Namvazhvu
பாலியல் கொடுமையை நீக்க இன்னும் உறுதியான வழிகள்- கர்தினால் மார்க் அவ்லத்
Monday, 24 Jun 2019 11:01 am

Namvazhvu

உலகிலுள்ள ஆயர் பேரவைகளின் தலைவர்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வத்திக்கானில் மேற்கொண்ட ஒரு கலந்துரையாடலின் விளைவாக, ‘Vos estis lux mundi’ என்ற திருத்தூது மடலை அவர் வெளியிட்டுள்ளார் என்று, ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்க் அவ்லத் கூறியுள்ளார்.
இத்திருத்தூது மடலைக் குறித்து வத்திக்கான் செய்திக்கு, கர்தினால் அவ்லட் அளித்த பேட்டியில், இம்மடல் வழியே இந்தக் கொடுமையை நீக்க இன்னும் உறுதியான வழிகளை திருத்தந்தை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்.
சிறியோர் என்ற பிரிவில் குழந்தைகள் மற்றும், உடல், மனம் ஆகியவற்றில் குறையுள்ளோர் ஆகியோரைக் காக்கும் பொறுப்பு இம்மடலில் வெளியாகியுள்ளதுபோல், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இளம் துறவியரையும், குரு மாணவரையும் கொடுமைப்படுத்துவோரையும் இம்மடல் கவனத்தில் கொண்டுள்ளது என்று கர்தினால் அவ்லத் கூறினார்.
தவறான குற்றச்சாட்டுகள் எழுவதற்கு வாய்ப்பு
திருத்தந்தையின் இம்மடலைப் பயன்படுத்தி, தவறான குற்றச்சாட்டுகள் எழுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதையும் தன் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால் அவ்லத் அவர்கள், அவ்வகையில் எழும் சிறிய அளவு தவறுகளுக்காக, பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் வெளியாகாமல் போவதும் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.
இந்த மடலின்  வழியே, தலத்திருஅவை அதிகாரிகள் இன்னும் கூடுதலான பொறுப்பைப் பெற்றுள்ளனர் என்றும், இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றும் வேளையில், கூடுதல் பாதுகாப்பு உருவாக வாய்ப்புள்ளது என்றும் கர்தினால் அவ்லத் அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
இந்த வழிமுறைகளில், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோரின் உதவிகள் கோரப்படுவதால், பொதுநிலையினரின் பங்கேற்பும் கூடுதலாக இருக்கும் என்று தான் நம்புவதாக, கர்தினால் அவ்லத் விளக்கினார்.