Namvazhvu
திருத்தந்தையின் மறைபரப்பு ஞாயிறு செய்தி (20-10-2024)
Friday, 04 Oct 2024 08:59 am
Namvazhvu

Namvazhvu

அன்பான சகோதரரே, சகோதரிகளே!

இந்த ஆண்டின் உலக மறைபரப்பு ஞாயிறுக்குரிய கருப்பொருளாக மத்தேயு நற்செய்தியில் காணப்படும் ‘திருமண விருந்து’ உவமையைத் தெரிவு செய்துள்ளேன். திருமண விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்கள் அந்த அழைப்பை நிராகரித்து விட்டபோது, உவமையில் வரும் முதன்மைப் பாத்திரமான அரசர், தம் பணியாளர்களிடம், “எனவே, நீங்கள் போய் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” (மத் 22:9) என்று கூறுகிறார். இந்த உவமையின் சூழமைவு மற்றும் இயேசுவின் வாழ்க்கைச் சூழலை வைத்து இந்த நற்செய்திப் பகுதி பற்றிச் சிந்திக்கும்போது, நற்செய்தி அறிவிப்புப் பணி பற்றிய முக்கியக் கூறுகளை நாம் தெளிந்து தேர்ந்திட முடியும். கிறிஸ்துவின் மறைபரப்புப் பணியாளர்கள் என்ற முறையில் ‘ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைபரப்புப் பணி’ என்ற முப்பரிணாமக் குறிக்கோளுடனான கூட்டியக்கப் பயணச் சூழலில் இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்புப் பணி செய்வதில் மீள்கவனம் செலுத்த முயற்சிக்கும்போது இந்தக் கூறுகள்  பெரிதும் பயன்படுகின்றன.

1. ‘நீங்கள் போய்… அழைத்து வாருங்கள்’

மறைபரப்புப் பணி என்பது ஆண்டவர் வழங்கும் விருந்துக்கு அனைவரையும் விரைந்து அழைத்து வருவதாகும். அரசர் தம் பணியாளர்களுக்கு இடும் ஆணையில் வரும் “நீங்கள் போய்”, “அழைத்து வாருங்கள்” என்ற சொற்கள் மறைபரப்புப் பணியின் மையப் பண்பை வெளிப்படுத்துகின்றன. திருமணத்திற்கு அழைப்பு பெற்றவர்களை அழைத்துவர, பணியாளர்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டிருந்தார்கள் (காண். வ. 3-4) என்பதை நாம் நினைவுகூர வேண்டும். மறைபரப்புப் பணி என்பது எல்லாரும் இறைவனைச் சந்தித்து, அவரோடு உறவுகொள்ள, பணியாளர்கள் ஆர்வமுடன் அனைவரையும் அணுகி அவர்களை அழைப்பதாகும். ஆம், ஆர்வமுடன், சோர்வின்றி!  ஆம், அழைக்கப்பெற்றவர்கள் கண்டுகொள்ளாமல் அழைப்பை நிராகரித்தாலும், இறைவன் தம் பேரன்பிலும் இரக்கத்திலும் மானிடரை எதிர்கொண்டு சந்தித்து, இறையாட்சியின் மகிழ்ச்சியில் கலந்துகொள்ள அவர்களை இடைவிடாமல் அழைத்துக்கொண்டே இருக்கிறார்; அதற்காக ஆர்வமுடன், தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார். தந்தை இறைவனின் தூதரும் நல்லாயனுமான இயேசு கிறிஸ்து, காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் மக்களைத் தேடிச்சென்றார்; தூர விலகி நிற்கும் ஆடுகளைச் சென்றடைந்தார் (காண். யோவா 10:16). தம் உயிர்த்தெழுதலுக்கு முன்னரும் பின்னரும் இயேசு தம் சீடர்களிடம் “நீங்கள் போய்” என்று கூறிப் பணித்து அவர்களைத் தம் மறைபரப்புப் பணியில் ஈடுபடுத்துகிறார் (காண். லூக் 10:3; மாற்:16:15). தன் பங்கிற்குத் திரு அவையும் ஆண்டவரிடமிருந்து பெற்ற மறைபரப்புப் பணி ஆணைக்குப் பிரமாணிக்கமாயிருந்து, உலகின் கடையெல்லைவரை சென்றடைந்து மறைபரப்புப் பணியைத் தொடர்கிறது. சிரமங்கள், தடைகள் எதிர்ப்படும்போதும் மனந்தளராமலும் களைத்துப் போகாமலும் பணியாற்றிக்கொண்டே இருக்கிறது.

