Namvazhvu
கண்டனையோ.... கேட்டனையோ... இயேசு மன்னிப்புக் கேட்டாரா?
Friday, 07 Jun 2024 10:21 am
Namvazhvu

Namvazhvu

‘இயேசு தம் வாழ்நாளில் யாரிடமாவது மன்னிப்புக் கேட்டாரா?’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையைச் சமீபத்தில் இணையதளத்தில் வாசித்தேன். ‘கேட்டார்’ என்று சொல்கிறார் ஆசிரியர். எங்கே? மத் தேயு 15:21-28-இல்! ஒரு கானானியப் பெண் இயேசுவிடம் வந்து, பேய் பிடித்திருந்த தன் மகளைக் குணப்படுத்தச் சொல்லிக் கேட்கும் நிகழ்வு. நாம் பலமுறை கேட்ட நற்செய்திப் பகுதி. அதன் மற்றொரு வடிவம் மாற்கு 7:24-30-இல் உள்ளது.

இந்நிகழ்வில் இயேசுவின் எதிர்வினையை ஆசிரியர் நான்கு பாகங்களாகப் பிரிக்கிறார்.  முதலில் இயேசு அந்தப் பெண்ணின் வேண்டுகோளுக்குப் பாராமுகமாயிருக்கிறார் (ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை - மத் 15:23). இரண்டாவது, திருத்தூதர்கள் ‘ஏதாவது செய்யுங்கள்’ என்று வலியுறுத்தியபோது, அது தம் பொறுப்பு இல்லை என்று தட்டிக் கழிக்கிறார் (‘இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்’- மத் 15:24). மூன்றாவது, அப்பெண் நேரில் வந்து கேட்கும்போது, அவர் அந்த உதவிக்குத் தகுதியற்றவர் என்று சொல்லிக் கடுமை காட்டுகிறார் (‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல’- மத் 15:26). ஆனால், “ஆம் ஐயா, ஆனாலும், தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்று அப்பெண் திருப்பித் தரும்போது, இயேசு தம் ஆயுதங்கள் அனைத்தையும் கீழே போட்டுச் சரணடைகிறார்: “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” (மத் 15:28).

இயேசுவின் நான்காவது எதிர் வினையில் ஒரு மனமாற்றமும், மன்னிப்புக் கோரலும் உள்ளது. கீழ்க் காணும் நான்கும் அங்கே இயேசுவால் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளன என்பது ஆசிரியரின் வாதம்.

• I am sorry I was indifferent at first  (முதலில் ஒரு வார்த்தைகூட பதில் சொல்லாமல் இருந்ததற்காக வருந்துகிறேன்).

• I am sorry I was narrow-minded  (நான் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமானவன் என்று நினைத்ததற்காக வருந்துகிறேன்).

• I am sorry I used hurtful words (‘நாய்க்குட்டி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருந்துகிறேன்)

• I have learned. Thank you  (நான் எல்லாருக்குமானவன் என்று கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி).

மத்தேயு 15:21-28 - பகுதி குறித்த கட்டுரை ஆசிரியரின் மேற்கண்ட விளக்கம் சரியா? தவறா? என்பதை வல்லுநர்கள் முடிவு செய்யட்டும். ஆனால், இயேசு ஒரு முழுமையான மனிதர் (fully human) என்ற அடிப்படையில், அவர் தம் வாழ்நாளில் பலமுறை இயல்பாக “I am sorry” என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தியிருப்பார் என்று ஏற்றுக்கொள்வதில் நமக்குத் தயக்கம் தேவையில்லை.

மந்திரச் சொற்கள் (Magical Words) என்று மூன்று வார்த்தைகள் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் துவக்க நிலையிலேயே கற்றுத் தரப்படுகின்றன. ‘Please’ (தயவுசெய்து), ‘Thank you’ (நன்றி), ‘Sorry’ (வருந்துகிறேன்). இதில் சொல்லக் கடினமானதும், மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுவதுமான மந்திரச் சொல் ‘Sorry’தான்.

மன்னிப்புக் கேட்பதை ஏதோ தன்மானம் சம்பந்தப்பட்ட ஒன்றாகப் பலர் பார்க்கிறார்கள்... குழந்தைகள் உள்பட. ‘ரமணா’ படத்தில் நடிகர் விஜய்காந்தின் அந்தப் பிரபல வசனத்திற்குப் பிறகு ‘மன்னிப்பு’ தமிழில் யாருக்குமே பிடிக்காத வார்த்தையாகி விட்டது. மன்னிப்புக் கேட்டலும், கொடுத்தலும் ஓர் ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியம் தேவை.

