Namvazhvu
தெய்வீகத்  தடங்கள் - 11 என் பெயர் சொல்ல வேண்டாம்!
Thursday, 19 Sep 2024 10:59 am
Namvazhvu

Namvazhvu

மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டதான சக்திமிக்கமின்னலாலும் இடியாலும்நான் நள்ளிரவில் திடீரென்று எழுப்பப்பட்டேன்அன்றொரு நாள் யாரோ கேட்டார்கள்இரவு எப்படி? தூங்க முடிந்ததா?’

போதுமான இடிமுழக்கமும், வானில் நெருப்பு அம்புகளும் விரைவில் மழை இருக்கும் என்பது விடை! குழம்பி அவன் கண்கள் இடப்பக்கம் திரும்பின. தோளைச் சிலிர்த்து இன்னும் மேகங்கள் இல்லை. மன்னிக்க! புவி அதிர்ச்சிகளால் ஆடுவது போல என் உடலில் தோள் முதல் விரல்கள் வரையில் ஒழுங்கற்று உச்சக்கட்ட வேகத்தில் ஓடும் உணர்வுகளைச் சொற்களாக்கவே இந்த உருவகம். இருண்ட மேகங்களை மின்னல் ஊடுருவதுபோல, கொடுமையான இடி மேகங்களை உரசுவதுபோல உள் நரம்புகளும் தமனிகளும் நசுங்கி நடுங்கி கைகளில் இடி இறங்கும்.

இந்தத் தாக்குதலைச் சமாளிக்க வழி தெரியாமல் என் மனம் கொந்தளிக்கும், கையை நசுக்குறச் செய்த என் நிலையைச் சபித்து, ‘வலக்கை இல்லாமலிருந்தாலே நலமோ?’ என்று எண்ணும். ஐயோ! தாங்க முடியாத வலி உணர்வு! பிறகு யாரோ என்னை வன்முறையாய் மேலே தள்ளி, என் கழுத்தைப் பிடித்து மேலே எறிவதுபோல உடல் எந்திரம் இயக்கத்தை மாற்றுகிறது. திடீரென்று தோன்றிய அதிர்ச்சி என் தலையைத் திருப்புகிறது. ஆட்டம் காணும் உடல் படுக்கையில் அமர்கிறது. என் முழங்காலைத் தலை தொட சம்மணமிடுகிறேன். பற்கடிப்புத் தாடையை  ஒடுக்குகிறது. திரும்பத் திரும்ப அதிர்ச்சியில் முதுகு குனிகிறது. வலது தோள் இரு பக்கமும் சுற்றுகிறது. இடது விரல்கள் வலது மணிக்கட்டை அழுத்துகின்றன. ஆழ்ந்த பெரு மூச்சு! வியர்வை கொட்டுகிறது. இடது உள்ளங்கை இடது தோளைத் தேய்க்கிறது. மூச்சுக் காற்றை ஊதி மூச்சுத்திணறி வலி உணர்வுகளோடு பேசுகிறேனோ? அப்படியானால் எல்லா வலிகளையும் விலக்க முடியாதா?

வலியின் கொடூரம் சிறிது நேரம் வாட்டுகிறது. வாழ்க்கை வீண் என்று எண்ண வைக்கிறது. மனம் அச்சுறுத்தும் எண்ணங்களால் குழம்ப, அவற்றில் எதுவும் என் வேதனையைக் குறைக்கவில்லை. அவ்வேளை நான் ஆறுதலுக்குக் கடவுளையே நாடுகிறேன். அவர் ஒருவரே என் தடத்தைச் சீராக்க முடியும்! என்னிலுள்ள நம்பிக்கை என்னை அறிக்கையிடச் செய்கிறது. அவரிடம் நான் பணிவோடு உரைக்கிறேன்: “இதுவரையில் நடந்தவற்றிற்கும், இனி நடக்கவிருப்பவற்றிற்கும் நன்றி!”

ஆம், இப்போதைக்கு எனது வலக்கையில் உணர்வு தோளிலிருந்து முழங்கை வரையில் இருக்கிறது. தோளைச் சுற்றவும், கையைத் தூக்கவும் ஓரளவு முடிகிறது. முழங்கையிலிருந்து விரல் நுனிகள் வரையில் உணர்வு இல்லை. கை ஏறத்தாழ உயிரற்று இருந்தாலும், என்னால் துன்பத்தில் துடிக்கும் வலியை உணர முடிந்தது.

