Namvazhvu
வாழ்வு வளம் பெற – 27 விலகு விலகு!
Wednesday, 04 Sep 2024 07:23 am
Namvazhvu

Namvazhvu

அவர்கள் இருவருமே மும்பைக்கு அருகிலுள்ள வாசைப் பகுதியைச் சார்ந்தவர்கள். அவன் பெயர் அஃப்தாப் அமீன் பூனவாலா. அவளது பெயர் ஷ்ரத்தா வாக்கர். இருவரின் குடும்பத்தினருமே இவர்களின் காதலை ஏற்க மறுத்தனர். ஆனால், இந்த இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை.

சிறிது காலத்திற்குப் பிறகு திருமணமின்றியே சேர்ந்து வாழத் தொடங்கினர். ஈராண்டுகளுக்குப் பிறகு டெல்லிக்குக் குடி பெயர்ந்தனர். அவர்கள் சண்டையிடுவதும், பின்பு சமாதானமாவதும் அடிக்கடி நிகழ்ந்தது.

மீண்டும் நடந்த ஒரு சண்டைக்குப் பிறகு 2022, மே மாதம் 18-ஆம் தேதி இரவில் அஃப்தாப், ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொன்றான். மறுநாள் கடைக்குப் போய் இறைச்சியை வெட்டப் பயன்படுத்தும் கத்தி ஒன்றை வாங்கி வந்து, அவளது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து, ஒவ்வோர் இரவும் சில துண்டுகளைக் கொண்டு போய் டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் தூக்கி எறிந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.

தன் மகளோடு தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஷ்ரத்தாவின் தந்தை காவல்நிலையத்தில் முறையிட, விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர் ஏறத்தாழ எட்டு மாதங்கள் கழித்து அஃப்தாபைக் கைது செய்தனர்.

இதைப்போன்ற கோர நிகழ்வுகள் பிற நாடுகளிலும் நடந்துள்ளதை நாமறிவோம். தன்னை விட்டுப் பிரிந்த முன்னாள் காதலியையும், அவளது இந்நாள் சிநேகிதரையும் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க விளையாட்டு வீரர் .ஜே. சிம்சன், 2013 -ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று குளியலறையில் இருந்த அவரின் காதலி ரீவாவைச் சுட்டுக் கொன்றதாகக் கைது செய்யப்பட்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் போன்றவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

மனித மனம் இயல்பாகவே ஏங்கி எதிர்பார்க்கும் அன்பு, நட்பு, காதல், நெருக்கம் போன்றவை பெரும்பாலான நபர்களுக்குக் காதல் அல்லது திருமண உறவில்தான் கிடைக்கின்றன. அப்படி இருக்கும்போது, தன்னைத் துன்புறுத்திக் கொல்லும் அளவுக்கு மன விகாரம் கொண்ட மனிதர்களோடு இத்தகைய உறவுகளில் இத்தனை பெண்கள் சிக்கிக்கொள்வது எப்படி?

கொலை செய்யுமளவுக்குப் போகாவிட்டாலும், அன்பு செய்வோரை, தாங்கள் அன்பு செய்ய வேண்டியவர்களைத் துன்புறுத்துவோர் மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? 100 விழுக்காடு. இதுதான் உண்மை. புரிந்தும் புரியாமலும் அன்பு செய்ய வேண்டியவர்களைத் துன்புறுத்துவோர் ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும்தான். விதிவிலக்கென்று யாருமில்லை.

இவர்களில் மிகச்சிலரே தாங்கள் செய்தது தவறு என்று விரைவில் உணர்ந்து, உண்மையில் வருந்தி, மன்னிப்பு வேண்டி, துணையைத் துன்புறுத்தும் தவறை இனி ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உறுதி பூணுபவர்கள்.

தென்னாப்பிரிக்காவில் நடந்ததாக காந்தியே தன் சுயசரிதையில் இதனைச் சொல்கிறார். அனைவரும் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பது காந்தி ஏற்படுத்திய ஓர் ஒழுங்கு. அதற்கு ஒருநாளும் பழக்கப்படாத கஸ்தூரிபா செய்ய மறுக்க, அவரது கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டுக்கு வெளியே விட்ட காந்தி, சில நொடிகளில் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டினார்.

