‘நம் வாழ்வு’ வெளிவருவது பற்றி மனமகிழ்ச்சி அடைகிறேன். பெயரிலே பெருமை இருக்கிறது. எனது இதயத்திற்கு நெருங்கிய உறவு இருக்கிறது. எப்படி எனில், என் ஆயர் பணியின் விருதுவாக்காக நான் தேர்ந்தெடுத்து, நானும் பின்பற்றி, பிறருக்கும் போதித்து வருவது ‘கிறிஸ்துவின் சாவு, நமது வாழ்வு.’ புனித பவுலின் இயேசு சித்தாந்தம் இதுவே ஆகும். “கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு (நாமும்) வாழ்வோம் என்பதே, நாம் கொண்டுள்ள நம்பிக்கை” (உரோ 6:8).
- மேதகு ஆயர் C.M. விசுவாசம், கோவை மறைமாவட்டம் (12.12.1975)
மதுரையில் நடந்த வெளியீட்டு விழாவிலே சிறப்பு இதழின் அட்டைப் படத்தைப் பற்றி மதுரைப் பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்கள் தந்த விளக்கம் (11.01.1976).
“சிறு குழந்தை - சிறிது தடிமனான குழந்தை - கனமானதும்தான் - என்ன பாரமாக இருந்தாலும் தாய்க்குப் பாரம் தெரியாது. குழந்தையின் கண்ணைப் பாருங்கள்! என்னதான் பொக்கை வாயைக் காட்டிச் சிரித்தாலும், மருண்ட விழிகளாகத்தான் தெரிகிறது. கீழே விழுந்து விடுவோமோ என்ற பயமாய் இருக்கலாம். ஆனால், அந்தத் தாய் பிள்ளையின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘நானிருக்க பயமேன்?’ என்று பிள்ளைக்குத் தெம்பு ஊட்டவே, அக்குழந்தை சிரிக்கிறது.
சிறு குழந்தைதான் ‘நம் வாழ்வு’; அதைத் தூக்கிச் செல்லும் தாய் நம் தமிழ்நாடு திரு அவை. சிறிது பாரமாக இருந்தாலும், வழியில் என்ன நடக்குமோ, பணம் போதுமோ? உதவி கிடைக்குமா? என்ற பயம் இதழுக்கு இருந்தாலும், தாயாகிய நாம்தாம் கை கொடுத்துத் தூக்கிச்செல்ல முன்வர வேண்டும்.”
எதிரொலி!
25.12.75 முற்பகல் 11 மணியிலிருந்தே தபால்காரர் வரவைக் குடும்பத்தில் யாவரும் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தோம். நண்பகல் 12 மணிக்கு ‘நம் வாழ்வோடு’ வந்தார். குடும்பத் தலைவன் என்ற முறையில் நானே ‘நம் வாழ்வை’ முத்தமிட்டுப் பிரித்தேன். ‘பெண்கள் ஆண்டிலே’ அட்டையிலே பெண்ணுக்கு முன்னுரிமை தந்து, இறைக் குழந்தையை நினைவூட்டக் குழந்தைகளையும் முதுகில் ஏற்றியிருக்கும் பாணிக்குப் பாராட்டுகள்!
- திரு. லூர்துசாமி, ஆனைக்குளம் (11.01.1976)
தொடக்க கால இதழ்களிலிருந்து சிறப்புப் பகுதிகள்
தேடி நாம் கண்டோம்!
கவிஞர் அமலன் (11.01.1976)
ஆடுங்கள், பாடுங்கள்
திரு அவை யோரே!
ஆனந்தம்கொண் டாடுங்கள்
அருமறை யோரே!
‘தேடுங்கள், காண்பீர்கள்’
என்றார் நம் இயேசு,
தேடி நாம் கண்டோமே,
‘நம் வாழ்வு’ இதழே!
கூடுங்கள் எல்லாரும்
குதூகலத் தோடு,
கொட்டுங்கள் முரசத்தை,
கூட்டுங்கள் கூட்டம்!
போடுங்கள் கைத்தாளம்
பெருமகிழ் வோடு,
பேசுங்கள், ‘நம் வாழ்வு’
சிறக்க எந்நாளும்!
