ஒன்றிய அரசு வளர்த்த அழித்த தொழில்கள்
15 ஆண்டுகளுக்கு முன், இன்றைய ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த நேரம். தமிழ்நாட்டைச் சார்ந்த தொழிலதிபரிடம் “கோவையில் பஞ்சும் இல்லை, நூலும் இல்லை, மின்சாரமும் இல்லை. அங்கு ஏன் தொழில் செய்கிறீர்கள்? குஜராத் வாருங்கள், எல்லா வசதியும் செய்து தருகிறேன்” என்றார். 15 வருடமாகியும் மோடி குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என பா.ச.க. ஆள்கிற மாநிலங்களுக்கான பிரதமராக மட்டுமே இருக்கிறார் என்பதே இன்றைய நாட்டு நடப்பு. அன்று குஜராத் முதல்வர் கூறியதை, இன்று மத்தியப்பிரதேச, உத்தரப்பிரதேச மாநில முதல்வர்கள் செய்கிறார்கள். களத்தில் இறங்கி வேகம் காட்டுகிறார்கள். சென்னை, கோவை எனத் தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு வந்து, தொழிற்சலுகைளை வாரி இறைத்து, தொழில் அதிபர்களுக்கு வலை வீசுகிறார்கள்.
‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்ற கோயம்பத்தூரில் இன்று நூற்பாலைகள், வார்ப் பாலைகள், மோட்டார் உற்பத்தி என எந்தத் தொழிலும் இல்லை. ஏற்றுமதி வரைபடத்தில் இடம் பெற்ற திருப்பூரில், இன்று பின்னலாடைத் தொழில் இல்லை. கொங்கு மண்டலத்தில் கடந்த பத்து ஆண்டுகளாகத் தொழில் அழிவை ஒன்றிய அரசின் தொழிற்கொள்கைகளும், பா.ச.க. ஆளும் மாநிலங்களுக்குத் தொழில்களை, ஒன்றிய அரசு கட்டாயமாக இடம்பெயர்த்ததுமே மூலகாரணம்.
கோவையில் இராகுல்காந்தி தமிழ்நாடு முதல்வருக்கு இனிப்புப் பெட்டி வழங்கிய 2024 -இன் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். அன்று தமிழ்நாடு முதல்வர் ஒரு குற்றச்சாட்டைப் பொதுக்கூட்ட மேடையில், பொது வெளியில் வைத்தார். 6500 கோடி மதிப்புள்ள 3 ‘செமி கன்டெக்டர்’ தொழிற்சாலைகள் தமிழ்நாடு வர அனைத்து ஆயத்தப் பணிகளும் முடிந்த வேளையில், பா.ச.க. அரசு இடைபுகுந்து தங்கள் ஆளும் மாநிலங்களுக்குத் தட்டிச் சென்றுவிட்டது என்பதே.
இன்றுவரை பா.ச.க.வோ, ஆளும் ஒன்றிய அரசோ பதில் தரவில்லை. ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ பத்திரிகை ‘புகழ்பெற்ற டெக்ஸ்லான் நிறுவனம் இந்தியா வரவுள்ளது. அது தமிழ்நாட்டில் மட்டுமே தொழில் துவங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன’ எனக் கூறுகிறது. மேலும், அது மானியங்களாலும் சலுகைகளாலும் குஜராத் செல்லவும் வாய்ப்புள்ளது என்கிறது.
தமிழ்நாட்டுத் தொழில்களை அழிக்கும் பா.ச.க.வின் வழிமுறைகளை விளக்குவது காலக் கட்டாயம். முதலில் ஜவுளித் தொழிலை எடுத்துக் கொள்வோம். ஜவுளித் தொழிலுக்கு மூலப் பொருள்கள் பஞ்சும், பஞ்சிலிருந்து எடுக்கப்படுகிற நூலும் என்பது பாலபாடம். பஞ்சு குறித்த அனைத்து முடிவுகளையும் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா’ எனும் இந்தியப் பருத்திக் கழகம் என்ற அரசின் பொதுத் துறை நிறுவனம் செய்கிறது. அது முற்றிலும் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பெரும் பருத்தி ஏகபோக முதலாளிகளின் லாபிக்கு உள்பட்ட அமைப்பு என்பது வரலாறு.
பருத்தி உற்பத்தியின்போது விவசாயிக்கு மிகக் குறைந்த விலையும், அதிலிருந்து பருத்தி விதை நீக்கி, தூசி நீக்கி, அரைத்து ‘ஜின்னிங்’ என்ற முறையில் தூய பஞ்சாக, நூலின் மூலப்பொருளாக மாறிய பின்பு பெரும் விலை என்பதும் வழக்கமான நடைமுறை. இவர்கள் பருத்தி விதை, மருந்து அடிப்பு, உரமிடல் எனப் பயிரின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏழை விவசாயிகளிடம் கொஞ்சம், கொஞ்சமாகப் பணம் கொடுத்து, கட்டாயமாகப் பருத்தியைப் பிடுங்கிக் கொள்வர். இந்த ஏகபோக, பெரும் முதலாளிகளின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் அமைப்பான இந்தியப் பருத்திக் கழகம் வியாபாரிகளுக்காக எப்படியும் வளைந்து கொடுக்கும். உள்நாட்டுத் தேவை குறித்துக் கவலை கொள்ளாமல், பெருமுதலாளிகளுக்காக ஏற்றுமதிக்கு அரசுக்கு ஆலோசனை வழங்கும். இறக்குமதிக்கு கெடுபிடிகளை இறுக்கும். இவர்களுக்கு உள்நாட்டுத் தேவை குறித்துக் கவலை இல்லை. இதனால் பஞ்சு விலை ஏற்றத்திற்கும், நூல் விலைக்கும் உள்ள பெரும் இடைவெளியே கோவை, திருப்பூரின் நூற்பாலைகள், பின்னலாடைத் தொழில்கள் காணாமல் போயின.
