(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அகஸ்டின்: “மகிழ்வைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, இரண்டு காரியங்களை மனத்தில் வைத்திருப்பது அவசியம் என்று சொன்னீர்கள் தந்தையே! அவை யாவை?”
அருள்பணி: “ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலாவதாக, தற்போது நமக்குப் பிடித்ததாகவும் இன்பத்தைத் தரக்கூடியவையாகவும் இருக்கின்ற செயல்பாடுகள் பிற்காலத்தில் நமக்கு எத்தகைய விளைவைக் கொடுக்கும் என்பது குறித்த தெளிவு நம்மிடம், முக்கியமாக இன்றைய இளையோரிடம் இருப்பது அவசியம்.”
அன்புச் செல்வன்: “சரியாகச் சொன்னீர்கள் பாதர்! கிறிஸ்டினா அதிகமான நேரத்தை அலைபேசியில் செலவழிக்கிறாள். அலைபேசியால் அவள் அலைக்கழிக்கப்படுகிறாள். தற்போது அது அவளுக்கு இன்பத்தைத் தருகின்ற பொழுதுபோக்காக இருந்தாலும், காலப்போக்கில் அது உடல்நலனையும் மனநலனையும் பாதிக்கும் என்பதை நான் எடுத்துச் சொன்னாலும், அவள் கண்டுகொள்வதேயில்லை. அகஸ்டினும் நண்பர்களோடு சேர்ந்து ஊர்சுற்றுவது, திரைப்படம் பார்ப்பது, மொபைலில் அதிகமான நேரம் செலவழிப்பது என்று இருக்கிறான். இது அவனுக்குத் தற்போது மகிழ்ச்சியாக இருந்தாலும், அவன் தன் வாழ்க்கைப் பயணத்திலிருந்து விலகி, தன் எதிர்கால வாழ்வைத் தொலைத்து விடுவானோ என்று பயமாக இருக்கிறது.”
அகஸ்டின்: “தந்தையே, ஒருமுறைதான் வாழப்போறோம்; அதை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று நினைப்பது தவறா?”
அருள்பணி: “மகிழ்ச்சியாக இருக்க நினைப்பது தவறல்ல அகஸ்டின். ஆனால், இன்று நாம் மகிழ்ச்சியாக இருப்பது நாளைக்குப் பிரச்சினையாக மாறிவிடக் கூடாது என்றுதான் நானும், உன் தந்தையும் கூறுகிறோம். வாழ்வின் முன் பகுதியில் மகிழ்வைத் தேர்ந்து கொண்டதாக நினைத்த பலர், வாழ்வின் பிற்பகுதியில் வாழ்வையே தொலைத்து விட்டதாக உணர்ந்திருக்கிறார்கள். இப்போது உணர்ச்சி வேகத்தாலும், நட்புறவுகளின் தாக்கத்தாலும் (peer group pressure) நாம் செய்யும் செயல்பாடுகள், நம் எதிர்கால வாழ்வை எவ்வாறு பாதிக்கும் என்பதை உன்னைப் போன்ற இளையோர் மனத்தில் வைத்துக்கொள்வது நல்லது.”
அன்புச் செல்வன்: “தந்தையே, இங்கு ஓர் உளவியல் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மனித மூளையின் செயல்பாடுகளே மனித வாழ்வைக் கட்டுப்படுத்துகின்றன என்பது நாம் அறிந்ததே! மனித மூளையைப் பற்றிய ஒரு செய்தி இது: நிகழ்காலச் செயல்பாடுகள் மூளையின் ஒரு பகுதியால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இச்செயல்பாடுகளுக்கான எதிர்கால விளைவுகளைச் சுட்டிக்காட்டும் பகுதி மூளையின் மற்றொரு பகுதியில் உள்ளது. உளவியலாளர்களின் கருத்துபடி, இவ்விரு பகுதிகளுக்குமான நரம்புத் தொடர்புகள் (neural connections) இளையோரைப் பொறுத்த அளவில் இன்னும் வளராமலே இருக்கின்றன. எனவேதான் தற்போதைய செயல்பாடுகளின் எதிர்கால விளைவுகள் குறித்த தெளிவுகள் பெரும்பாலான இளையோரிடம் இருப்பதில்லை. இத்தகைய நரம்புத் தொடர்புகள் வளர வளரத்தான் அதிகமாகின்றன. எனவே, எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தாமல், பெரியவர்கள் சொல்வதில் உள்ள உண்மையைப் புரிந்துகொண்டு அகஸ்டினும் கிறிஸ்டினாவும் நடந்துகொள்வது நல்லது.”
கிறிஸ்டினா: “அப்பா, வழக்கம்போல ஆரம்பிச்சிட்டீங்களா! தந்தையே, மகிழ்வைப் பற்றிய இரண் டாவது காரியம் என்னவென்று சொல்லுங்களேன்.”
