கைம்மாறு கருதாத மறைப்பணி!
19-ஆம் நூற்றாண்டில் (1819-1900) இங்கிலாந்தில் வாழ்ந்தவர் ஆங்கில எழுத்தாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் ஜான் இரஸ்கின் (John Ruskin). ஒரு கிறிஸ்தவரின் வாழ்வுப் பயணம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதை ஓர் அழகிய உருவகத்தின் வழியே இவர் கூறுகிறார்.
ஜான் இரஸ்கின் அவர்கள் ஒருநாள் நண்பர் ஒருவருடன் தன் வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்தார். சூரியன் மறைந்து, இருள் சூழும் நேரம் அது. அவரது வீட்டுக்குமுன் அமைந்திருந்த ஒரு குன்றில், தெரு விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சுடர்விடத் துவங்கின. மின்சக்தி இல்லாத காலம் என்பதால், தெரு விளக்குகளை ஏற்றியபடி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவர் யார் என்று இரஸ்கின் அவர்கள் வீட்டிலிருந்து பார்க்க முடியவில்லை. ஆனால், அவர் கையில் ஏந்திச் சென்ற விளக்கும், அவர் தெருவில் ஏற்றிவைத்த விளக்குகளும் இருளில் ஒளிர்ந்தன. அதைக் கண்ட ஜான் இரஸ்கின் தன் நண்பரிடம், “தெருவிளக்கை ஏற்றும் அவர்தான் உண்மையான கிறிஸ்தவருக்கு எடுத்துக்காட்டு. அவர் யாரென்று நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும், அவர் செல்லுமிடத்தையெல்லாம் ஒளிமயமாக மாற்றுகிறார். அதேபோல், உண்மைக் கிறிஸ்தவர்களும் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ளாமல், செல்லுமிடங்களை ஒளிமயமாக்குகின்றனர்” என்று கூறினார். இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்க உதவியாக அமைகிறது இந்த உருவகம்.
எங்குச் சென்றாலும் அரியணைகளும் மாலைகளும் மரியாதைகளும் தங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற வேட்கையோடு நடைப்பயணம் மேற்கொள்ளும் அரசியல் மற்றும் சமயத் தலைவர்களின் உலகப்போக்கிற்குச் சவால்விடும் வண்ணம் ‘பணியாளர் தலைமைத்துவம்’ (Servant Leadership) பற்றிக் கற்றுத் தருகிறார் இயேசு. பணியாளர் தலைமைத்துவம் என்பது கைம்மாறு கருதாமல் மக்களுக்குத் தொண்டாற்றும் தலைமைத்துவம். இன்று பலருமே தங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென விரும்புகிறார்களே தவிர, பிறர் தேவைகளில் உதவிடும் பண்புள்ளவர்கள் மிகச் சிலரே. அவ்வாறு தொண்டாற்ற முன்வருபவரே இயேசுவின் வழி சீடர்கள் என இன்றைய வாசகங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
இன்றைய முதல் வாசகம் ஆண்டவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத் தம்மையே முழுமையாகக் கையளிக்கின்ற ஒரு குற்றமற்ற ஊழியரைப் பற்றிய பாடலாக அமைகிறது. தம் ஊழியரை நொறுக்கவும், நோயால் வதைக்கவும், ஆண்டவர் திருவுளம் கொள்கிறார் என்று இறைவாக்கினர் எசாயா கூறுவதை இன்றைய முதல் வாசகத்தில் (53:10-11) கேட்கிறோம்.
