மறுமலர்ச்சி’ என்பது கத்தோலிக்கத் திரு அவையில் நிகழ்ந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் உயிர் ஆற்றல்மிக்கச் சொற்பதம். வளர் நிலையில் பயணிக்கும் ஒவ்வொரு சமுதாயமும் தன் வரலாற்றுப் பயணத்தில் சந்திக்கும் நிகழ்வுகள் ஏராளம். ஆயினும், ஒருசில நிகழ்வுகள் மட்டுமே ‘வரலாற்றுச் சிறப்புமிக்கதாக’ அடையாளப்படுத்தப்படும். அவ்வகையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கிவைத்த மறுமலர்ச்சியால் திரு அவையில் மாற்றுச் சிந்தனைகளும் செயல்முறைகளும் மலரத் தொடங்கின. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாபெரும் நிகழ்வு திரு அவையின் மாடக்கதவுகள் திறக்கப்பட, புதிய தென்றல் உலாவர வழிவகுத்தது.
பழைய பாதையில் தடத்தில் பதித்துப் பயணித்த திரு அவை புதியதொரு பாதை படைக்கவும், புதிய தடம் பதிக்கவும், தெளிந்த சிந்தனையும் கூறிய இலக்கும் கொண்டு நம்பிக்கையுடன் இறையரசு இலட்சியப் பயணத்தில் வீறுகொண்டு பயணிக்கவும் திரு அவைக்கு நல் வழிகாட்டியது இப்பொதுச்சங்கமே!
அக்டோபர் 11, 1962 தொடங்கி டிசம்பர் 8, 1965 வரை நான்கு ஆண்டுகளில் நான்கு அமர்வுகளாகக் கூடிய இப்பொதுச்சங்கம், 16 ஏடுகளைத் தந்து திரு அவைக்குப் புத்துயிர் அளித்தது. தனது அடித்தளத்தில் உறுதிகொண்டு, மாற்றமும் ஏற்றமும் கண்டு பயணித்த திரு அவை, சங்கம் முன்வைத்த மறுமலர்ச்சியை உள்வாங்கி, பல தளங்களில் பல்வேறு முன்னெடுப்புகளுக்குத் தடம் பதித்தது.
அத்தகைய முன்னெடுப்புகளில் ஒன்று ‘ஊடக வழி நற்செய்திப் பணி’. ‘வியப்புக்குரிய பல...’ என்னும் தலைப்பில், ‘சமூகத் தொடர்புக் கருவிகள்’ பற்றிச் சங்கத்தின் இரண்டாம் அமர்வில் வெளியிடப்பட்ட இந்த ஏடு, “சூழ்நிலைகளின் தேவைகளுக்கேற்ப, சமூகத் தொடர்புக் கருவிகளைப் பல்வேறு திருத்தூதுப் பணிகளில் பயன் தரும் முறையில் பயன்படுத்த திரு அவையின் மக்கள் அனைவரும் ஒருமித்த உள்ளத்தோடு திட்டமிட்டு, தாமதமின்றி முழு ஆற்றலுடன் முயல வேண்டும்” என்றும், ஆகவே “முதலில் பொறுப்புணர்வுமிக்க அச்சு வெளியீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ உணர்வில் வாசகர்களை வளரச் செய்ய உண்மையான கத்தோலிக்க அச்சுத்துறையை நிறுவி வளர்க்க வேண்டும்” (எண். 13,14) என்றும் அழைப்பு விடுத்தது.
இவ்வழைப்பை உணர்ந்த அன்றைய தமிழ்நாடு ஆயர் பேரவை, பொதுச்சங்கம் நிறைவுற்ற பத்தாம் ஆண்டின் தொடக்கத்திலேயே, அதாவது, 1975 -ஆம் ஆண்டு, சனவரி 9 -ஆம் நாள் ‘நம் வாழ்வு’ எனும் தனது முதல் அச்சு ஊடகக் குழந்தையைப் பிரசவித்தது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 60-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில், தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம் தனது 50 - ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடுகிறது என்று என்னும்போது நமது உள்ளம் பேருவகை அடைகிறது.
