அறிமுகம்
கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாகவும், அதன் சாரமாகவும் இருப்பவை அருளடையாளங்கள் (திருவருள் சாதனங்கள்). எல்லாவிதமான கிறிஸ்தவக் கொண்டாட்டங்களின் மையமாக இருப்பதும் அருளடையாளக் கொண்டாட்டங்களே! இன்றைய சூழலில் பல வேளைகளில் நிகழும் அருளடையாளக் கொண்டாட்டங்கள் (திருப்பலி, திருமுழுக்கு, முதல் நற்கருணை, உறுதிப்பூசுதல், திருமணம், குருத்துவம் முதலியவை) சடங்காச்சாரமாகவும், ஆடம்பர நோக்கத்துடனும், தனிமனித மற்றும் குழுக்களின் பெருமைக்காகவும் கொண்டாடப்படுகின்றன. அருளடையாளக் கொண்டாட்டங்களின் எண்ணிக்கையும், அருள்பணியாளர்களின் எண்ணிக்கையும் அவசியமில்லாமல் அதிகரிக்கப்படுகின்றன. இது கிறிஸ்தவ ஆன்மிக வாழ்வின் பெரும் ஆபத்தான அணுகுமுறை என்பது முற்றிலும் உண்மை. இத்தகைய அணுகுமுறையின் காரணமாக அருளடையாளங்களின் வாழ்வியல் நோக்கமும், அவற்றிற்கும் நம் வாழ்விற்குமான தொடர்பும் மற(றை)க்கப்பட்டு, சடங்காச்சாரப் போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது நம் ஆன்மிக வாழ்வில் தேக்கத்தையும், ஒட்டுமொத்த வாழ்வில் மேலோட்டத்தன்மையையும் கொண்டு வரவல்லது.
அருளடையாளங்களுக்கும், நம் வாழ்விற்குமான தொடர்பை உளவியல் பின்னணியிலும், ஆன்மிகப் பின்னணியிலும் அணுகும் வண்ணம் மேற்கொள்ளப்படும் முயற்சியே இத்தொடர்! உரையாடலாக எழுதப்படும் இந்தத் தொடர் குறித்த உங்களது மேலான கருத்துகளும் பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன.
1. வாழ்வின் நிறைவைத் தேடி...…
அது ஒரு கத்தோலிக்கக் குடும்பம். குடும்பத் தலைவர் பெயர் அன்புச் செல்வன். ஒரு கல்லூரியில் உளவியல் பேராசிரியர். நல்ல கத்தோலிக்கர். ஞாயிறு திருப்பலிக்குத் தவறாதவர். கத்தோலிக்க மறைப்போதனைகளை உளவியல் பின்னணியில் அணுக முயல்பவர். அவரது மனைவி மார்த்தா. குடும்பத் தலைவி. கத்தோலிக்க மறைப்போதனைகளை ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் கேட்காமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர். முன்னோர்கள் நமக்கு ஒரு காரியத்தைச் சொல்லிக் கொடுத்தார்கள் என்றால், தவறானவற்றையா நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? என்று எண்ணக்கூடிய மரபுப் பெண் அவர். இவர் தினத் திருப்பலியிலோ, நவநாள் செபங்களிலோ கொஞ்சமும் தவறாமல் பங்கெடுக்கக்கூடியவர்.
அண்மையில் இவர்களது குடும்பத்தில் ஒரு பிரச்சினை. பக்தியான இத்தம்பதியினருக்குப் பிறந்த அவர்களது மூத்த மகன் அகஸ்டின் ஒழுங்காகக் கோவிலுக்கு வருவதில்லை. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அவன், அவ்வப்போது ‘கோவிலுக்குப் போவதால் என்ன பயன் உண்டு? நேரம்தான் வீணாகிறது’ என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறான். திறந்த மனமும் தேடலும் கொண்டவன். மதம் உள்பட எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை என்று எண்ணுபவன். கேள்விகள் கேட்டால்தான் சரியானவற்றைக் கண்டுகொள்ள முடியும் என்று நினைப்பவன்.
இவனது தங்கை கிறிஸ்டினா 11-ஆம் வகுப்பு படிப்பவள். தற்போது அவளும் ஆலயச் செயல்பாடுகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. அதிக நேரத்தைப் படிப்பிலும் அலைபேசியிலும் செலவழிக்கிறாள். தாய் இதைக் குறித்துக் கேட்டால், “எனக்கு எது பயனுள்ளதோ, அதில் நேரம் செலவழிக்கிறேன். கோவிலுக்குப் போவதால் என்ன பயன் இருக்கிறது?” என்று எதிர்கேள்வி எழுப்புகிறாள்.
பெற்றோர்கள் இருவரும் தங்களது பிள்ளைகளை நினைத்துக் கொஞ்சம் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கத்தோலிக்க நம்பிக்கையைத் தங்களது பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியாதோ என்ற கேள்வி அவர்களைக் குடைந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறது. பிள்ளைகளின் ஆன்மிக வாழ்விற்கு எந்த முறையில் வழிகாட்டுவது என்று தெரியாத குழப்பம் அவர்களை வருத்தியது.
