Namvazhvu
இவர்களால் முடிந்தது என்றால்...! மகிழ்ச்சி வேண்டுமா? கொடுத்துப் பாருங்கள்!
Thursday, 09 May 2024 07:07 am
Namvazhvu

Namvazhvu

ஏழைகளும், பாமர மக்களும் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தியாகாமல் வாழும் மக்களுக்கிடையே, எவ்வளவு பணக்காரர்களாகக் கொடிக்கட்டிப் பறந்தாலும், பேராசையின் காரணமாக மீண்டும் மீண்டும் செல்வத்தையும், பணத்தையும் குவிக்கும் மக்களும் வாழத்தானே செய்கிறார்கள்! செய்தி மிக மிகக் கசப்பானதாக இருந்தாலும், அதுதானே உண்மை! இவர்களிலும் ஒருசில உதாரணம் காட்டக் கூடிய மனிதர்களும், திரும்பிப் பார்க்க வைக்கும் மாமனிதர்களும் வாழ்வதால்தான் உலகம் இயங்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 ‘கொடுத்து வாழவேண்டும்என்பர். ஆனால், கொடுப்பது என்பது பலரும் நினைப்பதைப் போன்ற சாதாரண செயல் அல்ல; இதற்குப் பின் இருந்து செயல்படுத்தும் மனநிலையை அளக்க அளவுகோல் கிடையாது. மனமில்லாமல் கொடுக்கும் நிலையிலிருந்து, எதுவுமில்லாமலும் கொடுக்கும் நிலை வரை இதற்குப் பலப்பலப் பரிமாணங்கள் உள்ளன. சிலர் கட்டாயத்தினால் கொடுக்கின்றனர். இன்னும் சிலர் விளம்பரத்துக்காகக் கொடுக்கின்றனர். மேலும் சிலர் கடமைக்காகக் கொடுக்கின்றனர். வேறு சிலர் வேறு வழியில்லாமல் கொடுக்கின்றனர். இதனால் கொடுப்பதால் உருவாகும் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்காமலே வாழ்கின்றனர்.

இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ‘யாருக்குக் கொடுக்க வேண்டும்?’ என்றும், ‘எப்படிக் கொடுக்க வேண்டும்?’ என்றும் தெரிந்திருந்தாலே போதுமானது. தொலைநோக்குப் பார்வையில் நாம் சேர்த்து வைக்கும் பொருள், குவித்து அழகு பார்க்கும் பணம், பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடுகள் போன்ற அனைத்தும் நம்முடையவை அல்ல; மாறாக, பிறரின் தேவைகளுக்காக எவற்றையெல்லாம் கொடுத்தோமோ, அவை அனைத்துமே நம்முடையவைகள்.

  பிறரிடமிருந்து நாம் பெறுவதை விட, பிறருக்கு நாம் கொடுப்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பது தெரியாததால்தான் பலரும் கொடுக்கத் தயங்குகிறார்கள். இந்த உண்மை புரியாததால் பணம் சேர்ப்பதற்காக ஓய்வு, உறக்கம் எல்லாவற்றையும் தியாகம் செய்து, உலகம் முழுவதும் அலைவோரும் உண்டு. ஏதாவதொரு பொருளை, பணத்தை நாம் பெறும்போது, அப்போதைக்கு அது மகிழ்ச்சியைத் தரும். ஆனால், தேவையில் உழல்வோருக்கு நாம் செய்யும் உதவிகளும், கொடுக்கும் தானங்களும் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

நம்மில் இல்லாததை நாம் பிறருக்குக் கொடுக்க முடியாது. இருப்பதைத்தான் கொடுக்கின்றோம் அல்லது இருப்பதில் கொடுக்கின்றோம். ‘கொடுத்தல்என்றவுடன் பணம், காசு, பொருள் என்று மட்டுமே நாம் எண்ணிவிடக்கூடாது. உடல் உழைப்பு, ஆக்கப்பூர்வமான வார்த்தைகள், ஆபத்து கால உதவிகள், தகுந்த ஆலோசனைகள், தனிமைச் சிறையில் வாடுவோர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்பது, மருத்துவமனை, தேவையான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், சண்டைகள், பிரச்சினைகள் தீர உதவுதல் போன்ற எதையும் நாம் பிறருக்குக் கொடுக்கலாம்.

எல்லாரும் நன்றாகத்தானே இருக்கின்றார்கள்? என்னைவிட துன்பப்படுபவர்கள் யாரும் உலகில் இல்லைஎன அனைத்தையுமே வைத்துக் கொண்டு விதண்டாவாதம் செய்யும் அறிவுஜீவிகள் நம்மிடையே உள்ளனர். எதுவும் இல்லாதவர்கள் போல் பலரும் நடிக்கின்றார்கள். எனவே, நான் எதுவும் பிறருக்குக் கொடுத்து ஏமாற மாட்டேன் என்று தங்களது செயலை நியாயப்படுத்தும் நீதிபதிகளும் நம்மிடையே பலர் உள்ளனர்.