தன் திருமண வாழ்வில் நடந்ததைப் பற்றி தமிழறிஞர் திரு.வி.. எழுதியதைமுன் சுவடுகள்என்ற நூலில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

ஒருநாள் திரு.வி.. வீட்டினுள் நுழைந்தபோது எங்கும் இறுக்கம். என்ன நடந்ததென்று கேட்டபோது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அவர் மனைவி கமலமும்தெரியாதுஎன்று சொல்லி விட்டார். ஆனால், இரவில் தனியாக வந்தபோது நடந்ததைச் சொல்லி, அதை அப்போது சொல்ல விரும்பவில்லை என்றார் கமலம். ‘நான் கேட்டால் கூட சொல்ல மாட்டாயா?’ என்று எகிறிய திரு.வி.. மனைவியைக் கோபத்துடன் கடிந்து விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

மறுநாள் அவர் குளிக்க அமரும்போது வெந்நீர் விட வந்த கமலத்தின் முகம் வாடியிருந்தது. அதைக் கண்டு அவர் மனம் குழைந்தது. அவள் கையைப் பிடித்து, “நான் செய்தது பிழை. நீ முன் மதி. நான் பின் மதிஎன்றார். “அய்யோ! பின் மதி (தேய் நிலவு) என்று சொல்லலாமா?” என்று சொல்லி அவர் வாயைப் பொத்தினார் கமலம்.

திரு.வி..வைப் போன்ற கணவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?

தொடர்ந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தும் கணவர்கள் பலர். ஒரு காலத்தில் இதுகணவனின் உரிமைஎன்று கருதப்பட்டது. இன்று இது பல நாடுகளில் சிறைத் தண்டனைக்குரிய குற்றம். இது ஓர் உளவியல் நோய் என்ற புரிதலால் இத்தகைய கணவர்களுக்குச் சில நாடுகளில் தொடர்ந்து மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.

இத்தகைய ஆண்களில் வழக்கமாகக் காணப்படுபவை என்று உளவியலாளர் சொல்பவை என்ன? வன்முறை தாண்டவமாடிய வீடுகளில் வளர்ந்திருப்பார்கள். தங்கள் தந்தை, தாயை அடித்துத் துன்புறுத்துவதைப் பலமுறை பார்த்திருப்பார்கள். தங்களை மதிக்க இயலாததால் தங்களையே வெறுப்பவர்கள். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள். தனது வன்முறைக்குக் காரணம் மனைவியே என்று எப்போதும் சாதிப்பவர்கள்.

இவர்கள் இப்படி நடந்து கொள்வதன் நோக்கம் என்ன? துணையாக வந்தவளைத் துணையாக, இணையாக இருக்க விடாமல், அவளை அடிமையாக்கி விட வேண்டும் என்ற வேட்கைதான். அடிமையாக இருந்தால்தானே விரும்புவதெல்லாம், விரும்பிய நேரத்தில், விரும்பியபடி கிடைக்கும்? நிகரான, இணையான துணை என்றால் மறுக்கலாம். கேள்வி கேட்கலாம்இல்லையென்று கை விரிக்கலாம்.

மேலை நாடுகளில் பல காலம் பழகிய பிறகே ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்துகொள்கிறார்கள். இங்கு பெற்றோர், பெரியோர் தீர்மானிக்கும் திருமணங்கள் இன்றும் நடக்கின்றன. தேர்ந்து கொள்வது யாராக இருந்தாலும் ஆண், பெண் இருவரும் சிறிது காலம் பழகி, ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட பிறகே திருமணம் செய்து கொள்வதன் அவசியத்தை இளையோரும் பெரியோரும் உணர வேண்டும்.

காரணம், இப்படிப் பழகி ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள முயலும் காலத்தில் ஒரு நபர் மிகவும் ஆபத்தான மனிதர் என்பதைச் சில காரியங்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன. இத்தகைய நபர்கள் மிகக் கவனமாக இவற்றை மறைக்க முயன்றாலும், இவை அவ்வப்போது வெளிப்பட்டு இவர்கள் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதை வெளிப்படுத்தி விடுகின்றன. ஆனால், பல பெண்கள் ஆண்களின் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிற எச்சரிக்கையை உணர்வதில்லை. இத்தகைய பெண்களில் ஒருவர் யார்ட்லி லவ் எனும் அமெரிக்கப் பெண். ‘லாக்கிராஸ்எனப்படும் விளையாட்டில் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்த வீராங்கனை பல்கலைக்கழக அணியிலும் இருந்தாள்.

அவள் காதலித்த ஜார்ஜ் வெஸ்லி ஆண்கள் அணியில் விளையாடியவன். இருபது வயதில் சட்டத்தை மீறி மதுவைப் பதுக்கி வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவன். குடித்து விட்டு பொது இடத்தில் தகராறு செய்ததற்காக ஒருமுறை கைது செய்யப்பட்டவன். ஒரு சமயம் அவனது அணியில் இருந்த மற்றொருவன் யார்ட்லிக்கு முத்தம் கொடுத்தான் எனும் வதந்தியைக் கேட்டு அவனைத் தாக்கிக் காயப்படுத்தியவன். இதையெல்லாம் பார்த்துப் பயந்த யார்ட்லி அவனை விட்டு விலகத் தொடங்கினாள்.