இவ்வேளையில், கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தங்களுக்கு உரிய அனைத்தையும் துறந்து, தங்கள் தாய்நாட்டினின்று புறப்பட்டு நற்செய்தியைப் பெற்றிராத அல்லது சமீபத்தில் பெற்றுக்கொண்ட பகுதிகளுக்கு நற்செய்தியைக் கொண்டு சென்ற மறைபரப்புப் பணியாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு நண்பர்களே, உங்கள் தாராள அர்ப்பணிப்பு, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28:19) என்று மொழிந்து தம் சீடர்களைப் பணித்த கிறிஸ்துவின் மறைபரப்புப் பணியின்பால் நீங்கள் கொண்டுள்ள உள்ளார்ந்த ஈடுபாட்டின் தெளிவான வெளிப்பாடாகும். உலகின் கடையெல்லைவரை நற்செய்திப்  பணிக்கென அழைப்புப் பெற்றுள்ள அனைவருக்கும் நம் நன்றியும் வேண்டுதல்களும் உரித்தாகுக.

ஒவ்வொரு நம்பிக்கையாளரும் வாழ்வின் ஒவ்வொரு சூழமைவிலும் இந்த உலகளாவிய மறைபரப்புப் பணிக்குச் சான்றுபகர அழைக்கப்பட்டுள்ளார் என்பதை மறக்கக்கூடாது. இதன் வாயிலாகத் திரு அவை, தன் ஆண்டவரும் போதகருமான கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்து, இன்றைய உலகின் எல்லாச் சூழமைவுகளையும் தொடர்ந்து சென்றடைய இயலும். திரு அவையின் இன்றைய நிலை என்னவெனில், இயேசு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டே இருக்கிறார். வெளியே இருந்து அல்ல; மாறாக, உள்ளேயிருந்து தம்மை வெளியே போகவிடவேண்டுமென்று! பல வேளைகளில் திரு அவை ஆண்டவரைச் சிறையிடுகிற திரு அவையாக, ‘ஆண்டவர் எனக்குரியவர்’ என வைத்துக்கொண்டு, அவரை வெளியே செல்ல அனுமதிக்காத திரு அவையாக மாறிவிடுகிறது. நம் ஆண்டவர், மறைபரப்புப் பணி செய்யவே வந்தார். அவரைப் போன்றே நாமனைவரும் மறைபரப்புப் பணியாளர்களாக விளங்க வேண்டுமென்றே விரும்புகிறார். எனவே, திருமுழுக்குப் பெற்ற நாமனைவரும் அவரவர் வாழ்க்கை நிலைக்கேற்ப, திரு அவை, தான் உருவான தொடக்க நாள்களில் செயல்பட்டதுபோன்றே, புதிய மறைபரப்புப் பணி இயக்கத்தைத் தொடங்கி செயல்படுத்துவோமாக.

உவமையில் வரும் அரசர் தம் பணியாளர்களிடம் ‘நீங்கள் போய்’ என்று மட்டும் கூறவில்லை; ‘திருமணத்துக்கு வாருங்கள்’ (மத் 22:4) என்று அழைப்பு விடுத்துக் கூட்டி வரவும் பணித்தார். கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள மறைபரப்புப் பணியின் மற்றுமொரு முக்கிய அம்சத்தை இங்குக் காண்கிறோம். அரசரின் பணியாளர்கள், அவர் விடுத்த அழைப்பை விரைவாக மட்டுமல்ல, அதற்குரிய மரியாதையோடும் நல்லெண்ணத்தோடும் எடுத்துச் சென்றனர். அதுபோன்றே படைப்பனைத்திற்கும் நற்செய்தி அறிவிக்கும் பணி செயல்பாட்டில் இயேசுவின் பாணியை நாமும் பின்பற்ற வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலில் வெளிப்படுத்தப்பட்ட மீட்பளிக்கும் இறையன்பின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்றும்போது மறைபரப்புப் பணியாளர்கள், தங்களில் செயல்படும் தூய ஆவியாரின் கனிகளான மகிழ்ச்சி, கனிவு, நட்பிணக்கம் ஆகிய பண்புகளுடன் செயல்பட வேண்டும் (காண். கலா 5:22); நிர்ப்பந்தித்தோ, கட்டாயப்படுத்தியோ, மதமாற்ற எண்ணத்துடனோ அல்ல; அவ்வாறின்றி உறவு நெருக்கம், பரிவிரக்கம், கனிவு ஆகியவற்றால் நிறைந்து, இறைவனுக்கே உரிய இருத்தல் மற்றும் செயல்படும் முறையைப் பிரதிபலிக்க வேண்டும்.

