Namvazhvu
தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் – 32 மறவ நாட்டில் மறைப்பணி
Saturday, 08 Jun 2024 05:09 am
Namvazhvu

Namvazhvu

மறைச்சாட்சி மணிமகுடம்

1693, ஜனவரி 8-ஆம் நாள் தந்தை அருளானந்தரையும், மரியதாசன் பண்டாரம் மற்றும் கஸ்தூரி பணிக்கன் என்ற இரு இளம் வேதியர்களையும் கைது செய்து இராமநாதபுரத்திற்கு இழுத்துச் சென்றனர். அருளானந்தரைச் சுட்டுக் கொல்ல கிழவன் சேதுபதி உத்தரவிட்டான். அங்கிருந்த தடியத்தேவன் அருளானந்தருக்கு முன்பாக நின்றுகொண்டு, ‘என்னை முதலில் சுட்டுக் கொல்லுங்கள்என மறித்து நின்றார். அரச தந்திரியான கிழவன் சேதுபதி, ‘தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதுஎனச் சொல்லி வெளியேறினான். எனவே, அருளானந்தரை இரகசியமாகக் கொல்ல முடிவெடுத்தான். பின்பு அவரின் ஆடைகளை உரிந்து, கொதிக்கும் பாறையில் உருட்டிவிட்டு, பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கினர். பின்பு உடலெங்கும் காயங்களுடன் வேதனைப்பட்டவரைக் கயிற்றில் கட்டி பாழுங்கிணற்றில் தலைகீழாகத் தொங்க விட்டனர். அனுமந்தங்குடி சிறையில் அடைத்துப் பலவாறு கொடுமைப்படுத்தினர். அவரிடமிருந்து கனகப்பன் என்ற அவரது வேதியரைப் பிரித்து வேறோர் இடத்தில் அடைத்தனர். கிறிஸ்தவ அதிகாரி ஒருவரின் உதவியால் குதிரையில் ஏற்றப்பட்டு ஜனவரி 11 அன்று இராமநாதபுரத்திற்கு அழைத்து வரப்பட்டார் அருளானந்தர்.

கணக்கன்கோட்டை சிறையில் அவருடன் அவரது வேதியர் ஆவூர் சிலுவை நாயக்கரின் மகன் மரிய தாசன் நாயக்கர், முத்துப்பிள்ளை மற்றும் அருளானந்தன் ஆகியோரும் சிறையிலடைக்கப்பட்டனர். கணக்கன்பட்டியில் ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டதை வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தனர். ஜனவரி 20 வரை கிழவன் சேதுபதி மாற்று அலுவலாக இருந்ததால், அருளானந்தர் 20 நாள்கள் சிறையிலே கழித்தார். அந்நேரத்தில் கனகப்பன், சிலுவை நாயக்கர், சூரன் ஆகியோர் சந்தித்து விடுதலைக்கு முயற்சித்தனர். தடியத்தேவரும் எவ்வளவோ முயற்சித்தார். அனைத்தும் பயனற்றுப் போயின. ஜனவரி 28 அன்று கிழவன் சேதுபதி ரெங்கநாத தேவன், தந்தை அருளானந்தருக்கு மரண தண்டனை விதித்து, அதை நிறைவேற்றும் பொறுப்பைத் தனது தம்பியாகிய ஓரியூரின் இளவரசர் உடையத்தேவனிடம் ஒப்படைத்தான்.

படைவீரர்கள் குதிரையின்மீது அமர்ந்து கொண்டு தந்தையைக் கயிற்றால் பின்னால் கட்டி காடு, கரை, மேடு, பாறை, பள்ளம் என மனிதாபிமானமற்ற முறையில் இழுத்துச் சென்றனர். அவரின் நிலை கண்டு கலங்கிய மறவர் சாதிப் பெண் ஒருவர் அவருக்கு மோர் கொடுத்து வேதனையை ஆற்றினார். அப்பொழுது அருளானந்தர்அம்மா, இவ்வூரின் பெயர் என்ன?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘புல்லூர்எனக் கூறவே, புனிதர்இன்று முதல் இவ்வூர் நெல்லூர் எனப்படும்என்றார். அன்று முதல் இவ்வூர் வளம் கொழிக்கும் ஊராக மாறியது.

