Namvazhvu
வாழ்க்கையைக் கொண்டாடு – 44 கண்கள் சிறிது; காண்பது பெரிது!
Thursday, 30 May 2024 07:05 am
Namvazhvu

Namvazhvu

‘கண்கள் விலைமதிப்பற்றது’ என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த விலைமதிப்பற்றக் கண்களால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதும் நாம் அறிந்ததே. கண்கள் சிறிது என்றாலும், அது தரும் பார்வை பெரிது! அந்தப் பார்வை பலவித அக-புற மாற்றத்தினை ஏற்படுத்தும்.

கண்கள் இல்லாதவர்களால் கற்பனை காண முடியாதா? அப்படியெல்லாம் இல்லை என்பதை முறியடித்து, ஆழ்ந்த சிந்தனை இருப்பது அவசியம்; அந்தச் சிந்தனை வலுப்பெற பார்வை அவசியம்; பார்வை இல்லாவிட்டாலும், அகப்பார்வை மூலம் அளப்பெரிய சாதனை படைக்க முடியும் என்பதற்கு ஹெலன் கெல்லர் மிகப்பெரிய உதாரணம்.

தொடுதல் உணர்வு மூலமாகவே பலவற்றை உணர்ந்து, பல்வேறு மொழிகளை அவர் கற்று இருக்கிறார்; பற்பல சாதனைகள் செய்திருக்கிறார் என்றால், எவ்வளவு பெரிய மன வலிமை அவருக்கு

புலன்களால் நாம் எல்லாவற்றையும் அறிகிறோம்; அந்தப் புலன்களை உயிர்ப்போடு வைத்துச் செயல்பட வைப்பது பார்வைதான். கண்கள் பார்த்ததும், அதற்கான அறிவிப்புப் புலன்களுக்குச் செல்கிறது. அந்தப் புலன்கள் பலவிதப் புரிதல்களை நம் மனத்துக்குள் கடத்துகிறது. கடத்தப்படும் அந்த எண்ணங்களால் நாம் ஆளப்படுகிறோம். அப்படியென்றால், பார்வை எவ்வளவு முக்கியத்துவம் என்பதை நாம் அறிய முடிகிறதல்லவா! அந்தப் பார்வையை இழந்த ஹெலன் கெல்லர் அகப்பார்வை மூலம்தான் அளப்பெரிய சாதனையைச் செய்துள்ளார்.

நமக்கு அகப்பார்வையும் உண்டு; வெளிப்பார்வையும் உண்டு; அப்படியென்றால் நம்மால் முடியும் தானே! வெறும் பார்வை தொலைநோக்குப் பார்வையாக மாறும்போது, எண்ணற்ற வெளிச்சத்தை  நமக்கும், எல்லாருக்கும் ஏற்படுத்துகிறோம்.

தெளிவான பார்வையும், புரிதலும் கொண்ட ஒருவரால்தான் சிறப்பானதைக் கட்டமைக்க முடியும். மேலும், அதை நோக்கி அனைவரையும் செயல்பட ஊக்குவிக்கவும் முடியும். இது வெறும் பார்வையை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; மாறாக, புதுமை, படைப்பாற்றல் மற்றும் மாற்றம் ஆகியவற்றை வலியுறுத்தும் ஓர் அற்புதமான பணியாகும். இந்தப் பணியால் நாம் கண்டுள்ள மாற்றங்கள், புதுமைகள் அதிகம். மனம் ஆட்டம் காணாமல் அப்படியே ஆடினாலும், அந்த ஆட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றம் காணும் ஆற்றல் கண்டு, தான் மட்டும் அல்லாமல், தன்னோடு பயணிக்கும் அனைவரையும் ஏற்றம் காண வைக்கும் இந்தச் செயலால் எண்ணற்ற மாற்றத்தினை நாம் கண்டுள்ளோம்.

இன்று நம் நாட்டில் வளர்ந்து நிற்கும் எண்ணற்ற நிறுவனங்கள், யாரோ ஒருவரது தொலைநோக்குச் சிந்தனையால் உருவானவைகள்தாம். அதனால் ஒரு முழுமை பெற்ற பொருளாதாரம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியாக வேண்டும். இதனால் தனக்கும், நாட்டிற்கும், அங்கு வேலை பார்ப்போருக்கும் ஏற்பட்டுள்ள ஏற்றம் வியப்பு மிகுந்ததல்லவா! இந்த மாபெரும் வியப்பினைப் பலர் தந்துள்ளனர். அவர்களது பரந்து விரிந்துபட்ட பார்வை பலரது வாழ்க்கைக்கு ஒளியாக இருந்துள்ளது. கண்கள் சிறிது என்றாலும், அவர்கள் கண்ட பார்வை பெரிது. அந்தப் பெரிது பட்ட பார்வை நமக்கும் சாத்தியம்தான்.

