Namvazhvu
தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் – 33 மதுரை மற்றும் சிவகங்கைப் பகுதி மறைத்தளங்கள்
Thursday, 20 Jun 2024 11:14 am
Namvazhvu

Namvazhvu

கி.பி. 1594-இல் தந்தை கொன்சால்வ் பெர்னாண்டஸ் அவர்களால் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்தவம், 1606-இல் அருள் தந்தை இராபர்ட் தெ நொபிலியின் வருகைக்குப் பிறகு தனது நற்செய்தி வேர்களை விவேகமாக, வேகமாக வேரோடச் செய்தது. 1610-இல் நொபிலிக்கு உதவியாக வந்த இறையியல் பேராசிரியர் தந்தை விக்கோ, 28 ஆண்டுகள் 1638, அக்டோபர் 18 அன்று, தான் இறக்கும் வரை மதுரையில் பணியாற்றினார். நொபிலி திருச்சி மற்றும் கொங்கு நோக்கி தனது நற்செய்திப் பயணத்தைத் திருப்பிய பிறகு, தந்தை விக்கோ மதுரை கிறிஸ்தவர்களின் பொறுப்பை ஏற்றார். இவருக்கு உதவியாகத் தந்தையர் ஆந்த்ரே புக்காரியோ, கொன்சால்வ் மற்றும் வாங்கே தொமினிங்கோ வெவ்வேறு காலகட்டங்களில் உதவினர்.

மதுரையின் முதல் மறைப்பணியாளர் தந்தை கொன்சால்வ் முதுமையின் பொருட்டு 1618-இல் கொச்சின் சென்றார். இறுதி நாள்களைத் தூத்துக்குடியில் கழித்து 1621, ஏப்ரல் 6 அன்று மறைந்தார். இறக்கும்வரை நொபிலியின் மலபார் வழிபாட்டு முறைக்கு எதிராகச் செயல்பட்டு வந்தார். தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு நொபிலி சென்றாலும், அவ்வப்போது மதுரைக்கு வந்து, அதன் சுற்றுப் புறங்களில் புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கினார். தனது பழைய தங்குமிடத்திலிருந்து வந்த 250 பேர்களுக்குத் திருமுழுக்களித்தார். இருப்பினும், 50 ஆண்டுகளைக் கடந்தும் 1653-இல் மதுரையில் 200 கிறிஸ்தவர்கள் மட்டுமே இருந்தனர். இந்நகரில் புனித பனிமய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இருந்தது. போர் மற்றும் பஞ்சத்தால் 1656-59 ஆகிய ஆண்டுகளில் மதுரை பாதிக்கப்பட்டபோது தந்தை பெரைரா, இரக்கக் குணத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடையே பணியாற்றினார்.

தந்தை எத்தியன் தேர்ஸ் கூனம் பட்டியில் 1659, ஏப்ரல் 20 அன்று மரித்தார். பண்டார சுவாமி மனுவேல் ரோட்ரிக்ஸ் 1674-இல் 110 பேர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். மதுரையில் முதன் முதலில் எழுப்பப்பட்ட குருசடி மைசூர் படைகளால் 1681-இல் தரைமட்டமாக்கப்பட்டது. 1698-ஆம் ஆண்டு கள்வர்கள் அடிக்கடி மதுரைக்குள் நுழைந்து பொருள்களைத் திருடிச் சென்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால், குறுகிய காலத்தில் கள்வர்கள் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட, அமைதி திரும்பியது.

தந்தை அகஸ்டின் கப்பல்லி என்ற வேதபோதகர் 1711-இல் கழுகர் கடைக்கு வந்தபொழுது மூன்று நாள்களாகப் பிரசவ வலியால் துடித்த பெண்ணைப் புனித பிரான்சிஸ்கு சவேரியாரின் பெயரால் ஆசீர்வதித்துச் சுகப்பிரசவம் நடைபெற உதவினார். இதனால் அப்பெண்ணும், அவர் குடும்பத்தாரும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்றனர். அங்குப் புனித பிரான்சிஸ் சவேரியாருக்குத் தந்தை ஒரு சிற்றாலயம் எழுப்பினார். ஆரியப்பட்டியில் 608 பேர்களுக்குத் திருமுழுக்களித்து, இவ்வூரின் ஆலயத்தைப் புனரமைத்தார். மேலும், மறவ நாட்டில் தந்தை வேதபோதகர் 2000-க்கும் மேற்பட்டோருக்கு 1714-இல் திருமுழுக்குக் கொடுத்தார். இவ்வாறு அர்ப்பணிப்போடு பணியாற்றிய தந்தை கப்பல்லி தனது 33-வது வயதில் 1715, ஜூலை 4 அன்று கழுகர்கடையில் மரித்தார். இன்று வேத போதகரின் கல்லறை மக்கள் நம்பிக்கையுடன் சென்று வழிபடும் திருத்தலமாகத் திகழ்கின்றது.

