Namvazhvu
சமூகக் குரல்கள்
Wednesday, 26 Jun 2024 09:19 am
Namvazhvu

Namvazhvu

ஆட்சி மாற்றம் காரணமாகக் காவல்துறையினர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது. இது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே நடக்கிறது. வேறு நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நடப்பதில்லை.”

- திரு. என். ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

மாவட்ட அளவில் பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆராய மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வுக் கூட்டங்களைபோல் மாவட்ட கல்வி மதிப்பாய்வும் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும். மதிப்பாய்வு என்பது பள்ளிகளில் தேவையான வசதிகளை உருவாக்குதல், அடிப்படை வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, கல்வி தொடர்பான போக்குவரத்து, சத்துணவுத் திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பள்ளிகளில் கற்பித்தல் முறைகள், மாணவர்களின் செயல்திறன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.”

- திரு. சிவதாஸ் மீனா, தலைமைச் செயலர்

தமிழ்நாட்டில் தற்போது ஆணவப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. சாதி வெறி அமைப்புகள், கூலிப்படைகளைத் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்த விவகாரத்தில், திருமணமானவர்கள் எங்களது கட்சி அலுவலகத்தில் இருப்பதை அறிந்து வந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கும் பெண்ணின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் எப்படிப் பெண்ணை ஒப்படைக்க முடியும்? அந்த நேரத்தில் அனுப்புவது அவர்களைக் கொலைக்களத்திற்கு அனுப்புவதற்குச் சமம். இதுபோன்ற தம்பதிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது. ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்ட மசோதாவை வரக்கூடிய சட்டப்பேரவைத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.”

- திரு. கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்