Namvazhvu
கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு பேரவலம்!
Wednesday, 03 Jul 2024 04:30 am
Namvazhvu

Namvazhvu

கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள சாவுகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. மணிக்கு மணி, எண்ணிக்கை அதிகமாகி வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வரும் சூழல் கேட்டு மிகுந்த கவலை கொள்கிறேன். கள்ளச்சாராயம் குடித்துப் பலியானோரின் குடும்பங்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு எப்படி ஆறுதல் அளிப்பது என்பதே பெரும் பிரச்சினையாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு தழுவிய நிலையில் இம்மாதிரியான நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருவது உண்மையெனினும், தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏழைக் குடியானவர்கள் கொடுமைக்கு ஆளாகியமை கவலையைத் தருகிறது.

இதுவரை 58 பேர்களைப் பலிகொண்ட இந்நிகழ்வை, அப்பகுதியில் பணிப்பொறுப்பிலிருந்தும் அரசின் உயர் காவல் அதிகாரிகள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. இது ஒரு நாளின் நிகழ்வல்ல என்பதால், இவ்வதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். கவனக் குறைவாகவும், பொறுப்பற்ற முறையிலும் நடந்துகொண்ட அதிகாரிகள்மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளமையை ஆதரிக்கிறேன்.

நடந்து முடிந்த கோரச்சம்பவம் அரசியல் ரீதியாகப் பார்க்க வேண்டிய ஒன்றல்ல. இது ஒரு சமூகப் பிரச்சினை, சமூகத்துக்குள் ஊடுருவியுள்ள ஓர் இழிவான பிரச்சினை. இப்பிரச்சினைக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியைக் கைகாட்டி யாரும் தப்பிக்க முயலக்கூடாது. இச்சமூக அவலம் தொடர்ந்து நடவாதிருக்க சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும், குடிமைச் சமூக அமைப்புகளும், சமயப் பீடங்களும் பொறுப்பேற்று, இனி வருங்காலங்களில் இப்படியான சோக நிகழ்வுகள் நடவா வண்ணம் காப்பரண்களாகச் செயல்பட வேண்டும்.

கள்ளச்சாராயத்தால் மடிந்து போனவர்களின் குடும்பங்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டிய கடமையை உணர்ந்த தமிழ்நாடு அரசு, அநாதைகளாகிப்போன குழந்தைகளுக்கு உதவித்தொகை அறிவித்திருப்பது கண்டு மகிழ்கிறேன். குறிப்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

கள்ளக்குறிச்சியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வேறு பல இடங்களிலும் செயல்பட்டு வரும் கள்ளச்சாராய சட்டவிரோதப் போதைக் கும்பல்களைக் கண்டறிந்து, அவர்களின் சமூக விரோதச் செயலை அடக்கிட வேண்டும் என்றும் அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசின் இப்பணிக்கு மதுரை உயர் மறைமாவட்டப் பேராயம் எப்போதும் துணை நிற்கும் என்று உறுதி கூறுகிறேன்.