Namvazhvu
இயற்கை நேயம் கொள்வோம்! உலகச் சுற்றுச்சூழல் நாள் : ஜூன் 5
Wednesday, 29 May 2024 10:35 am
Namvazhvu

Namvazhvu

இயற்கையிடமிருந்து இறைவனையும், மனிதனையும் பிரித்துப் பார்க்க இயலாது. இறைச்சாயல் கொண்ட மனிதன் (தொநூ 1:26) இயற்கையின் மாபெரும் அங்கம் என்பதையும் மறுக்க முடியாது. இயற்கையின்றி இனிய மானுட வாழ்வு இல்லை! நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி எனும் ஐம்பெரும் சூழல் கூறுகளுடன் (பஞ்சபூதங்கள்) இணைந்து பயணிப்பதே மானுட வாழ்வு. இவை ஐந்தும் தம் நிலையில் மாறுபாடு இல்லாமல், ஒன்றோடொன்று கலந்த மயக்கமே உலகம் என்று கூறுகின்றார் தொல்காப்பியர்.  அவ்வாறே, தம் நிலையில் இவை மாறுபாடு இல்லாமல் செயல்படும்போதுதான் உயிரினங்கள் வாழமுடியும் என்பதையும்,

‘நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்’

என்று குறிப்பிடுகிறார்.

இயற்கையின் வளமான நிலையும், சுற்றுச்சூழலும் மனித குலத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிகவும் முக்கியமானவை. இவற்றைக் காக்க வேண்டிய உரிமையும், கடமையும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்பும், அதற்கான செயல்பாடுகளும் தனிமனிதன் சார்ந்த கடமை என்பதையும் கடந்து, இது ஒரு சமூகக் கூட்டுப் பொறுப்பு என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

சுற்றுச்சூழல் என்பது, இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல், உயிரினங்கள் சேர்ந்த சூழல், சமூகம் சார்ந்த சூழல் எனப்படும் முக்கூறுகளின் ஒன்றிப்பு. நாகரிக மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் இம்மூன்று உட்கூறுகளின் தன்மைகளும் இன்று சிதைக்கப்படுகின்றன: காடுகள் அழிந்து நகரங்களாகின்றன; நெல்மணிகள் விளையும் வயல்கள் வீடுகளாக மாறுகின்றன; செடிகொடிகள் அழிக்கப்பட்டுத் தொழிற்கூடங்கள் அமைக்கப்படுகின்றன; சாலை விரிவாக்கம் எனும் திட்டத்தால் மரங்கள், மலைகள் அகற்றப்படுகின்றன; ‘தொழில்நுட்ப நகரம்’ (Smart City) எனும் திட்டத்தால் ஏரி, குளங்கள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்படுகின்றன.

ஒவ்வொரு தனிமனிதனின் இத்தகைய செயல்களும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளும் அண்மைக் காலங்களில் இயற்கைக்கு முரணாகவே அமைகின்றன. மனிதன் ஒன்றை மட்டும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்: “இயற்கையை அழித்து மனிதன் தனித்து வாழ முடியாது.” காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவதால், நம் நாட்டில் தற்போது ஏழாயிரம் மில்லியன் டன் மண் அரித்துச் செல்லப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். இத்துடன் மணல்கொள்ளை என்பது வேறு கதை. இயற்கை வளங்கள், தேவைகளையும் கடந்து அளவுக்கு மீறிச் சுரண்டப்படுகின்றன. ஆகவேதான், நிலத்தடி நீரின் வரம்பு குறைந்து கொண்டே போகிறது. இயற்கைக்கு ஏற்படும் இப்பாதகங்களால் பருவ மழையும் காலத்தே பெய்யாமல் பொய்த்து விடுகிறது. இது அண்மைக் காலங்களில் ஆண்டுதோறும் நாம் சந்திக்கும் அன்றாடக் காட்சி.

