Namvazhvu
திருமறை தீபத்திற்கு நெய்வார்க்க வந்த தேவதூதன்!
Wednesday, 14 Aug 2024 10:06 am
Namvazhvu

Namvazhvu

வத்திக்கானின் திருத்தூதரக அரண்மனையின் சாளரத்திலிருந்து தஞ்சைத் தலத்திரு அவையின் தலைமை ஆயனாக அருள்தந்தை சகாயராஜ் அவர்களின் பெயர், திருத்தந்தையின் திரு நாவிலிருந்து உச்சரிக்கப்பட்டபோது, ஒட்டுமொத்தத் தமிழ் மண்ணின் இறைச்சமூகமே கொண்டாடி மகிழ்ந்தது. அகிலப் பரப்பில் திரு அவையின் தலைவர்களாக ஆயர்கள் நியமனம் பெறுவது திரு அவையின் பயணத்தில் தினந்தோறும் நிகழும் திருச்செயல்கள் என்றாலும், சோழர் திருநாட்டின் தஞ்சைத் தலத்திரு அவையின் தலைமகனாக சகாயராஜ் உயர்த்தப்பட்டது உள்ளபடியே தமிழர் தம் நெஞ்சில் மழைத்துளி விழுகிற மகிழ்ச்சியைத் தந்தது.

1987-ஆம் ஆண்டு சூன் திங்கள் முதல் வாரத்தில் சென்னைக்குச் சிறப்பு சேர்க்கின்ற பூவிருந்தவல்லி இயேசுவின் திரு இருதயக் குருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு குருத்துவப் பயிற்சி மாணவர்களாய் சந்தித்து, வகுப்பறையிலும், பயிற்சிக் களங்களிலும், உணவரங்கி லும், ஆடுகளத்திலும், ஆலய வழிபாடுகளிலும், அன்றாட வாழ்வு நிலைகளிலும் நட்போடு உறவாடி, வகுப்புத் தோழனாய் வலம் வந்த நண்பர் சகாயராஜ் இன்று திரு அவையின் தலைமைப் பொறுப்பேற்று, இறைச் சமூகத்தை வழிநடத்தப் போகிறார் என்கிறபோது, உள்ளபடியே உள்ளத்திற்குள் ஆனந்தம் ஆடை கட்டி நடனமாடுகிறது. வகுப்புத் தோழர் தலைமை நாற்காலியில் அமரப் போகிறார் என்பதைவிட, ஒரு நல்ல மனிதர் நல்ல ஆயராய் மக்களை நேர்வழியில் நடத்திட வாய்ப்புப் பெற்றிருக்கிறார் என எண்ணுகிறபோது, குருத்துவ வாழ்வின் மீது குன்றுயர மதிப்பும், பாறையெனப் பற்றும் ஏற்படுகிறது.

சகாயராஜ் எனும் இம்மனிதன், ‘மனிதநேயத்தின் வரைவிலக்கணம்என்பதை உப்பரிகை மீது ஏறி, ஊருக்கெல்லாம் உரக்க உரைப்பேன். ஊர்ந்து போகிற எறும்புக்குக்கூட ஊறு நினையாத இயல்பினன். இளகிய உள்ளத்தை இறைவன் இவருக்கு ஏனோ அளவின்றி அள்ளித் தந்திருக்கிறார். இறைவன் எழுதிய இரக்கத்தின் கவிதை இவர் என்றால் அது மிகையில்லை.

குருத்துவக் கல்லூரியில் பயிலும் காலத்திலே வகுப்புத் தலைவர், இளைஞர் பணிப் பொறுப்பாளர், இலக்கிய அவைக்குச் செயலர், மாணவர் பிரதிநிதித் தலைவர் என்கிற தலைமைப் பொறுப்புகள் இவருக்குத் தலைப்பாகையாக அமர்ந்தபோதும், தலைக்கனம் இவரிடம் தலைகாட்டியதேயில்லை. பதவிகளில் கூட பணிவையும் பாசத்தையும் காட்டிய பண்பாளன் என்பதைப் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். புன்னகையை எப்போதும் பற்றிக் கொண்டு, எல்லாரையும் எப்போதும் நேசிக்கும் இனிய கலையை இவர் இயல்பிலே கொண்டவர்.

தேனீயைப் போன்ற சுறுசுறுப்புடன் ஓயாது உழைக்கும் பண்பு இவரிடம் இளமை தொட்டே இருந்து வருகிறது. குருத்துவக் கல்லூரியில் பயின்ற காலம் முதல் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராய் பணி செய்த காலம் வரை இவர் தன் அடையாளத்தைத் தொலைத்து விடாமல் மனிதநேய விலாசமாக விளங்கி வருவதைக் கண்டு வியந்திருக்கிறேன்.

