Namvazhvu
தமிழ்நாடு சமூக நீதியின் தாயகம்!
Friday, 20 Sep 2024 06:27 am
Namvazhvu

Namvazhvu

தேசத்தில் - சமூகத்தில் பிறப்பால் மறுக்கப்படுகிற கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள். இதைச் சமத்துவப்படுத்த ஒரு நீதி வேண்டும். அதில் சமூக சமத்துவம் முக்கியமானது. சமநீதி  என்பது அடிப்படையானது. அது பெரும்பாலான விளிம்பு நிலை மக்களின் வாழ்வுரிமை. சமூக நீதி  என்பது காலத்தின் கட்டாயம். அன்றும் இன்றும் மூன்று சதவிகித மக்களாகிய குறிப்பிட்ட  வகுப்பினர், தேசத்தில் ஆதிக்கம் செலுத்துகிற அவலம். கல்வியிலும், ஆட்சி அதிகாரப் பதவிகளிலும் கோலோச்சும் தேச, சமூகச் சூழல். தற்கால உதாரணங்கள், ஒன்றிய அரசுத் துறைச் செயலாளர்கள், நீதிபதிகள், ..டி.கள், .பி.எம்.கள், மத்திய பல்கலைக்கழகங்கள்.

மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதியை, சமூக நீதி மீட்டெடுத்தது. சமூக நீதியின் ஆதாரப் புள்ளி இட ஒதுக்கீடு. 1921- ஆம் ஆண்டு முதல்  இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை, எதிர்கொண்ட சோதனைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், போராட்டங்கள், உயர்- உச்ச நீதிமன்ற வழக்குகள் ஆகிய எத்தனை எதிர்நீச்சல்கள்இன்றும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீதிமன்றங்கள் என்ற பெயரில்  கொடுக்குக் கத்தி, தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு எவ்வளவு முக்கியமானது என்பதற்கு அதன் நீண்ட, நெடிய நூற்றாண்டு வரலாறே சாட்சி. இட ஒதுக்கீட்டை ஏன் தொடர்ந்து பேண வேண்டும்? பேச வேண்டும்? என்பதற்கு, அது கடந்து வந்த முள்பாதையே, அதன் முக்கியத்துவத்தைக் கூறும்.

இருபதாம் நுற்றாண்டு துவக்கத்தில் விடுதலைப் போரின் வெப்பத்தில் தேசம் எரிந்து கொண்டிருந்த நேரம். தேச விடுதலையோடு, சமூக விடுதலையும் வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தன. அன்றைய சென்னை மாகாணத்தில், மதராஸ் பட்டினத்தில்பிராமணரல்லாதோர் சங்கம்என்ற அமைப்பு தோன்றியது. அது தென்னிந்தியர் நல உரிமை சங்கமாக மாறியது. அதன் அதிகாரப்பூர்வ ஏடாகஜஸ்டிஸ்பத்திரிகை இருந்தது. அவர்கள் கட்சிப் பத்திரிகை பெயரையேஜஸ்டிஸ் பார்ட்டிஎன்ற பெயரில் அரசியல் கட்சியாக உருவாக்கினார்கள். 1920-இல் ஆட்சியைப் பிடித்தார்கள். இன்றைய திராவிடக் கட்சிகளின் தாய்க் கட்சிதான் இந்த  நீதிக்கட்சி.

1921 -இல் இட ஒதுக்கீட்டின் முதல் வகுப்புவாரி ஆணையை (எண் 613) வெளியிட்டார்கள். கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் கட்சி வகுப்புவாரி ஆணையை எதிர்த்தது. தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு நிலைபாட்டைப் புறந்தள்ளி, பல காரணங்களில் இதுவும் ஒரு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

1928 -ஆம் ஆண்டு வகுப்புரிமை ஆணை சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பிராமணர் அல்லாதோருக்கு 44 சதவிகிதமும், பிராமணர்களுக்கு 16 சதவிகிதமும், முஸ்லிம்களுக்கு 16 சதவிகிதமும், ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு 16 சதவிகிதமும், பட்டியலின மக்களுக்கு 8 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டன. மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற மொழி பாகுபாடும் களையப்பட்டது.

1947 -இல் சுதந்திரம் கிடைத்தது. அரசியல் சாசனச் சட்டம் வடிவு பெற்ற வேளை. 1951-ஆம் ஆண்டு. அவர்கள் வழக்கம் போல அன்றும், இன்றும்அவாள்கள்கோலோச்சும் நீதிமன்றக் கதவுகளைத் தட்டினர். தங்களது சமவாய்ப்பை வகுப்புரிமைச் சட்டம் பாதிக்கிறது என்றார்கள்.சென்னை உயர்நீதி மன்றத்தில் வகுப்புரிமை அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தீர்ப்பு கேட்டபடி எழுதப்பட்டது. போராட்டங்கள், கலவரங்கள் வெடித்தன.

1951, மே 12 அன்று அரசியல் சாசன முதல்  சட்டத்திருத்தம் அன்றைய பிரதமர் நேருவால் கொண்டு வரப்பட்டது. இட ஒதுக்கீடு முறை பிழைத்தது. அன்று பேசிய பிரதமர் நேருசென்னை மாகாணத்தில் நடந்த போராட்டங்களே அரசியல் சாசனத் திருத்தத்திற்கான காரணம்என்றார். அப்போதைய சென்னை மாநில முதல்வரான குமாரசாமி ராஜா ஆட்சியில் 41 சதவிகித இட ஒதுக்கீடு பிராமணர் அல்லாதோருக்கு வழங்கப்பட்டது. அதாவது  பிற்படுத்தப்பட்டவருக்கு 25 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 16 சதவிகிதமும் வழங்கப்பட்டன.

