Namvazhvu
இருளகற்றும் ஒளி அணைந்தது! தஞ்சை மறைமாவட்ட மேனாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களுக்கு நினைவு அஞ்சலி!
Tuesday, 04 Jun 2024 09:31 am
Namvazhvu

Namvazhvu

இறக்கும் வரை நம்பிக்கையோடு இரு; அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்” (திவெளி 2:10).

மண்ணில் தோன்றும் உயிர்களுக்கு மரணம் நிதர்சனம். பூமியில் தாம் தொடங்கிய யாத்திரையை முடித்து, இறைவனுக்குள் நித்திரை அடைந்துள்ள நமது தஞ்சை மேனாள் ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் அன்பும், எளிமையும் நிறைந்த தவ வாழ்வை எண்ணி வியக்கின்றோம். அழைத்த இறைவனின் அன்பில் நிலைத்து, ஆர்வத்தோடு இறைப் பணி புரிந்த பெருமகனார். தன்னலமற்ற சேவையில் தனக்கென வாழாத் தனிப்பெருந்துறவி இவர். குழந்தை உள்ளமும், தாழ்ச்சி குணமும் கொண்ட மாசு மருவற்ற பண்பாளர். ஏழைப் பிள்ளைகளின் கல்விக் கனவில் ஒளியேற்றி, வறியோர்க்கு வாரி வழங்கி, வற்றாத ஈகையிலே வறண்டிடாத நன்னிலமாய் வாழ்ந்த இவர் ஒரு மாபெரும் சகாப்தம்!

பிறப்பும், இறை அழைப்பும்

அம்மாபேட்டை என்ற அழகிய கிராமத்தில் அறவழியில் வாழ்ந்த இணையர் மரிய தாஸ்-இரஞ்சிதம் இவர்களின் மகனாய் 1947, அக்டோபர் ஆறாம் நாளில் பிறந்தார். அங்குள்ள ரெஜினா சீலி நடுநிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் துவங்கி, அதன்பின் உயர்நிலைக் கல்வியை ஊருக்கு அருகில் இருந்த உக்கடை அப்பாவுத் தேவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பங்குத் தந்தையர் ஜோசப் காரடௌசா, D. ஜோசப் ஆகியோரின் தூண்டுதலாலும், வழிநடத்துதலாலும் இறையழைத்தலை உணர்ந்து குருமடத்தில் இணைந்தார்.

இறையியல் மற்றும் குருத்துவக் கல்வியைத் திருச்சி புனித பவுல் குருமடத்தில் நன்கு கற்றுத் தேர்ந்த பின்னர், 1974-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ஆம் நாள் அம்மாபேட்டை புனித யோசேப்பு ஆலயத்தில் மேதகு ஆயர் முனைவர் R.A. சுந்தரம் ஆண்டகை அவர்களின் அருள்கரத்தால்  குருவாகத் திரு நிலைப்படுத்தப்பட்டார்.

குருத்துவப் பணியும், மேற்படிப்பும்

குருத்துவப் பணிக்காக வேளைநகர் அருகில் நாகப்பட்டினம் பங்கின் உதவித் தந்தையாக முதன்முதலாக அனுப்பப்பட்டார். அதன்பின் 1979 -ஆம் ஆண்டு பெங்களூரு புனித பேதுரு குருமடத்திற்கு விவிலியப் பேராசிரியராகப் பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார்இப்பணியை ஓராண்டு நிறைவு செய்தபின், உரோமையிலுள்ள பிப்லிக்கும் (Biblicum) என்ற கல்வி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  1983 -ஆம் ஆண்டு விவிலியத்தில் LSS பட்டம் பெற்று (Licentiate) முடித்து, மீண்டும் புனித பேதுரு குருமடத்தில் பேராசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். குரு மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியராய்ப் பணியைத் தொடர்ந்த இவர், அப்பேதுரு குருத்துவக் கல்லூரியின் பதிவாளராகவும் பணியாற்றினார். ஏழு ஆண்டுகள் பேராசிரியர் பணிக்குப் பின் 1990 -ஆம் ஆண்டில் விவிலியப் படிப்பில் முனைவர் பட்டம் பெறுவதற்காக பிரான்ஸ் நாட்டின் பாரிசில்இன்ஸ்டிடியூட் கேத்திலிக் தி பாரிஸ்’ (Institute Catholique de Paris) என்ற பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1993-இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்று மீண்டும் பெங்களூரு திரும்பிய இவர் பேராசிரியர் பணியைத் தொடர்ந்து, அக்குருமடத்தின் துணை அதிபராகவும் நியமிக்கப்பட்டார்.

