Namvazhvu
வாழ்வு வளம் பெற – 21 தாராள மனம்!
Thursday, 13 Jun 2024 10:32 am
Namvazhvu

Namvazhvu

லெஸ்லி ஆன் பார்க்லே என்ற பெண் தன் மகள் சொன்னதையும், செய்ததையும் பற்றி இணையத்தில் எழுதியிருக்கிறார். அவரது பிறந்த நாளுக்குச் சில நாள்கள்தான் இருந்தன. அவரது நான்கு வயது மகள் தன் தாயின் அருகே வந்து தயங்கி நின்றாள். “அம்மா, உன் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும்?” என்று கேட்டாள். எதையோ வாசித்துக் கொண்டிருந்த லெஸ்லி சிரித்துக் கொண்டே, “எ மில்லியன் டாலர்ஸ்!” என்றார். மகள் யோசித்தாள். என்ன சொல்வதென்று தெரியாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

சில நிமிடங்களில் திரும்பி வந்த மகளின் கையில் அவளது உண்டியல் இருந்தது. பெற்றோரும், வீட்டுக்கு வரும் உறவினரும் அவளுக்குக் கொடுக்கும் பணத்தையும், சிலவற்றைத் தியாகம் செய்து சேர்த்த பணத்தையும் அந்த உண்டியலில் போட்டுச் சேமித்து வந்தாள். “எதற்குப் பணம் சேர்க்கிறாய்?” என்று யாராவது கேட்டால், “கடையில் பார்த்த அந்தப் பெரிய கரடி பொம்மை வாங்கத்தான்” என்பாள். இப்பொழுது அந்த உண்டியலோடு வந்து நின்றாள். முகத்தில் சிறிது கவலை படர்ந்திருந்தது. “அம்மா, இதில் மில்லியன் டாலர் இல்லை. கூடப் போனால் பத்து டாலருக்குக் குறைவாகவே இருக்கும். ஆனால், என் பணமெல்லாம் இதில் இருக்கிறது. இதைத் தவிர என்னிடம் வேறு பணம் இல்லை. இது எல்லாவற்றையும் நீ எடுத்துக் கொள். இது உனக்கு என் பிறந்த நாள் பரிசு” என்றாள் மகள்.

‘ஆண்டு முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்ததை எல்லாம் தருகிறேன். எடுத்துக்கொள்’ என்று சொன்ன இந்தச் சிறுமியைத் தாராள மனமுள்ளோருக்கு உதாரணமாகச் சொல்லலாம். தாராள மனம் கொண்டோரின் வாழ்வு வளமாக இருக்கும். கஞ்சர்களுக்கு ஒருநாளும் கிடைக்காத நிறைவும், மகிழ்வும் இவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும். இதைக் கவனித்திருக்கிறீர்களா? யாருக்கும், எதையும் கொடுக்காமல், இருப்பதைத் தக்கவைத்துக் கொண்டால்தான் தங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமென்று கஞ்சர்கள் நம்புகிறார்கள். இதற்கு முற்றிலும் மாறாக, கொடுப்பதில்- குலுக்கிச் சரிந்து விழும்படி, நன்றாய் அளந்து மடியில் போடுவதில் - மகிழ்ச்சி காண்பவர்கள்தான் தாராள மனத்தினர்.

நமது வாழ்வை வளமாக்கி, நமக்கு மகிழ்வு தரும் தாராள மனம் கடவுளின் பண்புகளில் ஒன்று. “வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை; உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவளிக்கிறார். இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கூட கடவுள் அணி செய்கிறார்” என்கிறார் இயேசு (மத்தேயு 6:26-30).

“யுகங்கள் கடந்தாலும் அன்று போல் இன்றும் என் சின்னஞ்சிறிய கைகளில் நீர் கொட்டிக் கொண்டே இருக்கிறீர்” என்று மனம் நெகிழ்ந்து இறைவனிடம் சொல்கிறார் கவிஞர் இரபீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியின் முதல் கவிதையில். தாராளமாய்க் கொடுக்கும் இரு பெண்களை நற்செய்தியிலே காண்கிறோம். கணவரை இழந்து, தனிமையிலும், வறுமையிலும் வாடும் ஒரு கைம்பெண் எருசலேம் ஆலயக் காணிக்கைப் பெட்டியில் இரு செப்புக் காசுகளைப் போட்டு இயேசுவின் தாராளமான பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெற்று விடுகிறார்.

