UISG (International Union of Superior General) அமைப்பு, உரோம் நகரில் நடத்திய பொது அமர்வில் கலந்துகொண்ட, எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த, ஏறத்தாழ 850 பெண் துறவு சபைகளின் தலைவர்களை, மே 10, வெள்ளி முற்பகலில், வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கென தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்நேரத்தில் தன்னில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்திய மரபு ஆடை
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், இத்தகைய ஒரு பொது அமர்வில் கலந்துகொண்டபோது, அனைத்து அருள்சகோதரிகளையும், துறவு சீருடைகளில் காண முடிந்தது, ஆனால் இப்போது, இந்திய மரபு ஆடை உட்பட, பலர் அவரவர் மரபு ஆடைகளில் இருப்பதைக் காண முடிகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இச்சந்திப்பில் சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொன்னார்.
திருஅவையில் இடம்பெறும் சிறார்க்கெதிரான பாலியல் கொடுமைகள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இப்பிரச்சனைக்கு, ஒரு நாளில் அல்லது சில நாள்களில் திருஅவையால் தீர்வு காண இயலாது, இது குறித்து, திருத்தூது அறிக்கை ஒன்றை மே 8 ஆம்தேதியன்று தான் வெளியிட்டுள்ளது பற்றித் தெரிவித்தார். அருள்சகோதரிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் கொடுமைகள் பற்றி அறிந்தே இருக்கிறேன், இவை தவிர, அதிகாரத்தையும், மனச்சான்றையும் தவறாகப் பயன்படுத்தும் செயல்களும் இடம்பெறுகின்றன, இவற்றுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
பெண் திருத்தொண்டர்கள், திருஅவையில் அருள்சகோதரிகளின் பங்கு, பல்சமய உரையாடல், அமேசான் பகுதியில் பெண் துறவியர் உட்பட சில கேள்விகள் திருத்தந்தையிடம் கேட்கப்பட்டன.