யார் இந்தத் துன்புறும் ஊழியர்? ஆண்டவரின் ஊழியர் யார் என்பதில் திருவிவிலிய அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும், திருஅவையும் புதிய ஏற்பாடும் இயேசு கிறிஸ்துவில் இந்த ஆண்டவருடைய ஊழியரைக் காண்கின்றன. “அவர் தம் உயிரைக் குற்ற நீக்கப் பலியாகத் தந்தார்” (53:10) என எசாயா குறிப்பிடுவது இயேசுவில் மட்டுமே முழுமை பெறுவதை நம்மால் காண முடிகிறது. “பலரின் பாவத்தைச் சுமந்தார்” (53:12) என்ற வார்த்தைகள் இயேசுவுக்கு மட்டும்தான் பொருந்தும். நற்செய்தி நூல்களில் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் பற்றி வாசிக்கும்போது, அவரில் துன்புறும் ஆண்டவரின் ஊழியரைப் பார்க்க முடிகிறது. ‘ஆண்டவரின் துன்புறும் ஊழியராக’ தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, தாம் எவ்வாறு சிலுவை மரணத்திற்கு உள்ளாவோம் என்பதை இயேசு தம் சீடருக்குக் கூறியதை இன்றைய நற்செய்தியில் காணமுடிகிறது. ஏற்கெனவே இருமுறை தம் சீடரிடம் தாம் சந்திக்கப்போகும் துன்பங்களையும் மரணத்தையும் குறித்துப் பேசிய இயேசு, இப்போது மூன்றாம் முறையாகத் தம் மரணத்தைக் குறித்துப் பேசுகிறார். முன்னணிச் சீடர்களான செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும் இயேசுவோடு அரியணையில் ஏறும் வாய்ப்பு வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றனர் (மாற் 10:35-45).yh
இயேசுவின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாமல் சீடர்கள் சுயநலம் நிறைந்த எண்ணங்களில் உ லாவி வந்ததை நற்செய்தியாளர் மாற்கு மூன்று முறை குறிப்பிடுகிறார் (மாற்கு 8:31-33; 9:33-37; 10:35-40). இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் இரு அரியணைகளில் அமர்வதற்குத் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கும் யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இருவரிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை” என்று இயேசு சொல்கிறார். இன்றைய தலைவர்களும்கூட அரியணையில் ஏறுவதற்கும், ஏறியபின் அங்கேயே தொடர்ந்து அமர்வதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் அறிவோம்.
மதியிழந்து, அறியாமையில் இயேசுவிடம் யாக்கோபும் யோவானும் முன்வைத்த வேண்டலுக்கு, தாம் குடிக்கும் கிண்ணத்திலும், தாம் பெறும் திருமுழுக்கிலும் சீடர்கள் முதலில் பங்கேற்க வேண்டும் என்று இயேசு கேட்டுக்கொள்கிறார். இங்கு சொல்லப்படும் கிண்ணமும் திருமுழுக்கும் இயேசுவின் பாடுகளைக் குறிக்கின்றன. திருமுழுக்கு என்பது வாழ்க்கையில் சந்திக்கும் கடின போராட்டங்களுக்கு ஓர் உவமையாக இங்கே கூறப்படுகிறது.
இயேசு குறிப்பிட்ட கிண்ணத்தையும் திருமுழுக்கையும் சீடர் ஏற்றுக்கொண்டாலும்கூட பதவிகளும் பொறுப்புகளும் “யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே தரப்படும்” என இயேசு மொழிகிறார். அதாவது, அதிகாரத்தைத் தருவது சீடத்துவம் அல்ல; மாறாக, பணிபுரிவதும் துன்புறுவதற்குமான உள்ளார்ந்த வலியைத் தருவதுமே சீடத்துவம். ஒருவர் அதிகாரத்தை எதிர்நோக்கி ஆண்டவரைப் பின்பற்றக் கூடாது. ஏனெனில், இயேசு அதிகாரத்தைப் பறைசாற்றுகிறவர் அல்லர் என்பது இங்கே சொல்லப்படுகிறது. பதவிகளைச் சீடர்கள் நாடிச் செல்லக் கூடாது; அவை சீடரை நாடி வரவேண்டும். ‘பதவி என்பது பணி செய்வதற்கே’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவைத் தலைவராகப் பொறுப்பேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரை நம் நினைவுக்கு வருகிறது.
யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் பெற்ற விளக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாத ஏனைய சீடர் அவர்கள்மீது கோபம் கொள்ளத் தொடங்கியது சீடரிடையே இருந்த பதவி ஆசைகளை இன்னும் உறுதிப்படுத்துகின்றது. சீடர்களின் ஆபத்தான இந்த மனநிலையை உணர்ந்த இயேசு அவர்களிடம் புதிய சட்டத்தை முன்வைக்கிறார்.
