Namvazhvu
தனிமையின் ஒளி
Friday, 28 Jun 2024 09:36 am
Namvazhvu

Namvazhvu

அமலியின் அடக்கம் முடிந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. அம்மாவுக்கான பூசை, சடங்குகளை முடித்துக் கொண்டு பிள்ளைகள் நேற்று அவரவரின் வெளிநாடுகளுக்குக் கிளம்பி விட்டனர். இன்று காலை முதல் தனிமையில் கழிந்தது. ‘சமாளித்து விடுவேன்’ என்றுதான் நினைத்தேன். ஆனால், முடியவில்லை. கடிகார முள்ளில் பாறாங்கல்லைக் கட்டியதைப்போல காலம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

அமலியுடன் நான் கழித்த நேரம் குறைவுதான். காலையில் எழுந்து மார்க்கெட்டுக்குச் சென்று விட்டு, மீனும், காய்கறியும் வாங்கி வந்துவிட்டு வேலைக்குக் கிளம்பும்போது எட்டு மணி. அவளும் அவசரமாகச் சமைத்துவிட்டு கிளம்பிக் கொண்டிருப்பாள். இருவருக்கும் வெவ்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணி. நான் சைக்கிளில் பக்கத்து ஊருக்குச் செல்வேன். அவளுக்கு உள்ளூரிலேயே வேலை. மாலை பள்ளி முடிந்து சகாக்களுடன் உறவாடி விட்டு நான் வீடு திரும்ப எட்டு மணி ஆகிவிடும்.

எனக்கு ஆசிரியர் சங்கத்தில் முக்கியப் பணிகள் எப்போதும் இருந்தன. சனி, ஞாயிறு என்றால் வேறு முக்கியச் சந்திப்புகள், வெளியூர் கூட்டங்கள், போராட்டங்கள். அந்த வட்டாரத்தில் சங்கத்தின் முக்கிய ஆள்களில் நானும் ஒருவனாக இருந்தேன். அவளுடன் நான் செலவழித்த நேரம் குறைவுதான் என்றாலும், அவள் என் மனைவியாகவும், நான் அவள் கணவனாகவும், பின்னர் அன்னை-தந்தையாகவும் முழுமையாக வாழ்ந்தோம்.

வீட்டை முழுவதும் அவள் நிர்வகித்தாள், பிள்ளைகளை அவள்தான் அதிகமாய்ப் பார்த்துக் கொண்டாள். ஆண்டுதோறும் விடுமுறைக்கு அவள் ஊருக்கு எல்லாரும் செல்வோம். அவ்வப்போது பண்டிகை, சினிமா என ஒன்றாய்க் கொண்டாடுவோம். அவ்வளவுதான் என் பங்கு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அமலி நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டதும், நான் விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு அவளருகில் இருந்தேன். குழந்தைகள் இருவரும் உலகின் இரு வேறு மூலைகளில் இருந்தனர். அந்த நாள்களில் விடுபட்ட பலவற்றையும் பேசிக் கொண்டோம். அமலியின் அருகில் இருந்து கொண்டு அவள் தூங்கியது தெரியாமல் பேசிக்கொண்டிருந்த நேரங்கள் மிக இனிமையானவை. ஓர் இளைஞனைப்போல உணர்ந்தேன். மனிதன் உறவுகளுக்காக உருவாக்கப்பட்டவன் அல்லவா! அன்பு, தியாகம், நேர்மை, உண்மை என மனிதன் கற்றுக்கொண்ட எல்லா நற்பண்புகளும் உறவுகளின் மூலம்தான் வெளிப்படுகின்றன. உறவுகள் மூலம்தான் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், நான் இப்போது தனித்து நிற்கிறேன்.

காலையில் தனியாக எழுந்தேன், தனியாகச் சோம்பல் முறித்தேன், தனியாகப் பல் துலக்கினேன், தனியாகச் சமைத்தேன், தனியாகச் சாப்பிட்டேன், தனியாகப் பேப்பர் படித்தேன், தனியாகத் தனியாகத் தனியாக... சொல்லச் சொல்ல இந்த நாள் மிக நீண்டதாக மனத்தில் தோன்றுகிறது. இதோ இரவு வந்துவிட்டது. தனிமை கறுத்த வேடமணிந்து இரவாக நம்மைப் பிடிக்க வருகிறான். நீண்ட நேரம் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தேன். விளக்கு போடவும் மனம் வரவில்லை.

