Namvazhvu
இறைவேண்டலின் பரிமாணங்கள் – 15 ஆன்மாவின் இறைவேண்டல்
Wednesday, 07 Aug 2024 09:09 am
Namvazhvu

Namvazhvu

இறைவனோடு உரையாடுவது, உறவாடுவதே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். மனித ஆளுமையின் தளங்களான உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மனவலிமை ஆகிய அனைத்துத் தளங்களும் இறைவேண்டலில் இணையும்போதுதான், அது முழுமையானதாக மாறுகிறது. காரணம், இத்தளங்கள் அனைத்துமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன. ஒன்று மற்றொன்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

உடலாலும் உள்ளத்தாலும் இறைவனோடு உறவாட வேண்டும் என்பதை எளிதில் புரிந்துகொள்கிற நாம், ஆன்மாவாலும் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதையும் உள்வாங்கி, அதைச் செயல்படுத்த வேண்டும். உண்மையில், மானிடர் உடல், உள்ளம், ஆன்மா என்னும் முத்தளங்களில் இயங்குகின்றனர் என்பதையே சிலர் அறிவதில்லை அல்லது ஏற்பதில்லை. ஒருசிலர்ஆன்மாவா அது என்ன?’ என்று பிலாத்துவைப் போல கேள்வி எழுப்புகின்றனர்.

 ‘ஆன்மா என்றால் என்ன?’ என்னும் கேள்விக்கு நம் கத்தோலிக்கத் திரு அவை விடை தருகிறது. “உடலையும், ஆன்மாவையும் ஒருங்கே கொண்டவரே மனிதர்கள். அவர்களுக்குள் பருப்பொருள் சார்பற்ற, அழிவுறா ஓர் ஆன்மா இருக்கிறதுஎன்கிறது வத்திக்கான் திரு அவையின்இன்றைய உலகில் திருச்சபை’ (எண்: 14). உடல், ஆன்மா என இருவேறு கூறுகள் இருந்தாலும், இரண்டும் ஒருங்கிணைந்தவரே மானிடர். ஆன்மாவே இவ்வுலகின் பருப்பொருள் தளத்திலிருந்து மனிதரை இறைநிலைக்கு உயர்த்துகிறது என்றும் விளக்குகிறது அவ்வேடு.

ஆன்மாவைப் புரிந்துகொள்வதைவிட, அதை உய்த்துணர்வது சற்று எளிதாக இருக்கலாம். எப்போதெல்லாம் நமக்குள் இறைவன் பற்றிய தேடல் ஆழப்படுகிறதோ, அப்போதெல்லாம் நம் ஆன்மாவின் சலனத்தை நாம் உணரலாம். எப்போதெல்லாம் ஆண்டவரின் சன்னிதியில் இனம் புரியாத அமைதியும் மகிழ்வும் நம்மை ஆட்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கடவுள் நம் ஆன்மாவைத் தொடுவதை நாம் அனுபவிக்கலாம்.

கடவுளே நம் ஆன்மாக்களின் ஆயர்; அவரே நம் தொடக்கமும், பயணத்தின் நிறைவுமாய் இருக்கிறார் என்பதைநீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப் போல இருந்தீர்கள். ஆனால், இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும், கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்” (1பேது 2:25) என்னும் பேதுருவின் சொற்கள் அழகுற இயம்புகின்றன.

நமது ஆளுமையின் உடல், உள்ளம், ஆன்மா என்னும் மூன்று பரிமாணங்களையும் இறைவனின் பராமரிப்பில் வைக்க திருவிவிலியம் நம்மை அழைக்கிறது. “அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக! அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக!” (1தெச 5:23) என்னும் பவுலடியாரின் வாழ்த்து மன்றாட்டு  நம் மானிடரின் இம்மூன்று தளங்களையும் சுட்டிக்காட்டுகிறது.

ஆன்மாவும் உடலும் வெவ்வேறல்ல; ஒன்றோடொன்று இணைந்தவையே என்பதையும் திருவிவிலியம் நமக்கு விளக்கிச் சொல்கிறது. “வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை; பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை” (சாஞா 1:4) என்னும் சாலமோனின் ஞானநூல் கூற்று இதற்கொரு சான்று.

பாவம் நம் ஆன்மாவுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதைபொய் சொல்லும் வாய் ஆன்மாவைக் கொல்லும்” (சாஞா 1:11) என்னும் இறைமொழி எடுத்துரைக்கிறது. நற்செயல் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துகிறது என்பதைஉண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால், நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும்” (1பேது 1:22) என்னும் பேதுருவின் சொற்கள் இயம்புகின்றன.

இப்போது நாம் இறைவேண்டலுக்கு வருவோம். நாம் இறைவேண்டலில் இறைவனோடு உறவாடும்போது உடல், மனம், ஆன்மா மூன்றும் இணைவதே சிறப்பாகும். “என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது” (திபா 84:2) என்னும் திருப்பாடல் வரிகள் நமது இறைவேண்டலில் இவை மூன்றுமே இணைய வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.

இறைவேண்டலின்போது நம் ஆன்மா அக மகிழும் என்பதைநான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்” (திபா 71:23) என்னும் வரிகள் பறைசாற்றுகின்றன.

மகிழ்ச்சியின்போது மட்டுமல்ல, துயர வேளைகளிலும் நம் உள்ளத்தோடு, நம் ஆன்மாவும் இறைவனை நோக்கி உயர வேண்டும். எனவேதான், “இஸ்ரயேலின் கடவுளே, கடுந்துயரில் உழலும் ஆன்மாவும், கலக்கமுறும் உள்ளமும் உம்மை நோக்கிக் கூக்குரலிடுகின்றன” (பாரூக் 3:1) என்கிறார் இறையடியார் பாரூக்கு.

இறைவனை அன்பு செய்யும்போது உடல், உள்ளம், ஆன்மா மூன்றும் இணைய வேண்டும் என்னும் கருத்தைத் தோபித்து நூலிலும் வாசிக்கிறோம். “நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி, அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார்” (தோபி 13:6) என்பது அந்நூலின் அறிவுரை.

நம் பாவங்களுக்காக நாம் மனத்துயர் கொள்ளும்போதும், ஒப்புரவு அருள்சாதனத்தில் நம் பாவங்கள் மன்னிக்கப்படும்போதும், நம் ஆன்மா தூய்மையடைந்து இறைவனிடம் நெருங்கி வருகிறது. அவ்வேளையில்தான், நமது இறைவேண்டலில் நம் சொற்களோடும், சிந்தனைகளோடும் நம் ஆன்மாவும் மகிழ்ச்சியுடன் இணைய முடியும்.     

(தொடரும்)