அருள்பணி: “வசதி என்பது வேறு; மகிழ்வு என்பது வேறு என்ற உண்மையை நாம் புரிந்துகொள்வது.”
அகஸ்டின்: “புரியவில்லை தந்தையே!”
அருள்பணி: “அகஸ்டின், கடந்த வாரம் நாம் பேசிக்கொண்டிருந்தபோது, அறிவிலும் கல்வியிலும் தற்போது கவனம் செலுத்தினால் பிற்காலத்தில் பொருளாதார வளமும், புகழும் கிடைக்கும் என்று சொன்னாய். பொருளாதார வளமும் புகழும் ஒரு மனிதருக்கு மகிழ்வைக் கொடுத்துவிட முடியுமா?”
அகஸ்டின்: “இதிலென்ன சந்தேகம் தந்தையே!”
அருள்பணி: “அப்படியென்றால், உன்னைப் பொறுத்த அளவில், இவ்வுலகில் பொருளாதார வளம் கொண்ட பணக்காரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அது இல்லாத ஏழைகள் சோகத்தோடும் விரக்தியோடும் இருக்கிறார்கள். அப்படித்தானே!”
அகஸ்டின்: (கொஞ்சம் யோசித்தவாறே) “அப்படிச் சொல்ல முடியாது தந்தையே!”
அருள்பணி: “புகழைப் பொறுத்தவரையில் அதுவே உண்மை! புகழடைந்த மனிதர்கள் எல்லாம் நிறைவாகவும், புகழைப் பெறாத மனிதர்கள் நிறைவற்றும் இருப்பதாக நாம் சொல்லிவிட முடியாது.”
அன்புச் செல்வன்: “தந்தையே, பவுலோ கொய்லோ (Paulo Coelho) என்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரின் புத்தகம் Winners Stand Alone. நாவல் வடிவில் இருக்கும் இந்தப் புத்தகத்தை வரலாற்றுத் தரவுகள் அடிப்படையில் எழுதியதாகச் சொல்லும் இந்த ஆசிரியர், புகழின் உச்சியில் இருக்கும் பல மனிதர்கள் வேதனையிலும் தனிமையிலும் போராட்டத்திலும் தள்ளாடுவதைத் தத்ரூபமாக எடுத்துரைக்கிறார்.”
மார்த்தா: “ஆக, வாழ்வை வளமாகவும் நிறைவாகவும் வாழ்வதற்குப் பொருளாதார வளமை மட்டும் இருந்தால் போதுமானதல்ல!”
அருள்பணி: “ஆம், வாழ்வை நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ இரண்டு வகையான செல்வங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, பொருள் செல்வம்; மற்றொன்று, அருள்செல்வம். பொருள் செல்வம் என்பது பணம், வசதி, பொருளாதாரம், நிலபுலன்கள், புகழ், அங்கீகாரம், பாராட்டு ஆகியவற்றோடு தொடர்புடையது.”
அகஸ்டின்: “தந்தையே, புகழ், அங்கீகாரம், பாராட்டு முதலியவைகூட பொருள் சார்ந்தவையா?”
அருள்பணி: “ஆம்! இரண்டு வகையான பொருள்கள் உள்ளன. ஆங்கிலத்தில் Gross matter, subtle matter என்று சொல்வதுண்டு. இவற்றைத் தமிழில் பருப்பொருள் மற்றும் நுண்பொருள் என்று சொல்லலாம்.”
கிறிஸ்டினா: “ஆச்சரியமாக இருக்கிறதே! இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?”
அருள்பணி: “ஐம்புலன்களில் எவையெல்லாம் உணரக்கூடிய அளவில் மட்டும் உள்ளனவோ அவற்றை நாம் நுண்பொருள் என்று சொல்லலாம். இப்புலனோடு ஏனைய புலன்கள் சேர்கின்றபோது அது பருப்பொருள் வகையைச் சார்ந்ததாகிவிடுகிறது. உதாரணமாக, புகழை நம்மால் உணர முடியும்; பார்க்கவோ, கேட்கவும் முடியாது (பிறர் பேசும்போது நாம் கேட்பது ‘புகழை’ அல்ல, புகழ்ச்சியின் வார்த்தைகளைத்தான். இரண்டிற்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன). எனவே, அது நுண்பொருள் வகையைச் சார்ந்தது. ஆனால், பணத்தையோ நம்மால் தொட்டு உணர்வதோடு, பார்க்கவும் முடியும். எனவே, இது பருப்பொருள் வகையைச் சார்ந்தது.”
அகஸ்டின்: “சரி தந்தையே, இவையெல்லாம் பொருள் செல்வங்கள் என்றால், அருள்செல்வங்கள் என்பவை யாவை?”
அருள்பணி: “அடுத்த வாரம் பார்க்கலாமே!”
(தொடரும்)