தத்துவாஞ்சேரியில் அருளானந்தர்
அணைக்கரையில் கொள்ளிடம் ஆறு இரு ஆறுகளாகப் பிரிந்து பாய்கின்றது. இவ்விரண்டு ஆறுகளின் இடைப்பட்ட படுகையில் தத்துவாஞ்சேரி என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றி அடர்ந்த காடுகள் அமைந்திருப்பதால், அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்படுவதில்லை. அன்று இவ்வூர் உடையார்பாளையம் ஜமீனுக்கு உட்பட்டது. ஜமீனும், அவரின் சகோதரரும் அருளானந்தர்மீது பெருமதிப்புக் கொண்டு கிறிஸ்தவ சமயம் பரப்பவும், ஆலயம் எழுப்பவும் உரிமை வழங்கினர். தத்துவாஞ்சேரி, சிக்கல் நாயக்கன்பேட்டை, பந்தநல்லூர், மயிலாடுதுறை, திருகடம்பனூர், காலிமார் முனை, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கும் சென்று புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கினார் அருளானந்தர்.
1677, டிசம்பர் 17 அன்று பெரு வெள்ளம் கொள்ளிடத்தில் கரைபுரள, அருளானந்தர் மற்றும் மக்கள் அனைவரும் அவ்வூரின் பழங்கோட்டைக்குள் தஞ்சம் புகுந்தனர். வெள்ளத்தில் ஆலயமும், குருவின் இல்லமும் இடிந்து போயின. அருளானந்தர் குடிசை ஆலயம் ஒன்றை எழுப்பி, அவ்வாண்டின் கிறிஸ்துமஸ் திருப்பலி நிறைவேற்றினார். நல்ல உள்ளம் படைத்த அரியலூர் ஜமீன்தார், புத்தாண்டில் புதிய ஆலயமும், குருக்கள் இல்லமும் அமைத்துக் கொடுத்தார். 1676-ஆம் ஆண்டு தவக்காலத்தையும், பாஸ்குப் பெரு விழாவையும் தத்துவாஞ்சேரியில் கொண்டாடினர். இவ்வாண்டு இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்டோருக்குத் திரு முழுக்கு வழங்கினார்.
கூவத்தூரில் மறைப்பணி
மதுரை மறைப்பணித்தளத் தலைவர் ரோட்ரிகஸ் வேண்டுகோளுக்கிணங்க அருளானந்தர் கூத்தூர் என்ற கூவத்தூர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஆலயம் எழுப்பி, நற்செய்திப் பணியில் ஈடுபட்டார். இவ்வூரின் பிராமணர்கள் தந்தைக்குப் பலவிதத்தில் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர். இவ்வூரின் தலைவர் ஒரு பிராமணன்; அவர் பெயர் மீனாட்சி. இந்து விழாக்களுக்குக் கிறிஸ்தவர்கள் திருவிழா வரி தர வேண்டுமென வற்புறுத்தினான். அவன் திடீரென இறந்து போக, அச்சமடைந்த மக்கள் 700 பேர் திருமுழுக்குப் பெற்றனர். அருளானந்தர் கீழத்தஞ்சை, செஞ்சி பகுதிகளுக்கு நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு மக்களை இறை நம்பிக்கையில் கட்டியெழுப்பினார். காற்று, மழை, குளிர், வெயில், வெள்ளம், பசி, புயல் எனப் பாராது உழைத்தார். மக்களை வெளிப்படையாகச் சந்திக்க முடியாதபோது காட்டில் மறைந்திருந்து மறைப்பணி புரிந்தார். ஒருமுறை ஏழு ஆறுகளைக் கடந்து சென்று செஞ்சிப் பகுதியில் மக்களைச் சந்தித்தார். தத்துவாஞ்சேரி-கூவத்தூர் என இரண்டு பணித்தளங்களையும் ஒருசேரக் கண்காணித்து வந்தார். தத்துவாஞ்சேரியில் இடைநிலைச் சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை ஒன்றுதிரட்டி 1676-இல் பாஸ்குப் பெரு விழாவைக் கொண்டாடினர். திருவிழா முடிந்தவுடன் இடைநிலைச் சாதியினர் ‘எம் சமூகத்தில் இன்னும் பலர் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து வழிபாடுகளில் பங்கெடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். தலித் மக்களுக்கென தனி ஆலயம் இருந்தால் நல்லது’ என்றனர். இதற்குத் தலித் மக்களும் ஆமோதிக்க, அருளானந்தர் தத்துவாஞ்சேரி கிழக்கே 60 கி.மீ தொலைவிலுள்ள சிறுகடம்பனூர் தளத்தை 1678-இல் நிறுவினார்.
ஒவ்வொரு முறையும் இவ்வூருக்குச் சென்றுவர அருளானந்தர் மூன்று ஆறுகளை நீந்தி வந்தார். சிறுகடம்பனூர் மக்கள் புனித சவேரியாரால் திருமுழுக்குப் பெற்றவர்கள் என்பது மரபு வழிச்செய்தி. புனித சவேரியார் சிறுகடம்பனூர், சாத்தன்குடி, காரைக்கால், எருக்கூர், கண்டமங்கலம், மயிலாடுதுறை, பெரும்பண்ணையூர், போலூர், மணலூர், மாத்தூர், மூலங்குடி ஆகிய ஊர்களுக்கும் பயணித்துத் திருமுழுக்களித்தார் என்பதும் மரபுவழிச் செய்தி.
அருளானந்தர் காவி நிற உடையில், பண்டார சுவாமியாக எளிய மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். புனித சவேரியாரைப் போன்று கைமணி அடித்து, மக்களை ஒன்றுசேர்த்து, திருப்பலி மற்றும் திருவருள்சாதனங்களை நிறைவேற்றினார். அருளானந்தரின் பணி வாழ்வு இன்றுவரை சிறு கடம்பனூர் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கின்றது. குடந்தையில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டபோது மூன்று முறை இங்கு வந்து மக்கள் விடுதலையடைய போராடினார். வடக்கன்குளத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு, பெருந்துன்பங்களை அனுபவித்து விடுதலையடைந்த அருளானந்தர், தனது உடல் நிலையைப் பொருட்டாகக் கருதாமல் தஞ்சைப் பகுதியில் இன்னலுற்ற மக்களை விடுவிக்க வழி தேடினார். காலிமார்முனையில் சிறையிலடைக்கப்பட்ட இளைஞன் ஆனந்துவை வீடு தேடிச் சென்று நலம் விசாரித்தார். தஞ்சை மன்னரும், செஞ்சி ஆளுநரும் அருளானந்தரிடம் அடிக்கடி பொன்னும், பொருளும் தேடினர். பல நேரங்களில் இவரின் மறைப்பணிக்குத் தடை விதித்தனர். அருளானந்தரோ மனம் தளராமல் மதுரை, வேலூர், ஆற்காடு, தஞ்சை, இராமநாதபுரம், செஞ்சி, பாண்டநல்லூர், தத்துவாஞ்சேரி, கடம்பனூர், கூவத்தூர், கரையாம்பாடி, வடக்கன்குளம் ஆகிய பகுதிகளுக்குத் தவறாமல் பயணித்து இறைப் பணியாற்றினார்.
(தொடரும்)