Namvazhvu
வாழ்க்கையைக் கொண்டாடு – 50 வாழ்நாள் முழுவதும் வழித்துணையாக...
Friday, 12 Jul 2024 11:12 am
Namvazhvu

Namvazhvu

ஒரு வேலையை முடிப்பதற்காக ஓர் இடத்திற்குச் செல்கிறோம்; அங்கு நமக்குத் தெரிந்தவரோ அல்லது தெரிந்தவருக்குத் தெரிந்தவரோ இருந்தால் நமக்கு ஒரு துணை கிடைத்தது போல ஓர் எண்ணம் வரும். முடிக்க வேண்டிய வேலையும் வெகு விரைவில் முடிந்துவிடும். இதெல்லாம் எப்படி? தெரிந்தவர்களால் நமக்கு ஏற்படும் ஒருசில ஆதாயம் அல்லது நன்மை என எடுத்துக்கொள்ளலாம். இவை எல்லா நேரத்திலும் நடக்க வாய்ப்பு உண்டா? அப்படி எதுவும் சொல்லிவிட முடியாது. ஆனால், தேவையான நேரத்தில் இவை நடக்க முழு வாய்ப்பு உண்டு. வாழ்நாளெல்லாம் நாம் யாருக்கோ அல்லது சிலர் நமக்கோ தொடர்ந்து நன்மைகள் செய்துகொண்டே இருந்தாலென்ன? கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால், நடைமுறைக்குப் பொருந்துமா? என்றால் சற்றுக் கேள்விக்குறிதான்

வாழ்நாளெல்லாம் உன் கூடவே நான் இருப்பேன்; உன்னை எங்கும் தனியாக விடவேமாட்டேன்; இது என்மேலும், உன் மேலும் சத்தியம்என்று காதலிக்கும்போது சொல்லும் அதே நபர்தான், காதலித்துத் திருமணமாகி, குடும்பம் என்றானவுடன், ‘எனக்கு இருக்குற வேலையில உன் பின்னாடியே அலையணுமாக்கும்? நான் வேலைய பாக்குறதா, இல்ல உன்னைய பாக்குறதா?’ எனத் தடித்த வார்த்தைகளாக விழும். அதற்காக இருவருக்கும் அன்பு என்பது இல்லாமல் போய்விட்டது எனும் முடிவுக்கு வந்துவிட முடியாது. மாறாக, அன்பின் அடுத்தக் கட்டம் என்று அதைப் புரிந்துகொண்டால் இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய பூ பூத்துக்கொண்டே இருக்கும்.

நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை எனும்போது, நட்பு மட்டும் எப்படி நிலையாக இருக்க முடியும்? நிலையான நட்பு என்பதைத் தாண்டி, நிலைத்த நட்பு எனும் சொல்லாடலை நாம் கேட்டிருப்போம். நாம் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் தொலைந்து போகாம லும், தொல்லை தராமலும் இருக்கும் பல நட்புகளைப் பார்த்திருப்போம். அதுபோல நாம் அமைத்துக் கொள்வது எளிதுதான்.

எதற்கும் வாதிடாமலும், சிலவற்றிற்கு உடன்படாமலும், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளும் பக்குவம் இருந்தால் நட்புகள் நம் வயப்படும். படிக்கும் இடத்தைவிட, நாம் வேலைபார்க்கும் இடத்தில் உருவாகும் நட்பு சற்று ஆழமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. படிக்கும் காலத்தில் ஏற்படும் நட்பு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, நிறை-குறைகளைப் பற்றி அறியாது அமைவது. ஆனால், வேலைபார்க்கும் இடத்தில் அமையும் நட்பானது, நம் நிறை-குறைகளை முழுமையாகத் தெரிந்த ஒரு கூட்டம். அதில் நம்மை யாரென்று உணர்ந்து அமையும் அல்லது அமைத்துக் கொள்ளும் நட்பு ஆழமான மற்றும் புரிதல்களை உள்ளடக்கிய நட்பு என்பதைப் பலர் உணர்ந்து என்னிடம் பகிர்ந்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.

காதலன்-காதலி பிணைப்பு என்பது சில எதிர்பார்ப்புகள் உள்ளே உறங்கினாலும், ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பினால் சற்றுக் கிறங்கிப் போய், சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் ஒருவித அரவணைப்பில் எதிர்க்குரல் எழுப்பாமல் மேலும், கீழும் அலைபாய்ந்து ஓடிக்கொண்டே இருக் கும். முழுமையான புரிதல் ஏற்படும்போது அவர்களை அறியாமலே ஒருவித நட்பு மேலிடும். அதுதான் அவர்களை நிலையான இடத்திற்கு இட்டுச் செல்லும். தாய்-தந்தை உறவு அப்படி அல்ல; அதில் ஒரு பிணைப்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அது இயற்கையே தந்துள்ள பிணைப்பு. அது வாழ்நாளெல்லாம் இருந்துகொண்டே இருக்கும்.

