Namvazhvu
15, செப்டம்பர் 2024, (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு - எசா 50:5-9; யாக் 2:14-18; மாற் 8:27-35
Thursday, 12 Sep 2024 07:25 am
Namvazhvu

Namvazhvu

சிலுவை இல்லாமல் சீடத்துவம் இல்லை!

இயேசு யார்? அவரை எப்படிப் பின்பற்றுவது? எனும் இரு கேள்விகளுக்கு விடை காண அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு. மாற்கு நற்செய்தி 16 அதிகாரங்களைக் கொண்ட மிகச்சிறிய நற்செய்தி. இந்த நற்செய்தியின் முதல் பகுதி, இயேசுவின் கலிலேயப் பணியை மையமாகவும் (1:14-8:26), இரண்டாம் பகுதி எருசலேம் பணியை மையமாகவும் (8:31-16:8) கொண்டு பிரித்துக் கூறுகின்றனர் திருவிவிலியப் பேராசிரியர்கள். மாற்கு நற்செய்தி 8 -ஆம் அதிகாரம் இயேசுவின் கலிலேயப் பணியின் நிறைவுப் பகுதியாகவும், எருசலேம் பணியின் தொடக்கப் பகுதியாகவும் அமைகிறது. இவ்வதிகாரத்தில் இயேசு கேட்கும் இரு கேள்விகளை மையமாகக் கொண்டு நம் சிந்தனைகளை நிறைப்போம்.

இயேசு மெசியாவாக மக்களுக்கும் குறிப்பாக, தம் சீடருக்கும் வெளிப்படுத்த விரும்பி, அதற்கேற்ப தம் இறையாட்சிப் பணிகளை ஆற்றினார். மக்களும் சீடரும் இயேசுவின் வல்ல செயல்களைக் கண்டு வியந்தனர்; அவர் போதனைகளை ஏற்றனர்; பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றவர்களைத் தவிர ஏனைய மக்கள் இயேசுவைப் பற்றி நல்லெண்ணம் கொண்டனர். தம்மைப் பிற்காலத்தில் மக்களுக்கு அறிவித்துத் தம் இறையாட்சிப் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டிய சீடர்கள், தம்மைப் பற்றித் தெளிவான அறிவுபெற வேண்டும் என இயேசு விரும்பினார். ஆகவே, கலிலேயாவில் பணி முடியும் வேளையில் தம்மைப் பற்றிய ஆய்வை இயேசு சீடரிடம் நடத்துகிறார். அவர் நடத்தும் ஆய்வில் கேட்கும் இரண்டு கேள்விகள்தான்நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?’, ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’

இயேசுவின் இந்த இரு கேள்விகளையும் ஆழமாகச் சிந்திக்கும்போது, இது வெறும் கேள்விகள் அல்ல; மாறாக, சீடத்துவத்துக்கான ஓர் அழைப்பு எனப் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க அவரே நமக்குத் தரும் அழைப்பு. அழைப்புக்கு வெறும் வாய்மொழி அறிக்கையால் அல்ல; செயல் வடிவம் கொடுக்க அல்லது இயேசுவின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவதற்கான அழைப்பாகும் (முதல் வாசகம் யாக் 2:14-18). இயேசு தருகின்ற அழைப்பைச் சீடர்கள் புரிந்துகொண்டனரா? நாம் புரிந்துகொண்டுள்ளோமா? சிந்திப்போம்.