யாரையாவது அழைத்தால் என்ன? யாரை அழைப்பது? இரண்டு வருடங்களில் பள்ளிக்கூடமும், சங்கமும் ஆள்குறைப்பு, மாற்றம் என முற்றிலும் மாறிவிட்டன. ஊரில் என்னைப்போல தனியாக யார் இருப்பார்? என யோசித்தேன். ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சிந்தனையில் அடுக்கினேன். அமலியின் அடக்கத்துக்கு வந்தவர்கள் யாராவது தனியாய் இருப்பவர்களா? என யோசித்தேன். யாரும் இல்லையே!… 90 வயது பங்கிராஸ் தாத்தாவுக்குக் கூட செல்வி பாட்டி இருக்கிறாளே! கோவில் தெருவில் வேறு யாரும் தனியாக இல்லை. ஓ, நான் அவரைப் பற்றி யோசிக்கவே இல்லை. ‘சட்டென்று தோன்றியது. பங்குத்தந்தை. அவர் தனியாகத்தான் இருப்பார்.

அவரைப்போய் ஓர் எட்டு பார்த்து வந்தால் என்ன? என்று கிளம்பினேன். ஊரில் ஆளரவம் இல்லை. இன்னும் பாதி கிராமம்தான் எங்கள் ஊர். இரவில் விரைவிலேயே ஊர் அடங்கிவிடும். கடைத் தெருவைத் தாண்டியதும் கோவில் கோபுரம் தெரிந்தது. அந்தோணியார் குருசடியைத் தாண்டி திரும்பியதும் பங்குச் சாமியாரின் அறை தெரிந்தது. விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. இரவு ஒன்பதரை மணி. ‘என்ன செய்துகொண்டிருப்பார்?’ ஆர்வம் மேலிட்டது. இவர் தனித்திருக்கப் பழகியிருப்பார். நிச்சயம் பழகியிருப்பார். ஆனாலும், எப்போவாவது சர்ச்சுக்குப் போகும் நான் அவரிடம் போய் என்ன கேட்பது?

தொலைவில் நின்று பார்த்தேன். அவர் செபித்துக் கொண்டிருந்ததுபோல தோன்றியது. சற்று விலகி நின்றால் அவருடன் மூன்று பேர் அமர்ந்திருந்தது தெரிந்தது. அவர் மேசைமீது கைகளைக் குவித்து அமர்ந்திருந்தார். முகம் மேல்நோக்கி பார்த்தபடி இருந்தது. அவருடன் இருந்த மூன்று பேரும் வயதானவர்கள். ஒரு பெண்மணி, ஓர் ஆண், ஒரு குருவானவர். விளக்கு அவர்கள் மேல் நேரடியாகப் படுவதைப்போல அவர்கள்மீது ஒளி வீசியது. வெள்ளை வெளிச்சம். நான் கண்களைக் கசக்கிக்கொண்டேன். மீண்டும் பார்த்தேன். இப்போதும் அப்படித்தான் ஒளி வீசியது.

மெல்ல மெல்ல அருகில் சென்றேன். பாதி திறந்திருந்த சன்னல் வழியாக அவர்களின் உருவம் தெரிவதும், மறைவதுமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தபோது ஃபாதர் தனியேதான் செபம் செய்து கொண்டிருந்தார். அந்த மூவரையும் காணவில்லை. கதவும் திறக்கவில்லை. யாரும் வெளியே வரவும் இல்லை. எனக்குக் குழப்பமாக இருந்தது. நான் திரும்பிவிட நினைத்த அதே நேரம், நான்கு நாய்கள் குரைத்தபடி என்னை நோக்கி ஓடி வர, நான் சத்தம்போட ஃபாதர் விழித்துக்கொண்டார்.

வெளியே வந்து என்னைப் பார்த்தார். “இங்க என்ன பண்றீங்க இந்த நேரம்?” என்றார். “மன்னிக்கணும் ஃபாதர்... நான்...” என்றேன் தயக்கமாக.

“தெரியுமே... அமலி டீச்சர் ஹஸ்பண்ட்..” என்றார் புன்னகையுடன்.

“ஆமா. சும்மா தனிமையா இருந்துச்சு. அதான் உங்கள பார்க்கலாம்ணு வந்தேன். நீங்க மூணு பேரோட செபம் பண்ணிட்டிருந்தீங்க. அதான் திரும்பப் போகலாம்ணு பாத்தேன்” என்றேன்.

“பசங்க ஊருக்குப் போயிட்டாங்களோ?” என்றார். ‘ஆம்’ என்பதுபோல தலையசைத்தேன்.

“நான் தனியாத்தான் இருந்தேன். இரவில் நீண்ட செபம் செய்வேன். என்கூட யாரும் இல்லை” என்றார்.

என்னால் நம்ப முடியவில்லை. “இல்ல ஃபாதர், நான் பார்த்தேன். நிச்சயமா பார்த்தேன். மூணு பெரியவங்க உங்ககூட இருந்து செபம் பண்ணினாங்க” என்றேன்.

“இல்ல, நீங்க குழம்பிப் போயிருக்கீங்க. நாளைக்குச் சாயங்காலமா வாங்க, பேசிக்கிட்டிருக்கலாம். சர்ச்சுக்கு, ஊருக்கு ஏதாவது செய்யுங்க, தனிமை எல்லாம் போயிரும்” என்றார்.

