Namvazhvu
06, அக்டோபர் 2024 ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு - தொநூ 2:18-24; எபி 2:9-11; மாற்கு 10:2-16
Friday, 04 Oct 2024 07:32 am
Namvazhvu

Namvazhvu

திருமணத்தின் புனிதமும் முறிவுபடாத் தன்மையும்!

திருமண உறவு நிரந்தரமானது; முறிவுபடாதது. திருமணம் ஓர் உடன்படிக்கை; ஓர் அருளடையாளம். வாழ்நாள் முழுவதும் ஒன்றித்து வாழும் ஒரு பிணைப்பு. எனவே, மணமுறிவு என்பது திருமணத்தின் நோக்கமில்லை; மாறாக, ஒன்றித்து வாழ்வதே அதன் அடிப்படை நோக்கம். ஆணும்-பெண்ணும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தும் அன்பு செய்து வாழ்வதுமே இறைவனின் திருவுளம். மனிதத்தன்மையையும் இறைத் தன்மையையும் கொண்ட திருமண வாழ்வு புனிதமானது! திருமணத்தில் கணவனையும்-மனைவியையும் இணைப்பவர் கடவுளே. எனவேதான், ‘கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்என்கிறார் இயேசு. அன்பின் அடையாளமான திருமணத்தின் புனிதத்தையும், அதன் முறிவுபடாத்தன்மையையும் போற்றிப் பாதுகாக்க நம்மை அழைக்கிறது பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு வழிபாடு.

திருமண வாழ்வு குறித்த இயேசுவின் புரட்சிமிகு போதனையை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இயேசுவின் காலச்சூழலில்திருமணம் - மணமுறிவுபற்றி அறிந்துகொள்வது அவசியம்.

இயேசுவின் காலத்தில் குடும்பம், கோவில், சமூகம் என அனைத்துத் தளங்களிலும் ஆணாதிக்கம் வெளிப்பட்டது (இன்றும்கூட!). திருமண ஒப்பந்தம் மணமகளின் தந்தையோடு, மணமகன் அல்லது அவரின் தந்தையோடு ஏற்படுத்தப்பட்டது. மணமகளும்-மணமகனும் திருமண ஒப்பந்தத்திற்குப் பிறகு அவரவர் இல்லங்களில் வாழ்வர். சில நேரங்களில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன (மத் 1:18-19). ஏறக்குறைய ஓராண்டுக்குப்பின் திருமணம் நிகழ்ந்து மணமகள், மணமகன் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் (மத் 25:1-13). திருமண வாழ்வைப் பொறுத்தமட்டில், யூதச் சமூகத்தில் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் மிக அரிதாகவே காணப்பட்டது (ஏரோது போன்ற உயர் நிலையில் உள்ளோரைத் தவிர). ஆனால், திருமண ஒப்பந்தத்தின் விளைவாக மனைவி, கணவனின் உடைமைப் பொருளாகக் கருதப்பட்டார். எனவே, மணவிலக்கு என்பது மிகவும் எளிதாகக் காணப்பட்டது. யூத மணவிலக்கு முறை என்பது இணைச்சட்டத்தின்படி (24:1) ஒருவன் அருவருக்கத்தக்க செயலுக்காகத் தன் மனைவியை முறிவுச்சீட்டு எழுதி விலக்கலாம் என்னும் நடைமுறை இருந்தது. ‘அருவருக்கத்தக்க செயல்குறித்து இருவேறு நிலைப்பாடுகளை யூதச் சட்ட வல்லுநர்கள் விளக்கினர். ‘ஷமாய்’ (Shammai) வல்லுநர்கள் பாலியல் ஒழுக்கமின்மையை அருவருக்கத்தக்க செயல் என விளக்கம் அளித்தனர். எனவே, இச்செயலுக்காக ஒருவர் மணவிலக்குக் கோரலாம். வேறு எந்தக் காரணத்திற்காகவும் ஒருவர் தன் மனைவியை விலக்க முடியாது. மற்றொரு சாரார்ஹில்லெல்’ (Hillel) வல்லுநர்கள். மனைவி சுவையாகச் சமைக்கவில்லை, முன்பின் தெரியாத மனிதரோடு பேசினாள், பக்கத்து வீட்டுக்குக் கேட்கும் அளவுக்குச் சண்டையிட்டாள்... போன்ற சின்னச் சின்ன செயல்களையும் அருவருக்கத்தக்க செயல் என விளக்கம் அளித்து மண முறிவை அனுமதித்தனர்.

