Namvazhvu
19, மே 2024, (இரண்டாம் ஆண்டு) தூய ஆவியார் பெருவிழா (திப 2:1-11; கலா 5:16-25; யோவா 15:26-27; 16:12-15)
Thursday, 16 May 2024 05:18 am
Namvazhvu

Namvazhvu

தூய ஆவியார் நம் தாய்!

இன்று நாம் தூய ஆவியாரின் பெரு விழாவைக் கொண்டாடுகிறோம். உயிர்ப்புப் பெரு நாள் முடிந்து ஐம்பதாம் நாள் இன்று! இதுவே பெந்தேகோஸ்து பெருவிழா! இயேசுவின் சீடர்கள் முற்றிலுமாக மாற்றம் பெற்ற நாள்; அச்சம் தோற்கடிக்கப்பட்டு, வீரம் வெற்றி கொண்ட நாள்; சீடர்களின் மூடிய கதவுகள் நற்செய்தி அறிவிப்புக்கெனத் திறக்கப்பட்ட நாள்; சீடர்களின் சந்தேகங்கள் அன்பு நிரம்பிய நம்பிக்கையினால் விரட்டப்பட்ட நாள்; இது அறுவடையின் நாள்! ஆம், நற்செய்தி அறிவிப்பின் வழியாக மக்களைத் திரு அவைக்கு அறுவடைச் செய்யும் நாள். தமது மீட்புப் பணியை வெற்றிகரமாக முடித்த இயேசு கிறிஸ்து மாட்சிமையுடன் விண்ணோக்கிச் சென்று, தாம் ஏற்கெனவே வாக்களித்த படி இறை ஆற்றலாம் தூய ஆவியாரை நமக்கு அனுப்பிய நாள். இன்றே திரு அவை பிறந்த நாள்! இந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடுவோம். இந்நாள் நமக்குச் சொல்லித் தரும் அழகான பாடங்களை இதயத்தில் ஏற்போம்.

‘ஆவி’ என்ற சொல் எபிரேயத்தில் ‘ரூஆ’ (Ruah) என்றும், கிரேக்கத்தில் ‘நீயூமா’ (Pneuma) என்றும், இலத்தீனில் ‘ஸ்பிரித்துஸ்’ (Spiritus) என்றும் அழைக்கப்படுகிறது. மூச்சு, காற்று, ஆன்மா என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். ‘ரூஆ எலோயிம்’ என்பது கடவுளின் ஆவி, கடவுளின் வல்லமை, கடவுளின் வாழ்வு என்றும் பொருள் கொள்கிறோம்.  ‘ரூஆ’ என்ற சொல் பழைய ஏற்பாட்டில் 378 தடவைகள் காணப்படுகின்றன. ‘தூய ஆவியார்’ எனும் சொல்லாடல் புதிய ஏற்பாட்டில் 311 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மூவொரு கடவுளின் மூன்று ஆள்களில் மூன்றாவதாக வெளிப்படுத்தப்பட்டவர் தூய ஆவியே!

திருவிவிலியம் தூய ஆவிக்குப் பல பெயர்களைத் தருகிறது. அவை: துணையாளர், உயிர் அளிப்பவர், வாக்குறுதியின் ஆவி, பிள்ளைகளாக்கும் ஆவி, உண்மையை வெளிப்படுத்துபவர், வல்லமையின் ஆவி, அருள்கொடைகளின் ஆவி, கிறிஸ்துவின் ஆவி, விடுதலையின் ஆவி, கடவுளின் ஆவி, மகனின் ஆவி, கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி என்பன. திருவிவிலியத்தில் தூய ஆவியார் தண்ணீர், எண்ணெய், நெருப்பு, புறா, காற்று, கை போன்ற பல அடையாளங்களால் சுட்டிக்காட்டப்படுகிறார்.

தூய ஆவிக்கு நாம் பல பெயர்களையும், அடையாளங்களையும் கொடுத்தாலும், ‘தாய்’ என்ற பெயர் மிகப் பொருத்தமாக இருக்கும்.

மங்களூரு உயர் குருமடத்தில் பேராசிரியரான இத்தாலி நாட்டைச் சார்ந்த அருள்பணியாளர் பியோ அவர்கள், ‘தூய ஆவி ஒரு தாய்’ என்பார். தூய ஆவியார் ஒரு தாயைப்போல அருகிலிருப்பவர்; அரவணைப்பவர்; கற்றுத்தருபவர்; காயங்களை ஆற்றுபவர்; வாழ்வு அளிப்பவர்; வழிகாட்டுபவர்; வரம் தருபவர். இயேசுவின் வாழ்வில் அவரின் அன்னையைப் போலவே, அவரின் பணிக்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் கூடவே பயணித்தவர் இந்தத் தூய ஆவியே.