முத்தான மூன்றாவது ஆயர்

மேதகு ஆயர் ஆரோக்கியசாமி சுந்தரம், மேதகு ஆயர் பாக்கியம் ஆரோக்கியசாமி இவர்களைத் தொடர்ந்து 1997, ஜூலை 14 அன்று தஞ்சையின் புதிய ஆயராகத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

தஞ்சை மறைமாவட்டத்தின் முத்தான மூன்றாவது ஆயரான இவர்ஆண்டவரே என் ஆயர்என்ற விருதுவாக்கோடு 1997, செப்டம்பர் 24 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று தொடங்கிய ஆயரின் பயணம் 25 ஆண்டுகளை நிறைவு செய்தது இறைவன் வழங்கிய மாபெரும் கொடை! ஆயரின் 25 ஆண்டுகால ஆயர் பணியை முன் குறித்து, 28.09.1997 அன்று வெளிவந்தநம் வாழ்வுஇதழில், கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்கள் தந்த நேர்காணலில், “இவ்வாண்டு அக்டோபர் 6-ஆம் நாள் இவருக்கு 50 வயது பூர்த்தியாகும். ஆகவே இன்னும் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் வாழ்வில் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயராகச் சேவை ஆற்றலாம்என்று கூறியது குறிப்பிடத்தக்கது

என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன” (யோவா 10:14-15) என்ற நல்லாயனாகிய இயேசுவின் பாதையில், 25 ஆண்டுகள் தஞ்சை மறைமாவட்டத்தின் எல்லாப் பங்குகள் மற்றும் கிளைக் கிராமங்களுக்கும் சென்று தம் மக்களைச் சந்தித்து இருக்கிறார். மக்களின் தேவைகளை அறிந்து, உடனுக்குடன் நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி இருக்கிறார்.

அறியாமை இருளகற்றிய ஆதவன்

பள்ளி செல்லும் பிள்ளைகளின் கல்வி எக்காரணத்தைக் கொண்டும் இடைநிறுத்தல் கூடாது என்று பங்குத்தளங்கள் தோறும் பள்ளிகள் இருப்பதை உறுதி செய்தார். பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் கலங்கி நின்ற பிள்ளைகளின் கண்ணீர் துடைக்க பல்வேறு கல்லூரிகளையும், அவற்றில் பல்வேறு பாடப்பிரிவுகளையும் தொடங்கியவர். அதிக அளவில் வேலை வாய்ப்பு கொண்ட மருத்துவத் துறையை மனத்தில் கொண்டு செவிலியர் பயிற்சிப் பள்ளி மற்றும் கல்லூரியைக் கொண்டு வந்ததோடு, அதற்கு அண்டி வந்தோருக்கெல்லாம் ஆரோக்கியம் தரும் அன்னையின் பெயரைச் சூட்டி அழகு செய்தார். அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புனித ஆரோக்கிய அன்னை செவிலியர் பயிற்சி நிறுவனம், புனித ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரி, வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புனித யோசேப்பு மாணவர் இல்லம், புனித ஆக்னஸ் மாணவியர் இல்லம் போன்றவை ஆயர் அவர்களால் சிறப்புறத் தொடங்கி வைக்கப்பட்டவை.

இறுதியாக,

காட்சிக்கு எளியவர்’, ‘கடுஞ்சொல் அற்றவர்என்ற பதங்களுக்கு இலக்கணமானவர் இவர். ஏழை எளியவர்கள் மீது கருணையும், அக்கறையும் கொண்டவர். எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைத்து மக்களின் மீதும் அன்பு கொண்டு பழகுபவர். தனது நட்பு வட்டாரத்திடமிருந்து அவர் பெற்ற அன்பளிப்பைக் கொண்டு செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தவர்.

சிறந்த மதிநுட்பமும், அதிக ஞாபகத் திறனும் கொண்ட இவர்எதையும் ஆர்வத்துடன் கற்று, அலசி, ஆராய்ந்து விரைவில் தீர்வு காணும் திறன் கொண்டவர். குருக்களோடும், இறைமக்களோடும் நல்லுறவு கொண்டு மறைமாவட்டத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மாபெரும் பணியாளர்.

மேலும், தேசிய அளவில் (CCBI) விவிலிய பணிக்குழுத் தலைவராக, தமிழக அளவில் (TNBC) குடும்பநலப் பணிக்குழுவின் தலைவராக (1997-1999), மறைக்கல்விப் பணிக்குழுவின் தலைவராக (1999-2011), அன்பியப் பணிக்குழுவின் தலைவராக (2011-2017), விவிலியப் பணிக்குழுவின் தலைவராக (2017-முதல்), திருச்சி மறைமாவட்ட பரிபாலகராக (Administrator) (2018-2024), தமிழ்நாடு முப்பணி நிலைய (TNBCLC) தலைவராக (2020-2022) என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணியாற்றிய இவர், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று தன் ஆயர் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

செப வாழ்வு, அவை ஒழுக்கம், தலைமைப் பண்பு, பணியில் நேர்மை என அனைத்துத் தளங்களிலும் முத்திரைப் பதித்து, குன்றின் மேலிட்ட தீபமாய், தஞ்சை மறைமாவட்டத்தைக் கால் நூற்றாண்டாக வழிநடத்தி வந்த மேதகு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள், 2024, மே 26, ஞாயிறு, பிற்பகல் 12.50 மணிக்கு இறைபதம் சேர்ந்தார்.

பலருடைய வாழ்வில் இருளகற்றி, ஒளியேற்றி கிறிஸ்துவின் ஒளிச்சுடராய் மிளிர்ந்த அவருடைய ஆன்மா இறைவன் கரத்தில் அமைதியில் இளைப்பாறவும், புனிதத்தில் சுடர் விடவும் எம் செபங்களை உரித்தாக்குகிறோம். நித்திய இளைப்பாற்றியை இறைவன் இவருக்கு அருள்வாராக! முடிவில்லாத பேரொளி இவர் மேல் ஒளிர்வதாக!