வங்காள தேசத்தில் எழுந்த அரசியல் யுத்தத்தில் வீழ்ந்த ஹசீனா, வழக்கம் போலவே இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்துள்ளார். இஸ்லாமியரைத் தவிர்த்து பாதிக்கப்பெறும் இந்துகள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்குக் குடியுரிமை அளிக்க ஒப்புக் கொண்டிருக்கும் இந்துத்துவ அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலம் தன் பாசிச அடையாளத்தை உரத்துக் காட்டிய இந்துத்துவ அரசு, இஸ்லாமிய தேசத்தின் 15 ஆண்டுகால ஓர் இஸ்லாமியப் பெண் பிரதமருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. ஷேக் ஹசீனா இஸ்லாமியப் பெண்ணல்லவா? இஸ்லாமியர் மீதான வெறுப்பின்மீது, பகையுணர்வின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவ அரசியல் ஹசீனா குறித்து இனி என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது?
இந்தியா எப்போதுமே சந்தித்திராத வகையில் ‘ஹிஜாப்’ அணிந்த பெண்கள் நாடெங்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இரவு பகலென்று பாராது போராடியபோது கேலி பேசிய வகுப்புவாதிகள், அவர்களைச் சிறைப்பிடித்த மத அடிப்படைவாதிகள், இன்றுவரை தேசவிரோதச் சட்டத்தால் சிறையில் வாடிவரும் இஸ்லாமிய இளைஞர்களை முடக்கும் இந்துத்துவக் கொடுங்கோலர்கள், ஹிஜாப் மூலம் தன் தலையை மறைத்து, இரவோடு இரவாக புதுதில்லியின் ஏதோ ஒரு விமானத்தளத்தில் வந்திறங்கியுள்ள ஹசீனா எனும் வங்கதேசத்து இஸ்லாமியப் பெண்ணைப் பத்திரமாகப் பாதுகாத்து வரும் மோடி அரசுக்கு இந்தக் கட்டளையைப் பிறப்பித்தது யார்?
உயிர்தப்பி இந்தியாவுக்கு வந்த ஹசீனாவுக்கு இந்தியா அளித்த பாதுகாப்பு எனும் உத்தரவாதத்தை மனிதநேயம் கொண்ட எவரும் எதிர்க்க முடியாது; நாடும் எதிர்க்கவில்லை. அன்று பாகிஸ்தானின் இஸ்லாமியக் குடியரசின் புறக்கணிப்புக்கும் பாகுபடுத்தலுக்கும் உள்ளான வங்காள தேசத்தினர் தமது விடுதலைக்காய் வெகுண்டெழுந்த நிலையில், உயிருக்கும், உடைமை இழப்புக்கும் அஞ்சி இந்தியா நோக்கி தஞ்சம் தேடிவந்த அகதிகளுக்கு அடைக்கலம் தந்தார் அன்றைய ஒன்றிய அரசுக்குத் தலைமை தாங்கிய இந்திரா காந்தி அம்மையார். புகலிடம் கேட்டோரிடம் அவர் மத அடையாளத்தைக் கேட்கவில்லை; வாழ்வாதாரத்தை இழந்தோர்க்கு ‘தஞ்சம்’ எனும் ஒரே கோட்டில் அடைக்கலம் கொடுத்த இந்திய அரசு, வங்காள தேசத்தின் விடுதலைக்கும் வழிகோலியது!
1972-இல் விடுதலை அடைந்த வங்காள தேசத்தின் இறையாண்மையை இந்தியா என்றும் கேள்விக்குள்ளாக்கியதில்லை. வங்காள தேசம் ஓர் இஸ்லாமிய நாடு என்ற அடையாளத்தை வைத்து இந்திய உறவு அமையவில்லை.
இந்தியாவின் அண்டை நாடுகளில் எழும் சிக்கல்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு எதுவுமில்லை என்று எவரும் மறுக்க இயலாது. புவிசார்ந்த அரசியல் பிரச்சினைகள் (Geo Political) எத்தனையோ இருக்கும்; இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், எழுகின்ற பிரச்சினை எல்லாவற்றையும் மத அடிப்படையில் சுருக்கிப் பார்க்கும் மதவாத அரசியலார் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வங்காளதேசம், மத அடிப்படையில் உருவான ஒரு தேசமல்ல; வங்காள தேசத்தவர் பெரும்பான்மையோர் இஸ்லாமியராயினும், அவர்கள் பேசும் மொழி வங்காளியே. செறிவான இலக்கிய வளம் நிறைந்த மொழியைப் பேசுகிறோம் என்பதில் எப்போதுமே இம்மக்களுக்கு ஒரு பெருமிதம் உண்டு. உருது பேசும் பாகிஸ்தான் அரசு, மொழி ரீதியாக, அதுவும் கலாச்சார ரீதியாக வங்காளத்தைப் பாகுபடுத்த நினைக்கிறது என்ற எண்ணமும் இம்மக்களிடம் பாகிஸ்தான் பற்றிய ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியது, பிரிவினைக்கு வழிவகுத்தது.