இயேசு திருமுழுக்குப் பெற்றபோது, அவர்மீது இறங்கிய தூய ஆவி அப்பொழுதிலிருந்தே அவர்மீது இருந்தார் (யோவா 1:32). திருமுழுக்கு நிகழ்ச்சிக்குப் பின்னர் தூய ஆவி அவரைப் பாலைநிலத்துக்கு அனுப்பி வைத்தார் (லூக் 4:1). கடவுளின் ஆவி இயேசுவோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து, எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10:38). ஆண்டவருடைய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட இயேசு, இறையாட்சிக்கான பணியைச் செம்மையாகத் தொடங்குகிறார். அதே ஆவியைத் தம் சீடர்களும் பெறுவார்கள் என வாக்களிக்கிறார் (யோவா 14:16). தூய ஆவியாரைத் ‘தந்தையின் வாக்களித்த வல்லமை’ (லூக் 1:35) என லூக்கா அழகாகக் குறிப்பிடுகிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தூய ஆவியாரைத் ‘துணையாளர்’ என்றும், ‘உண்மையை வெளிப்படுத்துபவர்’ என்றும், ‘தூய ஆவியாரே உண்மை’ என்றும், ‘அவரே சீடர்களோடு தங்கி சான்று பகர ஆற்றல் அளிக்கிறார்’ என்றும், ‘அவரே சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்’ என்றும், ‘சீடர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்’ என்றும் தூய ஆவியைக் குறித்து யோவான் விளக்கம் தருகிறார். இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் வருகையின் விழாவில், அவரின் மூன்று முக்கியச் செயல்களைச் சிந்திப்போம்.

1. வாழ்வளிப்பவர் - தூய ஆவியார்

உயிர் வாழ்வுக்கு மூச்சு இன்றியமையாதது. மூச்சு நின்றுவிட்டால் மனித வாழ்வும் முடிவுக்கு வந்து விடும். தூய ஆவி என்பது மூச்சுக் காற்று. பழைய ஏற்பாட்டில் தூய ஆவியார் உயிர் அளிப்பவராகக் காட்டப்படுகின்றார். உயிர் ஊட்டப்படும் ஒவ்வொரு நிகழ்விலும் தூய ஆவியார் செயல்படுகிறார். படைப்பினிலே “நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” (தொநூ 1:2). மனிதனின் படைப்பிலே “ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்” (தொநூ 2:7) என்ற இறை வார்த்தைகள், கடவுள் வாழ்வளிப்பவர் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கடவுளுடைய படைப்பாற்றலின் உருவகமாக ஆவியார் செயல்பட்டார் (திபா 33:6; எசே 37:1-10). அதே ஆவியார் திருத்தூதர்களுக்கும் வாழ்வு அளித்ததை இன்றைய முதல் வாசகம் சுட்டிக்காட்டுகிறது.

பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர, சீடர்கள் புத்துயிர் பெறுகின்றனர்; அந்நாள் வரை உரோமைப் படைகளுக்கு அஞ்சி, ஒடுங்கிக் கிடந்தவர்கள் தூய ஆவியாரின் பெருமூச்சினால் நிரப்பப்பட்டு, உயிரோட்டம் பெறுகின்றனர்; புது உயிர்களாகத் துணிவுடன் வெளியே வந்து நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினர்; முதலில் உறுதியற்றவராய் இருந்த பேதுரு, வல்லமையுள்ள அருளுரையாளராக மாறுகிறார். அவரது இந்த மாற்றத்திற்குத் தூய ஆவியே காரணம். ஆவியின் ஆற்றலால் இயேசுவுக்காகத் தம் உயிரையும் அர்ப்பணிக்க முன்வந்தனர்.

