1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் வீசிய இரு பெரும் அணுகுண்டுகளால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லத்தில் பயிற்சியாளராக இருந்தவர் இயேசு சபையின் முன்னாள் தலைவர் பேத்ரோ அருப்பே அவர்கள். அந்த நவதுறவியர் இல்லம் ஒரு மருத்துவமனையாக மாறியது. அருள்தந்தை அருப்பே அவர்கள் மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்லாமல், வெளியிலும் சென்று, தன்னால் இயன்றளவு மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.
ஒருநாள் மாலை அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, நாகமுரா சான் என்ற ஏழைப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றார். அணுகுண்டின் கதிர்வீச்சால் அந்த இளம்பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையுடன் அப்பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு முதலுதவி செய்ய முனைந்தார் பேத்ரோ அருப்பே. அப்போது கொடிய வேதனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகமுரா முனங்கிக்கொண்டே, “தந்தையே! எனக்கு நற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டார். “இதோ! கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறியவாறே தன் கரங்களில் வைத்திருந்த சிறிய நற்கருணைப் பேழையைத் திறந்து நற்கருணையை அவருக்கு வழங்கினார். சொல்லொண்ணாத் துயரத்தின் மத்தியிலும், இன்முகத்தோடு இயேசுவைத் தன் உள்ளத்தில் ஏற்ற சிறிது நேரத்திலேயே அந்த இளம்பெண்ணின் உயிர் பிரிந்தது. உயிரோட்டம் நிறைந்த இந்த நிகழ்வை ‘நற்கருணையில் வளர்ந்தேன்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் தந்தை பேத்ரோ அருப்பே.
காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன், காயப்பட்ட கடவுளைக் காட்டும் ஒரு விழாவே இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழா!
அன்பை ஆயிரமாயிரம் வழிகளில் நாம் வெளிப்படுத்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்பு கொண்டவருடன் தங்கியிருப்பது. அதாவது, பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் சிகரம். அத்தகைய அன்பின் அருளடையாளம்தாம் இயேசுவின் திரு உடலும், திரு இரத்தமும். இந்தத் தூய்மைமிகு உடலும், இரத்தமுமே நம் வாழ்வின் மையம். திரு அவையின் மையமும் நற்கருணைதான். இதையே திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் “நற்கருணை திரு அவையை உருவாக்குகிறது; திரு அவை நற்கருணையை உருவாக்குகிறது” என்கிறார். “நற்கருணையின்றிக் கிறிஸ்தவ உறவுகள் இல்லை” என்கிறார் புனித தாமஸ் அக்குவினாஸ்.
சான் பிரான்சிஸ்கோ உயர் மறைமாவட்டத்தின் பேராயராக இருந்த ஜான் குவின், தன் மறைமாவட்டத்தில் பணிபுரிய புனித அன்னை தெரசாவையும், சில சகோதரிகளையும் அழைத்து, அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், அன்னை தெரசாவோ அனைத்து வசதிகளையும் குறைத்தபின், இறுதியில் பேராயரிடம், “ஆயரே, இந்த வீட்டில் எங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே” என்று சொன்னார்.
திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்துவின் திரு உடல் மற்றும் திரு இரத்தப் பெருவிழா அன்று வழங்கிய மூவேளைச் செப உரையில், “நற்கருணை நம் தன்னல எண்ணங்களைச் சுட்டெரித்து, இயேசுவோடு முழுமையாய் நம்மை ஒன்றிணைக்கிறது. இப்பெருவிழா, கிறிஸ்துவின் பேருண்மையில் வாழ்வதற்கு நம்மை அழைத்துச் சென்று, அவரில் நம்மை மாற்றுகிறது. கிறிஸ்துவின் திரு உடல் மற்றும் திரு இரத்தத்தால் நாம் ஊட்டம் பெறுவதால் அவரின் அன்பைப் பெற்று, அதை நமக்கென்றே வைத்துக்கொள்ளாமல், மற்றவரோடு பகிர்ந்துகொள்கிறோம். கடவுளின் அன்பைப் பெறுகையில், அவரின் திட்டம் உலகில் பிரசன்னமாக இருப்பதற்கு நம்மை உந்தித் தள்ளுகின்றது. வாழ்வில் தனிமையிலும், புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் வாழ்வோரை நாம் வரவேற்கின்றோம்” என்று கூறினார் (ஜூன் 3, 2018). இயேசுவின் திரு உடல், திரு இரத்தத்தால் ஊட்டம் பெற்ற அன்னை தெரசா உலகில் உருவாக்கிய மாற்றங்களை நாம் அறிவோம்.