மேற்கூறிய நடைமுறைகளையெல்லாம் நன்கு அறிந்த பரிசேயர் இயேசுவை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” (மாற்கு 10:2) என்ற கேள்வியைத் தொடுக்கின்றனர். மோசே யின் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற பரிசேயரின் இந்தக் கேள்வி, அவர்களின்அறிந்துகொள்ளும்ஆர்வத்தால் எழுந்தது அல்ல; மாறாக, அவரைச்சோதிக்கும்நோக்கத்துடன் எழுந்தது. திருவிவிலியத்தில் கடவுளைச் சோதிப்பது, சாத்தானின் வேலையாகக் கருதப்படுகிறது. இங்கே இந்தச் சொல் இவர்களின் பொல்லாத மனநிலையைக் காட்டுகிறது எனலாம்.

மோசேயின் சட்டங்களை நுணுக்கமாகக் கற்றவர்களுக்கு, இயேசு மோசேயின் கட்டளைகளை மற்றொருமுறை சொல்லிக் கொடுக்கிறார். மோசேயின் கட்டளைமக்களின் கடின உள்ளத்தின் பொருட்டுதரப்பட்ட ஓர் அனுமதி, விலக்கு என்று விளக்குகிறார். தொடக்கத்தில் மணவிலக்குச் சான்றிதழ் இல்லாமலேயே கணவன் தன் மனைவியை விலக்கிவிட முடியும் என்றிருந்தது. இதனால் பெண்கள் மறுமணம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த இந்த அநீதியைத் தன் சட்டத்தின் வழியாக ஓரளவு குறைக்க முயன்றார் மோசே. மனைவியை விலக்கும்போது, அந்தப் பெண் மீண்டும் தன் உரிமைகளைப் பெறுவதற்கும், மறுமணம் செய்துகொள்ளும் வகையிலும்தான்மணவிலக்குச் சான்றிதழ்வழங்கச் சொன்னார் (இச 24:1).

திருமணத்தின் புனிதத்தை உணராமல் அதை ஒரு வியாபார ஒப்பந்தம் என்ற அளவில் மட்டுமே கருதி வந்த பரிசேயர், மோசே கூறிய மணவிலக்குச் சான்றிதழை வைத்து, திருமண உறவை முறிக்க முடியும் என்று இயேசுவிடம் கூறுகின்றனர். ‘உங்கள் கடின உள்ளம்தான் மணவிலக்குக்குக் காரணம்என இயேசு மனிதர்களின் கடின உள்ளத்தின் கொடுமையைப் பற்றிப் பேசுகிறார்.

மோசே வழங்கிய சட்டத்தைவிட, திருமண மேன்மையைக் குறித்த இறைவனின் திட்டம் மேலானது என்பதைத் தெளிவுபடுத்த தொடக்க நூலை மேற்கோள் காட்டுகிறார். “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்...” (மாற் 10:6) என்ற இயேசுவின் விளக்கம், திருமணம் கடவுளால் உருவாக்கப்பட்டு ஆசிபெற்றது என்பதை நமக்கு உணர்த்துகிறது. திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும்ஒன்றித்திருப்பதும்’, ‘இருவரும் ஒரே உடலாய் இருப்பதும்’ (தொநூ 2:24) திருமணத்தின் ஒருமை மற்றும் முறிவுபடாத்தன்மை ஆகிய பண்புகளை நமக்கு நினைவுறுத்துகிறது.

இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்...” (மாற் 10:8,9) என்னும் வார்த்தைகள் திருமண வாழ்வில் ஒருமைப் பண்பை உணர்த்துகின்றன. இருவரும் ஒரே உடலாகி, ஒரே உயிராகிவிடுவதால் தங்கள் வாழ்வின் இறுதிவரை ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், பிறருக்காக வாழவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். பிரிவுக்கும் முறிவுக்கும் வாய்ப்பே இல்லை. இறப்பே அவர்கள் இருவரையும் பிரிக்க முடியும்.

