நான் நீண்ட நாள்களாக அவரைக் கவனித்து வருகிறேன். எங்கள் பங்கின் துணைப் பங்குத் தந்தை. சற்று வித்தியாசமான நபர்தான். வயது குறைவுதான். அதிகம் பேசுவதில்லை. அடிக்கடி தனியே கோவிலில் சென்று செபிக்கிறார். இளைஞர்களுடன் ஓரளவுக்குப் பழகக் கூடியவர், தேவைப்பட்டால் கண்டிக்கக் கூடியவர். சில இளைஞர்கள் அவரிடம் நன்றாக அடிவாங்கியிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். பலருக்கும் அவர் வழக்கமான சாமியார்போலத் தோன்றினாலும், எனக்கு அவர்மீது சற்றே உயர்ந்த எண்ணம் வரக் காரணம் என்னவென்றால், அவர் தினமும் ஒருமணி நேரம் ஒப்புரவு அருள்சாதனப் பெட்டியில் அமர்ந்திருப்பார். ஒருநாள் அவரிடமே கேட்டுவிட்டேன். “சாமி, எல்லா நாளும் பாவசங்கீர்த்தனத்துக்கு உக்கார்ந்திருக்கீங்களே... யாரும் வருகிறாப்ல தெரியலியே?” என்றேன்.
“இல்லையே, வருவாங்களே” என்று சமாளித்தார்.
“சாமி, நீங்க இங்க வந்து நாலு மாசம் ஆகுது, நான் பாத்துக்கிட்டே இருக்கேன், சனிக்கிழமை ஒண்ணு ரெண்டு பேர் வர்றாங்க, ஆனா தினமும் ஆள் வர்றதில்ல” என்றேன்.
அவர் என்னிடம் பேச யோசித்ததுபோல இருந்தது.
“இந்தக் காலத்துல பாவம்ணா என்னண்ணு கேக்கிறாங்க சாமி, இல்லியா?” “ம்ம்...” என்றார்.
“அப்புறம் யாருக்காக சாமி அதுல காத்திருக்கீங்க?” என்றேன்.
“ஓர் ஆட்டுக்காக” என்றார். “புரியல” என்றேன்.
“தாங்கள் பாவியே இல்லைண்ணு நம்பிகிட்டிருக்கிற 99 ஆடுகளைவிட, நான் பாவி என்ன மன்னியும்ணு கோவிலத் தேடி ஓடி வர்ற ஓர் ஆடு இருக்கும்ல? உலகம் முழுக்கப் பாத்தீங்கண்ணா தினமும் ஒருத்தராவது சர்ச்சுக்குப்போய் மன்னிப்புக் கேப்பாங்கல்ல?” என்றார்.
நான் அப்படி யோசித்ததில்லை. அது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது. உலகம் முழுவதும் எத்தனையோ கோடி கோவில்கள் இருக்கின்றன. 130 கோடி கத்தோலிக்கர்கள் இருக்கின்றார்கள். இதில் ஒரு நாளைக்கு ஒருவராவது அப்படிச் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இது ஒரு கணக்குதான் என்றும் தோன்றியது. பிரபஞ்சத்தில் இலட்சக்கணக்கான கோடிகளில் கோள்கள் உள்ளன; எனவே வேறு கோள்களில் உயிர்கள் இருக்கலாம் என்பது போன்ற கணக்கு. நான் மேலும் அவரிடம் கேட்டேன் “சாமி, அப்படி ஓர் ஆளையாவது, ஓர் ஆட்டையாவது உங்களுக்குத் தெரியுமா?”
அவர் என் கண்களைப் பார்த்து “தெரியும்” என்றார். அத்துடன், “உங்களுக்கும் தெரியும்” என்றார். ‘நம் பங்கில் உள்ளவரா!’ என்கிற ஆர்வத்தில் “யார் அது?” என்றேன். “புனித அகுஸ்தினார்” என்றார். சற்று ஏமாற்றத்துடன் “போங்க சாமி, இந்தக் காலத்துல யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்றேன். அவர் யோசித்துச் சொன்னார்.
