அருளும் பொருளும்
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
கிறிஸ்டினா: “பாதர், சென்ற வாரம் நீங்கள் இரண்டு வகையான செல்வங்கள் இருப்பது குறித்து எங்களுக்கு எடுத்துச் சொன்னீர்கள். பொருள் செல்வம் என்றால் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அருள்செல்வம் என்பதற்கு ஒருசில உதாரணங்கள் தர முடியுமா?”
அருள்பணி: “தன் வாழ்வை மகிழ்வோடு வாழ முடியும் என்ற நம்பிக்கை, எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற பிறர்நல எண்ணம், மற்றவர்களது இன்ப-துன்பங்களைத் தனதாக உணரும் பரிவு, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்தல், வாழ்வின் பிரச்சினைகளைச் சரியாக வாழ்வதற்கான ஞானம், மற்றவர்களது இகழ்ச்சிகளை மன்னித்து மறக்கின்ற மகத்துவம்… போன்றவற்றை அருள் செல்வத்திற்கான ஒருசில உதாரணங்களாகச் சொல்லலாம். இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவெனில், நம் வாழ்வின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில் பொருள்செல்வத்திற்குச் சிறிய பங்கும், அருள்செல்வத்திற்குப் பெரிய பங்கும் உண்டு என்ற உண்மையைத்தான்.”
அகஸ்டின்: “மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அருள்செல்வம் தேவையா? எங்களைப் போன்ற இளைஞர்களில் பலர் பொருள்செல்வமே மகிழ்ச்சியின் ஊற்று என்று எண்ணி, அவற்றின் பின்னால் அல்லவா சென்று கொண்டிருக்கிறோம்?”
அருள்பணி: “வாழ்வின் மட்டிலான தவறான அணுகுமுறை இது. பொருள் செல்வத்தால் நம் புற வாழ்வை மட்டுமே அலங்கரிக்க முடியும் என்பதையும், அகவாழ்வை அலங்கரிக்க நமக்குத் தேவையாக இருப்பவை அருள்செல்வமே என்கின்ற உண்மையையும் பலர் புரிந்துகொள்வதில்லை. ஓர் உதாரணம்: ஒருவர் பெரிய பணக்காரராக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் மிகுதியான பொருள்செல்வம் உண்டு. எனினும், தனது உணர்வுகளைக் கையாளத் தெரியாதவராக இருந்தார் என்றால், எதற்கெடுத்தாலும் எரிச்சலும் கோபமும் பட்டு, தனது நிம்மதியைத் தானே குலைத்துக் கொள்வார். பிறரது நிம்மதியையும் அழித்துக் கொண்டிருப்பார்.”
மார்த்தா: “அதாவது வெளியே பணம் நிறைய இருந்தாலும், உள்ளம் சரியில்லாமல் இருந்தால் அது பிரச்சினைக்குரியதாகத்தான் இருக்கும் என்று சொல்கிறீர்கள். அப்படித்தானே?”
அருள்பணி: “ஆம், நம் கையில் என்ன இருக்கிறது என்பதைவிட, நாம் யாராக இருக்கிறோம் என்பது முக்கியமானது. புத்திசாலியின் கையில் பத்து ரூபாயைக் கொடுத்தால்கூட அவர் கொஞ்ச நேரத்தில் அதை ஆயிரம் ரூபாயாக ஆக்கிவிடுவார். முட்டாளின் கையில் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தால் கூட சிறிது நேரத்தில் அதைப் பத்து ரூபாயாக ஆக்கிவிடுவார். பொருள்செல்வம் என்பது நம் கையில் என்ன இருக்கிறது என்பதோடு தொடர்புடையது. அருள்செல்வம் என்பது நாம் யாராக இருக்கிறோம் என்பதோடு தொடர்புடையது.”
அன்புச் செல்வன்: “தந்தையே, எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஊழலில் திளைத்த ஓர் அரசியல்வாதி ஒருமுறை பீகார் மாநிலத்தில் அமைச்சராக இருந்தாராம். அப்போது வளர்ச்சி பெற்ற நாடாகிய ஜப்பானிலிருந்து இரு உயர்மட்ட அதிகாரிகள் பீகாரைச் சுற்றிப் பார்க்க வந்தார்களாம். பீகாரைச் சுற்றிப் பார்த்த பின்பு, அவர்கள் மேற்கண்ட அரசியல்வாதியைப் பார்த்து உரையாடினார்களாம். அப்போது ஜப்பானியர்கள், ‘பீகார் ஒரு வளமையான மாநிலம். நிர்வாகத்தில்தான் சில குளறுபடிகள் உள்ளன. பீகாரை எங்களது கையில் இரண்டு ஆண்டுக்கு மட்டும் கொடுத்தீர்கள் என்றால், அதை இன்னொரு ஜப்பானாக ஆக்கிக் காட்டுவோம்’ என்றார்களாம். அதற்கு இந்த அரசியல்வாதி, ‘உங்களது ஜப்பானை எங்கள் கையில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் கொடுங்கள். அதை நாங்கள் இன்னொரு பீகாராக ஆக்கிக் காட்டுவோம்’ என்றாராம்.”