நிறையப் பேருக்கு எப்படி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவதில்லை. மன்னிப்புக் கேட்கிறேன் பேர்வழி என்று திரும்பத் திரும்ப மற்றவரைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருப்பார்கள். சொற்களின் தேர்வில் கவனம் தேவை. உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் நண்பரை ‘முட்டாள்’ என்று சொல்லிவிடுகிறீர்கள். நண்பரின் மனம் காயப்பட்டு விடுகிறது. அதற்கு நீங்கள் எப்படி மன்னிப்புக் கேட்கலாம்? “I am sorry I called you a fool” (‘நான் உன்னை முட்டாள் என்று சொல்லி அழைத்ததற்காக வருந்துகிறேன்’) என்று சொல்லலாம். அது ஒரு சரியான மன்னிப்புக் கோரல். இதுவே, ‘I am sorry for pointing out that you are a fool’(‘நீ ஒரு முட்டாள் என்று சுட்டிக்காட்டியதற்காக நான் வருந்துகிறேன்’) என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால்? அது மன்னிப்புக் கோரல் இல்லை. மேலும் வம்பை வளர்க்கும் செயல்.

‘How to live successfully with difficult people’என்ற புத்தகத்தில் ஆசிரியர் எலிசபெத் பிரவுன், மன்னிப்புக் கோரலில் ஐந்து முக்கியப் படிநிலைகள் உள்ளன என்று சொல்லி விளக்குகிறார். அடுத்த முறை,  நீங்கள் உங்கள் மனைவியிடமோ, உயர் அதிகாரியிடமோ,   நண்பரிடமோ, குழந்தையிடமோ மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும்போது, பிரவுன் சொல்லும் இந்த வழிமுறைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

இடம்: உங்களுக்கும், மற்றவருக்கும் பொதுவான ஓர் இடத்தைத் (a neutral place) தேர்வு செய்ய வேண்டும். இரண்டு பேருமே இயல்பாக உணரக் கூடிய ஓர் இடம். ஒருவரை உங்கள் அலுவலகத்திற்குக் கூப்பிட்டு, சுற்றிலும் ஐந்தாறு தடிமாடுகளை நிறுத்தி வைத்துக்கொண்டு, மன்னிப்புக் கேட்கக்கூடாது. அது பொய்யாட்டம்!  ஒருவர் பாத்ரூமில் இருக்கும்போது கதவைத் தட்டி, ‘sorry’ என்று சொல்லிவிட்டு ஓடக்கூடாது. உரையாடலுக்கு ஏதுவான சூழல் வேண்டும். டெலிபோன் அழைப்புகள், குழந்தைகள், வாடிக்கையாளர்கள் போன்ற  இடையூறுகளைத் தவிர்த்தல் நலம்.  பொதுவாக, மன்னிப்புக் கோரல் one-on-one என்ற அடிப்படையில் தனிநிகழ்வாக இருப்பதுதான் நல்லது. ஒருவேளை, நீங்கள் ஒருவரைப் பலருக்கும் முன்னிலையில் அவமானப்படுத்தியிருந்தால், மன்னிப்புக் கோரலையும் பொதுவிடத்தில் செய்யலாம்.

நேரம் : எவ்வளவு சீக்கிரம் மன்னிப்புக் கேட்டு விடுகின்றீர்களோ, அவ்வளவுக்கு  நல்லது. “பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்” என்று திருவிவிலியம் சொல்கிறது (எபேசியர் 4:26).  ஆனால், சில சூழல்களில் அவசரப்படுவதும் நல்லது அல்ல; இரண்டு வகை ஆள்கள் இருக்கிறார்கள். சிலருக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். சிலரிடம் அவர்கள் சற்றுத் தணிந்த பிறகு, நிகழ்வின் சூடு அடங்கிய பிறகு கேட்க வேண்டும். நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஆள் எந்த வகை? என்று அறிந்து  செயல்படுவது நல்லது.

மன்னிப்புக் கேட்கும்போது, மனம் விட்டுப் பேச போதுமான நேர அவகாசம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவர் மாலை பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் இருக்கும்போது, அவரிடம் ஓடிக்கொண்டே மன்னிப்புக் கேட்கக்கூடாது.

தயாரிப்பு : என்ன சொல்லப் போகிறீர்கள்? என்பதை ஒரு தாளில் எழுதி, சரிபார்த்து, கூர்மையாக்கி, ஓரிருமுறை ஒத்திகை பார்த்து விடுவது நல்லது. அது தேவையில்லாத உளறலைத் தவிர்க்க உதவும். லூக்கா 15:17-19-இல் ஊதாரி மைந்தனின் மன்னிப்புக் கோரல் ஒத்திகை ஒரு மிகச்சிறந்த திருவிவிலிய உதாரணம். அவன் சொல்லத் திட்டமிட்டது எல்லாவற்றையும் ஒருமுறை முழுமையாகச் சொல்லிப் பார்த்து விடுகிறான். மன்னிப்பு ஓர் எளிமையான, நேரடி மொழியில் கேட்கப்படுவதே சரி.  

