Namvazhvu
திருவிவிலியம் காட்டும் முதுமை ஆன்மிக-உளவியல் பார்வை
Friday, 11 Oct 2024 06:07 am
Namvazhvu

Namvazhvu

பலன் தரும் முதுமை

உலகில் கருவாகி, உருவாகி முழுமையை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வோர் உயிரும், முதுமையைச் சந்திப்பது வாழ்க்கையின் யதார்த்தம். முதுமை என்பது பல்வேறுபட்ட வளர்ச்சி நிலைகளில் ஒன்று. ஒவ்வொன்றிற்கும் பலங்களும் உண்டு, பலவீனங்களும் உண்டு. உளவியல் ரீதியில் பார்க்கின்றபோது, வயது என்பது நமது மனத்தைப் பொறுத்தது என்கிறார்கள். இது முற்றிலும் உண்மை. சங்கீதக்காரர் கூறுவதுபோல “ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர், நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்;  என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்” (திபா 92: 13-14).

அன்னை தெரேசா முதுமையில் தெருக்களில் நடந்துசென்று அனாதைகளைச் சந்தித்து அவர்களின் பசியைப் போக்கியிருக்கிறார். சிறுநீர் பையைத் தூக்கிக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார் தந்தை பெரியார். தற்பொழுது திரு அவையின் தலைவர் சக்கர வாகனத்திலும், தடியை ஊன்றி நடந்துகொண்டும் தான் செய்யும் பணிகளைச் செய்து வருவது பாராட்டுதற்குரியது.

ஒருவேளை உடல் அளவில் வலிமை சற்றுக் குறைந்திருக்கலாம். ஆனால், முதுமையான காலத்தில்தான் மிகப்பெரிய தலைமைப் பொறுப்புகளை மிகச் சிறப்பாக இளமைத் துடிப்புடன் செய்து காட்டும் மக்களை நாம் பார்த்திருக்கிறோம். என்ன செழுமையும், பசுமையுமான முதுமை! இலட்சியத் தெளிவும் செயல் துடிப்பும் இருந்தால் போதும், வயது ஒரு தடையல்ல. இலட்சிய வாழ்வின் உச்சக்கட்டமே முதுமை என்பேன்.    

அறிவுரையும் தீர்வும் தரும் முதுமை                                           

இலட்சியத்தோடு வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும் அனுபவித்து, பட்டறிவுடன் அறிவுரைகளும் பரிந்துரைகளும் அளிப்பது முதியவர் தவிர வேறு யாராலும் முடியாது. இதைத்தான் இன்றைய உளவியல் கூறுகிறது: ‘அனுபவமே மிகச்சிறந்த ஆசான்’ என்று. “தீர்ப்பு வழங்குவது நரை திரை விழுந்தோருக்கு ஏற்றது; அறிவுரை கூறுவது பெரியவர்களுக்குத் தக்கது” (சீஞா 25:4). தனக்கு மேற்பட்ட சக்தியான ஆன்மாவின் பலத்தை உணர்ந்து, ஆன்மிகத்தில் ஆழமாய் வேரூன்றி அருள் வளங்களை அறிவுரைகளாகவும், பிரச்சினைகளுக்கான தீர்வுகளாகவும் அனைவருக்கும் அள்ளித் தரும் அழகே அழகு! யாரும் தர இயலாத தனிச்சிறப்பு வாய்ந்தது. இணையதளமும், புத்தகங்களும் அறிவை வழங்கலாம். ஆனால்,  அனுபவ அறிவையும், தீர்வுகளையும் தருவது முதுமை! 90 வயது முதுமையில் இருக்கும் தாயின் திருவடிகள் தரும்  அறிவுரைகளும் தீர்வுகளும் யாரும் தர இயலாது.

திட்டமிட்டு வாழ்வை எதிர்கொள்ளும் முதுமை                                     

“உன் இளமையில் நீ எதையும் சேமித்து வைக்காவிடில் முதுமையில் நீ எதைக் காண்பாய்?” (சீராக் 25:3) என்ற வேதவாக்கிற்கு இணங்க, இப்பொழுதே முதுமையைப் பற்றி எண்ணி மனத்திலும், பொருள் அளவிலும் நம்மைத் தயாரிக்க வேண்டும். “எந்த ஒரு மனிதனையும் முதுமையில் புறக்கணிக்காதே; ஏனென்றால், நம்மைப்போல் இருந்தல்லவா அவன் முதியவர் ஆனார்” என்று சீராக் 8:6 கூறுகிறது.

