வாய்ப்புகளைத் தேடி, வசதிகளைத் தேடி மனிதன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டுதான் இருக்கிறான். ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்க்கையை நகர்த்தப் பொருளாதாரம் பலமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, பொருளாதாரம் பலமாக இருக்கும் எத்தனையோ வணிகக் கூட்டம் கூட பல இடங்களுக்குப் பயணித்துக் கொண்டேதான் இருக்கிறது. காரணம் என்ன? இருக்கும் பொருளை இன்னும் பெருக்கும் நோக்கத்தில்தான். மேலும், புதிது புதிதாக ஏதாவது ஒன்றை அறிந்துகொள்ள அல்லது தெரிந்துகொள்ள!
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருசில வரை முறைகள் அல்லது அதுவரை நாம் கொண்டிருந்த புரிதல்கள் மாறுபடும். அதுதான் நடைமுறை. முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் ஓய்வு பெறும்வரை அந்த நிறுவனத்திலேயே இருப்பது பெருமையான ஒன்றாக இருந்தது. தற்போது சூழல் மாறுகிறது. ‘ஒரே நிறுவனத்தில் ஏன் இவ்வளவு நாள்களாக இருந்தாய்? அடுத்தடுத்து வளர்ச்சி நோக்கி ஏன் நகரவில்லை?’ எனும் கேள்விகள் வருகின்றன. போக்குவரத்து, குடும்பச் சூழல், பணியிடச் சூழல், வேலையில் இருக்கும் நாட்டம், தன் உயர்வுக்கான வாய்ப்பு... இப்படிப் பல்வேறு காரணங்கள் இதற்குப் பின் இருக்கின்றன. ஆதலால், ஒரே வரியில் இதற்கான விடையை யாராலும் தர முடியாது. சில நேரங்களில் ‘இந்த இடத்தை விட்டு நகர்ந்தே ஆகவேண்டும்’ எனும் கட்டாயம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. அந்த நேரத்தில், விடைகொடுத்து விட்டு, அடுத்ததை நோக்கிப் பயணிப்பதுதான் சரியான முடிவாக இருக்கும். அது அவ்வளவு எளிதாக முடியுமா என்றால், சற்றுக் கடினம்தான். கடந்து வந்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம் இருக்கும்போது என்ன செய்ய முடியும்?
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில், ஈழத்தில் போர்க்களம் காரணமாக, தங்கள் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு, உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு, தான் வாழ்ந்த வீட்டையும், உடலோடும் உயிரோடும் உறவாடிய அந்த மண்ணையும் விட்டு, பெருத்த மனவேதனையோடு மறுமுறை ஒருமுறை பார்க்க முடியுமா? எனும் ஏக்கப் பெருமூச்சோடும், தன் எதிர்காலம் எப்படி இருக்குமோ எனும் விடைகாண முடியாத கேள்விகளோடும் பயணிக்கும் அந்தக் காட்சிபோல, பலர் தான் வேலை பார்த்த நிறுவனத்தை விட்டு, தானாகவோ அல்லது நிறுவனத்தின் சில முடிவுகளாலோ, தான் பணிபுரிந்த இடத்திற்கு விடை கொடுத்து மனவலியோடு சென்ற எத்தனையோ நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்காகவே இதை எழுத வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது.
இந்த இடம்மாறும் சூழல் அல்லது விடை கொடுக்கும் நிலை, தொடக்க நிலையில் இருக்கும் பணியாளர்களுக்கு அவ்வளவாகப் பாதிப்புத் தருவதில்லை; ஆனால், உயர் நிலையில் இருக்கும் பணியாளர்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்.
இடப்பெயர்வு என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. அதில் குறிப்பாக, மீன்கள் மற்றும் பறவைகளின் இடப்பெயர்வு பற்றிக் காண்போம். மீன்கள் பொதுவாக உணவுக்காகவும், முட்டையிடவும் மற்றும் தன் குஞ்சுகளை வளர்ப்பதற்காகவும் அடிக்கடி இடமாற்றம் செய்யும். மீன் கூட்டங்கள் இந்த மூன்று தேவைகளுக்காகத்தான் பெரும்பாலும் தமது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். ஒரு திசையில் முட்டையிட்டு, மறுதிசையில் குஞ்சுகளை வளர்க்கும். இன்னும் சொல்லப்போனால், மீன்கள் கடலில் வாழும்; ஆனால், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். இதன் பொருட்டு மீன்கள் நெடுந்தூரம் பயணம் செய்யும். குறைந்தது 300 கி.மீ. தூரம் அல்லது அதற்கு மேலும் பயணம் செய்யும். பவளப்பாறைகளை நோக்கிப் படையெடுக்கும். ஏனெனில், அது தங்கி வாழும் வீடாக அதை ஏற்படுத்திக்கொள்ளும். இப்படித் தன் வாழ்வுக்காகவும், தன் எதிர்கால தலைமுறைக்காகவும் அது தொடர்ந்து தனது இடப்பெயர்வைச் செய்துகொண்டே இருக்கும். இதனால் மீன்களுக்குச் சலிப்பு ஏற்படாதா? இதுதான் அவற்றின் வாழ்வியல். உண்பது, ஓய்வெடுப்பது, தனது இனத்தைப் பெருக்குவது, உணவைத் தேடுவது, பிறருக்கு உணவாவது... இதுதான் அதன் வாழ்வியல் வட்டம். இதைத்தாண்டி வேறெதுவும் அவற்றிற்குக் கிடையாது.