முறிவுபடாத்தன்மை என்பது பழைய ஏற்பாட்டில் யாவே கடவுளுக்கும், இஸ்ரயேல் மக்களுக்குமிடையேயான முறிவுபடா உடன்படிக்கையையும், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கும் திரு அவைக்கும் இடையேயான நெருங்கிய உறவையும் இது வெளிப்படுத்துகிறது. இயேசுவுக்கும் திரு அவைக்கும் இடையே இயங்கும் அன்பு ஒவ்வொரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இயங்கும் அன்பாக மாறவேண்டும். இதுவே முறிவுபடா அனுபவம். இயேசுவின் நிலைப்பாடும் இதுவே. பரிசேயருக்கு இறைவனின் திட்டத்தை விளக்கிக் கூறியதோடு, வீட்டுக்கு வந்ததும் இயேசு மீண்டும் தம் சீடருக்கு இதை விளக்கித் தெளிவுபடுத்தியது திருமண உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

திருமண வாழ்வில் சிக்கல்கள், அகப்போராட்டங்கள் இல்லாமல் இல்லை. வெளிப்படையான உரையாடலால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உண்டோ! ஆனாலும், சின்னச் சின்ன காரணங்களுக்காகக்கூட இன்றைய உலகில், மணமுறிவுகள் ஏராளம் நிகழ்கின்றன. இன்று குடும்ப நீதிமன்றங்களில் வாடிய முகங்களுடன் விவாகரத்திற்காக வந்து நிற்கும் தம்பதியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சுயநலமும், ஆடம்பர வாழ்க்கையும் பிரிவுக்குக் காரணமாகின்றன. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமும், எப்படியும் வாழலாம் என்ற மனநிலையும் பல குடும்பங்களில் விவாகரத்துக்குக் காரணமாகின்றன. திருமண முறிவுகள் நீதிமன்றங்களில் நிகழும்போது திருப்பீடமே கண்ணீர் வடிக்குமாம்!

சில்லறைத்தனமான காரணங்களுக்காகத் திருமண முறிவுகள் மலிந்துவிட்ட இன்றைய சூழலில், ஒருவருக்காக ஒருவர் உருகித் தவித்து அன்பு செலுத்தும் தம்பதியரும் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்துள்ளனர். மிக அதிக ஆண்டுகள் திருமண வாழ்வை நிறைவு செய்திருந்த தம்பதியர் என்றுகின்னஸ்உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பெர்சி-பிளாரன்ஸ் தம்பதியர். 1925-ஆம் ஆண்டு திருமணம் முடித்த அவ்விருவரும், 2005-ஆம் ஆண்டு திருமண வாழ்வில் 80 ஆண்டுகளை நிறைவு செய்தனர். அவர்களைச் சந்தித்த பத்திரிகையாளர்கள் ‘80 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் இணைந்திருப்பதன் இரகசியம் என்ன?’ என்று கேட்டபோது,  100 வயது நிறைந்த மனைவி பிளாரன்ஸ் அவர்கள், “தூங்கப் போகும்போது நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும். அன்றைய நாளில் ஏதாவது தவறு நடந்திருந்தால்மன்னித்துக்கொள்ளுங்கள்என்று கேட்கத் தெரிந்திருக்க வேண்டும்என்றும்,  105 வயது நிறைந்த கணவர் பெர்சி அவர்கள் அமைதியான ஒரு புன்னகையுடன், “மகிழ்வான என் திருமண வாழ்வுக்கு நான் பயன்படுத்திய ஒரே ஒரு மந்திரம்ஆம் அன்பேஎன்ற இரு வார்த்தைகள் மட்டுமேஎன்றும் கூறினார்கள்.

கொஞ்ச(சு)ம் அன்பையும், கொஞ்சம் புரிந்துகொள்ளுதலையும், கொஞ்சம் விட்டுக்கொடுத்தலையும் திருமண வாழ்வில் கொடுக்கும்போதும், இயேசுவைப்போல கொஞ்சம் கணக்குச் சரியாகத் தெரியாதவர்களாக இருக்கும்போதும், திருமண வாழ்வில் உறவை வளர்க்க முடியும். நம் உறவுகளில் கணக்குப் பார்க்கும் நேரங்கள் குறைந்தால், உறவை வளர்க்கும் நேரம் மிகுதியாகும். பிறர்நலம் பேணி மகிழ்ந்தால் ஆணும் பெண்ணும் திருமண வாழ்வில் ஆனந்தத்தைக் கண்டு மகிழ முடியும். நிறைவாக, மணமுறிவுகளால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளை மறந்துவிட வேண்டாம். வாழ்க்கையின் பிரச்சினைகளைச் சமாளிக்க, வளர்ந்துவிட்ட நமக்குத் தெரியவில்லை என்றால், குழந்தைகளிடம் பாடங்கள் கற்றுக் கொள்வோம்.