முதலில் முதியவர்களை மதிக்க வேண்டும். அவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். இரண்டாவது, நம் வாழ்வில் முதுமையை விரும்பி வரவேற்க வேண்டும். பலன் தருமாறு உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதை அனுதினமும் கொண்டாட வேண்டும் என்பேன்.

சாட்சியாகி, தியாகம் செய்திடும் முதுமை                                                

 90 வயதிற்கு மேல் முதுமையான ஆபிரகாம், இறைவனின் வாக்கான, “உனது வழிமரபினரைக் கடற்கரை மணலைப்போல பெருக்குவேன்” என்பதை விசுவாசித்து, குழந்தையைப் பெற்று, அதை இறைவன் கேட்டவுடன், அர்ப்பணிக்கத் துணிந்து விசுவாசத்தின் தந்தையாகிறார் (தொநூ 13:16). நாற்பது  ஆண்டுகாலமாக இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி வந்த மோசே, பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தைத் தான் கண்டு அனுபவிக்க முடியாவிட்டாலும் (இச 31:2), அந்த முதிர்ந்த வயதிலும் தனது மக்களுக்காகக் கைகளை விரித்துச் செபித்து, தியாகம் செய்திடும் முதிர்ச்சியடைந்த முதுமையை மோசேயிடம் காண்கிறோம் (எண் 14:13-15).

மரணத்தை இன்முகத்தோடு வரவேற்கும் முதுமை                                                  

மனமுதிர்ச்சியுள்ள முதுமை நன்மரணத்தை விரும்பி வரவேற்கும். பழுத்த இலைகள் மரத்திலிருந்து ஆடி, அசைந்து விழுவதைப் போல முதுமையில் யாக்கோபு தன் மரணத்தை எதிர்கொள்கிறார். “இதோ நான் சாகப் போகிறேன். கடவுள் உங்களோடு இருப்பார்” (தொநூ 48:21); “இதோ நான் என் இனத்தவருடன் சேர்க்கப்படவிருக்கிறேன். என் தந்தையருடன் என்னை அடக்கம் செய்யுங்கள்” (தொநூ 49:29) என்று மரணத்தை மகிழ்ச்சியாக வரவேற்கும் முதிர்ச்சியான முதுமையை நாம் காண்கிறோம். மரணத்தை வாழ்வின் எதார்த்தமாய் ஏற்று, அதை இன்முகத்தோடு வரவேற்பது முதுமைக்கு அழகு என்பேன்.

செபித்து ஆசிர் தரும் பணி செய்யும்  முதுமை                                                           

இறைமகன் இயேசுவைக் கண்டுகளித்த இரண்டு முதிர்ச்சியான முதியோர் பற்றி நற்செய்தி எடுத்துரைக்கிறது. “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் நான் சாகப்போவதில்லை” (லூக் 2: 8-10) என்று குழந்தை இயேசுவைக் கண்டு, மகிழ்ந்து அவர்களுக்கு ஆசி அளிக்கும் (லூக் 2:34) எடுத்துக்காட்டான முதுமையைக் காண்கிறோம். இரண்டாவது, முதியோர் அன்னா இயேசுவைக் கண்டு கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார் (லூக் 2:37-38).  ஆசி கூறி செபிப்பதும், அல்லும் பகலும் பிறருக்காக இறைவனிடம் பரிந்து பேசி தன்னால் முடிந்த அளவு நற்செய்திப் பணி செய்வதும் முதுமையின் சிறந்த ஆளுமை என்பேன்.

இறைவனிடம் சரணடையும் முதுமை                                         

இயேசு பேதுருவிடம் கூறும் வார்த்தைகள் முழுமையின் முழுமையை எடுத்துரைக்கின்றது: “நீ இளைஞனாய் இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். முதிர்ந்த வயது ஆகும் போது உன் கைகளை விரித்துக் கொடுப்பாய்” (யோவா 21:18). முழுமையாக இறைபதம் சரணடையும் முதுமையே இயேசு விரும்பும் முதுமை என்பேன்.

வாழ்வின் வெற்றி வாகை சூடும் முதுமை

புனித பவுல் மிகத் தெளிவாகத் தன் முதுமையைப் பற்றி எடுத்துரைக்கிறார்: “நான் இப்போது என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது . நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருக்கும் நேரிய வாழ்விற்கான வெற்றிவாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்” (2திமோ 4:6-8). இறைவன் தரும் அன்புப் பரிசை எதிர்நோக்கும் முதுமையைக் கிறிஸ்தவ விசுவாச வாழ்வின் முதுமை என்பேன்.

திருவிவிலியம் காட்டும் முதுமையை ஏற்போம்!

முதுமையைப் புனிதமாய்க் கொண்டாடுவோம்!