Namvazhvu
சிறுகதை ம(பு)னித யாத்திரை
Thursday, 19 Sep 2024 11:34 am
Namvazhvu

Namvazhvu

இருதயம்மா, …இருதயம்மா...”… என்று அழைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் எதிர்வீட்டுப் பெண் சுமதி. அப்போது புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழா திருப்பலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதனை அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடியே பக்தி பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் இருதயம்மா. எனவே, அவரை மற்றொரு முறை அழைக்க விரும்பாத சுமதி சிறிது நேரம் வாயில் அருகே நின்றுவிட்டு அமைதியாகத் திரும்பிச் சென்றுவிட்டாள்.

மறுநாள் காலை வீட்டு வாசலில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார் இருதயம்மா. அப்போது அங்கு வந்த சுமதி, “அம்மா நேத்திக்குச் சாயங்காலம் உங்களோட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். நீங்க பக்தியோடு பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருந்ததால நான் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பலை. அதனால பேசாம திரும்பி வந்துட்டேன். அம்மா,… இப்ப நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்டா நீங்க ஏதும் தப்பா எடுத்துக்கமாட்டீங்களே?” என்றாள்.

இப்போது பூப்பறிப்பதை முடித்து வீட்டினுள் போக எத்தனித்த இருதயம்மா, “வா, உள்ளே சென்று பேசலாம்என்றபடியே அங்கு செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்த கணவர் செல்வராஜின் அருகில் அமர்ந்தாள்

அம்மா, வருசா வருசம் வேளாங்கண்ணிக்குப் பாதயாத்திரை போவீங்களே, இந்த வருடம் ஏன் போகவில்லை?” என்று கேட்டபடியே எதிரில் இருக்கும் மற்றொரு இருக்கையில் சுமதியும் அமர்ந்தாள்.

சுமதி, உனக்குத்தான் தெரியுமே... B.E. படிச்சு முடிச்சு நாலு வருடமாகியும் என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கலன்னு.…அதோடு ரொம்ப நாளா வரன் தேடியும் என் கடைக்குட்டி மகளுக்கும் ஏற்ற வரன் அமையலஇதற்காக வேண்டுதல் வெச்சுதான் இரண்டு வருடம் பாதயாத்திரை போனோம். ஆனாலும் எதுவும் நடக்கல. இப்படியிருக்க சில நாள்களுக்கு முன் நான் கலந்து கொண்ட நவநாள் திருப்பலி ஒன்றில் மறையுரையாற்றிய ஒரு குருவானவர், ‘சகோதர சகோதரிகளே, எவ்வளவுதான் நீங்கள் வேண்டுதல் வைத்து கால்கடுக்க நடந்து திருயாத்திரை மேற்கொண்டாலும், நமக்கு ஏன் புதுமைகள் நடக்கல? வருடா வருடம் பாதயாத்திரை போறோம். ஆனால், ஏன் நம் குறைகள் இன்னும் தீரலேன்னு புலம்புகிறீர்களா? அப்ப உங்ககிட்டதான் ஏதோ குறையிருக்குன்னு புரிஞ்சுக்கோங்க. உங்கள் விண்ணப்பங்கள் நிறைவேறாமல் போவதற்கான தடைகள் இறைவனிடத்தில் இல்லை, உங்ககிட்டதான் இருக்கு. பெற்ற தாய், தான் சமைத்த உணவைப் பசியோடு காத்திருக்கும் தன் பிள்ளையின் தட்டு அழுக்காக இருந்தால் அதில் பரிமாறுவாளா? ‘போய் தட்டை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு வா, சாப்பாடு தருகிறேன்என்றுதானே கூறுவாள்? அதனால பொறாமை, காய்மகாரம், புறணிப் பேச்சு, சண்டை சச்சரவு, வஞ்சகம், சூழ்ச்சி இதுபோன்ற அழுக்குகளை மனத்தில் கொண்டு நீங்கள் மேற்கொள்வது புனிதப் பயணங்கள் அல்ல; அவை இறைவனின் பார்வையில் வெறும் மனிதப் பயணங்களேஎன்று கூறினார். இப்படி அவர் கூறியது என் குறைகளைச் சுட்டிக்காட்டி, எனக்காகவே பிரசங்கம் வைத்த மாதிரியே இருந்தது. மறையுரையில் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்பளார்னு என் மனத்தில் அறைந்தது. அதனாலே அன்றைக்கே நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.

பல வருடங்களாகச் சண்டை போட்டு பேச்சு வார்த்தையில்லாமல் இருந்த என் நாத்தனார் கிட்ட, நானே முன்வந்து பேசி சமாதானம் செஞ்சுகிட்டேன். மாலை நேரங்கள்ல மெகா சீரியல் பார்க்கறதை விட்டுட்டு, பக்கத்திலிருக்கும் ஆலயத்தில் தினமும் நடைபெறும் திருப்பலியில் கலந்துக்குறேன். அதோடு என்னால் கவனிக்க முடியாது என்று முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த எண்பது வயதான என் மாமியாரையும் வீட்டுக்குக் கூட்டிவரச் சொல்லியிருக்கிறேன். எல்லாத்துக்கு மேல கூட்டுக்குடும்பமாக என்னோடவே இருக்கும் என் மூத்த மருமகளை அனாவசியமாகக் குறை சொல்லி, குற்றம் கண்டுபிடிச்சு அவளைப் பற்றி அக்கம்பக்கத்தில் புறணி பேசுவதையும் நிறுத்தி விட்டேன். அதோடு அவளையும் என்னோட மற்றொரு மகளா நினைத்து நேசிக்க ஆரம்பித்திக்கிறேன்என்று இருதயம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடையில் குறுக்கிட்ட செல்வராஜ், “சுமதிம்மா, நானும் இத்தோட வட்டிக்கு விடறதை நிறுத்தியதோடு, குடிக்கிறதையும் விட்டுட்டேன்என்று கூறியவர் மேலும் தொடர்ந்தார்.

இப்படி எங்களிடம் களைய முடியாத குறைகள் இன்னும் நிறைய இருக்கு. அவற்றையெல்லாம் நிறைவாக்கிய பிறகே, மனநிறைவோடு நடை பயணம் மேற் கொள்வதாக இருக்கிறோம். அடுத்த வருடம் நிச்சயம் அது எங்கள் நன்றிப் பயணமாகவும் இருக்கும்என்றார்.