கட்டுப்பாடுகள் கடந்து பாயும் கடவுளின் அருள்!
கிரேக்க நாட்டில் பொறாமையில் வீழ்ந்தவர் குறித்துச் சொல்லப்படும் கதை இது. பல போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் ஒருவருக்கு அந்நாட்டு மக்கள் சிலையொன்றைச் செய்து, நகரச் சதுக்கத்தில் வைத்தனர். அந்த வீரருடன் பலமுறை போட்டியிட்டு, தோற்றுப்போன மற்றுமோர் இளைஞன் அச்சிலையைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமையில் புழுங்கினான். அந்தச் சிலையை உடைத்து வீழ்த்த வேண்டும் என எண்ணிய அவன், ஒருநாள் இரவு சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீதேறி, அச்சிலையைச் சுற்றிக் கயிற்றைக் கட்டினான். பின்னர், கீழே இறங்கி வந்து, தன் ஆற்றல் அனைத்தையும் சேர்த்து, அந்தக் கயிறை இழுத்தான். அந்தோ பரிதாபம்! அச்சிலை அவன்மீதே விழுந்து, அவனைக் கொன்றது. பொறாமை என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இவ்வாறுதான் அழிவைச் சந்தித்தனர் என்பதுதான் வரலாறு.
பொறாமையை எவ்வாறு புரிந்துகொள்ளலாம்? தனக்கும் பிறருக்குமான இறைவனின் திருவுளத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமைதான் பொறாமை! கடவுள் தனக்குத் தந்திருக்கும் கொடைகளைப் பார்க்க மறந்து, மற்றொரு நபருக்குக் கொடுத்திருப்பதைப் பார்த்துப் பார்த்துப் புலம்புபவன்தானே பொறாமைக்காரன்! இறைவனின் திருவுளத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாத உள்ளத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்க முடியாது.
இரும்பில் பட்ட துரு இரும்பையே அழிப்பதுபோல, நம்மில் ஒட்டிக்கொள்ளும் பொறாமை நம்மையே அழித்துவிடுகிறது. ‘சினம் கொடியது; சீற்றம் பெரு வெள்ளம் போன்றது; ஆனால், பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?’ என்கிறது நீதிமொழிகள் நூல் (27:4). பொறாமை திருவிவிலியத்தின் தொடக்கத்தில் நாம் காணும் மிகப் பழமையான தீயொழுக்கமாக உள்ளது. பொறாமை இருக்கும் இடத்தில் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும் (யாக் 3:16) என்பதற்கு திருவிவிலியத்தில் பல நிகழ்வுகளை நாம் மேற்கோள் காட்டலாம்.
முதல் பெற்றோர் கடவுள்மேல் கொண்ட பொறாமையால்தான் வளமான வாழ்வை இழந்தனர். தங்களது காணிக்கைகளைக் கடவுளுக்கு அர்ப்பணித்தபோது, ஆபேலின் காணிக்கையைக் கடவுள் ஏற்றுக்கொண்டார் என்று அறிந்து, காயின் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றது பொறாமையின் வடிவம் (தொநூ 4:8). யாக்கோபுவின் புதல்வர்கள் தங்கள் சகோதரன் யோசேப்புமேல் கொண்ட பொறாமையால் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர் (தொநூ 37:11; தானி (இ) 7:9). சவுல் தாவீதுமேல் கொண்ட பொறாமையால் தாவீதைக் கொல்லத் தேடினார் (1சாமு 18:9). பொறாமையால்தான் தலைமைக் குருக்கள் இயேசுவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர் (மாற் 15:10). யூதர்கள் பொறாமையால் நிறைந்து பவுலைப் பழித்துரைத்தனர் (திப 13:45). பொறாமையும் பகையும் பிறரைக் கொலை செய்கின்றது என்பதுதான் வரலாறு எண்பிக்கும் பாடம்.