ஜனவரி 31 அன்று ஓரியூர் கொண்டு வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாகத் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஜனவரி மாதம் 28-ஆம் நாள் என்னை விசாரித்த அரங்கநாதத் தேவன் முன்னிலையில், கொல்லப்பட வேண்டும் எனத் தீர்ப்பிடப்பட்டது. கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய ஓரியூர் தேவனிடம் அனுப்பி வைத்தனர். காலதாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு இரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31 அன்று வந்து சேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர்நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய இலட்சியத்தை நிலைநிறுத்தக்கூடி யது. இதுவரை நான் ஆற்றிய பணிகளுக்குக் கைமாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான வாய்ப்பு இப்போது வந்துவிட்டது. என்மீது சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் ஆண்டவரைப் பற்றி அறிவித்ததும், சிலை வழிபாடுகளைத் தடுத்ததுமே ஆகும். வீரர்கள் என்னையே கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேல் என்னால் எழுதுவது இயலாதுஎன்று தனது மடலை முடித்துக் கொண்டார். இம்மடல் வேதியர் இம்மானுவேல் பிள்ளை மூலம் பெரியதாழையில் பணியாற்றிய தந்தை ஜான் தெ கோஸ்தாவிடம் கொண்டுபோய் சேர்க்கப்பட்டு, பின்பு பிரான்சுவா லெய்னே மற்றும் இம்மானுவேல் தெ ரோஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

1693, பிப்ரவரி 4 சாம்பல் புதனன்று ஓரியூர் கோட்டைக்கு வெளியே இருந்த ஒரு மண்திட்டிற்கு அருளானந்தர் இழுத்துச் செல்லப்பட்டார். அங்குத் தனது இறுதி மன்றாட்டுகளை முடித்துக் கொண்டு, முழந்தாள்படியிட்டுத் தன்னை வெட்டுவதற்கு வாய்ப்பாகத் தன் கழுத்தைக் குனிந்து காட்டினார். கொலைஞன், தந்தை அருளானந்தரின் தலையை வெட்டிச் சாய்த்தான். அவரது உடலிலிருந்து பீறிட்ட இரத்தம் அந்தக் கரிசல் பூமியைச் செம்மண் பூமியாக மாற்றியது. எனவேதான் அருளானந்தர்செம்மண் புனிதர்என அழைக்கப்படுகின்றார்தலை வெட்டப்பட்ட உடலைக் கழுமரத்தில் குத்தி வைத்தனர். மேலும், அவரின் கை, கால்களையும் வெட்டி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்  உணவாக இரு கம்பிகளில் தொங்கவிட்டனர். அது மழைக் காலமாக இருந்ததால், எட்டு நாள்களுக்குப் பிறகு அவ்விடத்திற்குச் சென்றபோது மீந்து கிடந்தது புனிதரின் சில எலும்புத்துண்டுகள் மட்டுமே.

வாழும்போதும், இறந்த பிறகும் பல புதுமைகளை ஆற்றிய அருளானந்தர் ஆகஸ்டு 21, 1853-இல் அருளாளர் நிலைக்கும், ஜூன் 22, 1947-இல் புனிதர் நிலைக்கும் உயர்த்தப்பட்டார்.

1734-ஆம் ஆண்டு அருளானந்தர் தலை வெட்டப்பட்ட இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. இன்று அது ஒரு புகழ்பெற்ற திருத்தலமாகத் திகழ்கின்றது. மறைச்சாட்சி புனிதர் அருளானந்தரின் திருவிழா பிப்ரவரி 4-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. புனித அருளானந்தர் பயன்படுத்திய சிறிய பாடுபட்ட சுரூபம், அவரது உடலைத் தொங்கவிட்ட கழுமரத்தின் சில பகுதிகள் திருத்தலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மதுரை, சிவகங்கை மறைமாவட்டப் பாதுகாவலராகவும், கும்பகோணம் மறைமாவட்ட இணை பாதுகாவலராகவும் புனிதர் அருளானந்தர்  கொண்டாடப்படுகின்றார்.