“எனக்கு நல்லா தெரிஞ்ச ஒரு பையன். ஊர்ல சின்ன வயசிலயே படிப்பு ஏறாம சின்னச் சின்னதா பல பிரச்சினைகள் செஞ்சுகிட்டு அலைஞ்சான். அம்மா, அப்பா என்ன வெல்லாமோ முயற்சி செஞ்சு பாத்தாங்க. திருட்டு, கெட்ட பழக்கங்கள்! அவன்கூட சேர்ந்த பசங்க எல்லாரும் கெட்டுப் போனாங்க. பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஊர் குளத்துல குளிக்கும்போது ஒரு விபத்து. ஒரு பையனுக்குக் கால் போயிடுச்சு. இவனாலதாண்ணு பிரச்சினை போலிஸ் வரைக்கும் போயிடுச்சு. அவனைச் சென்னைக்குத் தூரத்துச் சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க. அங்கயும் அவன் திருந்தல. நேரடியா குற்றத் தொழில்களையே செய்ய ஆரம்பிச்சிட்டான். ரெண்டு வருடங்களுக்குள்ளாற பல ‘தொழில்கள்’. சென்னையில ஒரு பகுதியில இருந்த எல்லாப் போலிசுக்கும் அவன நல்லா தெரியும். சில ஸ்டேஷன்ல மரியாத குடுப்பாங்க, சில ஸ்டேஷன்ல அடிச்சுத் துவைப்பாங்க. அவன் ஒரு முழுநேரக் குற்றவாளியா இருந்தான்.
அப்ப ஒரு புது ஆட்சி வந்தப்ப போலிஸ் கடுமையா ரெய்டு நடத்தினாங்க. அவன் சொந்தக்காரங்க வீட்டில புகுந்து எல்லாரையும் அடிச்சுத் துவைச்சாங்க. அடி தாங்க முடியாம அவனோட சித்தப்பா படுத்த படுக்கை ஆயிட்டார். சென்னையில சாக்கடைல ஓடுற ஒரு பெருச்சாளி மாதிரி யார் கண்ணிலேயும் படாம அவன் சுத்திக்கிட்டிருந்தான்.
ஊர்ல அம்மா, அப்பா, தங்கச்சிண்ணு எல்லாருக்கும் போலிசால அவமானம். அவன வச்சி பிழச்சவங்க எல்லாரும் கைவிட்டுட்டாங்க, கூவத்து கரையில பண்ணிகளோட தூங்கினான். நாள்கணக்கா சாப்பாடில்லாம இருந்தான். இடையில அவன் சித்தப்பா இறந்துட்டார். அவர் வீடே நிலைகுலஞ்சு போயிடிச்சு.
ஒரு நாள் எங்கேயோ கோவில் மணி அடிச்சத கேட்டான். மணி உண்மையிலே அடிச்சதா? இல்லையாண்ணு அவனுக்குத் தெரியல. பசிமயக்கமாகூட இருந்திருக்கலாம். அந்தச் சத்தம் வந்த இடத்த நோக்கிப் போனான். அது கோவில்தான். தோட்டத்தில தண்ணி மொண்டு குளிச்சான். கெபிக்கு முன்னால மண்டிபோட்டு, கைய விரிச்சு அழுதான்.
அந்தக் கோவில் ஃபாதர் வந்தப்ப, வெளிய இருந்த வியாகுல மாதா சுரூபத்துக்கு முன்னால மயங்கிக் கிடந்தான். அங்கிருந்து அவன் போன பாதை ரொம்ப மலைப்பானது. இயேசு அவன தம் தோளில தூக்கிட்டு நடந்தாரு” என்று நிறுத்தினார். அவர் கண்களில் ஒளி பட்டு, எதிரொளித்தது.
“ஓ! சினிமா கதைபோல இருக்குது சாமி. நீங்க சொல்றது உண்மைதான். இப்படி ஒருவர் மனம் மாறி வருவார்ணா நான்கூட அடிக்கடி பாவசங்கீர்த்தனத்துக்கு வந்துருவேன்” என்றேன். அவர் சிரித்தார். நானும் சிரித்தேன்.
இறுதிவரை அந்த மனம் மாறிய ஆடு யார் என்று அவரும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை.
ஆனால், அவரை எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நன்றாகத் தெரியும், இல்லையா?