இத்தகைய சூழ்நிலையில்தான் அருள்பணியாளர் தாமஸ் வீடு சந்திக்க வந்தார். அவர்களின் பங்குத்தந்தை அவர்! அண்மையில்தான் மாற்றலாகி இந்தப் பங்கிற்கு வந்திருக்கிறார். அவரிடம் சற்று நேரம் பேசிய பின்பு, மார்த்தா தன் வீட்டுச் சூழலை அவருக்கு எடுத்துச் சொன்னார். அருள்பணியாளர் தாமஸ் கத்தோலிக்கப் போதனைகளைக் கடமையாகக் கடைப்பிடிக்கக் கூடாது; மாறாக, அவை அனுபவமாக மாற்றப்பட வேண்டும், மாற்றப்பட முடியும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றவர். ஆழமான ஆன்மிகத் தேடல் கொண்டவர். இதோ உரையாடல் ஆரம்பிக்கிறது:
அன்புச் செல்வன்: “தந்தையே, என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஏற்ற பொருளாதார வளத்தை என்னால் முடிந்த அளவிற்கு அமைத்துக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவர்களது கல்விக்கும் ஒரு சரியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்கின்ற உணர்வு என்னிடம் உண்டு. ஆனால், அவர்களது ஆன்மிக வாழ்வைப் பொறுத்த அளவில்தான் தற்போது நானும், என் மனைவியும் குழப்பத்தை அனுபவித்து வருகிறோம். அவர்களது ஆன்மிக வாழ்விற்கு ஏற்ற அடித்தளத்தை அமைத்துக் கொடுக்காமல் போய்விடுவோமோ என்கின்ற அச்சம் எங்களிடம் தற்போது தோன்றியிருக்கிறது.”
மார்த்தா: “தந்தையே, எங்களது மகனுக்கும் மகளுக்கும் கொஞ்சம் நல்லா புத்தி சொல்லுங்களேன்! ஆலயத்திற்கு வருவது என்றாலே இருவருக்கும் வேப்பங்காயாகக் கசக்கிறது.”
அருள்பணி: “உங்களது பிள்ளைகளுக்கு அதிகமாகத் தேவைப்படுவது புத்திமதி அல்ல; மாறாக, சரியான புரிதல் என்று எண்ணுகின்றேன்.”
அகஸ்டின்: “தந்தையே, என் அம்மா சொல்வது உண்மைதான்! ஆலயத்திற்கு வருவது பெரிய கடினமான காரியமாக இருக்கிறது. இவ்வாறு வருவதில் என்ன பயன் இருக்கிறது என்று என் மனம் அடிக்கடி கேட்கிறது.”
அருள்பணி: “அகஸ்டின், உன்னைப் பொறுத்த அளவில் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழித்தல் என்பது என்ன?”
அகஸ்டின்: “எனக்கு எது மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்குமோ, அதில் நேரத்தைச் செலவிடுவதே நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழிப்பதாகும். உதாரணமாக, நண்பர்களோடு ஜாலியாக ஊர் சுற்றினால் அதில் ஒருவிதமான மகிழ்ச்சி கிடைக்கிறது. படிப்பதற்கும், அறிவைச் சேகரிப்பதற்கும் என் நேரத்தைச் செலவழித்தால், அது தற்போது என் அறிவு விரிவடைவதற்கும், பிற்காலத்தில் பணமும் புகழும் பெறுவதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே, கல்வியில் நேரம் செலவழிப்பது எனக்குத் திருப்தியைத் தருகிறது. மாலை வேளையில் என் நண்பர்களோடு விளையாடுகிறேன். எனக்கு அது நல்ல பொழுதுபோக்காகவும், உடல்நலனைப் பெருக்குவதாகவும் அமைகிறது. ஆனால், ஆலயத்திற்கு வருவதால் அத்தகைய எந்த விளைவும் ஏற்படுவதாக எனக்குத் தோன்றவில்லை, தந்தையே!”
கிறிஸ்டினா: “எனக்கு மொபைலில் விதவிதமான வீடியோக்கள் பார்ப்பதும், என் ஸ்டேட்டஸைப் பலரும் பார்ப்பதை இரசிப்பதும் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.”
மார்த்தா: “பாருங்க பாதர், எவ்வளவு துணிச்சலோடு இந்த இரண்டு பேரும் ‘கோவிலுக்கு வருவதனால எந்தப் பயனும் இல்லை’ன்னு உங்ககிட்டே சொல்றாங்க. இந்த அளவுக்குச் சுதந்திரம் கொடுத்து வளர்த்தது எங்க தப்பு!”
அருள்பணி: “மார்த்தா, ஆன்மிகம் என்பது திணிக்கப்படுவதல்ல, அது உணரப்படுவது. நமக்குக் கொடுக்கப்பட்ட சில வழிமுறைகளை அவர்கள் மீது திணிப்பது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். அவர்களது கேள்விகளுக்கு நாம் எல்லாருமே சேர்ந்து பதில் தேடுவதே அவர்களுக்கும் உதவியாயிருக்கும், நம்மையும் வளர்த்தெடுக்கும்.”
மார்த்தா: “சரிங்க பாதர், நீங்க அவங்ககிட்ட என்ன பேசினாலும் சரி, எப்படிப் பேசினாலும் சரி, கோவிலுக்கு மட்டும் வரவச்சிருங்க. எனக்கு அது போதும்.”
அருள்பணி: “அகஸ்டின், மகிழ்ச்சியைத் தரும் செயல்களையே மனம் நாடுவதாகவும், அத்தகைய செயல்கள் எதுவும் ஆலயச் செயல்பாடுகளில் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறினாய். மகிழ்ச்சியைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். மகிழ்ச்சியைப் பற்றிப் பேசும்போது இரண்டு காரியங்களை நாம் நம் மனத்தில் வைத்திருப்பது அவசியம்.”
அகஸ்டின்: “அவை எவை தந்தையே?”
அருள்பணி: “அடுத்த வாரம் தொடர்ந்து பேசலாமே!”
(தொடரும்)