“பொறாமை குணம் கொண்டவர்களின் முகம் எப்போதும் சோகத்துடனேயே காணப்படும். அவர்களது பார்வை எப்போதும் தாழ்ந்ததாகக் கீழ்நோக்கியே இருக்கும். எப்போதும் நிலத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பவர்கள் போன்று அவர்கள் காணப்பட்டாலும், உண்மையில் அவர்களது கண்களுக்கு எதுவும் தெரிவதில்லை. ஏனெனில், அவர்களது எண்ணம் முழுவதும் தீமையினால் நிறைந்திருக்கும். பொறாமை குணத்தை நாம் கட்டுப்படுத்தாவிட்டால், அது மற்றவர்கள் மீதான வெறுப்பை உண்டுபண்ணுகின்றது” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (புதன் பொது மறைக்கல்வி உரை, 18.02.2024).
இன்று நம்மை வதைத்து வரும் பொறாமை என்ற நோயைக் குறித்துச் சிந்திக்கவும், இந்த நோயைக் குணமாக்கும் வழிகளைக் கற்றுக்கொள்ளவும் நமக்கு நல்லதொரு வாய்ப்பளிக்கின்றது இன்றைய ஞாயிறு வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் கட்டளைக்கேற்ப மோசே எழுபது பேரை அழைத்து அவர்களுக்கு ஆவியை அளிப்பதும், ஆவி அவர்கள்மேல் இறங்கி அவர்கள் இறைவாக்கு உரைப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். ஆனால், இக்கொடைக்கு அழைக்கப்பட்ட எல்தாது, மேதாது என்ற இருவர், மோசேயிடமிருந்து நேரடியாக வராமலேயே ஆவியைப் பெற்று இறைவாக்கு உரைப்பது யோசுவாவுக்கு ஒருவிதத்தில் பொறாமையை ஏற்படுத்துகின்றது. எனவே, யோசுவா அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி மோசேயிடம் விண்ணப்பிக்கிறார். அதற்கு மோசே அளிக்கும் பதில் மிக அழகானது: “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு” என்கிறார் (எண் 11:29). கடவுளின் அருள்பெருக்கிற்கு மனிதன் தடை விதிக்க முடியுமோ? தமக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமும் இருந்த வல்லமை மற்றவர்களிடமும் விளங்கியதைக் கண்டு மோசே பொறாமை அடையாது மகிழ்ச்சி அடைகிறார்.
அதே வண்ணம், இன்றைய நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் தங்கள் குழுவைச் சாராத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, பொறாமையால் அவரைத் தடைசெய்ய முயன்றனர். ஆனால், இயேசுவோ ‘தடுக்கவேண்டாம், ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்’ என்கிறார் (மாற்கு 9:39) நல்லது செய்பவர்கள்மீது பொறாமை கொண்டு தடுக்க நினைப்பது தவறு எனச் சுட்டிக் காட்டுகிறார்.
இவ்விரு நிகழ்வுகளிலும், பொறாமையால் தூண்டப்பட்டவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்; மாறாக, இறைவனால் அழைக்கப்பட்ட கடவுளின் பணியாளர்கள் என்ற உண்மை நமக்கு வேதனையை அளிக்கிறது. அத்துடன், இறைவாக்குரைத்தல், இறைவன் பெயரால் பேய்களை ஓட்டுதல் ஆகிய புனிதமான பணிகளிலும் பொறாமை நுழையக்கூடும் என்பது ஏற்கவேண்டிய உண்மை.
பொறாமையின் வேர் என்பது எது? தன்னை ஏற்றுக்கொள்ள இயலாமைதான் பொறாமையின் வேர். அதாவது, எப்போதும் என்னைப் பற்றிய ஆழ்ந்த அதிருப்தி எனக்குள் இருந்தால், எனக்குக் கடவுள் தந்ததைச் சரிவரப் பார்க்கத் தோன்றாது. ‘எனக்கு என்ன இருக்கிறது?’ என்ற விரக்திநிலை மற்றோர் ஆள்மீது நிலைக்கிறது. பொறாமைக்காரர்களின் பார்வையெல்லாம் தனக்கில்லாத ஒன்றைப் பெற்றவர்மீதே இருக்கும். பொறாமைப்படுபவர்கள் எதார்த்தத்தைப் பார்ப்பதற்குத் திறனற்றவர்களாகவே இருப்பர்.