2010, மே 3 -ஆம் தேதி இரவு விடுதியிலிருந்த அவளது படுக்கையறைக் கதவை உதைத்தே திறந்து, அவளின் கழுத்தைப் பிடித்து உலுக்கி, தலையைப் பலமுறை சுவரில் மோதியதில் அவள் இறந்துவிட்டாள். அவனுக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

துக்கத்தில் மூழ்கிய அவளது குடும்பத்தினருக்கு ஒன்று புரிந்தது. தங்கள் மகள் பழகிய இளைஞன் மிகவும் ஆபத்தானவன் என்பதை அவளோ, அவர்களோ விரைவில் புரிந்து கொள்ளவில்லை. அதைப் புரிந்து, தொடக்கத்திலேயே அவனைத் தவிர்த்திருந்தால் இச்சோகம் நிகழ்ந்திருக்காது. மகள் இறந்த நான்காம் ஆண்டில் நண்பர்களின் உதவியோடு யார்ட்லியின் குடும்பத்தினர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர்ஒன் லவ் ஃபவுன்டேஷன்’ (One Love Foundation). காணொளிகள், வழிகாட்டிகள் மூலம் ஆபத்தான நபர்களை அடையாளம் கண்டுகொள்ள கற்றுத் தருவதையே தனது இலக்காகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இந்தக் குணங்களை, இந்த நடவடிக்கைகளைக் கண்டால் நெருங்கிய உறவுக்குச் சிறிதும் தகுதியற்ற, மிகவும் ஆபத்தான நபர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனப் பல வழிகளில் இந்நிறுவனம் கற்பிக்கிறது.

இவர்களைக் காட்டிக் கொடுக்கும் இந்த எச்சரிக்கை மணிகள் எவை? பெண்ணுக்குப் பல ஆண்டுகளாகத் தெரிந்த பெற்றோர், உறவினர், நண்பர்களிடமிருந்து அவளைப் பிரித்து தனிமைப்படுத்த இவர்கள் முயல்வார்கள். அவர்களிடமுள்ள எல்லாத் தொடர்புகளையும் துண்டிக்குமாறு நச்சரிப்பார்கள். அதை எளிதாக்க அவர்களைப் பற்றிய அவதூறுகளை, பொய்களைச் சொல்வார்கள். இயல்புக்கு மாறாக அதிதீவிரமான அன்பை, உணர்வுகளைக் கொட்டுவார்கள்தனக்குச் சொந்தமான ஒரு பொருளைப் போல பெண்ணைப் பாவித்து, 24 மணி நேரமும் கண்காணிப்பார்கள். எந்நேரமும் தன்னுடனே இருக்க வேண்டும் என வற்புறுத்துவார்கள். ‘எங்கிருக்கிறாய்?’, ‘யாரோடு இருக்கிறாய்?’ என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பெண் என்ன விளக்கம் தந்தாலும் நம்ப மறுப்பார்கள். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வார்த்தைகளை ஆயுதங்களாக்கிப் பெண்ணைச் சிறுமைப்படுத்துவார்கள். அனைவருக்கும் முன்னால் அவமானப்படுத்துவார்கள். எள்ளி நகையாடுவார்கள். முறையிட்டால், ‘ஏன் சிறியதொரு காரியத்தைப் பெரிதுபடுத்துகிறாய்?’ என்று கேட்பார்கள். வன்முறையில் இறங்கி அடிப்பார்கள், உதைப்பார்கள். பின்பு அழுதுகொண்டே மன்னிப்புக் கேட்பார்கள். ‘விட்டு விட்டுப் போய்விடுவேன்என்று பெண் சொன்னால், பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்துவார்கள்.

ஆபத்தான மனிதர் அனைவரும் ஆண்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லைசில பெண்களிலும் இந்தக் குணங்கள், நடவடிக்கைகளைக் காணலாம். அடுத்தவரை அடிமைப்படுத்த ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அடி உதை என்றால், சொற்கள், புறக்கணிப்பு, புலம்பல்கள், பொய்கள் போன்றவை இத்தகைய பெண்களின் ஆயுதங்கள்.

காதலோ, திருமணமோ, நட்போ இந்தக் குணங்களையும், நடவடிக்கைகளையும் கண்ட மறு விநாடி இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதைப் புரிந்து விலகி விட்டால் பெருந்துயரங்களிலிருந்து தப்பிக்கலாம். புரிந்து கொள்வதற்கு முன் நெருங்கி விட்டால் விலகுவது மிகக் கடினம்.

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை

+91 9445006852 என்ற எண்ணிற்குக் குறுஞ்செய்தியாகவோ அல்லது  குரல் பதிவாகவோ அனுப்பி வையுங்கள்.)