பாரிசில் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக் போட்டி ‘பாலின சமத்துவ ஒலிம்பிக்’ என்ற பெருமையுடன் கொண்டாடப்பட்டது. 128 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக ஆண்-பெண் விளையாட்டு வீரர்கள் 50:50 என்ற சரிசமமான எண்ணிக்கையில் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியின் வரலாறு
பண்டைய கிரேக்கத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை நவீனப்படுத்தி அதனை உலகளாவிய விளையாட்டுப் போட்டியாக உருவாக்கிய பெருமை பிரெஞ்சு கல்வியாளரான பியர் தெ கூபெர்டினையே சாரும். இவரது முயற்சியால் 1894 -ஆம் ஆண்டு ஜூன் 24- ஆம் நாள் சர்வதேச ஒலிம் பிக் சங்கம் பாரிசில் உருவாக்கப்பட்டது. இதன் அன்றைய நோக்கம் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தல் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டைப் பிரபலப்படுத்துதல். இன்று அதன் நோக்கம் ‘விளையாட் டின் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குவது.’ முதல் ஒலிம்பிக் போட்டி 1896- ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களின் பங்கேற்பு
1896-ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்கூட பெண்ணில்லை. விளையாட்டு என்பது பெண்களுக்கான துறையில்லையென்று கூபெர்டின் உறுதியாக நம்பியதால், பெண்களுக்கென்று விளையாட்டுகள் ஒதுக்கப்படவில்லை. 1900-ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் முதல் முறையாகப் பெண்மைத்தன்மைக்கே உரித்தான விளையாட்டுகள் என ஐந்து விளையாட்டுகள் ஒதுக்கப்பட்டு பெண்கள் பங்கேற்றனர். இது மொத்த பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் 2.2% மட்டுமே. ‘பெண்கள் பலவீனமானவர்கள்; ஆதலால் தடகளப் போட்டிகள் அவர்களுக்கு ஏற்றதல்ல’ என அவற்றில் பெண்கள் பங்கேற்பது 1928-ஆம் ஆண்டு வரை தடை செய்யப்பட்டிருந்தது.
1952 ஒலிம்பிக் போட்டியில்தான் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 10.5% எட்டியது. 1976-இல் அது 20.7% ஆனது. 2004-இல் 40.7%. 2020-இல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண் போட்டியாளர்களின் பங்கேற்பு 47.8% ஆக உயர்ந்தது. முதல் முறையாக ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி என 2024- ஒலிம்பிக் போட்டியைச் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் முயற்சிகள்
சர்வதேச ஒலிம்பிக் சங்கம் பாலின சமத்துவப் பங்கேற்பிற்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. இதுவரை ஒலிம்பிக் பட்டியலில் பெண்களுக்கென இல்லாத விளையாட்டுகளை அது புதிதாகச் சேர்த்தது. பல்வேறு விளையாட்டுகளை ஆண்களும் பெண்களும் இணைந்து விளையாடும் கலப்பு விளையாட்டுகளாக மாற்றியது.
ஆண்கள் விளையாடும் விளையாட்டுகள் நேரடியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்படுவதற்குக் காரணம், அவை முக்கியமான நேரங்களில் நடத்தப்படுவதால்தான் என்பதைக் கண்டறிந்து, பெண்களுக்கான போட்டிகளை அந்த நேரங்களுக்கு மாற்றியமைத்தது. ஒரே நேரத்தில் ஆண்-பெண் வெற்றியாளர்கள் பதக்கங்களைப் பெறும்படி நிகழ்வுகளை மாற்றியமைத்தது. இதன் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்க வகை செய்தது.
போட்டியிடும் தாய்மார்களுக்கெனச் சிறப்பு ஏற்பாடுகள்
பல்வேறு துறைகளில் பெண்கள் பங்கேற்பதற்கும், மேலே முன்னேறிச் செல்வதற்கும் தடையாக இருப்பது அவர்களின் தாய்மைசார் பொறுப்புகள். குழந்தையா? இலட்சியமா? என்ற கேள்வி வரும் பொழுது, குழந்தையே முன்னுரிமை பெறுகிறது. விளையாட்டுத்துறை சார்ந்த பெண்களுக்குக் குழந்தைப்பேறு என்பதே பெரும் சவால். அவர்கள் கருவுற்றாலே அவர்களுக்காக நிதி ஆதரவு தரும் நிறுவனங்கள் நிதியை நிறுத்திக்கொள்ளும். குழந்தை பெற்ற விளையாட்டு வீரர்களுக்குப் பல மணிநேரப் பயிற்சியின் போதும், விளையாட்டுப் போட்டியின் போதும் பாலூட்டுவதற்கான வசதிகளும், குழந்தைகளைப் பராமரிக்க ஏதுவான சூழலும் பொறுப்பாளர்களும் தேவை. இந்தச் சமரசம் செய்துகொள்ள இயலாத அத்தியாவசியத் தேவைகள் குறித்து இதுநாள் வரை பல்வேறு நாடுகளின் விளையாட்டு அமைப்புகள் கவலைப்பட்டதே இல்லை. சர்வதேச ஒலிம்பிக் சங்கமும் 2020 -டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரை இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை. முதல் முறையாகப் போட்டியிடும் தாய்மார்களுக்கெனப் பாலூட்டுவதற்கான வசதிகளும், குழந்தைகளைப் பராமரிக்க நர்சரியையும் சிறப்பான வசதிகளுடன் செய்யப்பட்டிருக்கிறது.
பெண்களின் சமப் பங்கேற்பிற்கான இந்த முயற்சிகள் பாராட்டினையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. இருப்பினும், இந்த மாற்றங்கள் எல்லாம் பல நாடுகளைச் சேர்ந்த பல போட்டியாளர்களால் பலமுறை வலியுறுத்தப்பட்ட வேண்டுகோள்களின் காரணமாகவே நிகழ்ந்துள்ளன.
பெண்களின் தேவைகள் என்பன அவர்களின் தனிப்பட்ட தேவைகள் அல்ல; மாறாக, சமமான வாய்ப்பிற்கான பங்கேற்பிற்கான உரிமை. சமமான வாய்ப்புகள், சமமான பங்கேற்பு என்பன பெண்களுக்கான சலுகைகள் அன்று; மாறாக, புறக்கணிக்க இயலா மனித உரிமை. சமூக நீதியின் அடித்தளம். தாய்மார்கள் அடுத்தத் தலைமுறையை உருவாக்குபவர்கள் என்ற முறையில் தனிப்பட்ட உரிமைகளைக் கோருகிறார்கள். அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டாலன்றிச் சமமான பங்கேற்பு சாத்தியமில்லை.
பாலின சமத்துவத்திற்கான இந்த முயற்சிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளுக்கும் பரவ வேண்டும்.
“ஆணும்-பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்!”