2. ‘திருமண விருந்துக்கு...’

கிறிஸ்து மற்றும் திரு அவையினுடைய மறைபரப்புப் பணியின் நிறைவுக் கால மற்றும் நற்கருணைசார் பரிமாணம் - திருமண விருந்து உவமையில், அரசர் தம் மகனுக்கு நடத்திய விருந்திற்கு, தம் பணியாளர் வழியாக அழைப்பு விடுக்கிறார். அந்த விருந்து நிறைவுக் கால விருந்தின் பிரதிபலிப்பே. அது, இறையாட்சியில் மலரும் இறுதி மீட்பின் நிழலாகும். இறைமகனும் மெசியாவுமான இயேசுவின் வருகையில் அது நிறைவேறியது. ஆகவேதான், தம் வருகையின் வழியாக அவர் நமக்கு நிறைவாழ்வு தந்தார் (காண். யோவா 10:10). ஆண்டவர் அளிக்கும் சுவைமிக்க பண்டங்கள் நிறைந்த மாபெரும் விருந்தில் இந்த நிறைவாழ்வு அடையாளப்படுத்தப்படுகிறது. அப்போது ஆண்டவர் என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார் (காண். எசா 25:6-8).

இயேசு தம் பணியின் தொடக்கத்திலேயே “காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி விட்டது” (மாற் 1: 15) என்று முழங்கினார். கிறிஸ்துவின் மறைபரப்புப் பணி, நிறைவுக் காலத்துடன் தொடர்புடையது என்பது இதிலிருந்து புலப்படுகிறது. தங்கள் ஆண்டவரும் போதகருமான கிறிஸ்துவின் மறைபரப்புப் பணியைத் தொடர்ந்தாற்றவே அவருடைய சீடர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, திரு அவையின் மறைபரப்புப் பணியினுடைய ஒரு முக்கியப் பண்பு, நிறைவுக் காலத் தன்மையை உள்ளடக்கியது  என்பதை இரண்டாம் வத்திக்கான் சங்கம் வலியுறுத்துகிறது. “இவ்வாறு, ஆண்டவரின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலமே நற்செய்தி அறிவிப்புப் பணிக்குரிய காலமாகும். ஏனெனில், ஆண்டவர் வருமுன் நற்செய்தி எல்லா மக்களினத்தார்க்கும் அறிவிக்கப்பட வேண்டும்.” (காண். மாற் 13:10, திரு அவையின் நற்செய்திப் பணி, எண் 9).

தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களின் மறைபரப்புப் பணியார்வத்தின் ஒரு பரிமாணம், நிறைவுக் காலம் பற்றிய போதனையை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம். நற்செய்தி அறிவிப்பின் அவசரத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இன்றும் அதே அணுகுமுறையுடன் நற்செய்தி அறிவிப்புப் பணியைத் தொடர்வது இன்றியமையாதது. ‘ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்’ என்பதை அறிந்தவர்களுக்கு, மகிழ்ச்சியுடன் நற்செய்தி அறிவிக்க, இந்த அணுகுமுறை பெரிதும் உதவும். நிறைவுக் காலமெனும் இலக்கு நோக்கி எதிர்நோக்குடன் முன்னேறிக் கொண்டிருப்போருக்கும் இது பயன் தரும். அந்த நிறைவுக் கால நிகழ்வின்போது இறையாட்சியில் வழங்கப்பெறும் கிறிஸ்துவின் திருமண விருந்தில் நாமனைவரும் பங்கேற்று மகிழ்வோம்.

மிகை நுகர் போக்கு, சுயநலத்தில் ஊறிய சொகுசு வாழ்வு, செல்வம் சேர்த்தல், தனிநபர் முதன்மையியம் என்கிற ‘பெரு விருந்துகளை’ இவ்வுலகம் நம் கண்முன் நிறுத்தி அவற்றின்மேல் பற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. ஆனால், நற்செய்தியானது மகிழ்ச்சி, பகிர்வு, நீதி, இறைவனுடனும் பிறருடனும் இயைந்த தோழமை உறவு ஆகியவற்றை உள்ளடக்கிய ‘இறைவன் வழங்கும் பெரு விருந்தில்’ பங்கேற்க அழைக்கிறது.