தேவையில் இருப்போர் நம் கண்களுக்குத் தெரிய, நம் புறக்கண்கள் மட்டுமே பார்வை உடையதாக இருந்தால் போதாது; அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். துன்புறுவோரும், துன்புறுத்தப்படு வோரும் பேசுவதும், அழுவதும் நம் காதுகளுக்குக் கேட்க, நமது காதுகள் கேட்கும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான அழுகுரல் நமக்குக் கேட்கும். இப்படிப்பட்ட மக்களுக்காக நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நல்லெண்ணம் நம்மிடமும் உருவாகும்.

இவ்வுலகில் நாம் அனைவருமே நிலையான மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தேடியே ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில் மாற்றுக்கருத்து இருக்காது என்றே எண்ணுகிறேன். உண்மையான மகிழ்ச்சி நாம் சேர்க்கும் பணத்தில் இல்லை; நிலையான மகிழ்ச்சி பார்க்கும் பணியில் இல்லை; மன அமைதி வகிக்கும் பதவிகளில் இல்லை. பின் எதில்தான் இருக்கின்றது?

உண்மையான மகிழ்ச்சியைக் காண தேவையில் இருப்போருக்குக் கொடுத்துப் பாருங்கள்; தானாகப் புரியும்! பல செயல்களின் விளைவுகளை உடனடியாக அனுபவிக்க முடியாது. அவை சரியா? தவறா? என்று கூட புரியாது. ஆனால், எதையாவது பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும், மன அமைதியும் உடனடியானது. இதைப் புரிந்தவர்களும், உணர்ந்தவர்களும், அனுபவித்தவர்களும் தான் மீண்டும் மீண்டும் கணக்குப் பார்க்காமல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். உலகோர் பார்வைக்கு இவர்களது செயல் தேவையற்றதாகத் தெரியலாம். ஏன், இப்படிப்பட்டோரை ‘பிழைக்கத் தெரியாதவர்கள்என்று முத்திரை குத்துவோரும் உண்டு.

சமீபத்தில் வலைதளத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. திரைப்பட நடிகர் இராகவா லாரன்ஸ் செய்த செயல் பற்றிய வீடியோ பதிவுதான் அது. மாற்றுத்திறனாளிகளுக்கென வடிவமைக்கப்பட்ட புத்தம்புது ‘பைக்குகளை ஒரு வாகனத்திலிருந்து கீழே இறக்கினார்கள். 13 மாற்றுத் திறனாளிகளுக்கு அவை வழங்கப்பட்டன. பரிசுகளைக் கொடுப்பதற்கு முன்பு அவர்களின் கண்களை மூடிய வண்ணம் அழைத்து வரப்பட்டனர். தங்களுக்கென வாகனத்தை அவர்கள் பெற்றபோது, அவர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை எழுத வார்த்தையே இல்லை. இரு கால்களும் இல்லாத ஒருவர் சுமார் இரண்டு அடி உயரம் துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியக் காட்சி, பார்ப்பவர் மனத்தை விட்டு நீங்காது.

தனது வாழ்க்கையில், தான் சற்றும் எதிர்பாராத ஒன்று கிடைத்த மகிழ்ச்சி அந்த மாற்றுத் திறனாளிக்கு! உண்மையான தேவையில் இருப்போருக்குக் கொடுத்த நிறைவு உதவி செய்தவருக்கு!

சிலர் தங்களிடம் இருப்பதையெல்லாம் பிறருக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்களே! எப்படி முடிகிறது? என்று ஆச்சரியப்படுவோருக்கும், தங்களிடம் இல்லாதபோதும், இருப்போரிடம் உதவிகள் கேட்டு பிறருக்குக் கொடுக்கின்றார்களே... ஏன்? என்று புரியாதவர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளும், வீடியோக்களும் புரிய வைக்கும்.

பிறர் நலம் பேணும் உதவிகளும், பதவிகளும், செயல்களும் செய்ய பணம் அடிப்படை அல்ல; பணம் மட்டுமே போதுமென்றால் பல பணக்காரர்கள் இதைச் செய்திருப்பார்களே! அவர்களின் கண்களில் தேவையில் உழல்வோர் தெரிவதில்லையே! இதுபோன்ற உதவிகள் செய்ய ஈரமான இதயமும், அகப்பார்வையும் வேண்டும். பணம் அல்ல!

  செல்லும் பாதையில், போகிற போக்கில் 50 ரூபாய், 100 ரூபாய் எனக் கொடுத்துவிட்டுப் போவது உதவிகள் அல்ல; அவை அகக்கண் பார்வையால் நிகழ்வன அல்ல; அகக்கண் பார்வை உடையோர் நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுப்பர். இவர்கள் கண்களில் சாதி, மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகள் தெரியாது. பிரதிபலன் எதையும் எதிர்பாராமல், தொடர்ந்து உதவிகளைச் செய்து கொண்டேயிருப்பார்கள். இவர்களால் முடிந்தது என்றால் நம்மாலும்......!

உண்மையான மகிழ்ச்சி வேண்டுமா?

            கொடுத்துப் பாருங்கள்; புரியும்!

நிலையான அமைதி வேண்டுமா?

            தேவையில் உதவுங்கள்; தெரியும்!