Namvazhvu
வாழ்வு தரும் விருந்து                   
Wednesday, 22 May 2024 11:04 am
Namvazhvu

Namvazhvu

அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த பொழுது, இயேசு அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்துஇதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்என்றார் (மாற்கு 14:22). அப்பொழுது இயேசு அவர்களிடம், “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்என்றார் (மாற்கு 14:24).

 திருப்பலியின்போது, குருக்கள் இயேசு கூறிய அதே வார்த்தைகளைப் பயபக்தியோடு சொல்கிற போதெல்லாம், அப்பம் இயேசுவின் திருவுடலாகவும், இரசம் இயேசுவின் திரு இரத்தமாகவும் மாறுகிறது. அதை நாம் நம்புகிறோம். அதில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், அதே நற்கருணை ஆண்டவரோடு நாம் தனிப்பட்ட முறையில் கொண்டிருக்கும் அணுகுமுறையே நம்மில் மாற்றத்தை உண்டாக்குகிறது.

திருப்பலியில் திருவிருந்து நடந்து கொண்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராக வந்து நற்கருணை ஆண்டவரைப் பக்தியோடு வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். அடுத்து வந்த அந்த வயதான பெண்மணி, ‘கிறிஸ்துவின் திருவுடல்என்று கூறிய குருவானவருக்குப் பதில் கூறாது நின்று கொண்டிருந்தார். அவரை அவசரப்படுத்திய குருவானவர், மீண்டும் ஒருமுறைகிறிஸ்துவின் திருவுடல்என்றார். அந்தப் பெண்ஃபாதர், நான் ஒரு பெரும் பாவிஎன்று கூறித் தயங்கினார். குருவானவர் மீண்டும் அவரிடம், “இயேசு தமது திரு இரத்தத்தால் உன் பாவங்களைக் கழுவிப் போக்கிவிட்டார். அவர் உன்னை நேசிக்கிறார் என்பதன் அடையாளமாகவே அவர் உன்னைத் தேடி வருகிறார்என்று கூறியபோது, அந்தப் பெண் இயேசுவின் திருவுடலைப் பக்தியோடும், நம்பிக்கையோடும் பெற்றுக்கொண்டார்.

கிறிஸ்துவின் திருவிருந்தில் அலட்சியமாக நாம் பங்கு பெறுவதைத் தவிர்க்க வேண்டும். திருத்தூதர் பவுல் காலத்தில் உண்மையான பயபக்தியோடு இயேசுவின் திருவிருந்தில் கலந்து கொள்ளாத பலர் நோய்களால் தாக்கப்பட்டார்கள், சிலர் மரணமடைந்தார்கள் (1கொரி 11:21,28-30).

இயேசு கிறிஸ்து தம்மையே அழித்து, உணவாக மாற்றி நமது ஆன்மாவோடும், இதயத்தோடும் இரண்டறக் கலந்து விடுகிறார். நற்கருணையின் மூலம் நம்மில் கலந்துவிடும் இயேசு, நம் பாவங்களை மன்னிக்கிறார். நமது நோய்கள் அனைத்தையும் குணமாக்குகிறார். நமக்கு வலிமையளிக்கிறார். அந்த நற்கருணை ஆண்டவர் மீது பக்தியும், பாசமும் கொண்டு வாழ்ந்தால் நமக்கு எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம் உண்டு.

