சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட இளையோர் பணிக்குழுவின் பொன் விழா மற்றும் அன்னை மரியாள் உயர் மறைமாவட்டச் செபக்குழு ஒருங்கிணைத்து வந்த இணையவழி தொடர் செபமாலையின் 1050-வது நாள் நிறைவு விழா ஆகிய நிகழ்வுகள் கோடம்பாக்கம், புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஏப்ரல் 13-ஆம் தேதியன்று சிறப்பாக நடைபெற்றது.
பொன் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 450 இளைஞர்கள் இணைந்து உலகச் சாதனையாக ‘அதிகச் சத்தத்துடன் ஒரு பாடல் பாடும் முயற்சி’ மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அனைத்து இளைஞர்களும் ஆலய வளாகத்திற்குள் ஒன்றுகூட்டப்பட்டு ‘மாதாவே சரணம்’ என்னும் மரியன்னைப் பாடலை 112.5 டெசிபல் அளவிற்குச் சத்தமாகப் பாடினர். இவ்வுலகச் சாதனை அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நமது சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகை அவர்களுடன் இணைந்து 45 குருக்கள், 65 அருள்சகோதரிகள் மற்றும் 850 இளைஞர்கள் என ஏறக்குறைய 1560 பேர்கள் கலந்துகொண்ட சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இத்திருப்பலியில், “இளையோர், திரு அவைக்கும், தலத் திரு அவைக்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய வளம். இவர்கள் நாளைய எதிர்காலத்திற்கு அல்ல; இன்றைய நிகழ்காலத்திற்கே வளம் சேர்க்கும் மிகப்பெரிய ஆற்றல்! குறிப்பாக, அறிவியல் தொழில்நுட்பத்தில் தடம் பதித்துள்ள இந்த இளைய தலைமுறை, அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி திருத்தந்தை விரும்புவதுபோல, ‘ஊடக நற்செய்தி அறிவிப்புப் பணியாளர்களாக’ (Digital Evangelizers) மாற வேண்டும். மேலும், தங்களைத் தகுதியான ஆளுமைகளாக மாற்றிக் கொண்டு, சமூக மாற்றத்திற்கான முயற்சிகளையும், திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்” என வலியுறுத்திய பேராயர், இயற்கை நேயம், சமூக வளர்ச்சி, சமத்துவம், ஒருமைப்பாடு, மதநல்லிணக்கம் போன்ற மனித மாண்புகள் சிறக்கும் புதிய உலகைப் படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்” எனவும் அழைப்பு விடுத்தார். இறுதியில், பரிசளிப்பும், கலைநிகழ்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளை கோடம்பாக்கம் பங்குத் தந்தை அருள்பணி. இக்னேஷியஸ் தாமஸ் மற்றும் மறைமாவட்ட இளைஞர் இயக்குநர் அருள்பணி. ரொனால்டு ரிச்சர்டு ஆகியோர் இளையோர் பணிக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.