கிறிஸ்து தரும் கொடையாகிய நிறைவாழ்வு, நற்கருணை விருந்தில் எதிர்நோக்காக நமக்கு அருளப்படுகிறது. இதைத்தான் ஆண்டவர் தந்த ஆணையின்படி அவர் நினைவாகத் திரு அவை கொண்டாடுகிறது. நற்செய்தி அறிவிப்புப் பணியின் வழியாக அனைவருக்கும் நாம் விடுக்கும் நிறைவுக் கால விருந்திற்கான அழைப்பு, நம் ஆண்டவர் நம்மை உண்ணச் செய்யும் இறைவாக்கு விருந்து மற்றும் நற்கருணை விருந்துடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு நற்கருணைக் கொண்டாட்டமும் அருள் அடையாள முறையில் இறைமக்களின் நிறைவுக் கால கூடுகையை நிறைவேற்றுகிறது. நாம் கொண்டாடும் நற்கருணை விருந்து, இறைவாக்கினர் முன்னுரைத்த இறுதிப் பெருவிருந்தின் மெய்யான முன்சுவையாகும்” (காண். எசா 25:6-8). இதனைப் புனிதரின் உறவு ஒன்றிப்பின் மகிழ்ச்சியில் நாம் கொண்டாடவிருக்கும் புதிய ஏற்பாட்டு ‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்து’ விவரிக்கிறது (திவெ 19:9, அன்பின் அருள்சாதனம், எண் 31).

எனவே, ஒவ்வொரு நற்கருணைக் கொண்டாட்டத்தையும் ஆழ்ந்து அனுபவிக்க நாம் அழைக்கப்படுகிறோம். அதன் அனைத்துப் பரிமாணங்களுடன், குறிப்பாக, அதன் மறைபரப்புப் பணி மற்றும் நிறைவுக் காலப் பரிமாணங்களுடன். இது தொடர்பாக நான் வலியுறுத்த விரும்புவது: “எல்லா மக்களினத்தாரையும் சென்றடைய வேண்டியதும், இறைவனுடைய இதய ஆழத்திலிருந்து புறப்படுவதுமான மறைபரப்புப் பணியின்பால் கவர்ந்திழுக்கப்படாமல் நாம் நற்கருணை மேசையை அணுக முடியாது” (அன்பின் அருள்சாதனம், எண் 84).

‘கோவிட்’ பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் தலத் திரு அவைகள், அனைவரும் பாராட்டும் விதத்தில், இறைமக்களின் நற்கருணைக் கொண்டாட்ட பங்கேற்பை ஊக்குவிக்கின்றன. நம்பிக்கையாளர் ஒவ்வொருவரும் மறைபரப்புப் பணியை ஈடுபாட்டுடன் தொடர்ந்தாற்றும் ஆர்வத்திற்குப் புத்துயிரூட்ட இது மிக இன்றியமையாதது. “ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்; உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்” என்று ஒவ்வொரு திருப்பலிக் கொண்டாட்டத்திலும் அறிக்கையிடுகிறோமே, அந்த உண்மையை மிகுந்த நம்பிக்கையுடனும், உள்ளார்ந்த உற்சாகத்துடனும் அறிக்கையிடவேண்டுமல்லவா?

யூபிலி 2025 நிகழ்விற்குச் சிறப்பாகத் தயாரிக்க, இறைவேண்டுதல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் திரு அவை தொடர்ந்தாற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உங்களை அர்ப்பணியுங்கள். திரு அவை, மீட்பரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒவ்வொரு திருப்பலி மற்றும் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்திலும் ‘உமது ஆட்சி வருக’ என்ற விண்ணப்பத்தை உள்ளடக்கிய ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந் தையே’ என்கிற மன்றாட்டைச் செபிக்கத் தவறுவதில்லை. இவ்வாறு நம் அன்றாட வேண்டுதல்களும், நற்கருணைக் கொண்டாட்ட பங்கேற்பும், நம்மை எதிர்நோக்கின் திருப்பயணிகளாகவும் மறைபரப்புப் பணியாளர்களாகவும் ஆக்குகின்றன. இந்த எதிர்நோக்கோடுதான் இறைவனில் நாம் பெறவிருக்கும் நிலைவாழ்வை நோக்கி, தம் பிள்ளைகளுக்குத் தந்தை இறைவன் தயார் செய்துள்ள ‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்து’ நோக்கிப் பயணிக்கிறோம்.

(தொடரும்)