வலிக்கு மூன்று காரணங்கள்முதலாவது, உணர்வு செல்களின் வளர்ச்சியை மூளை அறிந்து கொள்கிறது; அதனால் வலி. அடுத்து, மூளை கைகளுக்கு இடுகிற கட்டளைகள் கை இல்லை என்ற செய்தியுடன் திரும்பி மூளைக்கே வருவதால் ஏற்படும் வலி. மூன்றாவதாக, கைக்குள் இருக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்வதற்காக அறுபட்ட நுண் நரம்புகள் போராடுகின்றன. இந்தக் காரணங்கள் அனைத்தும் சேர்ந்து துன்பம் தரும் வலியை ஏற்படுத்துகின்றன. வலி நோய்க்குறிகள் ஏற்படுத்தும் துன்பம், அவற்றைக் குறைக்க எந்த மருந்தும் இல்லாத நிலையில், அவற்றைச் சமாளிக்க என்னை வேறு மாற்று அணுகுமுறைகளைத் தேடச்செய்தது. வலியை மேலாண்மை செய்ய என்ன மாற்று வழிகள்? யுத்திகள்?

மேல் கை நரம்புப் பின்னல் சேதமடைவதால் அல்லலுறும் நோயாளிகளின் வாழ்வு நிலையில் வலி ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். இது ஒரு நரம்பு நோய். இதனால் தொடுதல் உணர்ச்சி  போய்விடும்; வெப்பம், குளிர்ச்சி ஆகியவற்றை உணரும் சக்தி இருக்காது. மேலும், வலி விடாமல் இருப்பதால், நோயாளியை எங்கேயாவது தள்ளிவிடும். ஆகவே வாழ்க்கையின் தன்மையை உயர்த்த வேண்டியது இன்றியமையாதது.

அறுவை சிகிச்சைகளின்போது பொது மயக்க மருந்து கொடுத்த நேரங்களில் மட்டும்தான் நரம்பு நோய்க்கான வலியிலிருந்து விடுதலை கிடைக்கும். மயக்க மருந்தின் தாக்கம் குறைந்த உடன் நான் பழைய நிலைக்கே திரும்பி விடுவேன்.

எனவே, முதலாவதாக, வலியின் மெய்நிலையைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் என்னுடைய ஆழமான இறை அனுபவத்தை முன்னிறுத்தினேன். அது முதலில் எளிதானதாக இல்லை. ஏனென்றால், வலியில் அப்படிச் செய்ய முடியவில்லை. துன்புறுதலை என்னுணர்வோடு இணைத்துப் பார்க்க முடிந்தாலும், அதிலேயே என்னை அடையாளப்படுத்தி எதிர்வினை ஆற்ற முடியவில்லை. என்னுடைய செப வாழ்க்கை, இறை வார்த்தை, இயேசுவின் வாழ்க்கை, என்னுடைய பக்தி முயற்சிகள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் இயைந்து செயலாற்றி, நான் யோபுவினுடைய வழி முறைகளைப் பின்பற்ற எனக்கு உதவின. கேள்வி கேட்டலிலிருந்து பணிந்துபோதல், ஐயத்திலிருந்து நம்பிக்கை, பகுத்தறிதலிலிருந்து புரிதல் என்ற நிலைகளை ஒவ்வொன்றாகக் கடந்தேன். இவ்வாறு கடவுள் ஓர் அதிர்ச்சி தாங்கியாக (shock absorber) இருந்து, என் வாழ்க்கையின் அதிர்ச்சி அலைகளை ஏற்கவும் குறைக்கவும் செய்தார்.

என்னுடைய இடர்ப்பாடுகளின்போது கடவுளுக்கு நன்றி செலுத்துமாறு செய்ய எனது நம்பிக்கை முக்கியப் பங்கு வகித்தது. கடவுள் எனது மருத்துவர், என்னைக் குணமாக்குபவர் என்றும், அவரையே நான் சார்ந்திருக்க வேண்டும் என்றும் நான் அறிந்துகொண்டேன். இச்செயல்பாடுகளில் எனது நம்பிக்கைகள் உறுதிபெற்றன. நானே எனக்குள், ‘கடந்த 41 ஆண்டுகளாக, கடவுள் எனக்கு நல்ல சுகத்தைக் கொடுத்திருக்கிறார். அதனை முழுவதுமாக நான் அனுபவித்திருக்கிறேன். இப்போது என் வாழ்வில் வலி என்னும் கட்டத்தைக் கடந்து செல்வேன், சிலுவையை அனுபவிப்பேன்என்று சொல்லிக் கொண்டேன். புனித இஞ்ஞாசியார், புனித பாத்ரே பியோ, புனித அல்போன்சா ஆகியோரின் வாழ்க்கை என் வாழ்வில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்திற்று.