எந்தவொரு தனிநபருக்கும், நிறுவனத்திற்கும் ஐம்பது ஆண்டுகாலப் பயணம் என்பது பெரும் சாதனையே! ‘நம் வாழ்வு’ பயணித்த இந்த ஐம்பது ஆண்டுகளில் அது வரலாறு படைத்திருக்கிறது என்பதே உண்மை. 1975 -ஆம் ஆண்டு, அன்றைய தமிழ்நாடு ஆயர் பேரவையின் சான்றோர்களால் அச்சு ஊடகப் பணிக்கென இடப்பட்ட ‘முதல் விதை’ எனும் அந்த வரலாற்று நிகழ்வு, இன்று ஆல்போல் தழைத்து உயர்ந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது என்பதே பேருண்மை!
‘இன்றைய செய்தி, நாளைய வரலாறு’ என்பது முதுமொழி. அவ்வாறே நேற்றைய செய்தியும் இன்றைய வரலாறே! நேற்றைய வரலாறும் இன்றைய வாழ்வியலே!
வரலாறு என்பது ஏற்ற-இறக்கங்களும், வெற்றி-தோல்விகளும், இன்ப-துன்பங்களும், சாதனை-சோதனைகளும் கலந்த கலவை. ‘மாட மாளிகையில் படுத்துறங்கினாலும்; ஓலைப் பாயில் அன்றொரு நாள் உருண்டு புரண்டதை எண்ணிப் பார்ப்பவனே உண்மையான மனிதன்’ என்பார் ஈழத்துக் கவிஞன் காசி ஆனந்தன்.
‘நம் வாழ்வு’ - ஐம்பது ஆண்டுகள் தான் பயணித்த பாதையை இன்று சற்றே திரும்பிப் பார்க்கிறது. இது நந்தவனத்தில் உலாவந்த தென்றல் அல்ல; மாறாக, உறங்கும் விழிகளுக்கு வெளிச்சமாய் இருளின் பாதையில் பேரொளியாய், அடிமை வாழ்வில் உரிமைக் குரலாய், உரிமை மீட்கும் விடுதலைப் போராளியாய், ஆன்ம உணவூட்டும் ஞானப்பெட்டகமாய், உலக அறிவூட்டும் அறிவுக் களஞ்சியமாய் மலர்ந்து,… வளர்ந்து எங்கும் உலா வந்திருக்கிறது; வந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழாய், சமூக - ஆன்மிக - அரசியல் - வாழ்வியல் வழிகாட்டியாய், உலகத் தமிழ் கத்தோலிக்க இறைச் சமூகத்தின் ஒரே உரிமைக்குரலாய் வலம் வரும் இவ்வார இதழ், ‘கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்’ என்ற அறைகூவலுடன் பயணிப்பதைத் தாங்கள் அறிவீர்கள். இன்று வாசிப்போர் கரங்களிலும், வாசகத் தளங்களிலும், கல்லூரி - பள்ளி, சமூக - நூலகங்களிலும், தமிழ்நாடு அரசு நூலக வளாகத்திலும் தவிர்க்க முடியாத இதழாகப் பரிணமித்திருப்பது நமக்குப் பெருமையே!
இத்தகைய பெருமை கொள்ளும் இப்பொன்விழா ஆண்டில், இனிவரும் வாரங்களில், ‘நம் வாழ்வு’ கடந்து வந்த பயணப் பாதைகளை வாசகர்களுக்கு நினைவூட்டும் வண்ணம் ‘நம் வாழ்வின் காலச்சுவடுகள்’ எனும் புதிய பகுதி மலரவிருக்கிறது.
எம்மோடு நெடுநாள் பயணித்த மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளும், ‘நம் வாழ்வின்’ பழைய ஏடுகளிலிருந்து திரட்டப்படும் வரலாற்றுப் பதிவுகளும் இப்பகுதியை அலங்கரிக்க உள்ளன. ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கும் எதிர்வரும் இளைய சமுதாயத்தினருக்கும் இது பெரும் ஆவணமாக இருக்கும் என நம்புகிறோம். தமிழ்ச் சமூகமும், கத்தோலிக்கத் திரு அவையும் மகிழ்வுடன் தழைத்தோங்க உதவிடும் அரிய கருவூலமாக இப்பகுதி அமையும் எனவும் எதிர்நோக்கியிருக்கிறோம். ஆகவே, கருத்துக் களஞ்சியமாய் வெளிவரும் ‘நம் வாழ்வை’ அனைவரும் வாசிக்கவும், ‘நல் வாழ்வை’ சுவாசிக்கவும் வாழ்த்துகிறோம்.