Namvazhvu
கூட்டொருங்கியக்கத் திரு அவை தலத் திரு அவையில் ஒரு சுய ஆய்வு
Friday, 03 May 2024 12:03 pm
Namvazhvu

Namvazhvu

அண்மையில் மறைமாவட்ட அளவில் கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் துறவறத்தார் மற்றும் படித்த நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பொதுநிலையினர். ஆகவே, விவாதம் ஆன்மிக வழிபாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதைப் பற்றி நடந்ததே தவிர, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கத்தோலிக்க மக்களின் தேவைகளைப் பற்றிய விவாதங்கள் எழவே இல்லை. அவர்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டொருங்கியக்கத் திரு அவையின் விடியலுக்கான ஆவலில் எழுந்ததே இக்கட்டுரை.

உலகளவில் கூட்டொருங்கியக்கத் திரு அவையை (Syndolity) உருவாக்க வத்திக்கான் சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பங்குத் தளங்களிலும், மறைமாவட்ட அளவிலும் தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.

கூட்டொருங்கியக்கத் திரு அவை என்றால் என்ன? அது சாத்தியமா? என்ற வினா பலருடைய மனங்களிலும் எழுந்திருக்கிறது. அதாவது, கத்தோலிக்கர்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்துவோடு ஒரே உடலாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை நடைமுறைப்படுத்துவது ஆகும்.

இன்னும் எளிமையாக விளக்க வேண்டுமானால், நமது உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பணிகள் உள்ளன. ஆனால், அவைகளில் ஏற்றத்தாழ்வு என்பது இல்லை. தலை மேலே இருப்பதால் உயர்ந்தது, கால் கீழே இருப்பதால் தாழ்ந்தது என்று நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. காலில் முள் குத்தினாலும் அதன் வலி உடலெங்கும் பரவுகிறது. வலியைத் தாங்க முடியாமல்அம்மாஎன்று வாய் அலறுகிறது, கண்களிலிருந்து நீர் கசிகிறது. அதேபோல் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். நமக்குள் சமத்துவம், சகோதரத்துவம் உருவாக்கப்பட வேண்டும். ‘நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாக வைத்திருந்தனர். நிலபுலன்களும், பிற உடைமைகளையும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் கூட வந்தார்கள். பேருவகையோடும், எளிய உள்ளத் தோடும் வீடுகள்தோறும் அப்பத்தைப் பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள்’ (திப 2:42-46). இதுதான் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. அப்படிப்பட்ட ஓர் இறைச் சமூகத்தை இன்று நம்மால் ஏன் உருவாக்க முடியவில்லை?

இந்நிலையில் மதச் சிறுபான்மையினராக உள்ள ஜெயின் மதத்தவர், பார்சி சமூகம், சீக்கியர் இவர்களின் சமூக வாழ்வு முறையும், பொருளாதார தற்சார்பும் மிகவும் கவனிக்கத்தக்கவை. ஆனால், நமது கிறிஸ்தவர்களின் நிலையோ மிகவும் பரிதாபம்! அரசியலில் நாம் அநாதையாக்கப்படுகிறோம். நம்மை ஒரு பொருட்டாகவே அரசியல் கட்சிகள் மதிப்பதில்லை. எத்தனையோ கல்வி நிறுவனங்களை நாம் நடத்தி வருகின்றோம். அதுவும் மிகச்சிறந்த ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்கள், மேலாண்மைப் பள்ளிகள் அனைத்தும் நம்முடையவை. அறுபது விழுக்காட்டிற்கு மேல் கல்வி நிறுவனங்கள் கிறிஸ்தவர்களிடம் உள்ளன. கல்விக் கண்ணைத் திறந்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்று பெருமையாகப் பேசுவதைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைகின்றோம். ஆனால், நமது கத்தோலிக்க இளைஞர்கள் 70%-க்கும் மேல் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள்.

மேலும், கிறிஸ்தவர்களிலேயே பொருள் படைத்தோர் தங்கள் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு எங்கும் எளிதில் இடம் பெற்றுவிடுகிறார்கள். ஏழைப் பிள்ளைகளுக்கு அந்தக் கல்வி நிறுவனங்களுக்குள் நுழையக்கூட அனுமதியில்லாத சூழல் இருக்கத்தான் செய்கிறது. இயேசு பாமரர்களைத் தேடியே வந்தார். ஏழை எளியவர்களுக்கு உயர் கல்வி அளிப்பதற்காகத்தான்சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள்செயல்படுகின்றன. ஆனால், பயன் பெறுபவர்கள் பிற மதத்தைச் சார்ந்த உயர்மட்டக் குடிமக்களின் பிள்ளைகள் என்பது உண்மையே!

ஏன் இந்த முரண்பாடு? பல கத்தோலிக்கக் குடும்பங்கள் இன்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றன. அவர்களுக்குத் தோள் கொடுத்துத் தூக்கி விட்டிருக்கிறோமா? பொருளாதாரத் தன்னிறைவு இல்லாமல் ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபட முடியுமா? அடுத்த நேர உணவைப் பற்றிக் கவலைப்படுபவன் எப்படி ஆண்டவனை நினைப்பான்? மேலும், நமக்குள்ளே சாதியப் பாகுபாடுகளை எப்போது ஒழிக்கப் போகிறோம்? இன்றும் பல கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் புறக்கணிக்கப்படும் நிலை இருக்கிறதே! இத்துடன், சாதி அடிப்படையில் கிறிஸ்தவக் கல்லறைகள் வேறு.

திரு அவையில் சாதிகளை ஒழிக்க முடியவில்லை; நம் இளையோரை நூறு விழுக்காடு கல்வியறிவு உடையவர்களாக மாற்ற முடியவில்லை; கிறிஸ்தவக் குடும்பங்களில் பொருளாதாரத் தன்னிறைவை உருவாக்க முடியவில்லை, இத்தகைய சூழலில் கூட்டொருங்கியக்கத் திரு அவையைச் சமத்துவம், பொதுவுடைமை, பிறர்மீது அக்கறை ஆகிய தொடக்கக் கிறிஸ்தவர்களின் மதிப்பீடுகளால் கட்டி எழுப்ப முடியுமா?

நமது திரு அவையும் இந்தியக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும்.

எப்போது நமது மக்களின் பொருளாதாரம் வளர்கிறதோ, அப்போதே சாதி பாகுபாடுகள் நிச்சயம் மறைந்து போகும். கல்வியறிவின்மை மறையும். சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் கல்வியறிவின்மை போன்ற தடைகள் தகர்க்கப்படும்போது, நிச்சயமாக நாம் விரும்பும் கூட்டொருங்கியக்கத் திரு அவை உருவாகும் என்பதே எமது நம்பிக்கை.