ஒரு சண்டைக்குப் பிறகு காதலி, “Ok, I apologise” என்று சொல்லியிருக்கிறார்.

காதலன், “Apology கேட்டா மட்டும் போதாது; Sorry-யும் கேட்கணும்” என்றானாம்.

இதுபோன்ற அறிவாளி காதலர்கள் நிறைந்த சமூகத்தில், மன்னிப்புக் கோரல் அன்றாட எளிய வார்த்தைகளைக் கொண்டு அமைக்கப்படுவதுதான் பாதுகாப்பானது. மன்னிப்புக் கோரலை தயார் செய்த பின், அதில் துவக்க உரையாடல், செய்த தவறை ஒத்துக்கொள்வது, அதனால் மற்றவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு வருந்துவது, தவறைச் சரிசெய்யும் திட்டம்,  கற்றுக்கொண்ட படிப்பினை ஆகிய அடிப்படைக் கூறுகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  

கவனம்: உரையாடலின்போது கவனம் மன்னிப்புக் கோரலில் மட்டுமே இருக்க வேண்டும். அது தான் நோக்கம். உங்களை நியாயப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதோ அல்லது எது உங்களை அப்படி நடந்துகொள்ள வைத்தது என்பதைப் பற்றி விளக்கம் தருவதோ மன்னிப்புக் கோரலை அர்த்தமற்றதாக்கிவிடும். Just say you are sorry.

நிகழ்த்துகை: மன்னிப்புக் கேட்கும் சம்பவத்தைக் கூடுமானவரை நேரடியாக, நாடகம் ஏதுமில்லாமல் எளிமையாக நிகழ்த்துவதுதான் நல்லது. நிதானமாகப் பேசுங்கள். நீங்கள் ஒருவரிடம் மன்னிப்புக் கேட்கிறீர்கள் என்றால், அவர்மீது அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அவருடைய நட்பை நீங்கள் நாடுகிறீர்கள் என்று அர்த்தம். அந்த அக்கறையும், நாட்டமும் உங்கள் சொல், செயல், உடல் அசைவுகள் எல்லாவற்றிலும் வெளிப்பட வேண்டும்.    

‘Cast Away (2000)’ என்ற Tom Hanks நடித்த ஹாலிவுட் படத்தில் ஓர் அழகான மன்னிப்புக் கோரல் காட்சி இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த ஒரு சினி துண்டு! படத்தில் Hanks கதாப் பாத்திரத்தின் பெயர் Chuck.

ஒரு விமான விபத்தில் சிக்கி, யாருமில்லாத தீவு ஒன்றில்  Chuck கரையொதுங்குகிறான். துணைக்கு ஒரு football மட்டும்தான். Chuck அதில் ஒரு மனித முகம் வரைந்து, அதற்கு Wilson என்று பெயரிடுகிறான். Chuck-, வில்சனும் நண்பர்கள் ஆகின்றார்கள். Chuck வில்சனுடன் பேசுகிறான். சிரிக்கிறான், ஆலோசிக்கிறான், சண்டை போடுகிறான். ஒரு நாள் கோபத்தில் பந்தைக் கடலில் தூக்கி எறிந்து விட்டு, பின் வருந்தி, திரும்ப ஓடிப்போய் மீட்டுக் கொண்டு வந்து ‘sorry’ சொல்கிறான்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு Chuck ஒரு மரத்தெப்பம் செய்து, அவனும், வில்சனும் அதில் ஏறி பயணப்படுகிறார்கள். திடீரென்று ஒரு புயல்! பந்து தூக்கி எறியப்படுகிறது.

Chuck அதைக் காப்பாற்றக் கடுமையாகப் போராடுகிறான். முடியவில்லை. அவன் பார்க்கப் பார்க்க வில்சன் அவனை விட்டுக் கடலில் விலகிச் செல்கிறது. பந்துதான்! ஆனாலும், ஒரு நண்பன் போல அவனுடன் நான்கு ஆண்டுகள் கூட இருந்திருக்கிறது. வில்சனை அப்படி விட்டுச் செல்வது Chuck-ன் இதயத்தைக் கிழிக்கிறது.

கேமிரா டாப் ஆங்கிளில் ஏற மரத் தெப்பத்தில், அரை நிர்வாணமாகப் புரண்டுக்கொண்டு, “I am sorry, Wilson” என்று Chuck கதறி அழும் காட்சி! ஓர் அழகிய கவிதை.

முறையாக நிகழ்த்தினால், ஒவ்வொரு மன்னிப்புக் கோரலும் ஒரு கவிதையே!

(இந்த வார கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)