2. வழிநடத்துபவர் - தூய ஆவியார்

இஸ்ரயேல் மக்களை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை வழிநடத்தியவர் தூய ஆவியார். ஒத்னியேல், கிதியோன், சிம்சோன் போன்ற நீதித் தலைவர்களையும் (நீத 3:10, 6:34), சாலமோன், தாவீது போன்ற அரசர்களையும் வழிநடத்தியவர் ஆவியார்தாம் (திபா 51:11). அவரே இறைவாக்கினர்களையும் (எசா 61:1-2) வழிநடத்தினார். இறைவாக்கினர்களுள் முதன்மையானவராகக் கருதப்பட்ட எலியா (1அர 18:2) பாகால் தெய்வத்தை எதிர்த்துப் போரிட்டது தூய ஆவியால்தாம். இயேசுவின் தாய் மரியா மற்றும் தந்தை யோசேப்பை இயக்கியதும் இந்தத் தூய ஆவியே. சக்கரியா, எலிசபெத்து, யோவான், சிமியோன் போன்றவர்களும் இதே ஆவியால் வழிநடத்தப்பட்டவர்கள்தாம். திருத்தூதர்கள் அனைவரும் ஆவியால் வழி நடத்தப்பட்டதைத் திருத்தூதர் பணிகள் நூல் மிக ஆழமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த நூல் ‘தூய ஆவியின் நற்செய்தி’ என அழைக்கப்படும் அளவிற்கு அவரின் செயல்பாடுகளைத் திருத்தூதர் பணிகள் நூலில் காணலாம்.

நம் ஒவ்வொருவரையும் உயிருள்ள மனிதமாக மாற்றுபவர் தூய ஆவியே. நம்முள் இருந்து, நம்மை வழிநடத்துபவர் தூய ஆவியார். அவரே திரு அவையின் உயிர்மூச்சாக இருந்து செயல்படுகிறார். தூய ஆவியாரே திரு அவையின் தலைவர்களையும் வழிநடத்துகிறார். அவரே திரு அவையின் பாதுகாவலராக, அரணாக இருந்து செயல்படுகிறார். நமக்கு, நம் திரு அவைக்கு உயிர் கொடுத்த தூய ஆவியார் நம்மையும், திரு அவையையும் நிறை உண்மையை நோக்கி வழிநடத்துகிறார் (யோவா 16:13). “நாம் தூய ஆவியால் வழிநடத்தப்படவில்லை என்றால், நம் உழைப்பு வீண்; நாம் செய்கின்ற செயல்களில் சாரமோ, சத்தோ இருக்காது” என்பார் புனித ஜான் மரிய வியான்னி.

3. வரம் தருபவர் - தூய ஆவியார்

திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரிலும் தூய ஆவியாரின் முத்திரை பதிக்கப்படுவதால், எல்லாருக்கும் அவர் வரங்களையும், கொடைகளையும் பொழிகிறார் (1கொரி 12:7). அதாவது, பிணி தீர்க்கும் வரம், சொல் வரம், வல்ல செயல்களைச் செய்யும் வரம், பரவசப் பேச்சு பேசும் வரம், பகுத்தறியும் வரம், இறைவாக்கு உரைக்கும் வரம், தொண்டாற்றும் வரம், கற்றுக் கொடுக்கும் வரம், ஈகை வரம் (1கொரி 12:8-10; உரோ 12:6-8) போன்ற அருள்கொடைகளையும் தூய ஆவியார் தருவதாகப் புனித பவுல் உறுதிபடக் குறிப்பிடுகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆவியார் தரும் கனிகளைப் பட்டியலிடுகிறார். அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என ஒன்பது விதமான கனிகளைத் தூய ஆவியார் நமக்கு அருள்கிறார் (கலா 5:22-23). வரங்களும், கனிகளும், கொடைகளும் எதற்காக? அவை அனைத்தும் பொது நன்மைக்காக, அதாவது, கிறிஸ்தவச் சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்காகவே பொழியப்படுகின்றன.

தூய ஆவியாரால் நாம் ஒவ்வொருவரும் வழிநடத்தப்பட நம் இதயம் திறப்போம். திருமுழுக்கில், உறுதிபூசுதலில், குருத்துவத்தில் பெற்ற தூய ஆவியாரே நம் மூச்சு, நம் உயிர்! அவரே நம் வாழ்வு! நம்மை இயக்கும் ஆற்றல்! அதனாலே, இறைவனை ‘அப்பா, தந்தையே’ என்று அழைக்கிறோம். இவ்வாறு நாம் இறைவனை அழைக்கும்போது, ‘நாம் கடவுளின் பிள்ளைகள்’ என்று தாயாம் தூய ஆவியார் சான்று பகர்கிறார் (உரோ 8:15-16).

திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, நாம் பகுதி நேரக் கிறிஸ்தவர்களாகக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் செயல்படாமல், முழுநேரக் கிறிஸ்தவர்களாக, அனைத்து நேரங்களிலும் கிறிஸ்தவ அழைப்பை வாழ்ந்து வெளிப்படுத்துவோம். முழு நேரக் கிறிஸ்தவர்களாகச் செயல்படும்பொழுது தூய ஆவியார், ஒரு தாயாக, நம் ‘உள்ளிருக்கும் கடவுளாக’ (1கொரி 3:16) நம்மிலிருந்து செயலாற்றுவதை உணரலாம்.