இறையாட்சிப் பணியில் தொண்டுதான் அடிப்படையாக இருக்கவேண்டும். அனைவருக்கும் பணியாளராக இருப்பவர்தாம் முதன்மை பெறுவர்; அவர்களே பொறுப்புகளைப் பெறவும் தகுதி உடையவர்கள். இத்தகைய புதிய கருத்திற்குத் தாமே ஒரு மகத்தான முன் உதாரணம் என்று இயேசு காட்டுகிறார். அதாவது, மெசியா - தாவீதின் வாரிசு, கடவுளின் மகன், மானிட மகன், ஆற்றல் மிக்கவர் என்றாலும், அவர் தொண்டு ஏற்கும் அதிகாரத்தை விடுத்து, பிறருக்குத் தொண்டு செய்யவும், அத்தொண்டின் வழியாக மக்களுக்கு இறையாட்சி அல்லது மீட்புத் தரவும், அதே தொண்டின் விளைவாகத் தம்முயிரையே தியாகம் செய்யவும் தாம் உலகிற்கு வந்ததாக இயேசு உறுதியுடன் அறிக்கையிடுகிறார். இயேசு பணி மற்றும் தாழ்ச்சிக்கு உதாரணமாக இதனைவிட வேறு எதனையும் காட்ட முடியாது. மெசியாவே தொண்டராகவும், பலியாகவும் மாறுகின்றபோது, சாதாரண சீடர்கள் நாம் எந்நிலையில் இருக்க வேண்டும் என்பது இங்கே சட்டமாகிறது.
கைம்மாறு கருதாமல் இயேசுவின் வழிசென்று மக்கள் பணியாற்றும் சீடர்களாக நாம் மாற வேண்டுமெனில் இரண்டு மனநிலைகள் தேவை: 1. மக்கள் நிலை இறங்கும் மனநிலை. 2. மக்கள் நிலை அறியும் மனநிலை.
இயேசுவைப்போன்று மக்கள் தொண்டாற்ற முன்வரும் சீடர் முதலில் தன் நிலைநின்று கீழ்நிலை இறங்கி வரும் மனம்வேண்டும். “இயேசுவின் சீடராக வாழ விரும்புவோர், நற்செய்தி விடுக்கும் அழைப்பை ஏற்று, எளியோருள் எளியோராக மாறி பணிபுரிய வேண்டும்” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (மூவேளைச் செப உரை, 21.10.2018). இதையே இன்றைய இரண்டாம் வாசகமும், “நம் தலைமைக்குரு எல்லா வகையிலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டவர்” (எபி 4:15) எனக் கூறுகிறது. அதாவது, இயேசு மானிட மீட்புக்காகத் தம் நிலை நின்று நம் நிலை இறங்கி வந்தார். அவருடைய ‘மக்கள் நிலை இறங்கும் மனநிலையே’ மக்கள் தொண்டாற்றும் சீடரின் முதல் தகுதி.
இரண்டாவது ‘மக்கள் நிலை அறிதல்’ தொண்டாற்றும் பணிக்கு மிக அவசியம். மக்களின் சுமைகள், வலிகள், கவலைகள், துக்கங்கள், எதிர்பார்ப்புகள் என அனைத்தையும் அறிந்து தொண்டு செய்யவும் இயேசுவைப்போல “உயிரைக் கொடுப்பதற்கு” (10:45) தயாராக இருக்கும் பணியாளராக இருக்கவேண்டும். இதுவே இயேசுவழி செல்ல நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அன்றாட வாழ்க்கைப் பாடம்.
நிறைவாக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் நான்காம் ஞாயிறை உலக மறைப்பணி நாளாகச் சிறப்பிக்கிறோம். “எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” (மத் 22:9) என்பது இவ்வாண்டின் மையச்சிந்தனை. “மறைப்பணி என்பது, எவ்விதச் சோர்வுமின்றி மீண்டும் மீண்டும் மக்களை நோக்கிச் சென்று, அவர்கள் இறைவனைச் சந்திக்க வர அழைப்பதாகும்” என்பதை உணர்ந்து கைம்மாறு கருதாமல் மறைப்பணியாற்றுவோம் (மறைப்பணி தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி, 02.02.2024). நற்செய்தி அறிவிக்கும் பணிக்கெனத் தங்களையே அர்ப்பணித்துள்ள மறைப்பணியாளர்களை நன்றியோடு எண்ணிப் பார்ப்போம்.