கொடுக்கும் பணம் அல்லது பொருளின் மதிப்பிற்கும், தாராள மனத்திற்கும் தொடர்பில்லை. கைம்பெண் காணிக்கையாய்ச் செலுத்திய இரு செப்புக் காசுகள் நமது நாட்டில் இரு ஐம்பது பைசா நாணயங்களுக்குச் சமம். இன்று பிச்சைக்காரர்கள் கூட வாங்க மாட்டார்கள். ஆனால், அவருக்கிருந்த தாராள மனம் அவரைவிட அதிகமான செப்புக் காசுகளைக் காணிக்கைப் பெட்டியில் போட்டவர்களுக்கு இல்லை. ஏன்? “அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும், தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன், தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டு விட்டார்”என்கிறார் இயேசு (மாற்கு 12:44).

நற்செய்தியில் வரும் மற்றொரு தாராளப் பெண்ணை எங்குப் பார்க்கிறோம்? நடந்த இடம் பற்றி கருத்து வேறுபாடு எதுவுமில்லை.  மத்தேயு, மாற்கு, யோவான் மூவருமே பெத்தானியா எனும் ஊரில்தான் இது நிகழ்ந்தது என்கின்றனர். ஆனால், ‘யாருடைய வீட்டில்?’ என்ற கேள்விக்கு மத்தேயுவும், மாற்குவும் தொழுநோயாளர் சீமோன் வீட்டில் என்று சொல்ல, யோவான் இலாசரின் இல்லத்தில் என்கிறார்.

தாராளப் பெண் யார்? மத்தேயுவும், மாற்கும் வெறுமனே ‘பெண் ஒருவர்’ என்று சொல்ல, யோவான் ‘அவர் இலாசரின் சகோதரி மரியா’ என்கிறார் (யோவான் 12:3). இருவரில் யாராக இருந்தாலும், அவர்கள் செய்த அன்புச் செயலில்தான் தாராளம் மின்னுகிறது. மிக விலையுயர்ந்த நறுமணத் தைலம் நிறைய கொண்டு வந்து இயேசுவின் தலையிலோ, காலடியிலோ பூசுகின்றனர். எவ்வளவு தைலம், அதன் விலை என்ன? என்பதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல், தான் அன்பு செய்த போதகரை மட்டுமே நினைத்து இதனைச் செய்கின்றனர்.

மரியாவோ, பெயரில்லாத பெண்ணோ, பாவி எனப்பட்ட பெண்ணோ அவரின் தாராளம் இன்னொரு விதத்திலும் வெளிப்படுவதைக் கவனித்தீர்களா? தைலம் பூசி விட்டு, துணியால் அல்ல; தன் கூந்தலால் இயேசுவின் காலடிகளைத் துடைக்கிறார். எவ்வளவு தாராளம் பாருங்கள்! மத்தேயு நற்செய்தியில் சீடர்களால் கூட இந்தத் தாராளத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ‘இப்பெண் விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை வீணாக்கி விட்டார்’ என்று கோபத்தோடு சொல்கின்றனர். யோவான் நற்செய்தியில் இதைச் சொல்வது யூதாஸ். “இந்தத் தைலத்தை 300 தெனாரியத்துக்கு விற்று அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” (யோவான் 12:5).

அன்பைத் தாராளமாய்ப் பொழிவோருக்கும், பொழியப்படும் அன்பை நிறைவாய்ப் பெறுவோருக்கும் இந்தத் தாராளத்தில் உள்ள அன்பு மட்டுமே கண்ணில் படுகிறது. கஞ்சர்களுக்கும், திருடர்களுக்கும், அன்பில்லாத மனிதர்களுக்கும் அது வீணாய், விரயமாய்த் தோன்றுகிறது. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மற்றோர் ஆழமான உண்மையும் உள்ளது. ஒரு செயல் தாராளமானதா? அல்லது வீணான வெற்றுச் செயலா? என்பதை மனத்தில் இருக்கும் நோக்கமே தீர்மானிக்கிறது.

ஊரே வியந்து பாராட்ட வேண்டும் என்று புகழ் பெற்ற மனிதர்களைப் பல நாடுகளிலிருந்து வரவழைத்து, விருந்தும், வேடிக்கையும், கேளிக்கையுமாய் ஒரு திருமணத்தைக் கொண்டாடும் செல்வந்தர் தாராள மனத்தினர் அல்லர்; அவரது பகட்டு, பளபளப்பிற்குப் பின்னே ஒளிந்திருப்பது பாராட்டிற்கான ஏக்கம். தன் செல்வச் செழிப்பைப் பறைசாற்றும் ஆணவம். மாறாக, இத்தகைய ஒரு செயலுக்கான ஒரே காரணம் அன்பு மட்டுமே என்றால், அச்செயலுக்கு அரிதான அழகும், நேர்த்தியும், மனத்தைத் தொடும் ஆற்றலும் வந்துவிடுகின்றன. அன்பு பல வடிவங்களில் மிளிரும் வைரம். எனவே, அதன் எல்லா வடிவங்களிலும் தாராளம் வெளிப்படலாம்.