வங்காள தேசம் உருவான விதம், இந்துத்துவர்களுக்குக் கற்றுத்தந்த பாடம் மிகச்சுவையானது. எதார்த்தத்தை ஏற்க மறுக்கும் இந்துத்துவர்கள், பொய்மையைத் திட்டமிட்டுக் கட்டமைத்து மக்களைப் பொய்யான திசைவழி மடைமாற்றம் செய்யும் இந்துத்துவர்களுக்கு வங்காள தேசம் என்ன உண்மையைக் கூறியது?
இந்தியாவை இந்து நாடாகப் பிரகடனப்படுத்த இந்துத்துவர்கள் குறிப்பாக, சங்கப் பரிவாரங்கள் முன்வைக்கும் காரணங்கள் எவையெவை? இந்தியா பழமையான நாடு; இந்து தர்மத்தில் வழுவாது நிற்கும் நாடு; பன்மைக் குணமிக்க இந்தியப் பண்பை மறுத்து, ‘இந்து’ என்ற பெயரில் ஒற்றைப் பண்பை வலியுறுத்துவது.
இந்நாட்டின் பன்மைத்தன்மைகள் அனைத்திற்கும் ‘இந்து’ என்ற சாயல் உண்டு. வேற்றுமை (Diversity) என்பது இவர்களுக்குத் தீய சொல். ஒற்றை அல்லது ஓர்மை (Homogenity) என்று இவர்கள் வணங்கும் சொல். இந்த ஓர்மைக்கு அடித்தளமாகத் திகழ்வது இந்து மதம். இந்து மதம் மட்டுமே இந்நாட்டின் ஒருமையைக் காக்க முடியும். வேதங்களாலும், வேதத்தின் முனிவர்களாலும் காலங்காலமாய் காப்பாற்றப்பட்டு வரும் இந்து கலாச்சாரமே இந்தியாவின் ஆன்மா. திராவிடச் சிந்தனைகளாலும், ஆங்கிலேய ஆதிக்கத்தாலும், நவீன அரசியல் சித்தாந்தங்களாலும் வலுவான இந்து தேசத்தை, அதன் உள்ளடக்கமான இந்து தேசியத்தை (Nationalism) எவராலும் அழித்துவிட முடியாது என்பதே இந்து தேசியர்களின் நிலைப்பாடு.
வங்காள தேசம் தந்த பதில்
இந்து அல்லாத மக்களை இந்துவாகக் கட்டமைத்து, சனநாயகம் தரும் தேர்தல் வழி பெரும்பான்மை மூலம் பெரும்பான்மைவாத அரசியலை அமைத்து ஆட்சி அதிகாரத்தின் மூலம் செய்யப் பெறும் எதேச்சதிகாரம் சனநாயகம் அல்ல; வங்காள தேசம் மதவழி உருவான ஒரு தேசமல்ல; பாகிஸ்தான் தான் ஓர் இஸ்லாமியக் குடியரசாக அறிவிக்கப்பட்ட நாடு. வங்காள மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர் என்பதாலேயே அப்பகுதி பாகிஸ்தானோடு இணைந்தது, மதவழி தேசம் கண்டது என்பது உண்மை. ஆனால், ஒற்றைப் பண்புடைய ‘செமிட்டிக்’ (Semitic) இனத்தவரான இஸ்லாமியர் ஒரு நாட்டை உருவாக்கிய பின்பும் அந்த ஒற்றை மதம் வங்காளத்தையும் பாகிஸ்தானையும் இணைக்கவில்லையே... ஏன்?
ஒற்றை அல்லாத இந்தியாவின் இந்து மதத்தை ஒற்றையாக்கி, அதற்கு ‘இந்து இராஷ்டிரம்’ என்று பெயரிட்டு, மதமே நாட்டின் ஒருமைக்கு அடித்தளம் என்ற சங்கப் பரிவாரங்களின் கருத்தமைவு, வங்காள தேச நாட்டின் உருவாக்கத்தால் அன்றே தகர்க்கப்பட்டது.
மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு உருவாகலாம்; ஆனால், உருவான அந்நாட்டின் ஒருமையைக் காக்கும் கருவியாக மதம் இருக்க முடியாது. ஏனெனில், மதத்தின் அடிப்படையில் உருவாகும் தேசம் பன்மையைச் சிதைக்கும்; பன்மைச் சமூகத்தின் சமப்பங்கேற்பை மறுக்கும்; ஏற்கெனவே, பெரும்பான்மை மதரீதியான ஒருங்கிணைப்பால் ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட சமூகத்தினர் மேலும் அச்சுறுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சனநாயக ரீதியாகப் பங்கேற்பு மறுக்கப்படுகின்றமையால் தம் இருப்பையே இழந்துவிடுவர். இதனால் சனநாயகம் முழுமையாகக் கொச்சைப் படுத்தலுக்கான அனைத்து நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.
மற்றொரு கருத்தையும் இங்குப் பதிவு செய்வது பொருத்தமாகலாம். நேபாள நாடு உலகின் ஒரே இந்து நாடென்று இந்துத்துவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இன்று அந்த நாட்டின் அரசியல் முழுமையும் இடதுசாரி வடிவில் நிகழ்வதோடு, ‘இந்து நாடு’ என்று பெருமைப்பட்டுக் கிடந்த இந்துத்துவவாதிகள் சிறுமை அடையும் வண்ணம், நேபாளத்தில் தொடர்ந்து வரும் அரசுகள் சீனா பக்கம் சாய்ந்து வருகின்றன. மிகவும் தொன்மை வாய்ந்த நேபாளத்தின் பண்பை இந்துப் பண்பாகக் கட்டமைக்க முனைந்த இந்திய ஆட்சியாளர்கள் கேவலமாகத் தோற்றுப்போயினர்.
இலங்கையில் மதமும் இனமும் இணைத்துக் கட்டப்பட்ட பெரும்பான்மைவாதம் (Majoritarion) வென்றது என்று எந்த மக்களை நம்பவைத்தனரோ, அந்த மக்களே பெரும்பான்மைவாத எதேச்சதிகார அரசைத் தூக்கி எறிந்த வரலாற்றை அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளில் உலகுக்குக் கூறியது.
மொழி, இன, மதரீதியான வேறுபாடுகளை மதித்தல், சரியான அரசியல் மற்றும் பண்பாட்டு நிலைப்பாடு போன்றவை இயல்பானவை. இவ்வேறுபாடுகளை அரசியல் ஆதிக்கம் பெற பாகுபடுத்துதல் அல்லது இவ்வடையாள வழி மக்களை ஓர்மைப்படுத்துதல் (Polarise) என்பது உண்மையில் சனநாயகம் அல்ல. இவ்வாறு ஓர்மைப்படுத்தித் திரட்டப்படுவது பெரும்பான்மையல்ல; பெரும்பான்மை என்பதன் பெயரில் கட்டமைக்கப்படும் பெரும்பான்மைவாதம்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் இஸ்லாமியப் பெரும்பான்மைவாத அரசு, சிறுபான்மை மக்களின் மதச்சுதந்திரத்தை, கருத்துரிமைகளை எவ்வாறு முடக்கி வருகிறது என்பதை உலகறியும். பாகிஸ்தானில் நிலவும் சமய நிந்தனைச் சட்டம், இந்திய இந்துத்துவர்களால் கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை; இவர்கள் விமர்சிப்பதும் இல்லை. ஆனால், அவற்றை இவர்கள் முன்னுதாரணமாகக் கொள்கிறார்கள். மத அடிப்படைவாதம்தான் பாகிஸ்தானில் நடைமுறைச் சட்டமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதை அடியொற்றிதான் இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், பொதுசிவில் சட்டம், பசு பாதுகாப்பு, வக்பு வாரியத்தின்மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பனவெல்லாம் ஒவ்வொன்றாக வருகின்றன. இந்திய அரசமைப்பு தரும் பாதுகாப்பு, இந்நாட்டில் இம்மாதிரி சட்டங்களுக்கு இடமளிக்காது என்று நாம் நம்பியிருந்தோம். அது பொய்; ஏற்புடையதும் அல்ல என்பதை இந்துத்துவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
அண்டை நாடான வங்காள தேசத்தில் நடைபெறும் அரசியல் திடமற்றப் போக்குகள் நமக்கு நிம்மதியைத் தரமுடியாது. ஆனால், இஸ்லாமியரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு சனநாயக அரசு சந்தித்த சோதனைகள் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத் தருகின்றன என்பதை யோசிப்போம்.
பெரும்பான்மை இஸ்லாமியர் வாழும் ஒரு தேசத்தில் எழுந்துள்ள அரசியல் எழுச்சியினால் வங்காள தேசத்தின் இந்துச் சிறுபான்மையினர் வாழ்வும் வாழிடமும் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன என்று குரல் எழுப்பும் இந்துத்துவர்களின் தகுதியைத் தொடர்ந்து பார்ப்போம்.