கூறுங்கள் யாவருக்கும்
‘நம் வாழ்வு’ இதுவே,
கொள்கைகள் முழக்கும் நல்
ஏடாகும் என்றே!
சேருங்கள் உறுப்பினர்
தெருத்தெரு சென்றே,
இறைவன் துணை யுண்டே!
வருக! வாழ்க! (C.A) - 11.01.1976
1. என் ஏடு உன் ஏடு என்றே அல்ல,
எல்லாரும் நம் ஏடு என்று சொல்ல
பொன் ஏடு புது ஏடு பொதுமை ஏடு,
பொலிவோடு இதழ் விரிக்கும் வார ஏடு!
‘ஒன்றுபட்டால் உண்டுவாழ்வே’ என அன்போடு
உணர்வூட்ட விளைந்திடுமே ஒருமைப்பாடு!
குன்றாத ஆர்வத்தீ மூட்டும் ஏடு
கொண்டுவரும் நலன் கோடி இத்தேன்கூடு.
2. சிதறுண்டு கிடக்கின்ற ஆற்ற லெல்லாம்
சேர்த்தொன்றாய்ப் பிணைக்கின்ற இணைப்புப்பாலம்;
புதர் மண்டிக் கிடக்கின்ற சமூக வாழ்வில்
புதுப்பாதை அமைக்கின்ற புரட்சி வீரன்;
பதர் போன்ற கருத்துகள் பரவிடாமல்
பண்போடு தடுக்கின்ற நல்ல நண்பன்;
இதமாக உண்மைக்குச் சான்று கூறும்
இறைத்தூதன் ஊரெங்கும் வருக! வாழ்க
3. உறுப்புகள் ஒன்றாக உழைத்தால்தானே
உடலுக்கு உரமுண்டு; நன்மை உண்டு!
பொறுப்போடு பொது ஏட்டை வளர்ப்பதற்குப்
பொருளோடு ஆதரவு தருதல் வேண்டும்;
மறுக்காமல் செய்கின்ற உதவியாலே,
மறைவாழ்வு பொழில் போலத் தழைக்கு மன்றோ?
வெறுப்பூட்டும் பிரிவினைகள் மறைந்துவிட்டால்,
வெற்றிவரும் தமிழ்நாட்டுத் திருமறைக்கே!
4. நூற்றுக்கு ஒரு சந்தா சேர்ப்பதற்கு
நுவலுங்கள் இடர்ப்பாடும் உண்டோ என்று?
சாற்றுங்கள் பிற ஏடு வாங்குவதற்குச்
சந்தாவாய் நாம் செலுத்தும் தொகைதான் என்ன?
காற்றுள்ள போதே நாம் தூற்ற வேண்டும்;
காலமெல்லாம் முன்னேற்றம் காண வேண்டும்;
ஆற்றுகின்ற செயல்களிலே துணிவு வேண்டும்;
ஆக்கமுற நம்பிக்கை என்றும் வேண்டும்.
மாமதுரையில் ‘நம் வாழ்வு’ வெளியீட்டு விழா!
எத்துணை பொருத்தம்!
“நாலாயிரம் ஆண்டளவாகக் காத்திருந்த ‘குழந்தை இயேசு’ இவ்வுலகில் வந்துதித்த நாள் கிறிஸ்துமஸ், அதுபோல நாம் பல ஆண்டு காலமாக எதிர்பார்த்திருக்கின்ற பொது வார இதழ் ‘நம் வாழ்வாக’ கிறிஸ்துமஸ் புனித நாளில் வெளியிடப்படுகிறது. விண்ணகத்திலிருந்து தந்தை இறைவன், பாவிகளை மீட்கத் தம் மகனை அனுப்பத் திருவுளங் கொண்டார். அதுபோல மதுரையிலே சிறப்புற இயங்கி வந்த ‘கத்தோலிக்கு சேவையை’ ‘நம் வாழ்வாக’ மலரச் செய்ய மதுரைப் பேராயர் நல்மனங் கொண்டார். அவரது அன்புக் கரங்களால் இம்மதுரையில், தென்னகத்தின் ஆன்மத் திரு நகராம் தமிழ்ச்சங்க மதுரையில் ‘நம் வாழ்வு’ வெளியிடப்படுவது எவ்வளவு பொருத்தமானது!”