இயற்கையை நாம் நேசிக்கத் தவறியதும், அதை அழிக்க எண்ணியதுமே இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள். இதனையே புறநானூறில் முரஞ்சியூர் முடிநாகராயர்,

‘மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல’

என்ற பாடல் வரிகளில் கூறுகின்றார். ஐம்பூதங்களின் செயல்பாடுகளில் மாறுதல்கள் ஏற்படும்போது பேரழிவுகள் உண்டாகின்றன. நிலநடுக்கம், நிலத்தின் அதிர்வால் ஆழிப்பேரலை, பெருவெள்ளம், நில அரிப்பு, மணற்புயல், பனிப்புயல், கடும் வறட்சி ஆகியன உண்டாகின்றன. நாகரிகத்தின் உச்சத்தில் நீரும், நிலமும், காற்றும் மாசுபட்டுக் கிடப்பது பெரும் வேதனை. இதைத்தான் சங்கப் புலவர்கள், ‘விசும்பின் அன்ன சூழ்ச்சி’ என்பதில் ‘ஆகாயத்தை மாசுபடுத்தக் கூடாது’ என்றும், ‘வளி மிகின் வலியும் இல்லை’ என்ற கூற்றில், ‘காற்றினை மாசுபடுத்துவது உயிரினத்திற்கே அழிவு’ என்றும் கூறியுள்ளனர். அவர்கள் கூடாது என்றதுதான் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அகத்தூய்மை வாய்மைக்கும், புறத்தூய்மை வாழ்வுக்கும் என்ற அறவுரையை மறந்துபோனோம்! காடுகளை அழிப்பதும், மரங்களை வெட்டுவதும், இயற்கை வளங்களைச் சுரண்டுவதும் சட்ட விரோதச் செயல் மட்டுமல்ல, சமூக விரோதச் செயலும்கூட என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.     

ஆகவேதான், உலக நாடுகள் கூட்டமைப்பு (United Nations - ஐக்கிய நாடுகள்) 1972 -ஆம் ஆண்டு ஜூன் 5 - ஆம் நாள் மனித சூழலுக்கான மாநாட்டைக் கூட்டியது. இம்மாநாட்டின் தொடக்க நாளை ‘உலகச் சுற்றுச்சூழல் நாள்’ (World Environment Day-WED) என அறிவித்து, புவிக் கோளையும், அதன் இயற்கை வளங்களையும் பேணிப் பாதுகாக்கும் வண்ணம் சுற்றுச்சூழல் செயல்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றது. தனிமனித மற்றும் சமூகக் குழுக்களின் செயல்பாடுகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத்தகாத மாற்றங்களையும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளையும், இது தொடர்பாக உலகம் தழுவிய அளவில் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றியும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது. வளமான, பாதுகாப்பான சமுதாயத்தை எதிர்வரும் சந்ததிக்கு வழங்கும் உன்னதமான பொறுப்பு யாவருக்கும் உண்டு என்பதையும் உணர்த்தி வருகிறது.