பொறாமை என்ற உணர்வின் அடித்தளமாக இருப்பது, நமக்குள் நாமே உருவாக்கிக்கொள்ளும் பாகுபாடுகள். மற்றவர்களைவிட நம்மை உயர்வாகக் கருதி, ‘நாம்’ என்றும், ‘நம்மைச் சாராதவர்’ என்றும் வேறுபாடுகளை உருவாக்கும்போது, பொறாமை பொங்கியெழுகிறது. உண்மையில், அதைப்பற்றி நாம் நினைத்துப் பார்த்தால், அவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இருப்பதாகத் தெரியாது.
பொறாமை என்பது சாதி, இனம், சமயம், மொழி, நாடு என எல்லாத் தளங்களில் வாழ்வோரையும் ஈர்த்துள்ளது. பொறாமை எனும் குணத்துடன் அதிருப்தி, பேராசை, வெறுப்பு, நீங்காத துயரம், வீண்பெருமை, வீண் சந்தேகம்... ஆகியவை இணைந்தே செல்கின்றன. பொறாமை எனும் நோய்க்கு எந்த அளவுக்கு ஆற்றல் என்றால், அது வீட்டுக்குள்கூட புகுந்து தாக்கும். குடும்பத்தையும், சகோதர உறவையும் நட்பையும் கடந்து அருள்பணியாளர்கள், துறவியர்கள், போதகர்களையும் பொறாமை விட்டுவைப்பதில்லை. ஆகவே, பொறாமை மற்றவரைத் தவறாகத் தீர்ப்பிடுவதற்கும், போட்டி மனப்பான்மைக்குள் நுழைவதற்கும், புறணி பேசுதலில் நம்மையே உட்படுத்துவதற்கும் இட்டுச் செல்லும். எனவே, இது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க இயேசு நம்மை அழைக்கிறார்.
இன்று நம்மையே அழிக்கும் பொறாமை எனும் தீயொழுக்கத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? முதலில், கடவுள் வழங்கும் அருள், ஆசி, கொடை ஆகியவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாது என்றெண்ணும் பரந்து விரிந்த உள்ளத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். காற்று விரும்பிய திசையில் வீசுவதுபோல, கடவுளின் அருளும் கட்டுப்பாடுகள் கடந்து பாயும். நமது எதிர்பார்ப்புகளையும் தாண்டி பல்வேறு முறைகளில் ஆவியின் கொடையை அனைவரும் பெற்றுக்கொள்கின்றனர். யாவரும் இறைவாக்கினரே! எனவே, நமது சுயநலக் கொள்கையைக் கடவுள்மீது திணிக்காமல், கடவுளின் திருவுளத்தை நாம் ஏற்க முன்வர வேண்டும்.
இரண்டாவது, நன்மைகள் எங்கு நடந்தாலும், யார் செய்தாலும் அதைப் பாராட்ட வேண்டும். நற்செயல்களுக்குத் தடை விதிக்காத இயேசுவின் பரந்துபட்ட பார்வையை நாமும் நமதாக்க வேண்டும். குறிப்பாக, யார்மீது பொறாமை தோன்றுகிறதோ, அவரைப் பாராட்டுவதும், அவரைப் பற்றி நன்றாகப் பேசுவதும், அவருக்காக வேண்டுதல் செய்வதும் பொறாமைத் தீயை அணைப்பதற்கான வழிகளாகும். நம் இதயங்கள் பொறாமை எனும் புழுவிலிருந்து காப்பாற்றப்படவும், அன்புநிறைந்த, ஒளிவுமறைவற்ற இதயத்தை நாம் கொண்டிருக்கவும் கடவுளிடம் மன்றாடுவோம்.
நிறைவாக, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்தைத் திரு அவை சிறப்பிக்கின்றது. 1914-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான உலக தினம் இவ்வாண்டு தன் 110-வது தினத்தைச் சிறப்பிக்கிறது. ‘கடவுள் தம் மக்களோடு நடக்கிறார்’ எனும் தலைப்பில் கொண்டாடப்படும் இந்நாளில் மோதல்களாலும் சித்ரவதைகளாலும் போர்களாலும், பொருளாதாரக் காரணங்களாலும் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்காகச் செபிப்போம். திரு அவையின் ‘நவீனகால அடையாளமாக’ இருக்கும் புலம்பெயர்ந்த நம் சகோதர-சகோதரிகளின் மீது சிறப்புக் கவனம் செலுத்துவோம்.