பார்வையற்ற தன் மகன் பார்வை பெறட்டும் என்று தன் கண்களையே தானம் செய்து விட்டுச் சாகும் தாயின் தாராளத்தில் ஒளிர்வது பாசம். உலகே வியந்து இரசிக்கும் அதிசயமான தாஜ்மஹாலின் ஒவ்வொரு பளிங்குக் கல்லிலும் மின்னும் தாராளத்தில் ஒளிர்வது காதல். அநாதைக் குழந்தைகளைத் தேடிப்போய் அழைத்து வந்து, அன்போடு அணைத்துக் கொண்ட அன்னை தெரேசாவின் தாராளத்தில் ஒளிர்வது இரக்கம். பத்து ஆண்டுகளில் இத்தனை நாடுகள், இத்தனை ஊர்கள், இத்தனை மனிதர்கள் என்று ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்த புனித சவேரியாரின் தாராளத்தில் ஒளிர்வது அன்பின் மற்றொரு வடிவமான பக்தி.

பாசம், காதல், இரக்கம், பக்தி என்ற அன்பின் எல்லா வடிவங்களிலும் தாராளம் ஊற்றெடுத்துக் கொண்டே உள்ளது. நம் மனத்திற்கு நலமும், நம் வாழ்க்கைக்கு வளமும் சேர்க்கும் ஆற்றல் தாராள மனத்திற்குக் கிடைப்பது அன்போடு அதற்கு உள்ள இந்தத் தொடர்பினால்தான்.

சில நாள்களுக்கு முன்பு இது நடந்தது. முதலில் இயேசு சபை நண்பர் ஒருவர் அழைத்து, “கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூர் எனும் ஊரில் வாழும் ததேயுஸ் எனும் மீனவ நண்பர் உங்களோடு பேச வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்” என்று சொன்னதும், “சில நாள்களில் நானே அவரிடம் பேசுகிறேன்” என்று சொல்லி அவரது எண்ணைக் கேட்டேன்.

திருச்சி திரும்பியதும் அவரை அழைத்தேன். “‘தாராள மனத்துடனே’ என்ற பாடலை எழுதி, இசையமைத்தது நீங்கள்தானா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். “ஏதேதோ பாட்டு கேட்டிருக்கேன். எல்லாம் அதைக் கொடு, இதைக் கொடுன்னு கடவுளைக் கேட்கிற பாட்டுதான். ஆனா, இந்தப் பாட்டு ‘தாராள மனத்துடனே தரணியில் வாழச் செய்யும்’ என்று மன்றாட வைக்குது. அதன் மூலம் தாராளமா நம்மைக் கொடுக்கச் சொல்லுது. இரவும், பகலும் தனித்திருக்கிற நேரங்கள்ல எல்லாம் இந்தப் பாட்டைத்தான் இப்பப் பாடிட்டு இருக்கேன்” என்றார்.

“இயேசு சபையை நிறுவிய புனித லொயோலா இஞ்ஞாசியார் எழுதியதாக நம்பப்படும் ‘தாராள மனத்திற்கான செபம்’ என்ற செபத்தை மையமாக வைத்து, அதில் இல்லாத சில வரிகளைச் சேர்த்து இந்தப் பாடலை ஆக்கினேன்” என்று அவரிடம் சொன்னேன்.

யூடியூபில் உள்ள (https://youtu.be/kFxC9creq1I?si=xtA8Wij0SJU--WFp) இந்தப் பாடலில் இந்த வரிகள் வருகின்றன.

“விலையினைப் பாராமல்

நாங்கள் கொடுத்துக் கொண்டே இருக்க

ஊதியம் தேடாமல்

நாங்கள் உழைத்துக் கொண்டே இருக்க  …

ஏராளமாய்த் தரும் தாராள மனம் தா! 

ஊரெல்லாம் பொழிந்திடும் கார்கால மழை போல் 

யாரென்று பாராமல், ஏனென்று கேளாமல் 

பாரெல்லாம் ஒளி தரும் பகலவன் போல்!’

தாராள மனம் கேட்டு நாம் தினமும் மன்றாட வேண்டும். ஏன்? “நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்கா 6:38).

(இந்த வார கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது  குரல் பதிவாகவோ அனுப்பி வையுங்கள்.)