கேரளாவின் வடக்கு மாவட்டங்களான கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளை உள்ளடக்கிய கண்ணூரின் துணை ஆயராக ஆகஸ்டு 15 அன்று பேரருள்தந்தை டென்னிஸ் குருப்பசேரியைத் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார். பேரருள் தந்தை குருப்பசேரி 1967 -ஆம் ஆண்டு ஆகஸ்டு 4 -ஆம் தேதி கோட்டபுரம் மறைமாவட்டத்தில் உள்ள பள்ளிபோர்ட்டில் பிறந்தார். கேரளாவின் ஆல்வாவில் உள்ள புனித ஜோசப் போண்டிஃபிகல் செமினரியில் தத்துவம் மற்றும் இறையியல் படித்தார். இவர் சட்டத்தில் பட்டம் பெற்றவர். 1991, டிசம்பர் 23 அன்று கோட்டபுரம் மறைமாவட்டத்திற்குக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். துருத்திபுரம் புனித பிரான்சிஸ் அசிசி ஆலயத்தின் உதவி பங்குத்தந்தையாகவும் (1991-1993), கோட்டபுரம் மறைமாவட்டத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும் (1996-1997) பணியாற்றியுள்ளார். புருண்டி (2001-2004), எகிப்து (2004-2007), தாய்லாந்து (2007-2010), செக் குடியரசு (2010-2013), காபோன் (2013-2016), ஐக்கிய அமெரிக்கா (2016-2021) ஆகிய நாடுகளில் திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். 57 வயதான பேரருள்தந்தை தற்போது மால்டாவில் உள்ள அருள்சகோதரிகளின் இல்லத்தில் ஆலோசகராக உள்ளார்.