Namvazhvu
கர்தினால்களாக உயர்த்தப்பட்ட FABC பொறுப்பாளர்கள்
Friday, 18 Oct 2024 06:09 am
Namvazhvu

Namvazhvu

ஆசிய ஆயர் மாநாடுகளின் கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவரான ஆயர் பாப்லோ விர்ஜிலியோ சியோங்கோ டேவிட் (65) மற்றும் FABC பொதுச்செயலாளர் பேராயர் டார்சிசியோ இசாவோ கிகுச்சி (65) ஆகியோர் கர்தினால்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.  மேதகு ஆயர் பாப்லோ விர்ஜிலியோ சியோங்கோ டேவிட் மார்ச் 2, 1959 பிலிப்பைன்சில் பிறந்தார். 1983, மார்ச் 12 அன்று சான் பெர்னாண்டோ உயர் மறைமாவட்டத்திற்குக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1986 முதல் 1991 வரை பெல்ஜியத்தின் லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தார். இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். 2006, மே 27 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் சான் பெர்னாண்டோ துணை ஆயராக நியமிக்கப்பட்டார். பின்னர் 14-10-2015 அன்று கலூகன் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCP) தலைவராக 2021, 2023 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 ஆண்டு ஆசிய ஆயர் மாநாடுகளின் கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

01-11-1958-இல் பிறந்த டார்சிசியஸ் இசாவோ கிகுச்சி மார்ச் 15, 1986 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். செப்டம்பர் 20, 2004 அன்று நீகாட்டாவின் ஆயராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இவர் மேற்கு ஆப்பிரிக்காவின் கானாவில்  மிஷனரியாகப் பணியாற்றினார். 25-10-2017 அன்று டோக்கியோ பேராயராக நியமிக்கப்பட்டார். ஜப்பான் காரித்தாஸ் மற்றும் காரித்தாஸ் ஆசியா ஆகியவற்றின் தலைவராகவும், காரித்தாஸ் இன்டர்நேஷனலின் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினராகவும் உள்ளார். ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 2021, 2024-இல் FABCஇன் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். FABC பணியாற்றிய இருவரும் கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து ஆசியத் திரு அவை மகிழ்ச்சி கொள்கிறது.