“கண்டிப்பா வர்றேன் ஃபாதர்” என்றேன். ஆனாலும், என் மனத்தில் அந்தக் குழப்பம் தீரவில்லை. யார் அந்த மூன்று பேர்? ஏன் இவர் மறைக்கிறார்? என அவரிடமே கேட்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அந்த இரவில் அவரிடம் விவாதிக்க நேரமில்லை.

“சரிங்க ஃபாதர், நான் கிளம்புறேன்” என்றேன்.

அவரும் உள்ளே செல்லத் திரும்பினார். நானும் வீட்டை நோக்கித் திரும்பினேன். பின்னாலிருந்து தந்தை அழைத்தார்.

“சார். நீங்க பார்த்த மூணு பேரும் எப்படி இருந்தாங்கன்னு சொல்ல முடியுமா?”

இப்போது அவர் முகத்தில் குழப்பமும், ஆர்வமும் தெரிந்தன.

“ஒரு வயசான அம்மா, சர்ச்சுக்குப் போகிற மாதிரி தலைய முந்தானையால மூடியிருந்தாங்க, ஒரு வயதான ஆண், வெத்தலை போடுறவரா இருப்பாரு; அப்புறம் ஒரு வெள்ளத் தாடி வச்ச ஒரு ஃபாதர். இந்த மூணுபேரும் ஃபோக்கஸ் லைட்டுல உட்கார்ந்திருந்த மாதிரி உங்க முன்னால ஒளி வீச உக்கார்ந்திருந்தாங்க” என்றேன்.

“உண்மைதான் சொல்றீங்களா?” என்று மீண்டும் சந்தேகத்துடன் கேட்டார்.

“ஆமா” என்றேன் அழுத்தமாக.

“அவங்க என்னோட அம்மா, அப்பா, அப்புறம் என்னுடைய ஆன்மிகக் குரு” என்றார் அவர்.

“ஓ... எங்க இருக்காங்க?” என்று கேட்டேன்.

மேலே கையைக் காட்டினார். “நான் இரவு படுக்குறதுக்கு முன்னால என்னுடைய செபத்துல இவங்கள நினைச்சுக்குவேன். கண்மூடி அவங்ககூட பேசுவேன். அம்மாவும், அப்பாவும் தினம் செபிப்பாங்க. ஃபாதர் என்னுடைய ஞானகுரு. நான் சாமியாராக அவர்தான் காரணம். மூணு பேரும் இப்ப உயிரோட இல்ல.”

என்னால் நம்பமுடியவில்லை. இது எப்படிச் சாத்தியம்? இவங்க யாரையும் எனக்குத் தெரியாதே! ஆனால், நான் அவங்களப் பார்த்தது உண்மைதான். ஒருவேளை நான் அவங்க படங்கள ஃபாதரின் ரூம்ல பார்த்திருக்கலாம்; அதுல இருந்து கற்பனை செய்திருக்கலாம்;… இல்லை... அப்படி எனக்கு எந்த படமும் நினைவில இல்லை. நான் கண்டது உண்மையான காட்சி! நான் குழம்பிட்டேன். ஆனால், இதை மேலும் பேசினா அவருக்கும், எனக்கும் சங்கடமாயிடும். சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் அந்தப் பாதி திறந்திருந்த சன்னல் காட்சி தோன்றித் தோன்றி மறைந்தது ஒளியால் நிறைந்த அந்த மூன்று பெரியவர்கள். ஒருகணம் வயதாகிவிட்டது என்றும் தோன்றியது. இல்லை இதில் ஏதோ இருக்கிறது. இருக்கையில் அமர்ந்தேன். விளக்கை அணைக்க மனம் இல்லை, இருந்தாலும் அணைத்து விட்டேன். கண்களை மூடினேன். எனக்குத் தெரிந்த வகையில் செபிக்கத் துவங்கினேன். ‘அமலி, உனக்காக ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நீ தியாகத்தின் உருவாக இருந்தாய். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எனக்கும் ஒரு தாயாக இருந்தாய். என் தனிமையில் நீ என்னுடன் இருப்பாய் என நான் நம்புகிறேன்.’

ஒரு குழந்தையைப்போல செபம் என் மனத்தில் வந்து கொண்டிருந்தது. ‘சட்’டென என் கண்ணோரங்களில் ஓர் ஒளி தோன்றியது. நான் இன்னும் செபித்துக் கொண்டிருந்தேன். மூடியிருந்த என் கண்களின் வழியே கசிந்தது ஒளி.

‘அமலி... அமலி...’ என முனங்கிக் கொண்டிருந்தேன். கண்களைத் திறந்தால் அந்தத் தனிமையின் ஒளி மறைந்துவிடும் என்று பயந்தேன். தனிமையில் செபிக்கையில், நாம் தனிமையில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.