நான் இதுவரை வேலை பார்த்த நிறுவனங்களில் என்னைச் சற்று அதிகமாய் ஈர்த்தது TVS நிறுவனம்தான். அந்தப் பெரியவரின் பெரிய தொலைநோக்குப் பார்வை இன்று பெரிய ஆலமரமாய் வளர்ந்து கிளைகளை, விழுதுகளைப் பரப்பி, நான்காவது தலைமுறையாக நிலைத்து நிற்கிறது என்றால், அவரது சிந்தனை எவ்வளவு ஆழமானது மற்றும் வீரியமிக்கது என்பதை நாம் உணர முடியும். ஆதலால் பார்வை பெரிதாகட்டும்; நம் சிந்தனை பெரிதாகட்டும்; அதன்மூலம் நம் வாழ்வும், நாட்டின் உயர்வும் பெரிதாகும்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக மற்றோர் ஆகச் சிறந்த உதாரணமாகச் சிங்கப்பூரைச் சொல்லியாக வேண்டும். மிகச்சிறிய நாடான சிங்கப்பூர் இன்று வானளாவிய புகழ்பெற்றதன் காரணம், அந்த நாட்டின் தந்தையாக இருந்து, நாட்டினை நல்வழிப்படுத்திய மதிப்புமிகு லீ குவான் அவர்களின் தொலைநோக்குப் பார்வைதான். நாட்டின் குறிக்கோளை மையப்படுத்தி, எதிர்வந்த இடையூறுகளைப் புறந்தள்ளி, நாட்டின் முன்னேற்றம் மட்டுமே நமக்கு முன்னுரிமை என்று பயணித்த ஒரே காரணம்தான்.

இவ்வளவுக்கும் மூன்று வெவ்வேறு இனங்களை (சீனா, மலாய் மற்றும் தமிழ்) ஒருங்கிணைத்து, அவர்களுக்குள் எவ்வித வேறுபாடுகளும் ஏற்படா வண்ணம் சிறப்புற வழிநடத்திய விதம் பாராட்டுக்குரியது. தன் சுய விருப்பத்திற்காக நாட்டு மக்களைப் பந்தாடாமல், ஒட்டுமொத்த நாட்டின் நலன்கருதி செயல்படுபவர்களால் மட்டுமே இவ்வாறான முன்னேற்றத்தைத் தர முடியும். அவரிடம் இருந்த அந்தத் தொலை•நோக்குப் பார்வையால்தான் அந்நாடு தொடர்ந்து புகழ் வெளிச்சத்திலும், முன்னேற்றத்திலும் சென்று கொண்டிருக்கிறது.

தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் இல்லாவிடில் கீழ்க்காணும் வீண்செயல்களில் நாம் மூழ்கி இருக்க நேரிடும்.

• தேவையற்ற செயல்களில் மூழ்கி நேர வீணடிப்பு.

• ஒழுங்கற்ற செயல்பாடு.

• தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து தன்னைத்தானே நொந்துகொள்வது.

• எந்தச் சவாலையும் எதிர்நோக்க எண்ணம் இல்லாமல் இருப்பது.

• பயனற்ற வாழ்க்கையும், சுவையற்ற செயலும் செய்து வாழ்க்கையை வீணடிப்பது.

• திட்டமிடல் இல்லாமல் திக்குமுக்காடும் நிலை.

தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் நேரத்தைச் சிறப்பாகக் கையாளும் தன்மை உடையவர்களாகவும், சோம்பேறித்தனத்தை அகற்றி பொறுப்பைப் பற்றுபவர்களாகவும் இருப்பர். நீண்ட காலத்திட்டம் வகுத்து, மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். பெரிய பெரிய காரியங்களை எளிதாகச் செய்யக்கூடிய ஆற்றல் அவர்களிடம் குடிகொண்டிருக்கும்.

எதையும் சாதிக்க இலக்கு தேவை. அந்த இலக்கை உருவாக்கத் தொலைநோக்குப் பார்வை மிக மிக அவசியம்.

தொடர்ந்து பயணிப்போம்....