துறவு நிலை ஏற்றவர்கள் தங்களின் பதவி ஆசைகளைத் துறப்பதில்லைஎன்கிற விமர்சனக் குரல்கள் ஆங்காங்கே ஒலிப்பதுண்டு. ஆனால், தன் வாழ்வில் சவாலான பணிகளையும் சமரசமின்றி ஆற்ற வேண்டும் என்ற ஆதங்கம் கொண்ட இவர், பதவி நாற்காலிமீது நாட்டம் கொண்டதில்லை என்பதை நானறிவேன். சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் இவரைச் சந்தித்தபோது நிறுவனத் திரு அவை இவரைத் தன் மணிக்கழுத்தில் சூடிக்கொள்ளவில்லையே என நான் ஆதங்கப்பட்டதுண்டு. ஆனால், இவரோஇறையாட்சிப் பணியில் ஈடுபட்டு உழைத்திட உயர் பதவிகள் ஒன்றும் அவசியமில்லைஎன்று தனக்கே உரிய புன்னகையோடு பதிலளித்தார். மக்கள் பணியாற்ற மகுடம் தரித்திட வேண்டியதில்லை என்று இவர் இயல்பாகக் கூறியது என் இதயத்தில் இன்றைக்கும் இனிக்கிறது. இவரது உயர்ந்த உள்ளத்திற்கு உன்னத இறைவன் தம் மந்தையை வழிநடத்துகிற மாபெரும் பொறுப்பைத் தந்து மகுடம் சூட்டியிருக்கிறார்.

இந்தப் பொறுப்பு சிறப்பு வாய்ந்தது என்றாலும், சிலுவை போன்ற சிரமம் உண்டு என்பதை மறுக்க இயலாது. பெரிய வியாழனுக்குப் பின்னால் பெரிய வெள்ளி வருவது தவிர்க்க முடியாத நிதர்சன உண்மை. இவர் கொள்கைகளோடும், மானிட மதிப்பீடுகளோடும் கூட்டணி அமைத்து, இலட்சியப் பயணம் நடத்துவதால் நடக்கிற பாதையெங்கும் இடைஞ்சல்கள் இலைபோட்டு அமர்ந்திருக்கும் என்பது உறுதி. ‘இறைவனின் இரக்கமிகு பேரன்புக்குச் சான்று பகரஇவர் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளைப் பின்னடைவு கொள்ளச் செய்ய பல சக்திகள் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும். காரணம், இவர் சமரசம் செய்வதையோ, சாதியக் கூடாரங்களுக்குச் சாமரம் வீசுவதையோ அணுப் பொழுதும் அனுமதிக்காதவர். ஏகாதிபத்தியங்களை எந்நாளும் ஏற்காதவர். நிறுவன நிழலில் இளைப்பாறும் சில பேருக்குச் சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பதே இவரது கடந்த கால கறைபடியாத வரலாறு.

மானுடப் பிறப்பின் காரணமாய் சிலபேர் தங்களின் சமூகக் குறியீடாக இவரைக் கருதி மகிழலாம். ஆனால், எல்லாருக்கும் சகாயம் செய்யும் இந்த சகாயராஜ், ஒருபோதும் தன்னைக் குறிப்பிட்ட சமூக அடையாளத்துக்குள் அடைத்துக் கொண்டதில்லை. இவர் எல்லாருக்கும் எல்லாமுமான திருத்தூதர் பவுலைப் போல! மட்டில்லாத மனிதநேயமும் ஏழைகள்மீது எல்லையில்லா இரக்கமும், உயர் ஒழுக்கமும், பல்வகை நற்பண்புகளும், தேர்ந்த அறிவும் தெளிந்த இலட்சிய சிந்தனையும், அளப்பரிய ஆற்றலும், அளவற்ற அனுபவமும் ஒருங்கே அமையப் பெற்ற பேராளுமையின் மொத்த வடிவம் இந்தப் புதிய ஆயர் சகாயராஜ் என்பதைத் தமிழ்ச் சமூகம் நன்றாக அறியும்.

பலநூறு பிரச்சினைகளாலும், சவால்களாலும் தளர்ந்துபோய் இறைமக்களின் நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்துவரும் திரு அவை தீபத்திற்கு நம்பிக்கை நெய்வார்க்க வந்த தேவதூதனே ஆயர் சகாயராஜ். உலகத் திரு அவையின் முகத்தை மாற்றிக் காட்டிய வத்திக்கானின் வசந்தம் பிரான்சிசைப் போலவே தஞ்சைத் தலத்திரு அவைக்கு இறைவன் தந்த இனிய கொடை நல்லாயன் சகாயராஜ்.

நல்லவர்கள் வல்லவர்களாய் இருப்பதில்லை; வல்லவர்கள் நல்லவர்களாயும் இருப்பதில்லைஎன்கிற நடைமுறையை உடைத்து, நல்லதும் வல்லதுமான கலவையாக இருக்கிறார் இவர். மனிதநேயம் கொண்டவர் என்ற நாடறிந்த பண்பு போலவே ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கெல்லாம் ஏற்றம் தந்திருக்கிறார்.

பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவும் ஒன்றுஎன்றில்லாமல், தன் அடையாளத்துடன் குன்றின்மீது ஒளிரும் தீபமாய் திரு அவையில் தனித்தன்மையோடு ஆயர் சகாயராஜ் திகழ்வார் என்பது என் போன்றோரின் திடமான நம்பிக்கை.