மண்ணுக்கு மரம் பாரமா?
“நம் வாழ்வின்’ முதல் இதழே அழகோவியமாக, ஆழ்ந்த பொருளைத் தேக்கி அரும்பி இருக்கிறது. அருமையான அட்டைப் படத்தில் தாய், தன் அழகுக் குழந்தையினைச் சுமந்து மகிழ்ச்சி பொங்குகிறாள். அந்தச் செல்வக் குழந்தையும் சிரித்து மகிழ்கிறது. இந்தத் தாய் வேறு யாருமில்லை; தமிழ்நாடு திரு அவையாகிய நாம்தாம் தாயாக உருவாக்கப்பட்டுள்ளோம். அந்தக் குழந்தைதான் ‘நம் வாழ்வு.’ மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா? என்றதுபோல, தமிழ்நாடு திரு அவை தாய்க்கு இந்தக் குழந்தை, நம் வாழ்வு குழந்தை, ஒரு பாரமாகி விடுமா? ஒருபோதும் இல்லை. எத்தனையோ பத்திரிகைகளை வாங்கிப் படிக்கும் நம்மவர்கள், இந்தப் பொது வார ஏட்டினை வீடுதோறும் வாங்கி, நாடுதோறும் பரப்ப வேண்டும்.”
- சிறப்புரையாளர்: பேராசிரியர் சு. குழந்தைநாதன்
பயமான சிரிப்பு! பலமான பிடிப்பு!
விழாத் தலைமை ஏற்ற மதுரைப் பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்கள், ‘நம் வாழ்வு’ இதழை வெளியிட இதுகாறும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை விவரித்த பின்னர், “அட்டைப்படக் குழந்தையை அன்னை இருகரங்களால் பற்றிப் பிடித்திருப்பது போல, நம் வாழ்வினை இல்லறத்தாரும் துறவறத்தாரும் இருகரங்களாகப் பற்றிக் கொள்வோம்” என்றார். என்றாலும் இந்தக் குழந்தை, மொழு மொழுவென்று திடகாத்திரமாகப் பிறந்திருந்தாலும், அதன் சிரிப்பிலே ஏதோ ஒரு பயம் தெரிகிறது. கடைசி வரை கீழே விழாமல் இருப்போமா? என்பது போலத் தோன்றுகிறது. பத்திரிகையை நடத்துவதென்பது பயமானதொரு பரிசோதனைதான் என்றாலும், நம் ஒவ்வொருவரின் பலமான கரத்தை அன்போடு நீட்டி ஆக்கம் தந்தால், அதுவே வலுவான அடிப்படையாக அமைந்துவிடும்.
‘நம் வாழ்வு’ என்ற பெயர் முதலில் அறிவிக்கப்பட்டதும், என்ன இந்தப் பெயர் இப்படி இருக்கிறதே, புதுமையாக, கவர்ச்சியாக இல்லையே என நானும் நினைத்தேன். பின்னர் ‘நம் வாழ்வு’ என நான்கு முறை சொல்லிப் பார்த்ததும், இது நாவினுக்கு இனிய, நமக்கெல்லாம் உரிய நல்ல பெயர் என்பது புலப்பட்டது. ‘நாமே உலகின் ஒளி, உயிர், வாழ்வு’ என வந்து, தம் வாழ்வையே நமக்குத் தந்த இயேசுவின் புகழைப் பரப்ப இந்த ‘நம் வாழ்வு’ பயன்படும் எனக் கருதுகிறேன். எனவே, நாமெல்லாம் புதிய வார இதழாகிய ‘நம் வாழ்வில்’ நம் ஆன்மிக-சமூக வாழ்வின் ஏற்றங்களையும் மாற்றங்களையும் காண வேண்டும் என வாழ்த்தி இப்புதிய இதழைப் பூரிப்புடன் வெளியிடுகிறேன்” என்று மதுரைப் பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்கள் கூறினார்.
- செய்தி: சுகுநா (11.01.1976)