கள் வாசிக்கும் ‘தெய்வீகத் தடங்கள்’ என்னும் இத்தொடர் 2014-ஆம் ஆண்டு வாழ்க்கையை உடைத்துப் போடும் சாவிற்கு, மிக அருகில் எடுத்துச் சென்ற அனுபவத்தைப் பெற்ற ஒருவரது தனி சாட்சியத்தைக் கொண்டது. அவருடைய வாழ்க்கையில் உயிர் காக்க இறைவன் மேற்கொண்ட குறுக்கீட்டின் நிகழ்வு அது.
இத்தொடர் அருள்பணி எம். அமல்தாஸ் சே.ச. அவர்கள் எழுதிய ‘தனது சுயசரிதை’ என்ற நூலைத் தழுவியது. இந்நூல் தந்திருக்கும் செய்தி அவரது அனுபவத்திற்கும், இறைவன்பால் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் ஒரு சாட்சியம். உயிரையே உலுக்கிப் போட்ட அந்த நிகழ்வு அவருடைய உடலுக்கு மறு உரு தந்திருக்கிறது; நம்பிக்கையின்மையையோ, தன்னிரக்கத்தையோ அனுமதிக்காத, வெற்றிகொள்ளவியலாத ஓர் ஆன்மிக ஆற்றலை அவரிடம் தூண்டியது. எல்லாவற்றிலும் இறை பிரசன்னத்தை ஏற்க அவருக்குக் கற்றுத் தந்தது; கடவுளை அன்பு செய்யும் அனைவருக்கும், அனைத்தும் அவர்களது நலனுக்காக இறுதியில் செயல்படும் என்ற நம்பிக்கைக்கு (மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு) இட்டுச்சென்றது (உரோமை 8:28).
இந்தத் தொடரின் கட்டுரைகளை நீங்கள் ஆழ்ந்து படிக்கும்போது, அருள்பணி எம். அமல்தாஸ் சே.ச. அவர்கள் இந்த நிகழ்ச்சியினால் பெற்ற அனுபவத்தினை நீங்கள் பார்க்க முடியும், உணர முடியும். இதனை அவர் கதையாடல் வழியாகவும், எடுத்துக்காட்டுகள், கவிதைகள் மூலமாகவும் தருகிறார். அவை அவருடைய மன ஆழத்திலிருந்து வருபவை. அவை அவருடைய மனப்போராட்டங்களையும், அவர் அனுபவித்த தாங்க முடியாத வலிகளையும், அவற்றைத் தாங்கிக் கொள்ள உதவிய அவருடைய ஆழ்ந்த நம்பிக்கையையும் தெளிவாகக் கொண்டு வருகின்றன. மேலும், அவர் சந்தித்த உடல், ஆன்மிகப் போராட்டங்களையும், அதன் பிறகு இறுதியில் வலுவுடனும், மகிழ்வுடனும், வெற்றியுடனும் மீண்டெழுவதையும் வெளிக்கொணர்கின்றன.
பகிர்ந்து கொள்ளப்படும் இந்த அனுபவங்கள் அனைவருடைய இதயங்களையும் தொட்டு நினைவலைகளை ஏற்படுத்தும். ஏனென்றால், நாம் அனைவருமே நமது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் வலிதரும், விளக்க முடியாத, நம்பிக்கையைத் தகர்க்கக் கூடிய துன்ப நிகழ்வுகளை அனுபவித்திருப்போம். குறிப்பாக, இந்தக் கட்டுரைகளைப் படிக்கின்ற சாவின் வாயிலிலிருக்கும் நோயாளிகளும், மரபணுக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களும் மன நிம்மதியும், வலிமையும் பெறுவார்கள். மேலும், இக்கட்டுரைகளில் சொல்லப்படும் அனுபவங்கள், வாழ்க்கை தங்களைக் கடுமையான வழிகளில் நடத்தியதால் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும், வாழ்க்கை பொருளற்றதுபோலத் தோன்றுவதால் வெறுமையாக உணர்வோருக்கும், நம்பிக்கை இழந்தோருக்கும் வாழ வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி, நம்பிக்கையின் ஒளியைக் கொடுக்கும். ஏனென்றால், மனித அவலங்களின் மத்தியில் குறிக்கோளால் வழிநடத்தப்படுகின்ற வாழ்க்கை உள்ளறிவின் மூல வளமாக இருக்கும்.
