Namvazhvu
வத்திக்கான் நீதித்துறையில் மாற்றங்கள்!
Friday, 03 May 2024 10:49 am
Namvazhvu

Namvazhvu

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் நீதித்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அவற்றைத் தன் சுய விருப்பத்தின் பேரில் வெளியிடும்Motu Proprioஎன்னும் அப்போஸ்தலிக்க அறிக்கையொன்றில் வெளியிட்டுள்ளார். தான் இத்தனை ஆண்டுகளாக வத்திக்கான் நீதித்துறையைக் கூர்ந்து கவனித்து, அதிலிருந்து பெற்ற அனுபவங்களின் மூலமாகவே கீழ்க்காணும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் திருத்தந்தை தெரிவித்துள்ளார். அதன்படி சாதாரண குற்றவியல் நீதிபதிகள் ஓய்வெடுக்கும் வயது 75 எனவும், உயர்நிலை நீதிபதிகளின் ஓய்வு வயது 80 எனவும் திருத்தியுள்ளார். ஒருவேளை தேவைப்பட்டால் இந்த வயது வரம்புகளைத் தாண்டி சிலரின் பணியை நீட்டிப்பதற்கும் திருத்தந்தைக்கு அதிகாரம் உண்டு.

மேலும், ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஒரு நீதித்துறைத் தலைவருக்கு ஒரு துணைத் தலைவரை நியமித்து, தலைவர் ஓய்வு பெறும்போது துணைத் தலைவரே தலைவராகத் தொடரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தங்கள் பணிகளைச் சரியாக ஆற்ற முடியாத நிலையில் இருக்கும் நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்யவும், சில வேளைகளில் தற்காலிகமாகக்கூட பதவி நீக்கம் செய்யவும் திருத்தந்தைக்கு அதிகாரம் உண்டு. இந்தப் புதிய விதிமுறையில் வத்திக்கான் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் குறித்தும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.