அகஸ்டின்: “தந்தையே, எனக்கொரு கிரேக்க இலக்கிய கதை ஞாபகத்திற்கு வருகிறது. முதலாம் டயோனிசியுஸ் என்றொரு பேரரசர் இருந்தாராம். அவரின் அமைச்சரவையில் இருந்தவர் டமாக்ளிஸ் (Damocles) என்பவர். டமாக்ளிஸ் பேரரசரைப் பார்க்கின்றபோதெல்லாம் அவரது அதிகாரம், புகழ், பேராற்றல் ஆகியவற்றையே புகழ்ந்து பேசுவாராம். இத்தகைய அதிகாரமும் புகழும் பேராற்றலும் கொண்ட மனிதருக்கு வாழ்வில் வேறு எதுவுமே தேவையில்லை என்றெல்லாம் புகழ்வாராம். ஒருமுறை பேரரசர் டமாக்ளிஸை, தன் அரண்மனை விருந்திற்கு அழைத்தார். உணவு மேஜைமீது விதவிதமான சுவையான உணவுகள் படைக்கப்பட்டிருந்தன. ஆசையோடு உணவருந்த அமர்ந்த டமாக்ளிஸிடம், பேரரசர் ‘உன் தலைக்குமேல் என்ன இருக்கிறது பார்’ என்றார். அங்கு ஒரு கூர்மையான கத்தி மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்தது. எந்த வேளையிலும் அறுந்து அவரது உச்சந்தலைமீது விழக்கூடும் என்பது போன்று இருந்தது. அவ்வளவுதான்! டமாக்ளிஸ் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் சாப்பிட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தானாம். இதைப் பார்த்த அரசன் ‘டமாக்ளிஸ், என் புகழும் அதிகாரமும் பேராற்றலும் இந்த விருந்து போன்றது. இந்த நாட்டை நடத்த நான் மேற்கொள்ளும் போராட்டம் மேலே தொங்கும் கத்தி போன்றது. வெளியில் இருப்பவற்றை மட்டும் பார்த்து ஒரு மனிதனின் மகிழ்வை எடை போடாதே’ என்றாராம்.”
கிறிஸ்டினா: “சூப்பர் கதை!”
அருள்பணி: “ஆம், பணக்காரர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான உணவுகளைத்தான் மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மேல் தொங்குகின்ற கத்தி, அதாவது அவர்களுக்குள் இருக்கின்ற மனப் பிரச்சினைகளும் வேதனைகளும், அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அருள்செல்வத்தை அதிகரிக்காமல், பொருள்செல்வத்தை மட்டும் தேடி ஓடும் மனிதர்களின் அவலநிலை இது!”
அகஸ்டின்: “அகவாழ்வை அலங்கரிக்கின்ற அருள்செல்வம், புறவாழ்வை அலங்கரிக்கின்ற பொருள்செல்வத்தைவிட மேன்மையானது என்பது புரிகிறது தந்தையே!”
அருள்பணி: “இவ்வுண்மையை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்களும் நாமும் நம் பிள்ளைகளுக்கு, ‘அருள்செல்வம்’ என்றுதான் பெயரைத் தருகிறோமேயொழிய, ‘பொருள்செல்வம்’ என்று யாருக்கும் பெயர் வைப்பதில்லை.”
அன்புச் செல்வன்: “இன்றைக்குச் சில மனிதர்கள் பொருளைத் தேடும் வேகத்தைப் பார்த்தால், அவர்கள் பெற்றோர்கள் அவர்களுக்கு, ‘பொருள் செல்வம்’ என்கின்ற பெயரை வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.” (எல்லாரும் சிரித்தல்!)
அகஸ்டின்: “தந்தையே, நம் உரையாடலை ஆரம்பித்தபோது, நான் கேட்ட கேள்வியோ ஆலயத்திற்கு வருவதைப் பற்றியது! நீங்கள் பேசுவதோ அருள்செல்வம் மற்றும் பொருள்செல்வம் ஆகியன பற்றி! இரண்டிற்கும் என்ன தொடர்பு?”
அருள்பணி: “நாம் ஆலயத்திற்கு வருவதன் முதல் நோக்கமே அருள்செல்வத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதானே!”
அகஸ்டின்: “ஆனால், ஆலயத்திற்கு வருகின்ற பலருடைய மனத்தில் இருப்பதெல்லாம் பொருள்செல்வம் மட்டும்தானே! அதற்காகத்தானே அதிகம் மன்றாடுகிறார்கள்!”
அருள்பணி: “அதுதான் பிரச்சினையே!”
(தொடரும்)