1967 - தி.மு.. ஆட்சிக்கு வருகிறது. 1969 -இல் அன்றைய தமிழ்நாடு முதல்வராக இருந்த மு. கருணாநிதி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை ஆராயசட்டநாதன் ஆணையம்என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 1971-இல் சட்டநாதன் ஆணையப் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 18 சதவிகிதமும், ஆக மொத்தம் 49 சதவிகிதமாக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.

1979-ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டில் தி.மு.., தி.. போன்ற கட்சிகளின் பெரும் போராட்டங்களால்கிரிமிலேயேர்எனப்படும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை எம்.ஜி.ஆர். கைவிட்டார். அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, கட்சியில் பூசல், இட ஒதுக்கீட்டுப் போராட்டங்கள் என அசைக்க முடியாத எம்.ஜி.ஆரை ஆட்டி விட்டது.

1980 -இல் எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீட்டை 49 சதவிகிதத்திலிருந்து 68 சதவிகிதமாக உயர்த்தி விட்டார். 1990-இல் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பால் பழங்குடியினருக்குசதவிகிதம் உயர்வு பெற்று, இன்று தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 69 சதவிகிதமாக உள்ளது.

பொருளாதார ரீதியானகிரிமிலேயேர்எனப்படும் இட ஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. அது  தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்தவும் வாய்ப்பில்லை. ஆண்டு வருவாய் 8 இலட்சம், 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்திருப்போர், 1000 சதுர அடிக்குக் கீழ் வீடு என இதற்கு வரம்பு உள்ளது. இதில் அரசுத் துறையில் பணியாற்றுபவர்கள், தனியார் துறை ஊழியர்கள், மூத்தக் குடிமைப் பணி அதிகாரிகள், குருப்-1, குருப்-2 என்ற ஊதிய வரம்பு குழப்பங்கள் ஏராளம். அது மட்டுமின்றி, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டால் வைத்துக்கொள்ளும் .டபிள்.யூ.எஸ். எனப்படும் பொருளாதார ரீதியான 10 சதவிகித இட ஒதுக்கீடும் தமிழ்நாட்டில் இல்லை. இவைகள் மறைமுகமாக இடஒதுக்கீட்டு முறையை நீர்த்துப் போக வைக்கிற காரணிகளாகும்.

தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு வரலாற்றைப் பேசும் போது முக்கியமானது ஒன்று. 1979-இல் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை அறிய  அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மண்டல் கமிஷனை அமைத்தார். மண்டல் குழு பரிந்துரைகளை 1990-இல் பிரதமரான சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் நடைமுறைப்படுத்தினார். வட இந்தியா முழுவதும் கலவரங்கள் வெடித்தன. ‘ரத யாத்திரைஎன்ற அட்டூழியம் அரங்கேறியது. வி.பி. சிங் ஆட்சி கலைந்தது. சந்திரசேகர் பிரதமராகிறார். அவரையும் கவிழ்க்கிறார்கள். பிறகு சிரிக்காத சிலை  நரசிம்மராவ்  பிரதமராகிறார்.

1992 -ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. அது கிரிமிலேயருக்குச் சிபாரிசு கொடுத்துவிட்டு, மொத்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேலே போகக்கூடாது என உத்தரவு போடுகிறது. தமிழ் நாட்டில் அன்றும், இன்றும் நடைமுறையில்  உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்து விட்டது எனக் குரல்கள் ஒலிக்கின்றன. அன்று தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் ஜெ. ஜெயலலிதா. அவர் எல்லா அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை பெற்றார். சட்ட நிபுணர்களைக் கலந்துசட்ட 31-சி -இன்படி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட்டார். உடன் அட்டவணை 9-இல் இணைத்து தமிழ்நாடு இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை வலுவாக்கினார். இதனால் தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு, நீதிமன்றங்களோ, நடுவர் ஆணையங்களோ இரத்து செய்ய வழியில்லாமல், திருத்த வழியில்லாமல், சட்டமன்றத்திற்கு  உரிய மாண்பை, அதிகாரத்தைத் தக்கவைத்து விட்டார். இருப்பினும், மண்டல் குழு பரிந்துரைப்படி 27 சதவிகித .பி.சி. இட ஒதுக்கீடு ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புக்கு மட்டுமே, கல்வி நிறுவனங்களுக்கு இல்லை என்ற தீர்ப்பு வந்தது.

2004-ஆம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமராகிறார். 2007-இல் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு .பி.சி.யின் 27 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துவிட்டது.

இக்கட்டுரையின் நீளம் கருதி, உள் ஒதுக்கீடுகள், கிறிஸ்தவ இட  ஒதுக்கீடு, அது  திரும்பப் பெற்ற வரலாறு, வன்னியர் சங்கப் போராட்டம் என்பது அடுத்தக் கட்டுரையாக அமையும். தமிழ்நாடு சமூக நீதியின் தாய் மண் என்பதால் இட ஓதுக்கீடு என்பது இருக்கும் வரை  போராட்டங்களும், வழக்குகளும் இருக்கும். இது ஆரியத்திற்கும், திராவிடத்திற்குமான பெரும் யுத்தம்!