இறைவன் நமக்கு வழங்கியுள்ள மேலான கொடையே நற்கருணை. நற்கருணை என்பது மனிதர்கள் நடுவே இருக்கும் இறைவனின் உறைவிடம்; இறைவனின் உடனிருப்பு. நற்கருணை வழியாகத் தம் உடனிருப்பைக் கிறிஸ்து நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறார். நற்கருணையில் கிறிஸ்து முழுமையாகவும், நிறைவாகவும் இருக்கிறார். இயேசு கிறிஸ்து தனிச்சிறப்பான, ஒப்பிடவியலா வகையில் நற்கருணையில் உடனிருக்கிறார் (க.தி.ம. 1773-1377). இதில் இயேசுவே கடவுளாகவும், மனிதராகவும் அளவில்லாமல் எழுந்தருளியிருக்கிறார் (யோவா 6:35). நற்கருணை வழியாகக் கடவுள் நம்முள் இருக்கிறார். இதுதான் நற்கருணையின் ‘உடனிருப்பின் உச்சம்’. இரண்டாம் வத்திக்கான் சங்கம் ‘நற்கருணை கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும், மையமுமாக இருக்கின்றது’ என்று கூறுகின்றது (திருச்சபை எண் 11).
இறைமகன் இயேசு ஏன் அப்ப, இரச வடிவில் தம் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட எளிய உணவாக இருந்தது. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலின் இரத்தமாகவும், தசையாகவும், எலும்பாகவும் மாறிவிடுகிறது. எனவே, உணவான அப்பத்திற்கும், இரசத்திற்கும் உள்ள இந்த அடிப்படைக் குணங்கள் தமக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார். நாம் தினமும் உண்ணும் உணவாக நம் உடலாகவே மாறி, நம்மை வாழ வைக்கும் உணவாக இறைவன் நம்முடன் வாழ்கிறார்.
இயேசு தம் திரு உடலையும், திரு இரத்தத்தையும் பலியாக நமக்கு வழங்கி, நம் உயிரில் கலந்து, நம்முள் ஒன்றாகிப் போனார். இதனை இன்றைய வாசகங்கள் நன்கு எடுத்தியம்புகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் (விப 24:3-8) ஆண்டவராகிய இறைவனுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நடக்கும் உடன்படிக்கையை வாசிக்கின்றோம். “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” (விப 24:3) என்று இஸ்ரயேல் மக்கள் ஒருமித்தக் குரலில் கூறும்போது, மோசே பலியிடப்பட்ட விலங்கின் இரத்தத்தை மக்கள்மீதும், பீடத்தின்மீதும் தெளிக்கிறார். பலியான விலங்குகளின் சாவு, இரத்தம் அனைத்தும் அடையாளங்களே. ஆனால், உண்மையான பலி கிறிஸ்துவின் கல்வாரிப் பலி! இதுவே உன்னதமான மேன்மையான பலி. அவரே பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத் தாமே பலியாகக் கொடுத்தார்; தம் உடலையே பலியாகச் செலுத்தினார். இதுவே என்றென்றைக்கும் நிறைவான பலி என்று எபிரேயர் நூலின் ஆசிரியர் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபி 9:11-15) குறிப்பிடுகிறார். இந்தப் பலியையே திருப்பலியில் அருளடையாள முறையில் நினைவுகூர்கிறோம்.
‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல்’ - ‘இது உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தம்’ என இயேசு நற்கருணையை ஏற்படுத்திய இந்த வார்த்தைகள் மூலமாகத் திருப்பலியில் புனிதப்படுத்தப்பட்ட அப்பம் உண்மையில் இயேசுவின் உடலாக மாறுகிறது என்று நாம் நம்புகின்றோம். திரு அருளடையாள முறையிலே அப்ப-இரச அடையாளங்களிலே இயேசு உண்மையாகவே இருக்கிறார் என்பது திரு அவையின் படிப்பினை. திருப்பலியில் எழுந்தேற்றத்தின்போது அப்பமும், இரசமும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும், முழுமையாகவும், நிறைவாகவும் மாற்றம் பெறுகின்றன (க.தி.ம. 1373). ‘இம்மானுவேல்’ அதாவது ‘கடவுள் நம்மோடு’ என்ற பெயருடன் அறிமுகமான இயேசு, தம் உலக வாழ்வுக்குப் பின்னும் நம்மோடு தங்கியிருக்கிறார் என்பதைத் தம் திரு உடல், திரு இரத்தம் என்ற மறையுண்மையின் வழியாக நிலைநாட்டினார்.
இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் - அவரது வாழ்வு இன்று நமக்கு விடுக்கும் அறைகூவல்கள் என்ன?
முதலாவதாக, நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நாம் கடவுளின் குடும்பமாக, கிறிஸ்துவின் உடலாக மாறுகின்றோம். ஆகவே, நாம் உட்கொள்கின்ற அப்பமும், பருகுகின்ற இரசமும் இயேசுவோடு நம்மை இணைத்து, கடவுளின் வாழ்வில் நம் வாழ்வு இணைந்து ஒன்றிப்பதற்கும், அதன் வழியாக நாம் ஒருவர் ஒருவரோடு சகோதர அன்பில் இணைவதற்கும் வழியாகிறது. எனவே, ஒன்றாகக் கூடும் அனைவரும் இயேசுவின் ஒரே உடல் என்ற உணர்வில் பிளவுகளையும், பிரிவினைகளையும் அகற்றி, ஒரே மனமும், ஒரே நோக்கமும் கொண்டிருப்பது அவசியம்.
இரண்டாவதாக, இன்று எண்ணற்ற பேர்கள் நம் நடுவில் வாழ்வை இழந்து தவிக்கின்றனர்; வாழ்விற்கான வழியைத் தேடி அலைகின்றனர்; வாழ்வில் நிறைவையும், நிம்மதியையும் பெற ஆசைப்படுகின்றனர். இவர்களுக்காக இறைமகன் இயேசு தம் திரு உடல், திரு இரத்தத்தின் வழியாக விட்டுச் சென்றுள்ள அன்பையும், தியாகத்தையும் வாழ்வாக்க முனைவோம். தம் உயிரையே பலியாக மக்களுக்கென வழங்கிய இயேசுவைப்போல், நாமும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்கு நம்மையே வழங்கும் வழிகளைக் கற்றுக்கொள்வோம்.
நிறைவாக, நாள்தோறும் நம் இதயம் நுழையும் இயேசுவின் திரு உடலும், திரு இரத்தமும் நம் உயிரில் கலந்து, அவரது உயிரிலும், உறவிலும் நம்மை நிலைநிறுத்துகிறது. ஆம், இயேசு தமது உடலையும், இரத்தத்தையும் நமக்கு வழங்குவதன் வழியாக, நமது உயிருக்குள் ஒன்றாகி, நாள்தோறும் நம்முள் வாழ்கிறார். கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட அவரது என்றுமுள்ள அன்பைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வோம். இயேசுவின் உயிரளிக்கும் உடனிருப்பை நாம் பிறருக்கும் வழங்குவோம். அதற்காக இந்நாளில் சிறப்பாக மன்றாடுவோம்.