இவற்றை எல்லாம் இங்குப் பேசுவதற்குக் காரணம் உண்டு. இந்த உறவுகள் எல்லாம் நிலைத்து நம்மோடு பயணிக்க, வேலைபார்க்கும் இடத்தில் நாம் முன்னெடுக்கும் நட்பும், புரிதலுமே ஆணிவேர். ஒரு நாளின் அதிகப்படியான நேரத்தை வேலைபார்க்கும் இடத்தில்தான் செலவழிக்கிறோம். அப்படி இருக்கும்போது அங்கு அமையும் உறவு மேம்பாடுதான் நம்மைச் சிறந்த மனிதனாக மாற்றும். அங்கு நம் புரிதலைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள குடும்பச் சூழலும் ஒரு முக்கியக் காரணியாக அமையும். மொத்தத்தில் இது ஒரு வட்டம்.

தாய், தந்தை மற்றும் உறவுகள் என்பது நாம் தேர்ந்தெடுப்பது கிடையாது. அது தானாகவே அமைவது. மனைவி, வேலை மற்றும் நட்புகள் என்பது நாமாக அமைத்துக்கொள்வது. தானாக அமைவதில் குறைகள் இருப்பின், அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நாமாக அமைக்கும் நட்பில் குறைபாடுகளோ, தவறுகளோ இருப்பின் அதற்கு முழுப்பொறுப்பு நாம் மட்டும்தான். அதை நாம்தான் சரிசெய்தாக வேண்டும். இவ்வாறு சரி செய்யப்படும் நட்புகளும், உறவுகளும்தான் நமக்கு வாழ்நாள் முழுதும் வழித்துணையாகும். சில ஆய்வுகளின் அடிப்படையில் வாழ்நாளெல்லாம் வழித்துணையாக நாமும், பிறர் நமக்கும் இருக்க சில வழி முறைகளை நிறுவனங்களில் கடைப்பிடிப்பது வழக்கம். அவற்றுள் சில:

உங்கள் முன்னுரிமையைக் கேளுங்கள். வாதங்கள் எப்போதும் நட்பை வளர்ப்பதற்கு உகந்தவை அல்ல; எப்போதும் உங்கள் கருத்தைப் பெற முயற்சிப்பதைவிட, ஒருவருக்கொருவர் சொல்வதை மற்றும் கேட்பதை உங்கள் முன்னுரிமையாகக் கொண்டால், நாம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. அது நம்மைச் சரியான தளத்திற்கு நகர்த்திச் செல்லும்.

தவறு செய்யும்போது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். எப்போதும், எல்லாரும் சரியாக இருப்பதில்லை. நாம் தவறும்போதும், நம்மோடு வேலை செய்பவர் தவறிழைக்கும்போதும் ஒரே அளவீட்டை வைத்துப் பார்ப்பது நலம். நாம் சொல்லக்கூடிய விசயங்களைத் தனிப்பட்டத் தாக்குதலாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான விமர்சனமாக அமைத்துக் கொள்வது இன்னும் சாலச் சிறந்தது.

உங்கள் விருப்பங்கள், தேவைகள் மற்றும் கனவுகளைப் பற்றி நேர்மையான முறையில் வெளிப்படுத்தத் தயங்க வேண்டாம். நேர்மையே நல்ல தோழமைக்கான திறவுகோல்.

அவர்கள் உங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். அவர்களின் நட்பு எவ்வளவு உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் உணரும் அதே பட்சத்தில், அவர்களும் அதை உணரும் நிலையை ஏற்படுத்துவது அவசியம். மேலும், நமது செயல்பாடுகள் அவர்கள் நம்மை முழுமையாக நம்பும் வகையில் இருக்க வேண்டும்.

சார்புநிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஒருவருக்குத் துணையாக இருப்பதற்கும், அவர்களைச் சார்ந்திருப்பதற்கும் இடையில் மிக முக்கியமான கோடு உள்ளது. சார்பு என்பது, நமக்குப் பிடித்தவர் என்ன செய்தாலும், அதை நியாயப்படுத்தும் வகையில் இருக்கும் நட்பு நீண்ட கால நட்பாக அமைய வாய்ப்பில்லை. முறையாக அவற்றைச் சரிசெய்யும் பொருட்டு பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதில்தான் முழுமையான புரிதல் இருக்கும்.

அவர்களின் எல்லை தெரிந்து நடப்பது, என்னதான் நீண்டகால நட்பாக இருந்தாலும், ஒவ்வொருவரின் எல்லையைத் தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம். அந்த எல்லையை இருவரில் எவர் கடந்தாலும், அங்கு விரிசல் கட்டாயம் விழும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட உலகம், தனிப்பட்ட சுதந்திரம் என்ற ஒன்று உண்டு. அதைத் தப்பித் தவறி எக்காரணம் கொண்டும் தொட்டுவிடக்கூடாது. ஒருசில செயல்பாடுகள் நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால், அதைச் சரியான முறையில்இதில் நான் உடன்படவில்லைஎன்பதைச் சொல்லிப் புரியவைத்தால், வாழ்நாளெல்லாம் நமக்கு வழித்துணையாக ஒருவர் இருந்துகொண்டே இருப்பார்

மகிழ்ச்சியின் முழு மதிப்பைப் பெற, அதை நீங்கள் இன்னொருவரோடு பகிர்வதன் மூலமே பெற முடியும்’ -  அன்னை தெரசா.

தொடர்ந்து பயணிப்போம்...