நான் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு மிக உயர்ந்த அன்பினால் நான் சூழப்பட்டிருந்தேன் என்பது எனக்குக் கிடைத்த ஆசிர்! எனது தேவைகளைக் கவனித்துக் கொண்ட என் உடன்பிறந்தோர், அறிமுகம் இல்லாதவர்கள் உள்பட பலரின் வேண்டுதல்கள், என்மேல் அக்கறை கொண்டோரின் உற்சாக மொழிகள் எல்லாமே நேர்மறையாக உறுதி சொல்வதற்கான சக்தியை அனுபவிக்கும் பயணத்தை மேற்கொள்ள உதவின. எனது உடல் முழுவதிலும் நான் நேர்மறை அதிர்வுகளை அனுப்புகிறேன் என்பதை என்னால் உணரத் தொடங்கினேன். இதனால் எதிர்மறை எண்ணங்கள் வராமல் அணைபோட முடிந்தது. எனது நன்மைத்தனத்தை வறண்டுபோகச் செய்பவற்றையும் மனிதரையும் நான் தவிர்த்தேன். இது நன்றியுள்ள வாழ்க்கையை வாழவும் காணவும் முதல் முக்கியபடி என்பதை அறிந்தேன்.

குறை சொல்வோர், முனகுவோர், வருங்காலத்தில் நம்பிக்கை இல்லாதோர், புலம்புவோர், இரக்கத்தையும் கருணையையும் நாடுவோர், நல்லதையே காணாதோர் இவர்களின் இடத்தை நான் எடுப்பதைத் தவிர்த்தேன். எனது செபத்தில், ‘நான் ஆண்டவரின் அருமைப் பிள்ளை, என்னுடைய இந்த நிலையிலும், இப்போதும் எப்போதும் கடவுள் என்மேல் மகிழ்ச்சி கொள்கிறார்என்பதை நான் அறிந்து கொண்டேன். இந்த அறிவு எனக்கு ஆழ்ந்த ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது. என்னைச் சுற்றி இருந்தவர்களாலும் இந்த அதிர் வலைகளை உணர முடிந்தது. ஏனென்றால், அவர்களிடத்தே இறைவன் தனிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தார்கள்.

கடவுள் என் துன்பத்தில் பங்கு கொள்கிறார்’, ‘எந்தப் பகையையும் இறைவன் அருளால் நானே வெற்றி கொள்வேன்’, ‘வலி என்பது கடந்துபோகும் ஒரு மெய்நிலை’, ‘மருத்துவச் சிகிச்சைகளின் போதும், அறுவை சிகிச்சைகளின் போதும் கடவுள் என்னோடு இருக்கிறார்’, ‘வலி என்னை நசுக்கி விடமுடியாது; ஏனென்றால், இயேசு சாவை வென்றவர்போன்ற எனது நம்பிக்கை நிறைந்த வாசகங்கள் என் முன்னால் இருந்த சூழலில், வாழ்க்கையை முழுமையாக வாழ வழியமைத்துத் தந்தன. அச்சம், விரக்தி, மனவழுத்தச் சிந்தனைப் போக்குகள் ஆகியவற்றை வெற்றி கொண்டேன்.

அண்மையில் 13 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது நான் அச்சம் கொள்ளவே இல்லை. நாள்கள் செல்லச் செல்லகடவுள் தமது படைப்பில் தொடர்ந்து செயலாற்றுகிறார்; அது மட்டுமல்ல, என் தனி வாழ்க்கையில் அவர் செயல்படுகிறார்என்ற எனது உறுதிப்பாடு இன்னும் ஆழமானது.

சினம் கொள்வதோ, கசப்படைவதோ வலியை விரட்டப் போவதில்லை. நீ அருளோடு எளிதாக வாழ்க்கையின் அறைகூவல்களை ஏற்கக் கற்கும்போது, அது தானாகவே போய்விடும்என்றார் லியான் பிரவுன். இவ்வாறுதான் வாழ்க்கையின் பேரிடர்பாட்டின்போது கவலையின்றி இருக்க ஆழமான நம்பிக்கையும், கடவுள் தரும் பாதுகாப்பின் நம்பிக்கையும் எனக்கு உதவின.

மூன்றாவதாக சிரிப்பு. ‘சிரிப்பு மிகச்சிறந்த மருந்துஎன்று சொல்லப்படுகிறது. ‘இடுக்கண் வருங்கால் நகுகஎன்பார் வள்ளுவர். சிரிப்பு நமக்குப் பல நன்மைகளைச் செய்கிறது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் இருக்கின்றன. வலியைக் குறைக்கிறது. உடல் நலிவினைப் பொறுத்துக்கொள்ள உதவுகிறது. நம்மைச் சுற்றிலும் ஒரு நேர்மறையான உணர்ச்சிச் சூழலை ஏற்படுத்துகிறது அல்லது மீண்டும் கொண்டு வருகிறது. அவற்றோடு இரத்தக் குழாய்கள் சிறப்பாக வேலை செய்ய உதவுகிறது. என்னுடைய அனுபவத்தில், நகைச்சுவைக் காட்சிகள், ஜோக்குகள், வேடிக்கை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பது எனது வலியைக் குறைத்ததைக் கண்டேன். அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது எனது கவனம் வலியிலிருந்தும், வலியின் நோய்க் குறிகளிலிருந்தும் திருப்பப்படுகிறது. என்னுள்ளே ஒரு நேர்மறைச் சக்தி பரவுகிறது

(தொடரும்)