“நாம் திருவிவிலியம் வாசிக்கும்போது எந்தவித உணர்வுமின்றிப் பலமுறை வாசித்திருக்கலாம்; ஒருமுறை அதனை நம்பிக்கையோடு, இறைவேண்டலோடு வாசிக்கும் போது அந்தப் பகுதி ஒளியூட்டப்பட்டதாக, நாம் வாழும் சூழல்களின் பிரச்சினைகளை நமக்கு எடுத்துரைத்து, இறைவிருப்பத்தை நமக்குத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.”
- ஜூன் 12, மறைக்கல்வி உரை
“நாம் சோகமாக இயேசுவைப் பற்றிப் பேச முடியாது, மகிழ்ச்சியோடுதான் பேச முடியும். ஏனென்றால், நம்பிக்கை என்பது பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஓர் அற்புதமான அன்பின் கதை.”
- ஜூன் 13, திருத்தந்தை வெளியிட்ட குறுஞ்செய்தி
“ஆன்மிக மாற்றத்தின் தொடக்கப்புள்ளி பணிவு; இதுவே அனைத்து நற்பண்புகளுக்கும் நுழைவாயிலாக இருக்க வேண்டும். தாழ்மையான மனம் கொண்டவர்கள் மட்டுமே மற்றவர்களை மதிக்கின்றனர். அவர்களின் சொந்த நலனுக்கான ‘நான்’ என்பதை விடுத்து, சமூக நலனுக்கான ‘நாம்’ என்பதை முன்னிறுத்துகின்றனர்.”
- ஜூன் 13, குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவைக்கான செய்தி.
“தனியாகச் சிரிப்பதைவிட, ஒன்றிணைந்து சிரித்து மகிழ்வது எளிதானது. இணைந்து சிரித்து மகிழ்வதும், நம்மிடம் இருப்பதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதும் நம்மிடம் உள்ள திறந்த மனத்தை எடுத்துக்காட்டுகிறது.”
- ஜூன் 14, ‘எக்ஸ்’ தளப்பதிவு செய்தி
“இயற்கையைப் பாதுகாக்க நாடுகளின் சட்டங்கள் மட்டும் போதாது; நல்மனம் கொண்ட மக்களின் அக்கறையும், செயல்பாடுகளும் தேவைப்படுகின்றன. நம் பொது இல்லமாகிய இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு நம் ஒவ்வொருவரின் அர்ப்பணமும் தேவை.”
- ஜூன் 15, வங்கிகளின் உயர் அதிகாரிகள் சந்திப்புச் செய்தி