இந்தப் பக்கங்களில் அடங்கியிருக்கும் தனிப்பட்ட பகிர்வு வாசகர்களின் மனத்தையும், இதயத்தையும் மெல்லத் தட்டும் நோக்கம் கொண்டது. வாசகர் பகுத்தறிவுக்கு எட்டாத சூழல்களையும், அனுபவங்களையும் சந்திக்கும் போது வாழ்க்கையை நேர்மறையாக அணுகவும், அதில் நிலைக்கவும் அவரை அழைக்கிறது. வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சமநிலையான கண்ணோட்டத்துக்கு அழைத்துச் செல்லும் ஆழ்ந்த இறை நம்பிக்கை நாம் நேர்மறை எண்ணத்தோடும், வாழ்க்கையில் நம்பிக்கையோடும் இருக்க உதவுகின்றது.
சிக்கல்கள் தீர்க்கப்பட முடியும்; என்றாலும், வாழ்க்கை அடிக்கடி நம்முன் வைக்கும் ஆழம் காண முடியாத, புரிந்துகொள்ளப்பட முடியாத மர்மங்களை அவிழ்க்க முடியாது. அவற்றை அனுபவிக்கவே முடியும். ஆழ்ந்த இறை நம்பிக்கையின் வழியாய் உள்ளத்தளவில் புரிந்து ஏற்றுக்கொள்ளவே முடியும். அந்த நம்பிக்கை நாம் நமது இறுக்கத்தை விட்டு இறைவனிடம் விடச் செய்யும்.
தெய்வீகத் திருவுளத்தோடு இணைந்து பணிதல் நமது வாழ்க்கையைச் சீராக வைக்க உதவும்; பொருளற்ற வாழ்க்கைச் சூழல்களுக்குப் பொருள் காண உதவும். அப்போது நமது வாழ்க்கைக்கு ஒரு பொருளையும், ஆழத்தையும், அழகையும் கொண்டு வரும்.
இந்த அருள்பணியாளரின் சாட்சிய அறிக்கை இந்த இலக்கை நோக்கி வாசகர்களுக்கு உள்ளொளி தந்து தூண்டி எழுப்புகிறது, யாவருக்கும் அறை கூவல் விடுக்கிறது.
தனிப்பட்ட முறையில் தந்தை எம். அமல்தாஸ் சே.ச. அவர்களின் இந்த உளம்சார் பயணத்தில் நானும் ஒருவனாக இருப்பதற்கு நான் பெருமை கொள்கிறேன்; நன்றியுடையவனாய் இருக்கிறேன். ஏறத்தாழ சாவின் பிடியிலிருந்து அவர் மீண்டு வந்திருக்கிறார். மிகக் கொடும் துன்பத்திலும் மனித மனத்தின் அழிக்கப்பட முடியாத தன்மைக்கு அவரது சாட்சியம் ஒரு சான்று.
வெற்றிகொள்ள முடியாத, பணிதலில்லாத அவரது ஆன்மாவைப் பார்த்ததும் உடல், உணர்வு, ஆன்மிகப் போராட்டங்களை அவர் எதிர்கொண்ட வழியைத் தியானித்ததும் என்னை உள்ளொளியால் நிரப்பின. தந்தை அமல்தாசின் தனிப்பட்ட சாட்சியத்தை வாசித்தது எனக்கு ஓர் ஆன்மிக அனுபவம்; ஓர் ஆசீர்.
அவரை உயிரோடும், நேர்மறை உணர்வோடும் வைத்திருக்கும் கடவுளின் அன்பின் உதவியால் அவர் பெற்றிருக்கிற ‘சாவு என்று சொல்லாதே’ என்ற செய்தியே அது. அவரைக் காப்பாற்றி புது வாழ்வு கொடுத்ததற்காக அவரது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்வார் என்பது உறுதி.
இறைவனது உன்னதப் புகழுக்காக மட்டுமே சுயநலமின்றித் தாராள மனத்துடன் அவரது புது வாழ்க்கையை நடத்திட அவர் அழைக்கப்படுவதாகவும், அறைகூவல் விடப்படுவதாகவும் அவர் உணர்கிறார் என்பது எனது உறுதிப்பாடு.
(தொடர்ந்து வெளிவர இருக்கும் கட்டுரைகளுக்கு ஒரு முன்னோட்டமாகத் தெற்கு ஆசியாவிற்கான சேசு சபை மண்டலத் தலைவர் தந்தை வெர்னான் டி’குன்ஹா சே.ச. அவர்கள் தந்த முகவுரை இது. தமிழில் மொழியாக்கம்: பேரா. ச. வின்சென்ட்.)