பறவையின் இடப்பெயர்வு சற்றுச் சாகசம் நிறைந்தது. பல கி.மீ. தூரத்தைக் கூட்டமாகக் கடக்கும் தன்மை கொண்டது. இதன் பயணம் என்பது வழக்கமான பருவகால இயக்கமாகும். இதன் பயணத்தை ‘வலசைப் பகுதி’ என்று அழைப்பதுண்டு. வடக்கு மற்றும் தெற்கு திசை நோக்கிப் பறக்கும் வழியில், இதன் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. பல பறவை இனங்கள் இனப்பெருக்கத்திற்காகப் பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் தாண்டி இடம்பெயர்ந்து வருகின்றன. இயற்கையால் அதன் இடப்பெயர்வுகளுக்கு இடையூறு ஏற்படுவதில்லை. ஆனால், மனிதர்களால் அதிகம் ஏற்படுகிறது. இப்படி அவைகள் எல்லை தாண்டி பறப்பதால் என்ன பயன்? காடு, மலையெல்லாம் வனப்பாக இருப்பதற்குப் பறவை ஒரு முக்கியக் காரணம். பல்வேறு இடங்களில் உண்ட உணவின் எச்சத்தை அங்கும் இங்கும் இடும்போது, அங்கு செடியாக வளர்கிறது. எங்கோ இருக்கிற மரம் அல்லது செடி நம் மண்ணிலும் இருக்கிறதே எனும் ஆச்சரியம் வருமல்லவா! அந்த ஆச்சரியத்தை நிகழ்த்துவது பறவைகள்தாம்.
நீண்ட தூரம் பறந்து ‘வலசை’ செய்யும் பறவைகள், இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக் கொண்டு வசந்த காலத்திலும் இடப்பெயர்வு செய்யுமாம். வசந்த காலம் எங்கு, எப்போது வரும் என்பதை மூத்த பறவைகள் துல்லியமாக அறிந்து வைத்திருப்பது ஆச்சரியம் தரும் விசயம். பறவைகளை வழிநடத்துவதற்கு என்று தலைவன் உண்டாம். சற்று இளைப்பாற சில நேரங்களில் இளம் பறவையை முன்னோக்கிச் செல்ல பயிற்சி கொடுக்குமாம். ‘இதனால் என்ன?’ எனும் கேள்வி வரலாம். வாகனத்தை நாம் ஓட்டுவதற்கும், ஓடும் வாகனத்தில் நாம் பயணிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டுதானே! அதுபோலத்தான். இப்படித் தன் இனம் பெருகுவதற்காக இந்த இடப்பெயர்வை ஏற்பதின் மூலம் இயற்கைக்கும், மனிதனுக்கும் பல்வேறு பலன்களை அது மறைமுகமாகத் தந்து உதவுகிறது.
அப்படிப் பார்த்தால், இந்த இடமாறுதல், இடப்பெயர்ச்சி, வேலை மாற்றம், சூழல் மாற்றம் என்பது மனித உயிர்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இது பொருந்தும். ஏன் மனித இனமாகிய நாம் மட்டும் அதைப் பெரிதாக நினைத்து வருத்தப்படுகிறோம்?
மற்ற உயிர்களுக்கு இந்த உலகில் உயிர்வாழ, இனத்தைப் பெருக்க, இயற்கையோடு ஒன்றித்து வாழ எனும் நிலையைத் தாண்டி வேறெதுவும் பொதுவாக இருப்பதில்லை. ஆனால், மனித இனம் அப்படி அல்ல; எல்லா உணர்வுகளையும், எல்லா எதிர்பார்ப்புகளையும், எல்லாக் கடமைகளையும்... இப்படி எல்லாவற்றையும் எதிர்கொள்ள இருப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது.
மற்ற உயிரினங்கள் எல்லாம், ‘இந்த உலகம் எனக்கானது’ எனும் பரந்துபட்ட எண்ணத்தில் வாழ்கின்றன. ஆனால், மனித இனமோ ‘இந்த உலகம் எனக்கானது மட்டுமே’ எனும் எண்ணத்தில் வாழ்வதால்தான் சிக்கல்கள் முளைக்கின்றன. இவற்றை எல்லாம் தாண்டி, ஓர் இடமாறுதல் பல்வேறு படிப்பினைகளை நமக்குத் தருகிறது. அதற்காக வேண்டியாவது நாம் இடமாறுதல் செய்ய வேண்டியுள்ளது. இடமாறுதல் சில நேரங்களில் பிரிதலையும், பல நேரங்களில் புரிதலையும் ஏற்படுத்தும். நாம் எதை நோக்கிப் பயணப்படுகிறோம் என்பதைப் பொறுத்து எல்லாம் மாறும்.
புரியாத பிரியமும் பிரியும் போதுதான் புரியும்.
தொடர்ந்து பயணிப்போம்...