அகில இந்திய வானொலி இரவு ஏழு மணிக்குத் திருப்பூர், விருதுநகர் பருத்தி விலை நிலவரம் வாசித்தது பழங்காலம். ஆசியாவில் அதிக அளவு துணி உற்பத்தி செய்த பின்னி நூற்பாலை. திருப்பூரின் மையப்பகுதியில் ஏக்கர் கணக்கில் தொழிற்சாலை வைத்து, பருத்தியிலிருந்து பஞ்சைத் தரப்படுத்தியது. ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் சாரை சாரையாக ஜின்னிங் தொழிற்சாலைகளுக்குச் சென்றது ஒரு காலம். பிறகு அது பின்னலாடைத் தொழிலுக்கு மாறி நடந்தது. இன்று காலை, மாலை வேளைகளில் திருப்பூர் நகரத் தெருக்கள் வெறிச்சோடிக் கிடப்பது காலக்கொடுமை!
உள்நாட்டில் பஞ்சிற்கான வரி விதிப்பு 11 சதவிகிதம். அதேவேளை வங்க தேசத்துக்கு இங்கிருந்து பின்னலாடை உற்பத்திக்கான மூலப்பொருள்களைச் சலுகை விலையில் வரி இல்லாமல் ஒன்றிய அரசு தள்ளுகிறது. பா.ச.க. ஆளும் குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் வரிப் பணத்தை மானியம் என்ற பெயரில், மின் கட்டணச் சலுகை என்று வாரி வழங்கி, தொழில்களை இடம் பெயரச் செய்து, திருப்பூரின் தொழில் வளத்தை முற்றிலும் அழித்து விட்டனர்.
ஜவுளித் தொழிலின் மூலப்பொருளான பருத்தி அல்லாத செயற்கை இழை நூல்களிலும் ஏகபோக வர்த்தகம் நடக்கிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற செயற்கை இழை நூல்கள் 25 சதவிகிதம் விலை குறைவு எனினும் வாங்க முடியாது. தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் இரண்டு பெரும் முதலாளிகளுக்குச் செயற்கை இழை நூலின் இந்தியச் சந்தை தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஒன்று அம்பானியின் ரிலையன்யஸ் இண்டஸ்டரி, மற்றொன்று ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சார்ந்த கிராசிம். ரிலையன்யஸ் இண்டஸ்டரி 35 வருடங்களுக்கு முன்பே செயற்கை நூல் உற்பத்தியில் வரி ஏய்ப்பு செய்கிறது. தமக்கேற்ப சுங்க வரியைக் கட்டமைக்க முயல்கிறது. அரசின் கொள்கை முடிவுகளை மாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு காலத்தே உண்மையாகி விட்டது. தமிழ்நாடு ஜவுளித் தொழிற்துறை மட்டுமல்ல, இந்திய ஜவுளித் துறையும் ஏகபோக வட இந்தியா வசம் செல்ல ஒன்றிய பா.ச.க. அரசு கட்டமைத்த செயல் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான விவசாயத்திற்கு அடுத்த, இரண்டாம் தொழிலான ஜவுளித் தொழில் அழிந்துவிட்டது, தமிழ்நாடு கிராமங்களில் அதிகாலை பாவடித்துச் செய்யப்பட்ட நெசவுத் தொழில் முற்றிலும் இல்லை. நெசவுத் தொழிலிருந்து மாறிய, சிறு தொழிலான விசைத்தறி தொழிலும் இல்லை. தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசான விலையில்லா வேட்டி, சேலைகளுக்கு ஆந்திர விசைத்தறி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி ஆணை வழங்குவது, தமிழ்நாடு ஜவுளித் தொழிலின் தொய்வின் மறைக்க முடியாத மறுபக்கம்.
25 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் சார்ந்த தானிய விற்பனை, மஞ்சள், பருத்தி போன்ற பொருள்களின் பொருளாதாரம் அழிந்த பின்பு, நெசவுத்தொழில் சார்ந்த உற்பத்திப் புரட்சி மக்கள் வாழ்வாதாரத்தைத் தாங்கிப் பிடித்தது. ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால், மாற்றாந்தாய் மனப்பான்மையில் மெல்ல அழியும் தமிழ்நாடு தொழில்களை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் தலையாயக் கடமை. தமிழ்நாடு அரசு தன் பொறுப்புணர்ந்து, தமிழ்நாடு தொழில்களைக் காக்கும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே நம் வாழ்க்கை!