மதுரை நாயக்கரால் பெரும் துன்பத்தைத் தந்தை சேவியர் ரிக்கார்டி அனுபவித்தார். மேலும், தனிச்சியம் ஆலயம் அழிக்கப்பட்டது. 1716-இல் செம்பட்டியில் தந்தை வீரமாமுனிவர் ஓர் ஆலயம் அமைத்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. 1729-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொள்ளை நோயில், ஏராளமான கால்நடைகள் மரித்தன. எனவே, தந்தை வின்சென்ட் பெரேரோ வழிகாட்டுதலில் புனித அந்தோணியாருக்கு விழா எடுத்து மன்றாடினார். அதன் பிறகு அக்கொள்ளை நோய் நீங்கியது.

1730 முதல் அரசின் தடைகளால் மதுரையில் மறைப்பணி ஆற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. 1740-இல் மராத்தா படைகள் மதுரையில் இருந்தபோதும், அப்படையில் பணியாற்றிய கிறிஸ்தவர்களின் துணையால் மதுரை புனித பனிமய அன்னை ஆலயம் காப்பாற்றப்பட்டது. 1749-ஆம் ஆண்டு தகவல்படி மதுரை மறைத்தள பறையர் கிறிஸ்தவர்களைத் தந்தை பியர் மகல் அவர்களும், ஆந்திரா இடைநிலை சாதிக் கிறிஸ்தவர்களைத் தந்தை ஜேக்ஸ் ஹார்ட்மேனும் கண்காணித்து வந்தனர்.

காமநாயக்கன்பட்டி மறைத்தளம்

இன்றைய விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கிறிஸ்தவம் பரவுவதற்கு நடுவமாக 17-ஆம் நூற்றாண்டில் காமநாயக்கன்பட்டி திகழ்ந்தது. மதுரை நகருக்கு அப்பால் தெற்கு நோக்கியப் பயணத்தில் அமைந்த அனைத்து நாட்டுப்புறப் பகுதிகளுக்கும் காமநாயக்கன்பட்டி மறைத்தளம் கிறிஸ்தவத்தை எடுத்துச் சென்றது. 1644-ஆம் ஆண்டில் கயத்தாறில் 18 கிறிஸ்தவர்களும், புனித சந்தியாகப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமும் இருந்தது. இப்பகுதியில் அருள்தந்தையர்கள் தங்கவில்லை. மாறாக, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளிலிருந்து தூத்துக்குடி மற்றும் கோட்டாறு செல்கின்றபோது இப்பகுதி வாழ் கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிகப் பணியாற்றிச் சென்றனர். வேதகலாபனை, பஞ்சம் போன்ற காலங்களில் மட்டும் சில மாதங்கள் இப்பகுதியில் மறைவாகத் தங்கி வாழ்ந்தனர்.

இவ்வாறு ஞான மேய்ப்பர்கள் முறையாக இல்லாத போதும், கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தில் உறுதியுடன் வாழ்ந்தனர். ஒப்புரவு அருள் சாதனம் பெறுவதற்குத் தூத்துக்குடி கடற்புரத்திற்குத் தொலைதூரம் நடந்து சென்றனர். மேலும், திருமுழுக்கு, திருமணம் போன்ற திருவருள் சாதனங்கள் பெற கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்திற்கு மூன்று நாள்கள் நடந்து சென்றனர்.

கயத்தாறில் 115 கிறிஸ்தவர்களும், ஓர் ஆலயமும் இருப்பதாகத் தந்தை பல்தசார் தெ கோஸ்தா 1653-இல் பதிவு செய்துள்ளார். இவ்வழியாகக் குருக்கள் கடந்து சென்றபோதெல்லாம் 10-15 நபர்களுக்குத் திருமுழுக்களித்தனர். இப்பகுதியில் வாழ்ந்த பால் என்ற உபதேசியார் மக்களுக்குச் சிறந்த முறையில் செபங்களைக் கற்றுக்கொடுத்து, திருமுழுக்குப் போன்ற திருவருள்சாதனங்களுக்குத் தயாரித்து வந்தார்.                     

(தொடரும்)