அவ்வாறே, திருத்தந்தை பிரான்சிஸ் 2015 -ஆம் ஆண்டு ஜூன் 18 -ஆம் நாள் வெளிக் கொணர்ந்த ‘புகழனைத்தும் உமதே’ (Laudato Si) என்னும் திருத்தந்தை ஊக்க உரையில், “பூகோளம் எனும் நமது பொது இல்லத்தை நாம் எப்படி உருவமைக்கப் போகிறோம்? மறுபடியும் கட்டி எழுப்ப அனைவரும் ஒன்றுகூடிச் செயல்பட வேண்டும்” என்றும், “அனைவரையும் உள்ளடக்கிய ஒரு புதிய உரையாடலை நாம் உடனே தொடங்க வேண்டும்” என்றும், “ஒவ்வொருவரும் அவரவர் கலாச்சாரம், அனுபவம், ஈடுபாடு மற்றும் திறமைகளுக்கேற்ப கடவுளின் கருவிகளாகப் படைப்பனைத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்” (எண் 13-14) என்றும் அழைப்பு விடுக்கிறார். மேலும், Fratelli Tutti -  ‘அனைவரும் உடன் பிறந்தோர்’ மற்றும்  ‘Laudate Deum’ - ‘கடவுளைப் புகழுங்கள்!’ எனும் திருத்தூது மடல்கள் வாயிலாக, இச்சூழல் பிரச்சினை பற்றி நாம் தெளிந்த பார்வை கொண்டிருக்க வேண்டும் எனவும், இதில் தீர்வு காண்பது ‘நம் ஒவ்வொருவருடைய கடமை’ என்பதையும் தெளிவுபடுத்துகிறார். அவ்வாறே, மறைந்த திருத்தந்தை புனித ஆறாம் பவுல், “ஒவ்வொரு மனிதரும் இச்சமூகத்தில் ஓர் அங்கம்; அதனால் ஒவ்வொருவரும் தங்களுடைய வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் உழைக்க வேண்டும்” (Populorum Progressio, 7) என்கிறார்.

நமது அரசின் 2006 -ஆம் ஆண்டு தேசியச் சுற்றுச்சூழல் கொள்கை நமது நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கத் திட்டமிட்டது. ஆனால், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. ஒவ்வொரு மரத்தையும் வெட்டும்போது, ஒரு மரக்கன்றை நடவேண்டும் என்ற குறைந்தபட்ச எண்ணம்கூட நம்மில் எழுவதில்லை. எந்த ஒரு முயற்சியும், செயல்திட்டமும், பொறுப்பும், கடமையும் அரசை மட்டுமே சார்ந்ததாக இருக்கக் கூடாது. இது மானுட சமூகப் பிரச்சினை. களத்தில் இடையூறுகளைச் சந்திக்கும் சாமானியரின் முயற்சியாக, செயல்திட்டமாக, பொறுப்பாக, கடமையாக அது மாற வேண்டும்.

இது ஏதோ சில தனிமனிதர்களின் சமூக நலத் திட்டமாக, நற்பணிகளாக மட்டும் இருந்து விடாமல், இளையோரின் திட்டமாக, மக்கள் இயக்கமாக, சமூகக் கடமையாக மாற்றம் பெறவேண்டும். எப்போது அது ‘மக்கள் இயக்கமாக’ உருப்பெறுகிறதோ அப்போதுதான், அது சமூக மாற்றமாக மலர்ந்திட வாய்ப்பளிக்கிறது. தனி மரம் தோப்பாகாது! ஒரு கை ஓசை எழுப்பாது! சமூகத் தோழமை வலுப்பெற வேண்டும்; இணைந்து பயணித்தால், இயலாத மாற்றம் ஒன்றுமில்லை. யாவும் சாத்தியமே!

ஆகவே, நிலையான, ஒருங்கிணைந்த, நீடித்து நிலைத்து நிற்கும் வளர்ச்சியை ஒவ்வொரு நாடும், இவ்வுலகமும் காணவும், இவ்வுலகின் பேரழகையும், மேன்மையையும் கண்டு இதனைப் படைத்த இறைவனைப் போற்றிப் புகழவும் முற்படுவோம்.  இந்நாளில் நம் திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுவது போல,

‘பேராற்றல் கொண்ட இறைவா!

இந்த உலகம் முழுவதிலும்

உமது படைப்பின் மிகச்சிறிய உயிரிலும்

நீர் இருக்கின்றீர்!

ஆகவே, இந்த உலகைச் சூறையாடாமல்

அதனைப் பாதுகாக்குமாறு,

மாசினையும், அழிவையும் விதைக்காமல்

அழகை விதைக்குமாறு,

எங்கள் வாழ்வின் காயங்களை

ஆற்றிக் குணப்படுத்தும்..!’

என்றே நம் இறைவேண்டலும் அமையட்டும்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்