1946-ஆம் ஆண்டு காலை 8.10 மணி. ஜப்பானில் ஹிரோஷிமா நகரின் நடுவே அணுகுண்டு விழுந்து வெடித்தது. கணப்பொழுதில் 80,000 பேர்கள் இறந்து மடிந்தனர். அங்குத் தப்பிப் பிழைத்த கட்டடங்களில் இயேசு சபையினரின் வீடு ஒன்றும் இருந்தது. இயேசு சபையினரின் வீட்டில் குற்றுயிராய்க் கிடந்த 200 பேர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்த நாள் காலையில் அந்த 200 பேர்களும் வலியினால் துடித்துக் கொண்டிருந்த அதே அறையின் ஒரு பகுதியில், இயேசு சபையின் அருள்பணியாளர் பேதுரோ அருப்பே தனது காலைத் திருப்பலியை ஆரம்பித்தார். அக்கால முறைப்படி மக்களுக்கு முதுகுப்புறம் காட்டி திருப்பலியை ஆரம்பித்த அவர், மக்களை நோக்கித் திரும்பிஆண்டவர் உங்களோடு இருப்பாராகஎன்று ஆரம்பித்தபோது, அங்கு வேதனைக் குரலெழுப்பிக் கொண்டிருந்த மக்களைக் கண்டதும் சொற்கள் அவரின் தொண்டைக்குள்ளேயே நின்று போயின. நடுப் பூசை வேளையில்ஆண்டவரே, இவர்கள் மேல் இரங்கியருளும். இவர்களுக்கு வேதனைகளைத் தாங்கிக்கொள்ள ஆற்றல் அளித்தருளும். இவர்கள் உம்மை அறிய வேண்டும்என்று கண்ணீரோடு மன்றாடினார். அந்தப் பீடத்திலிருந்து அருளும், இரக்கமும் அபரிமிதமாகப் பொழிந்தன. மரண வேதனையிலும், சாவின் வாயிலிலும் கிடந்த அத்தனை பேரும் பிழைத்து முற்றிலும் குணமடைந்து சென்றனர்.

துயரப்படுபவர்களோடு சேர்ந்து துயரப்பட்டு, தேவைப்படும் உதவியைத் தருவது கிறிஸ்துவின் அன்பு; எந்த மனித முயற்சியும் தரமுடியாத ஆறுதலைத் தரக்கூடியது கிறிஸ்துவின் அன்பு. வேதனைகளின் மத்தியிலும் முகம் மலர்ந்து புன்னகை காட்டும் அளவுக்கு உள்ளத்திற்கு ஆழ்ந்த அமைதியளிக்க வல்லது கிறிஸ்துவின் பேரன்பு”  என்கிறார் அருள்பணி பேதுரோ அருப்பே.

நம் வாழ்க்கை, படிப்பு, எதிர்காலம் என்ன ஆகும்?’ என்ற குழப்பத்துடனும், பயத்துடனும் இருக்கிறீர்களா? பயப்படாதீர்கள்! ஆண்டவர் இயேசு உங்களை அற்புதமாக வழிநடத்துவார்!

என்னை உண்போர் என்னால் வாழ்வார்” (யோவான் 6:57) என்று கூறிய இயேசு, பயம் தரும் சூழலைக் கட்டுப்படுத்த வல்லவர். புயல் காற்றை அமைதிப்படுத்தக் கூடியவர் (மாற்கு 4:39). உடலிலும், மனத்திலும் பூரண சுகம் தரக்கூடியவர் (மத் 8:14,15). மரணத்தை வெல்லக் கூடியவர் (யோவா 11:43,44). இயேசுவை நம்புங்கள்! “மகனைக் கண்டு, அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்” (யோவா 6:40).

மக்களால் அன்போடு கொண்டாடப்பட்டவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் விஞ்ஞானி. அக்காலத்தில், தான் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீதிகளிலும், வீடுகளிலும் மின்சார விளக்குகள் எரிய வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. ஆனால், கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தி வந்த அவரது காலத்தில், தனது ஆசை நிறைவேறுமா? என்னும் கேள்வி ஒரு புறம் அவருக்குள் எழுந்தாலும், ஆசை நிறைவேறும் என்னும் இலட்சியத்தோடு அவர் உழைத்தார். 1879-ஆம் ஆண்டு 40 மணி நேரம் தொடர்ந்து எரியக்கூடிய மின் விளக்கை எடிசன் முதன் முதலாக உலகுக்கு அறிமுகப்படுத்தினார். உலகிலேயே மின் மயமாக்கப்பட்ட முதல் நகரமாக நியூயார்க் நகரம் மாறியது.

ஒரு தனி மனிதரின் முயற்சி, உழைப்பு, நம்பிக்கையால் இருளில் இருந்த நகரம் வெளிச்சத்தைக் காண முடிந்ததென்றால், அகில உலகையும் படைத்த அன்பு இறைவனின் உடனிருப்பால், இருள் சூழ்ந்த நமது வாழ்க்கையும் வெளிச்சமாக மிக எளிதாக மாற முடியும்.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே; இந்த உணவை எவராவது உண்டால், அவர் என்றுமே வாழ்வார்” (யோவான் 6:51).

