சிரிப்பைப் போலவே எனக்குப் படித்தல் மற்றொரு வலிநீக்கியாக ஆனது. விபத்து நடந்த 2014 பிப்ரவரி 21 முதல் 2015 மே 22 வரை அதாவது மொத்தம் பதினைந்து மாதங்கள் நோய் குணமாகி, தேறுவதற்கு எடுத்துக் கொண்ட காலம். இக்காலகட்டத்தில் நான் நிற்கவும், நடக்கவும், என்னுடைய தேவைகளைக் கவனித்துக் கொள்ளவும் முடிந்தது. நான் ஏற்கெனவே கூறியதுபோல என்னுடைய தேவைகளை நானே சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன், நான் 2015, மே 22 அன்று திண்டுக்கல் இயேசு சபை இல்லமான பெஸ்கி இல்லத்திற்குத் திரும்பினேன். நான் ஏற்கெனவே எம்.பில். முடித்திருந்ததால் முனைவர் பட்டத்திற்காக, காந்திகிராமம் ஊரகப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவனாக 2015, மே 28 அன்று சேர்ந்தேன்.
ஆய்வு தொடர்பாக அடிக்கடி பல்கலைக்கழகத்திற்குப் போய்வருவது ஒரு பிரச்சினை ஆகியது. டாக்சியில் போகவோ, ஓட்டுநர் வைத்துக்கொள்ளவோ பொருளாதாரச் சூழல் இடம் தரவில்லை. எனவே, கார் ஓட்டக் கற்றுக்கொள்வது என்று தீர்மானித்து பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதிலுள்ள ஆபத்துகளினால் எதிர்ப்புகள் எழுந்தன. எனினும், ‘என்னால் முடியும்’ என்ற மன உறுதியோடு தீர்மானமாக இருந்தேன்.
“ஒவ்வொரு சாலைத் தடுப்பிலும் ஒரு கிளைப் பாதை கட்டப்படும். ஒவ்வொரு முடிவிலும் ஒரு தொடக்கம் இருக்கிறது. ஓர் அறைகூவலை எதிர்கொள்வது வாழ்க்கையைச் சுவையாக்குகிறது. ஆனால், வெற்றிகொள்வது வாழ்கையைப் பொருளுள்ளதாக ஆக்குகிறது” – மாத்யூ இ. ஃப்ரையர்.
அப்போதைய இயேசு சபைத் தலைவர் அருள்பணி. வர்க்கி பெரக்காட் சே.ச. அவர்களிடம் அனுமதி பெற்றேன். என்னுடைய அண்ணன் அமலநாதனிடம் ஒரு கார் வாங்கித் தரச் சொன்னேன். அவர் ஒரு ஜீப்பில் (மகேந்திரா கமாண்டர் 750) சில மாற்றங்கள் செய்து நான்கு நாள்களில் திண்டுக்கல் கொண்டு வந்தார். நானே ஜீப்பைத் துடைக்கவும், கழுவவும், ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்ற பானட்டைத் திறக்கவும் இடது கை கொண்டே செய்ய என்னால் முடிந்தது. இதனால் என்னுடைய தன்னம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் நான் ஒரு கையால் கார் ஓட்டுவது கண்டு வியப்படைந்தனர். அப்போது எனக்கு வலியின் கொடூரம் அதிகம் இருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். ஓட்டும்போது என்னால் வலி தாங்க முடியாவிட்டால் நான் வண்டியை ஓர் ஓரமாக நிறுத்தி சிறிது நேரம் நன்றாக மூச்சை இழுத்து விட்டு பிறகு தொடர்வேன்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 12 ஆண்டு பழமையான டாடா மரினா காரை ஓட்டுமளவிற்கு எனக்கு உரிமை தரப்பட்டது. நீண்ட தூரங்களைக் கூட வசதியாக ஓட்ட முடிந்தது. கியர் மாற்றும்போது ஸ்டீயரிங் வீலிலிருந்து கையை எடுக்கும் அளவிற்கு எனக்கு நம்பிக்கை வந்தது.
என் வழியில் நான் போகும்போது
அச்சம் என்னைப் பீடிக்காது, தடுக்காது
என் மன உறுதியும் துணிவும்
நம்பிக்கையும் அதைத்
தோற்கடித்திருக்கின்றன.
முந்தைய அதிர்ச்சியும் கூட
என் உள்ளாற்றலுக்கு
அணைபோட முடியவில்லை
அச்சம், கவலை, கலக்கம்
எதற்கும் நான் அடிபணியேன்.
எழு, நிலை கொள்
அறைகூவலை எதிர்கொள்
உன்னில் நம்பிக்கை கொள்,
எல்லாமே நலமடையும்!
தொடக்கத்தில் வலது கையில் வலித் துடிப்புகள் பயங்கரமாக இருந்தன. எனினும், அதைத் தாங்கிக் கொண்டதற்குப் பயன் இருந்தது. என்னுடைய ஆய்வு தொடர்பான வேலைகளை என்னால் முடிக்க முடிந்தது. மாநாடுகள், கருத்தரங்குகள், ஆய்வுப் பட்டறைகள் ஆகிவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்க நான் பல இடங்களுக்குப் போக வேண்டியிருந்தது. சில இடங்கள் தொலைவில் இருக்கும். பயணங்களின்போது வலக்கையைத் தொட்டிலில் வைத்திருப்பேன். என்னோடு பயணம் செய்தவர்கள் என்மேல் அன்பு கொண்டு பேருதவி செய்தார்கள் என்பதை நான் இங்கே கூறியாக வேண்டும். படிகளில் ஏறும்போதும், மின்னேற்றிகளில் செல்லும்போதும் என் கைப்பையை வாங்கிக் கொண்டு என் கையைப் பிடித்துக் கொள்வார்கள்.
எனது இடது கையைப் பயன்படுத்தி எழுதத் தொடங்கினேன். தட்டச்சு செய்யவும் பழகிக் கொண்டேன். ஒவ்வொரு எழுத்தையும் பார்த்து டைப் செய்வது கடினமாக இருந்தது. சில வேளைகளில் எரிச்சலாக இருக்கும். என்றாலும், நான் துணிவை இழக்கவில்லை; இரவில் குத்துதலும் நசுக்குவதுமான நோய்க்குறிகள் அதிகம் இருக்கும். படுக்கையில் படுக்க முடியாது. அப்போது தட்டச்சு செய்வேன். வலியை மறக்கப் பல வேலைகளில் ஈடுபடுவேன். பாடல்கள் கேட்பது, டி.வி. பார்த்தல், கட்டுரை எழுதுதல், பவர் பாய்ண்ட் ஸ்லைடுகள் தயாரித்தல், தட்டச்சுப் பயிற்சி என்று ஏதாவது செய்து கொண்டிருப்பேன்.
என் மனத்தில் ஓடும் எண்ண அமைப்புகள் பற்றி நான் தெரிந்திருந்தேன். அப்போது நேர்மறை எண்ணங்களான ‘என்னால் முடியும்’, ‘நான் செய்து முடிப்பேன்’ ஆகியவற்றிற்கு வலுவூட்டிக் கொள்வேன்.
ஞானத்தைத் தேடும் எனது வேலைகளில் மேடு பள்ளங்கள் இருந்தாலும், கடவுளை மையப்படுத்தும் எனது முயற்சிகள், எனது உள்ளாற்றல்களைக் கண்டுபிடித்து ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உதவின.
(தொடரும்)