இயேசு கேட்ட முதல் கேள்வி: ‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?’ என்பது. இயேசு இந்தக் கேள்வியைக் கேட்ட இடமும் முக்கியத்துவம் பெறுகிறது. இயேசு பிலிப்புச் செசரியாவைச் சேர்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். மன்னன் ஏரோதின் மகன் பிலிப்பு தன் நினைவாகவும், சீசரின் நினைவாகவும் உருவாக்கிய பிரமாண்டமான நகரம் பிலிப்புச் செசரியா. மேலும், அப்பகுதியில் பால் (Bal), பான் (Pan), சீயுஸ் (Zeus) போன்ற கடவுள்களுக்குக் கோவில்களும் இருந்தன. அரசர்கள், பிற கடவுள்கள் போன்றோரின் பெருமைகளையும், அவர்கள் கட்டிய பிரமாண்டமான நினைவுச் சின்னங்களையும் அடையாளப்படுத்தும் அப்பகுதியில், சீடரின் எண்ணங்களில் தாம் எத்தகைய அடையாளத்தைப் பதித்திருக்கிறோம் என்பதை அறிய விழைந்தார் இயேசு. இயேசுவின் முதல் கேள்விக்குச் சீடர் இயேசுவிடம், “வல்ல செயல்கள் செய்ததால் எலியா என்றும், ஆட்சியாளர்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டியதால் திருமுழுக்கு யோவான் என்றும், எரேமியாவைப்போல செயல்பட்டதால் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்என்கிறார்கள் (8:28). ஆனால், சீடர்கள் தம்மை என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆர்வம் கொண்ட இயேசு, “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என வினவுகிறார். இயேசுவின் இந்தக் கேள்வி மாற்கு நற்செய்தியின் மையக்கேள்வியாக அமைகிறது. பேதுருநீர் மெசியாஎன்று ஒரே வார்த்தையில் பதிலளிக்கிறார். பேதுருவின் பதில்மொழி ஒட்டுமொத்தக் கிறிஸ்தவர்களின் பதிலாகவே பார்க்கப்பட வேண்டும். மெசியா என்றால்அருள்பொழிவு செய்யப்பட்டவர்என்று பொருள். பழைய ஏற்பாட்டில் குருக்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் அருள்பொழிவு செய்யப்பட்டு கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டனர் என நம்பினர். ஆனால், இயேசுவின் காலத்தில் மெசியா குறித்த யூதர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது அவசியம். ‘தாவீதின் வழித்தோன்றலில் மெசியா மாபெரும் அரசராக இருப்பார்; உரோமையரின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து நலமான எதிர்காலத்தை அமைத்துத் தருவார்; அவர் எருசலேம் நகரைப் புதுப்பிப்பார்; அவருக்கு எதிராக எழும் போரில் அவரே வெற்றி பெறுவார்; அவருடைய எதிரிகள் காணாமல் போவார்கள்; மெசியாவே உலக நாடுகளை அரசாள்வார்; அவரது அரசு என்றென்றும் நீடித்திருக்கும்; அமைதியும் நன்மையும் நிறைந்த புதிய காலத்தை அவர் அருள்வார்.’ இவ்வாறான மெசியா குறித்த பெருங்கனவு யூதர்களுக்கு மட்டுமல்ல, சீடர்களுக்கும் இருந்தன. மெசியா வீரதீரச் செயல்கள் புரிந்து, யூத மக்களுக்கு ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவராக இருப்பார் என்ற நம்பிக்கையின் எதிரொலிதான் பேதுருவின்மெசியா அறிக்கை.’

பேதுருவும், மற்ற சீடரும் இயேசுவை மெசியா என்று அறிக்கையிட, இயேசுவோ தமது மரணத்தைப் பற்றி அறிக்கையிடுகிறார். தம்மைமானிட மகன்என்கிறார். இந்த மானிட மகனைத் தம் மக்களுக்காகத் தியாகம் செய்து இறக்க வேண்டியதுன்புறும் மெசியாவாகமிக அழகாக வடிக்கிறார் நற்செய்தியாளர் மாற்கு.

இயேசு தம் துன்பங்களையும் இறப்பையும் முதன்முறை வெளிப்படுத்துகிறார் (8:31). தம்மைப் பின்தொடர்தல் என்பது தமது பாடுகள், இறப்பு, உயிர்ப்பில் பங்குகொள்வதாகும் எனும் படிப்பினையை இயேசு தொடர்ச்சியாகக் கற்பிக்கிறார். பேதுருவால் இதைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. எனவே, பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துக் கடிந்துகொள்கிறார். இயேசுவும் பேதுருவிடம்என் கண்முன் நில்லாதே, சாத்தானேஎன்றும், ‘மனிதருக்கு ஏற்றவை பற்றி எண்ணுகிறாய்எனவும்  கடிந்துகொள்கிறார்.