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கத்தோலிக்க இறை நம்பிக்கையில் சிறந்து விளங்கக்கூடியவர். தினசரி திருப்பலியிலும் முழுமையாகப் பங்குபெறக் கூடியவர். எழுந்தேற்றம் நடைபெறுகின்றபோது, அவர் விழுந்து வணங்கும் விதம் நம்மில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கும். இயேசுவின் மீது அவருக்கு இருக்கின்ற அன்பையும், பக்தியையும் கண்டு நான் வியந்து போன தருணங்கள் பல. அவரது மகளுக்கும், மகளின் கணவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டது. அந்தப் பிரச்சினை ஊர்ப் பெரியவர்கள், பங்குத்தந்தை, காவல் நிலையம் என நீண்டு திருநெல்வேலி நீதிமன்றத்தில்டைவர்ஸ்வழக்காக நம்பர் ஆகியது. என் நண்பரின் மகளுக்காக வாதாடிய வழக்கறிஞர்என்ன முயற்சி எடுத்தாலும் அவனை (மகளின் கணவனை) மாற்றவே முடியவில்லையே ஃபாதர்என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் வேதனைப்படுவார். பல மாதங்களுக்கு முன்பாக அந்த ஊரில் திருவிழாத் திருப்பலி ஒப்புக் கொடுத்துவிட்டு ஆலயத்தை விட்டு நான் வெளியே வந்தபோது, மிடுக்காக உடை அணிந்து கொண்டு, தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு புன்முறுவலோடு அந்த நண்பரின் மகள் என்னைச்  சந்திக்க வந்தாள்.

ஃபாதர், எனக்கும், என் கணவருக்கும் இடையேயிருந்த குழப்பத்தைக் கடவுளே நீக்கிவிட்டார். என்ன நடந்ததென்று எனக்கே தெரியாது. அவர் இப்போதெல்லாம் குடிப்பதில்லை. சண்டை சச்சரவுகளும் கிடையாது. பிள்ளைகளும் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே அவளது கணவரும் அங்கு வந்து சேர்ந்தார். என் நண்பருக்கிருந்த பயபக்தியை முன்னிட்டுக் கடவுள் தாமே அவரது மகளின் கணவரது மனத்தை மாற்றியிருந்தார்.

தினசரித் திருப்பலி விருந்தில் பங்கு பெற்றதால் கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்திருந்த புரமோஷன் மிக எளிதாக எனக்குக் கிடைத்தது.”

நற்கருணை ஆண்டவர் தாமே எனது உடல் நோயைக் குணமாக்கினார்.”

திருப்பலி பீடத்திலிருந்து வழிந்தோடி வந்த நற்கருணை ஆண்டவரின் அன்பும், ஆசிரும் அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் என்னை அற்புதமாக விடுவித்துக் காப்பாற்றியது...”  என்றெல்லாம் எத்தனையோ இறை நம்பிக்கையாளர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன். நமது அன்பின் ஆண்டவர் உணவின் வடிவில் இன்று நம்மோடு இருக்கின்றார்.

எப்படிப்பட்ட தளர்ந்த நிலையில் நாம் இருந்தாலும், நமக்குப் புத்துயிர் அளிக்க வல்லவர் அவர். ஒன்றுமில்லாமையிலிருந்துதான் இந்த உலகை இறைவன் உருவாக்கினார். நாம் எந்த நிலையிலிருந்தாலும், நமது வாழ்வை உயரச் செய்வது அவருக்கு இலகுவானது. அனைத்தையும் நன்மைகளாக மாற்ற அவருடைய திருக்கரங்களில் நம்மையே நாம் கையளிப்போம்.

இயேசுவே, நீர் என் மீட்பர்; உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். ஆகவே, நான் அஞ்ச மாட்டேன்என்று கரங்களை விரித்துச் செபிப்போம். இயேசு நம்மைக் கைவிடவே மாட்டார்.