சாத்தான்என்றால்எதிரிஎன்று பொருள்படும். நம்பிக்கை இல்லாத சீடர்கள் சாத்தானுக்குரியவர்கள். இயேசுவின் குழுமத்தில் சாத்தானுக்கு இடமில்லை. ‘மனிதர்கள்என்பவர்கள் இவ்விடத்தில் யூதத் தலைமைத்துவத்தையும், அல்லது தொடக்கக்கால திரு அவையில் இயேசுவிற்கு எதிராக இருந்த அனைத்துத் தலைமைத்துவத்தையும் குறிப்பதாக அமைகிறது. இப்பின்னணியில் இயேசு பாடுபடக் கூடாது என்று அடம்பிடிக்கும் பேதுரு தமக்கு எதிரி என்றும், அவர் விரும்பியபடியே தாம் வல்ல செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டிய மெசியா அல்ல என்றும் இயேசு ஆவேசத்துடன் இங்கே அறிவிக்கிறார் (8:33).

சீடருடன் உரையாடிய இயேசு, மக்களையும் தம்மிடம் அழைத்து, தம்மைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தங்கள் வாழ்வில் துன்பங்களை ஏற்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக விளக்கம் தருகிறார். எனவே, தம்மைப் பின்பற்றுதல் என்பது ஓர் அழைப்பு என்றும், அதற்கு ஒருவர் தமது சிலுவையைச் சுமக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இங்கே சீடத்துவம் என்பது அனைவருக்கும் உரிய ஓர் அழைப்பு என்பது புலப்படுகிறது. இயேசு கற்றுத் தரும் சீடத்துவம் என்பது சிலுவையைத் தூக்கிச் சுமப்பதே. எனவே, சிலுவையைத் தூக்கிச் சுமப்பவரே ஆண்டவரின் ஊழியர் என்பதை முதல் வாசகம் வழி புரிந்துகொள்கிறோம்.

ஆண்டவரின் ஊழியராக எவ்வாறு செயல்படுவது என்பதை ஆண்டவரின் ஊழியரைப் பற்றிய மூன்றாம் கவிதையில் எசாயா (எசா 50:5-9)  அழகுறக் குறிப்பிடுகிறார். எசாயா குறிப்பிடும் ஆண்டவரின் ஊழியரின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது, அவருக்கு எதிர்ப்புகள் வரும் (மோசே); பல வழிகளில் துன்பங்கள் வரும் (எரேமியா); இருப்பினும், அவர் ஆண்டவரின் வார்த்தைகளை மக்களுக்குக் கொடுப்பார்; அதன் வழியாக அவர்களைக் கடவுள் சார்பில் ஊக்குவிப்பார்; அவர் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பார்; ஆண்டவரின் குரலைக் கேட்க எப்போதும் தம் செவிகளையும் மனத்தையும் திறந்து வைத்திருப்பார்; துன்பங்கள் சூழ்ந்தாலும் கடவுளது விருப்பத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பார்; ஆண்டவரின் துணையும் அவருக்கு எப்போதும் இருக்கும். இந்தப் பண்புகளைப் பார்க்கும்போது, ஆண்டவரின் உண்மையான ஊழியராகிய இயேசுவின் பணியையும் வாழ்வையும் புரிந்துகொள்ள முடிகிறது.

கற்றுக்கொள்வோம்...

 சிலுவை இல்லாத சீடத்துவம் வெறுமையானது. இயேசுவிற்காக அனைத்தையும் இழக்கலாம், இயேசுவை எதற்காகவும் இழக்கக்கூடாது என்பதை உணர்வோம்.   

 இயேசுவை நம்பி, அவரோடு பயணிக்க, அவரைப் போல் வாழ, துயருற்றாலும் துணிந்து பின் தொடர, நமது வாழ்வுப்பாதையை மாற்றியமைப்போம்.

 வெறும் அலங்கார வார்த்தைகளால் தேவையிலிருப்போருக்கு ஆறுதல் கூறாமல், அவர்களின் குறைகளை நீக்க நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முற்படுவோம்.